Reason for Teacher Student realtion degradation | ஆசிரியர் மாணவர் உறவு சீரழிய காரணம் என்ன? அடித்தால் தான் ஆசிரியரா-பெற்றோர்: பாடம் மட்டும் போதுமா- ஆசிரியர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மாணவர் உறவு சீரழிய காரணம் என்ன? அடித்தால் தான் ஆசிரியரா-பெற்றோர்: பாடம் மட்டும் போதுமா- ஆசிரியர்

Added : ஜூலை 29, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆசிரியர் மாணவர் உறவு சீரழிய காரணம் என்ன? அடித்தால் தான் ஆசிரியரா-பெற்றோர்: பாடம் மட்டும் போதுமா- ஆசிரியர்

மதுரை: வீட்டுப்பாடம் எழுதாத மாணவியின் முதுகு சிவக்கும் அளவு பிரம்படி, படிக்காத சிறுவனின் கையை முறித்தது, பக்கத்து மாணவரிடம் பேசியதால் கண்ணில் காயம் ஏற்படுத்தியது, பாடம் கற்றுத்தரும் சாக்கில் பாலியல் வன்முறை, தவறு செய்யும் மாணவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியது... என கடந்த வாரம் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள். மாணவர்களும் பள்ளிகளில் வயதை மீறிய சேட்டைகள் செய்ய துவங்கி விட்டனர். போதையோடு வருவது, ஆசிரியைகளை கிண்டலடிப்பது, ஜாதி ரீதியாக மோதிக்கொள்வது, ஆசிரியர்களின் சிறுசிறு கோபங்களை கூட தாங்கிக் கொள்ளாமல், "தற்கொலை முயற்சி' என்ற அபத்தமான அஸ்திரத்தை கையில் எடுப்பது என்று நம் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்ற கவலை மறுப்பக்கம்.


ஆசிரியர் கண்டிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் சிலர்...குழந்தைகளை கண்டிக்கவே கூடாது என நினைக்கும் பெற்றோர் பலர். இந்த சூழ்நிலையில் ஆசிரியர்-மாணவர் உறவு இப்படி சீரழிய என்ன காரணம்? இது வலுவாக என்ன செய்ய வேண்டும்? சிலரதுகருத்துக்கள்...


* ஜி.உமா மகேஸ்வரி, குடும்பத்தலைவி மதுரை: மாணவர்களை அடிக்கும் போது, முழங்காலுக்கு கீழே அடிக்கலாம். அதிக கடுமை காட்டும் போது தானே பிரச்னை வருகிறது. எல்லா பெற்றோர்களும், பிள்ளைகளை அடிப்பதற்காக பிரச்னை செய்வதில்லை. தற்போதைய மாணவர்கள், சொன்னதை உடனடியாக புரிந்து கொள்ளும் திறமையுள்ளவர்கள். என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் அடித்ததில்லை. வெறும் பாடங்கள் போரடிக்கும். பாடம் நடத்தும் முறையை சுவாரசியமாக்கினால் தான், மாணவர்களுக்கு பிடித்தமான இடமாக, வகுப்பறை இடம்பெறும்.


* டாக்டர் கே. ராதிகா (பெற்றோர்), மதுரை: என் மகன் பத்தாவது படிக்கிறான். பள்ளியில் இதுவரை அவனை யாரும் அடித்ததில்லை. பிள்ளைகளை அடித்து திருத்த நினைக்கக்கூடாது. மென்மையாக அணுகினால், பாதி பிரச்னைகள் குறைந்து விடும். எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். அறிவுப்பூர்வமாக மாணவர்களை அணுகவேண்டும். 100 சதவீத தேர்ச்சி தரவேண்டும் என பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் நெருக்கடி செய்யும் போது, ஆசிரியர்களுக்கு மனஅழுத்தமும், இதுபோன்ற விபரீதங்களும் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும்.


* கே.நாகசுப்ரