Uratha sinthanai | தீருமா தமிழின் துயரம்? உரத்த சிந்தனை, இரா. ஆஞ்சலா ராஜம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீருமா தமிழின் துயரம்? உரத்த சிந்தனை, இரா. ஆஞ்சலா ராஜம்

Updated : ஜூலை 29, 2012 | Added : ஜூலை 28, 2012 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்' இத்தகு வரலாற்றை உள்ளடக்கிய, தமிழ் மொழி தான், இன்று, அரசியல், சினிமா வியாபாரிகளிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தன் மொழிக்கு பெருமை சேர்ப்பவன் தான், உண்மையான மொழிப் பற்றாளன்; மொழியால் தனக்கு புகழ் தேடிக் கொள்ளபவனல்ல. இதில், இரண்டாவதைத் தான், இன்று, பெரும்பாலானோர் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவோர் கூட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது.

யார் விற்றாலும், வியாபாரம் ஆகிவிடுவதால், தமிழை விற்பவர்கள் எல்லாம், தலைவர்களும் ஆகிவிடுகின்றனர்; அதுவும், தமிழர்கள் அனுமதியே இன்றி... தமிழனைப் போலவே, அவன் பேசும் தமிழும் நாதியற்று கிடக்கிறது. சேர்ந்தால் போல், நான்கு வார்த்தை தமிழில் பேசினாலே, வியப்போடு விழி உயர்த்தும் காலம் இது. ஆங்கிலம், சரளமாய் புகுந்து விளையாடுகிறது. தமிழகப் புத்திரர்களுக்கு, யாரைப் பார்த்தாலும்,"ஹாய்' சொல்லவே தோன்றும். அதிலும், "எனக்கு தமில் பேசவே வராது' என்று கூறும், "மேதை'கள் தான் அதிகம். தமிழராகப் பிறந்து, தமிழர் மத்தியிலே வளர்ந்து, "தமிழ்' வராது, தெரியாது என்று, இப்படி பெருமையுடன் கூறும், "தனிச்சிறப்பு' தமிழனை மட்டுமே சாரும். அப்படி பேசினாலும், காது கொடுக்கும் நிலையில் தமிழ் இருப்பதில்லை. "மார்னிங் என்ன ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்ட; நாளைக்கு ஈவினிங் எங்க மீட் பண்ணலாம்?' என்பது தான், இன்றைய,"சுந்தரத் தமிழ்!' (ஆங்கிலம் கலக்காமல், ஒரு வாக்கியம் கூட முழுமையாக பேச முடிவதில்லை என்பது எவ்வளவு வெட்கக் கேடு).

தமிழுக்கு பேராபத்தே இந்த, "தமிங்கிலம்'தான். தமிழை அறிந்து கொல்ல (எழுத்துப்பிழை இல்லை), பிரத்யேக வகுப்பே தேவையில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழில், ஓர் எழுத்தைக் கூட அறியாமல், ஒரு தமிழன், முனைவர் பட்டம் வாங்கி விடலாம்; ஆனால், ஆங்கிலம் தெரியாமல், அவனால் முதல் வகுப்பு கூட தேர்ச்சி பெற முடியாது. "தமிழ் தமிழ்...' என, மூச்சுக்கு 300 தடவை நீட்டி முழங்கும் திராவிடக் கட்சிகள், 40 ஆண்டுகளாக சாதித்தது இதைத் தான். இரு மொழிக் கொள்கையால், இந்தியோடு சேர்ந்து, தமிழுக்கும் இடமில்லாமல் போனது தான் உண்மை. அந்த வகையில், அது, இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல; மறைமுக தமிழ் எதிர்ப்பு போராட்டம் கூடத் தான். தமிழைக் காக்க நடந்த போராட்டம் என்றால், தமிழை அல்லவா வளர்த்திருக்க வேண்டும்; ஆனால், நம்மை ஆதிக்கம் செய்தவர்களின் மொழியான ஆங்கிலத்தை வளர்த்து, தமிழை, "தமிள் மொலியாக அல்லவா மாற்றியுள்ளனர், நம் திராவிட சிகாமணிகள்; இதுதான், தமிழ்த்தாய் மீது இவர்கள் கொண்டுள்ள, "அதீதப்பற்று!' ஆங்கிலம் பேசினால் அறிவாளி; தமிழ் பேசினால் தற்குறி என்ற மனப்பான்மை நிலவுவதால், பல் முளைக்கும் முன்பே, "மம்மி, டாடி...' என, அன்னிய மொழியை பேசத் துவங்குகின்றனர், தமிழ்த்தாயின் தன்னிகரற்றப் புதல்வர்கள். கல்விக் கூடத்திலும் ஆங்கிலத்துக்கே அரியாசனம்; தமிழுக்கில்லை. பல்கலைக் கழகங்களில் பாடமொழியாக தமிழ் இல்லை; ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை. நீதிமன்றத்தில், வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை. ஆக, இப்படி, இருக்க வேண்டிய எந்த இடத்திலும் தமிழ் இல்லை. இப்படி இல்லை என்று கவலைப்படுவது ஒரு நிலை என்றால், "தமிழ்(!)' தொலைக்காட்சிகள் பலவும், "தொல்லைக்'காட்சிகளாக மாறி, தமிழை கொலை செய்து கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. சின்னத்திரையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், தமிழைக் கூட அன்னிய மொழியை போன்றே, "வால்க, வலர்க...' என்றெல்லாம் உச்சரிப்பதை கேட்கும் போது, காதில்,"தேன்(ள்)' கொட்டுவது போலிருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, "தமிழ் தமிழ்...' என்று முழங்கும் பலருக்கும் கூட,"தமில்' தான் வருகிறது. நாக்கை மடித்துப் பேச வரவில்லை போலும்! பாவம்... இவர்களல்ல, "நற்றமிழ்!'

இப்படி, சின்னத்திரையே, "சீன்' போட்டால், பெரியத்திரை, "பிலிம்' காட்டினால் தானே, அதற்கு மதிப்பு! அதனால், கொஞ்சம் தமிழ், நிறைய இங்கிலீஷ் இருந்தால், அதற்கு பெயர் தமிழ்ப் படம்; படம் முழுவதும், தமிழ் வசனம் மட்டுமே இருந்தால் அது,"டப்பிங்' படம். இது தான், இன்றைய, "தமிழ்ப் படத்'தின் சிறப்பு! பாடல்கள் அதை விட சூப்பர். ஆஹா... கேட்டுக் கொண்டே இருக்கலாம்; "ஒய் திஸ் கொலவெறி, டாடி, மம்மி வீட்டிலில்லை; அஸ்லி புஸ்லி; டொட் டொய்ங்; ரண்டக்க ரண்டக்க; நாக்கு முக்க...' என, தூய தமிழில், பொருள் பொதிந்த பாடல் வரிகள்! படத் தலைப்புகளையோ கேட்கவே வேண்டாம்! கருத்தாழத்துடன்(!) , மனதைக் கவரும் வண்ணம் (!), செந்தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. "தமிழில் பெயர் வைத்தால், வரிவிலக்கா; பிற மொழியில் வைத்தால், அபராதம் விதிக்க வேண்டியது தானே... ' என்றெல்லாம் எண்ணி விடக் கூடாது. அது, தமிழ்த் துரோகம் ஆகிவிடும். மானியம், வரிவிலக்கு, திரைப்படம் எடுக்க பணம் என்றெல்லாம் இருந்தால் தானே, தமிழ் வளரும்; தமிழனும் செழிப்பான்! அடுத்து, குழந்தை, "ம்மா...' என்று அழுதாலோ, அழைத்தாலோ கூட வரிவிலக்கு உண்டென்று, விரைவில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழை வளர்க்க வேண்டாமா அரசு!

இது ஒரு ரகம் என்றால் அடுத்தது, தமிழ் உணர்வை வைத்து செய்யப்படும் வியாபாரம். "தமிழன்' என்று ஒரு படம்; படத்தை பார்த்தபின், தமிழனுக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்ததில், தலைவலி வந்தது தான் மிச்சம். பின்தான் புரிந்தது, "தமிழன்' என்று சொன்னாலே அது,"தமிழுணர்வு!' என்று; இதை எண்ணி வியந்ததில் புல்லரித்து விட்டது. இதுபோல், இன்னும் எத்தனை பேருக்கோ! இதேபோல், ஒழுக்கத்துடன் கூடிய வீரம் என்று பொருள்படும் படம் ஒன்றில், "தமிழன் வீரத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது' என்றொரு வசனம். கதைக் கருவிற்கும், இந்த வசனத்திற்கும் கடுகளவும் சம்பந்தம் கிடையாது. இவர்களுக்கு, திடீர் திடீர் என்று எப்போது தமிழ்ப்பற்று வரும் என்று நினைத்தாலே, மெய்சிலிர்த்து விடுகிறது. ஒரு காலத்தில், நெஞ்சில் சுமந்து, தாயை விட உயர்வாகப் பேணப்பட்ட தமிழ் தான், "டெங்கு' காய்ச்சலால் பீடிக்கப்பட்டதைப் போல, உயிரைக் கொடுத்து காக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த லட்சணத்தில், எட்டு உலகத் தமிழ் மாநாடுகளையும், ஒன்பதாவதாக, உலகச் செம்மொழி மாநாட்டையும் கடந்துள்ளோம். "டமிலில்' என்ன இருக்கிறது என்று கேட்கும், "டமிலர்'களை வளர்த்து விட்டு, "செம்மொழி'அந்தஸ்து பெற்ற மொழி என மார்தட்டிக் கொள்வதில் பெருமை என்ன வேண்டி கிடக்கிறது? ஐரோப்பியனும், அமெரிக்கனுமா பைந்தமிழில் கொஞ்சிக் குலாவ போகிறான்?

இது இப்படி என்றால், இன்னொரு கூட்டம், "தமிழ் வாழ்க; தமிழன் வாழ்க' என்று வாய்ச்சவடால் விட்டு, தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருவதாகக் கூறி, தமிழின் பெயரை வைத்து, தனக்கு ஆதாயம் தேடிக் கொண்டு, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. நல்லவேளை, இந்தக் கூத்தையெல்லாம் பார்க்க, பாரதி இல்லை; இருந்திருந்தால், "தீ'யாக மாறி, பாரை அழித்திருப்பானோ என்னவோ! தமிழ் பேசுங்கள்; படியுங்கள்; பயன்படுத்துங்கள் என்றால், பிற மொழிகளை புறக்கணியுங்கள் என்றோ, கற்றுக் கொள்ள வேண்டாம் என்றோ, ஆங்கிலம் ஒழிந்துவிட வேண்டும் என்றோ அர்த்தமில்லை. இடம், பொருள் அறிந்து, எங்கு தேவையோ அங்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தாய்மொழியை புறக்கணித்து, பிறமொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதுதான். தமிழர்களுக்கு ஆங்கிலம் தேவைப்படுவது, அறிவு மொழியாக அல்ல; தொடர்பு மொழியாக என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் தெரிந்தாலும், அன்னிய மொழியில் பேசும் மோகத்தை, துரோகத்தை கைவிட வேண்டும். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாட்டை எதிரொலிக்கும் காலக் கண்ணாடி. அந்த வகையில், தமிழனின் முகவரி தமிழ்;அந்த முகவரியை இன்று இழந்து கொண்டிருக்கிறோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எங்கே தமிழ் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழன் இருக்கிறான்; தமிழ் தான் இல்லை என்ற காலம் வரும் முன், சிந்திப்போம்; செயல்படுவோம். email: anjalarajam@gmail.com

- இரா. ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S T Rajan - Ettayapuram ,இந்தியா
29-ஜூலை-201219:39:47 IST Report Abuse
S  T Rajan நம்மை விட ஈழத்து தமிழர்கள் தமிழை நன்கு உணர்ந்து , ஆங்கில கலப்பின்றி பேசுகிறார்கள் ...........
Rate this:
Share this comment
Cancel
Ragu . D - Johannesburg,தென் ஆப்ரிக்கா
29-ஜூலை-201219:04:10 IST Report Abuse
Ragu . D கட்டுரை ஆசிரியர் கூறுவது தேவையற்ற இடங்களில் பிற மொழியை தவிர்க்கவேண்டும் என்பதே தமிழ் அறிந்த இருவர் பேசும்போது முடிந்தவரை பிற மொழி முக்கியமாக ஆங்கிலம் தவிர்த்து பேசலாமே அவர் கூறுவது போல் தொடர்பு மொழியாக கொள்ளலாம் ஒரு கேரளர் மற்றொரு கேரளரிடம் பேசும்போது 99 % மலையாளம் மட்டுமே பயன்படுத்துகின்றனர்...நான் சொல்வது அயல் நாட்டில் வசிக்கும் கேரளர்களை நாமும் நேசிப்போம் நம் மொழியை கட்டுரை நமக்கு நினைவூட்டியாக அமையட்டும் உங்கள் மேலான விமரிசனங்களை வரவேற்கிறேன் நன்றி இரகு
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
29-ஜூலை-201218:00:10 IST Report Abuse
Thamilan-indian கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ் என்று யாரோ எழுதிவைத்த கதை, கற்பனைகளை மூட நம்பிக்கையோடு பார்ப்பதுதான். முதல் பிரச்சினை. மண்ணே தொன்றவில்லைஎன்றால் மனிதன் தோன்றியிருக்க முடியுமா. மனிதன் இல்லையெனில் மொழி தோன்ற முடியுமா?. மேலும் தமிழ், தமிழகம் என்பது நாட்டின் (மண்ணின்) ஒரு மூளை, கோடி. ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பதைப்போல மற்ற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்தான் தற்போது தமிழ் பேசுகிறார்கள், அவர்கள் தமிழர்கள். எனவே முதலில் மற்ற மாநிலங்களில் தான் மனிதன் இருந்திருக்க முடியும். இவையனைத்தும் காலால் நடக்கும் மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள், ஏசுநாதரை போல் கடலில் நடந்த ஜன்மங்கள் அல்லது பாய்மர கட்டைகளில் கடலிலேயே மிதந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்றால், அதை பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். சாத்தியகூறுகள் மிக குறைவு என்பதால் யோசிப்பது தேவையில்லாதது. எனவே தமிழுக்கு மூத்தது தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, சமஸ்கிருதம் என்றெல்லாம் இருக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Thileepan Arasan - Tiruppur,இந்தியா
29-ஜூலை-201216:59:26 IST Report Abuse
Thileepan Arasan எல்லாம் சரி .. இது என்ன புதிய நடைமுறையா? எதற்கெடுத்தாலும் திராவிட கட்சிகள் தான் காரணம் .. காரணம் என்று..? நமது சொந்த பெயரைக்கூட தமிழில் வைத்துகொள்ள வக்கில்லை, பேசுவது எல்லாம் , ", "சீன்&39 போட்டால், பெரியத்திரை, "பிலிம்&39 காட்டினால் தானே, அதற்கு மதிப்பு " அவன் அரசியல்வாதி ... எதையும் உருப்படியா செய்யவில்லை என்றால்தான் அவன் அரசியல்வாதி. .. குறைந்தப்பட்சம் இனியாவது உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொள்ளுங்கள் . (நமக்கு தெரிந்தால்தானே ?..) ம்ஹீம்
Rate this:
Share this comment
Cancel
RRavi Ravi - Madurai,இந்தியா
29-ஜூலை-201214:28:48 IST Report Abuse
RRavi Ravi இன்று தினமலர் இதழில் இரா .ஆஞ்சலா ராஜம் எழுதிய உரத்த சிந்தனை தீருமாதமிழின் துயரம் ? படித்தேன் .மிக சிறப்பான கட்டுரை பாராட்டுக்கள் . தமிங்கிலம் பேசும் தமிழர்கள் திருந்த வேண்டும் .தமிழ்க் கொலை புரியும் தொலைக் காட்சிகள் திருந்த வேண்டும் .
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
29-ஜூலை-201220:00:27 IST Report Abuse
Karam chand Gandhi அந்த அம்மாவை முதலில் தமிழ் கலாசாரப்படி வாழணும் என்பதை அழுத்தமாக எழுத சொல்லுங்கள். இன்றைய பெண்களின் ஆங்கில மோக கலாசாரத்தால் விவாகரத்து, புகைத்தல், குடித்தல் , கள்ளதொடர்பு இல்ல பெண்களாக மாற எழுத சொல்லுங்கள். ஆண்கள் செய்கிறார்கள் என்று கூறாமல் அவர்களையும் திருத்த , குடும்ப அமைப்பை காப்பாற்ற பாடுபட சொல்லுங்கள். சும்மா ஒரு பேனா கிடைத்தால் போதும் ..........................
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
29-ஜூலை-201212:17:27 IST Report Abuse
JAY JAY டியர் மேடம், மன்னிக்கவும் ...அன்பு சகோதரி அவர்களே.....நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று உங்கள் கட்டுரையை பலமுறை படித்தும் புரியவில்லை.....ஆங்கிலமும் பேச கூடாது என்று சொல்கிறீர்கள்,...தமிழை வைத்து வியாபாரமும் பண்ண கூடாது என்று சொல்கிறீர்கள்... தமிழை வைத்து வியாபாரம் பண்ணுபவர்கள் அரசியல்வாதியிகள் தான்...ஆனால் ஆந்திராவில் , மகாராஷ்ட்ராவில் , ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிலுமே அரசியல்வாதிகள் ஊழல் தான் செய்கின்றனர்.... அவர்கள் என்ன தமிழா பேசிக்கொண்டு உள்ளனர்...தமிழ்நாட்டில் தமிழை எதுகை மோனையோடு பேசி ஆட்சியை பிடித்து ஆட்டைய போடுகின்றனர்...தமிழ்நாட்டின் சில தலைவர்களுக்கு தமிழ் பெயர் மீது அலாதி...சுத்த தமிழ் பெயர் வைத்திருந்தாலே, அரசியலில் ஈடுபட முத்திரை பதித்துள்ளான் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது....அடுத்து ஆங்கிலம் கலவாமல் பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள்...ஓகே...அதனால் கிடைக்கும் நன்மை என்னென்ன....? ஆங்கிலம் கலவாமல் பேசினால் தமிழ் வளர்ந்துவிடுமா? அல்லது தமிழனின் வயிறு நிறைந்து விடுமா? ... சுத்த தமிழில் பேசி திரிபவனுக்கு எந்த அலுவலகத்தில் வேலை கொடுப்பார்கள்....நாம் ஆங்கிலம் பேசுவது அந்நிய மொழியின் மீதான மோகத்தில் அல்ல...அந்நிய மொழி தான் நமக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் என்ற தாகத்தால் தான்...ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் வாழை பழத்தில் ஊசி ஏத்துவது போல குறை கூறி உள்ளீர்கள்.... ஹிந்தியை கற்று தமிழனை இந்தியாவிலேயே ஒரு இரண்டாம் குடிமகன் போல வாழ சொல்கிறீர்களா? ..உலகத்தோடு நம்மை இணைக்கும் மொழி எது....? ஆங்கிலம் அல்லவா? ..ஆங்கிலம் அந்நிய மொழி என்று கூற முடியாது....நமக்கு அன்னியோனமான மொழி என்று வேண்டுமானால் கூறலாம்....தமிழகம் சீனா அல்ல....தமிழகம் பிரான்ஸ் அல்ல... சீன மொழி அல்லது பிரஞ்சு மொழி மட்டும் கற்று காலத்தை ஓட்ட ... நம்மில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தருபவர்கள் தற்போதைய சூழ்நிலையில் அந்நியர்களே.....அப்படி இருக்கும் போது, நமக்கு உணவளிக்கும் அந்நிய மொழியை கற்பதில் தவறில்லை.... தமிழை மட்டும் கற்று கொள்...தமிழில் அதிகம் கவனம் செலுத்து....ஆங்கிலம் கலந்து பேசாதே...இப்படிஎல்லாம் நாம் சொல்ல சொல்ல ஆங்கில அறிவு நம்மிடையே மக்கி போகும்..... அடுத்த மாநில காரன் அதை தான் விரும்புவான்.....தமிழ் ஆர்வலர்களை நமது அண்டை மாநிலத்தாரே அதிகம் விரும்புவார்கள்...அப்போது தானே தமிழன் , தமிழை மட்டும் கற்று கொண்டு தமிழ் நாட்டிலேயே கிடப்பான், என்று தான் அண்டை மாநிலாத்ரும் விரும்புவர்.....ஆனால் இப்போது தமிழனின் முன்னேற்றத்துக்கான ஒரே ஆயுதம் ஆங்கில அறிவு தான்...அதனை பேச பேச தான் கற்க முடியும்...ஆங்கிலம் கலந்து பேசாதே என்று சாமாநியனிடம் போயி சொல்வது , அவனது ஆங்கில அறிவை இன்னும் கெடுக்கும்.....அனைத்து தமிழர்களும் முன்னேறி விடகூடாது என்று நினைத்தால் ஆங்கிலம் கலந்து பேசாதே என்று அறிவுரை கூறலாம்.... எனக்கு டமில் வராது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...அவர்களுக்காக தமிழில் கட்டுரைகள் எழுதி என்ன பயன்..? .ஏற்கனவே சமசீர் கல்வி என்று பெரும்பாலனா தமிழக குழந்தைகளின் அறிவை தட்டி உட்காரவைத்தாகி விட்டது....இனி தமிழ் தமிழ் என்று கூறி அடுத்த தலைமுறையினரை நமது அரசின் இலவச திட்டங்களை மட்டும் நம்பி இருக்குமாறு பண்ணிவிடாதீர்கள்....தமிழ் நமது சுவாசம்....அது நம்மை விட்டு எங்கும் போகாது...ஆங்கிலம் நமது உணவு....அதனை உண்டு செழித்தால் தான் நமக்கு வேலை வாய்ப்பு....தமிழ் நமக்கு தாலாட்டு .....ஆனால் ஆங்கிலம் பல லக்சம் படித்தவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமாரான படிப்பு படித்தவர்களுக்கு அதன் மூலம் மறைமுக வேலை வாய்ப்பும் கொடுக்கும் அமுத சுரபி....ஆங்கிலத்தை வேண்டாம் என்று சொல்வது இந்தியாவில் தமிழனை கடைநிலைக்கு தள்ளுவதற்கு சமம்......
Rate this:
Share this comment
Chandru K - Paris,பிரான்ஸ்
29-ஜூலை-201218:03:17 IST Report Abuse
Chandru Kஎங்களுக்கே அல்வாவா? நாங்க தமிழ் சிறந்தது என்று சொல்வதால் எங்களை என்ன கனிமொழிக்கு சொம்பு பிடிக்கற கூட்டம்னு நினைச்சுட்டிங்களா? சும்மா நச்சுன்னு ஒன்னு சொல்லட்டுமா? மின்னுவதெல்லாம் பொன்னும் அல்ல இருட்டில் வாங்குவதெல்லாம் அல்வாவும் அல்ல...
Rate this:
Share this comment
Kali Das - algeria,அல்ஜீரியா
29-ஜூலை-201221:07:31 IST Report Abuse
Kali Dasதமிழ் பேசுங்கள் படியுங்கள் பயன்படுத்துங்கள் என்றால், பிற மொழிகளை புறக்கணியுங்கள் என்றோ, கற்றுக் கொள்ள வேண்டாம் என்றோ, ஆங்கிலம் ஒழிந்துவிட வேண்டும் என்றோ அர்த்தமில்லை. இடம், பொருள் அறிந்து, எங்கு தேவையோ அங்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தாய்மொழியை புறக்கணித்து, பிறமொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதுதான். தமிழர்களுக்கு ஆங்கிலம் தேவைப்படுவது, அறிவு மொழியாக அல்ல தொடர்பு மொழியாக என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் தெரிந்தாலும், அன்னிய மொழியில் பேசும் மோகத்தை, துரோகத்தை கைவிட வேண்டும். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல . சோற்றுக்கு வேண்டி மொழி மாறும் நீங்கள் ,அதற்கு வேண்டி எல்லாத்தயும் மாற்றுவிர்கள் .மற்ற மொழிகளை யாரும் படிக்கச் வேண்டாம் என்று சொல்லவில்லை .ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள் ஆனால் கலாச்சாரதை போல மாறிவிடதிரகள்....
Rate this:
Share this comment
Cancel
Chandru K - Paris,பிரான்ஸ்
29-ஜூலை-201211:22:58 IST Report Abuse
Chandru K சரியாக சொன்னீர்கள் நெல்லை சாமிநாதன், நன்றி. மேலும், கட்டுமரம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரெஞ்சு மொழியிலும் கட்டமரம்தான் என்று சொல்லுவார்கள். அது மட்டுமல்ல இதுபோல் நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழ் மொழியிலிரிந்து அன்று பிற மொழிகள் கடனாக பெற்றன. பழமையான மொழிகளான சமஸ்கிரிதம் சீன அரபு மொழிகள் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் மக்களில் பல தமிழ் சொற்களை காணலாம்.அதேபோல் கொரியன் மொழியிலும் எண்ணற்ற தமிழ் சொற்கள் இருக்கிறன்ற. இன்று அந்நிய படையெடுப்பால் அதிக அளவில் பூமி எங்கும் பரவி இருக்கும் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளும் இதற்க்கு விதி விலக்கல்ல. இந்த மொழிகளில் உள்ள ETHMYOLOGYஅகராதியில் அதாவது சொற்பிறப்பு ஒரு சொல் எந்த மொழியிலிருந்து வந்தது அதன் ஆதியும் அந்தமும் சொல் வரலாறு என்ன என்று தெரிந்து கொள்வதற்கு உதவும் நூல். அதை படித்தால் தமிழின் சிறப்பு புரியும். உதாரணம் ஒரு கடைக்கு போனால் MANGO JUICE என்றுதான் கேட்கிறோம். இதில் வேதனை என்னவென்றால் அந்த MANGO என்ற வார்த்தையே நாம் தான் அவர்களுக்கு தந்தோம் என்பதை நாம் மறந்து போனதுதான். MANGO என்ற சொல்லை ETHMYOLOGYஅகராதியில் தேடினால் அது ஆங்கில சொல் அல்ல அது மாங்காய் என்ற தமிழ் வார்த்தைலிருந்து கடன் வாங்கப்பட்டது என்று ஆங்கிலத்தில் விளக்கப்பட்டு இருக்கும். அதே போல்தான் பிரெஞ்சு மொழியிலும் MANGUE என்ற சொல் பிரெஞ்சு சொல் அல்ல அது தமிழிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்று பிரெஞ்சில் விளக்கப்பட்டு இருக்கும். ஒருவரின் தாய் மொழி என்பது ஒருவரின் அடையாளம். தாய் மொழி வழியாக கல்வி கற்றால் மட்டுமே உண்மையான சமுதாய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று தமிழர்கள் உணர கூடிய காலம் ஒரு நாள் நிச்சயம் வரத்த்தான் போகிறது. தமிழரே நினைத்தாலும் தமிழ் சாகாது....... மெல்லவும் சாகாது......... பல வருடங்கள் கழித்தும் சாகாது. தமிழ் சாகும் என்று நினைப்பவர்கள் சாம்பலிலும் தமிழ் மணக்கும். சாக வரம் பெற்ற தமிழ் வாழ்க. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....... நாளை நமதே -அன்புடன் சந்துரு. பாரிஸ்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
29-ஜூலை-201211:13:55 IST Report Abuse
N.Purushothaman விநாயகர் அகவல்,திருப்பாவை,திருவெம்பாவை,தேவாரம்,திருவாசகம்,போன்ற பல ஆன்மீக நூல்களில் உள்ள தமிழை படிக்கும் போது ஏற்படுகிறதே ஒரு உணர்வு ....அதை வர்ணிக்க வார்த்தையில்லை.....அதனால் தான் என்னவோ அதை படிக்கும் போது இறைவனே மயங்கி மெளனமாக இருக்கிறாரோ....அப்படிப்பட்ட தமிழை இன்று வியாபாரமாக்கி விட்டனர் இந்த சுயநலம் கொண்ட அரசியல் வியாதிகள்.....தமிழுக்கு இவர்கள் என்னதான் தீங்கு செய்தாலும் தமிழ் மடியாது.......வாழ்க தமிழ்....
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
29-ஜூலை-201211:09:00 IST Report Abuse
Nandu மொழி பல கறக்கலாம் பிழை இல்லை. முதலில் நாம் கற்க வேண்டியது தமிழ், முதன்மையாக நாம் கருத வேண்டியது தமிழ். ஏனென்றால் அது நம் தாய்மொழி, நான் யார் என்று உலகுக்கு உரைப்பது. தமிழ் வெறும் மொழிமட்டுமல்ல, அது நம் பண்பாடு, வாழ்க்கை முறை. இந்தி பேசுகின்ற வாடா மாநிலங்களை விட தென் மாநிலங்களே பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. பிற மொழியான இந்தியை நான் இழித்துப் பேசவில்லை. தாய் மொழியை ஏதிப்பிடிக்கும் துணிவின்றி, பிழைப்புக்கு பிற மொழிகளை வாரியணைத்துக் கொள்பவர்களைத்தான் கசடு எனக் கூறுகின்றேன். தமிழ் நம்நாடு மட்டுமன்றி வேறு சில நாடுகளிலும் பரவலாகப் பேசப் படுகின்றது, அரசியல் மொழியாகவும் விளங்குகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
29-ஜூலை-201210:44:21 IST Report Abuse
Nandu எது கல்வி எனத் தெரியாமல், எதைச் செய்கிறோம் எனப்புரியாமல் தமிழ்ப் பெருங்குடி மக்கள், இன்று, எங்கு போகிறோம் எனத் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர். சுயநலப் பித்தர்களால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். உலக மக்கள் வியக்கும் அளவிற்கு சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் நாம். இன்று நம்மை மறந்து பிறரை வியந்து பார்க்கின்ற மடமையில் வீழ்ந்து கிடக்கின்றோம். தமிழ் மொழிபோல் வேறு மொழி உலகில் இல்லை - இதுவே உண்மை. சில சிறந்த மொழிகள் உலகில் இருந்தாலும் ஒப்பு நோக்கில் தமிழே உயர்ந்து விளங்குகிறது. அனால் நமக்குத்தான் நமது அருமை தெரியாமல் பிறவற்றை அண்ணார்ந்து பார்கின்றோம். நமது சிறப்புகளை நாம் ஏதிப்பிடிக்க வேண்டும். பொருளும் அழகும் நிறைந்த தமிழ்ப்பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதையே தவிர்த்து பிறமொழிகளில் கடன் வாங்கி பெயைர் வைத்து பூரிப்படைகிற புத்தியற்ற பெற்றோர்களையும் பெரியவர்களையும் பார்த்து, ச்சீ... இப்படியும் மடையர்கலாகிப் போனார்களே நல்ல தமிழன் வயிற்றில் பிறந்த இந்த பதர்கள் என்ற வேதனையே மிஞ்சுகிறது. சுய புத்தியும் சுய மரியாதையும் இழந்து ஈன சுகமும் அற்ப மகிச்சியிலும் தமிழர்கள் இன்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புத்தியுள்ளோர் நல்லோர் இந்த அவல நிலையை மாற்ற செயலில் இறங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை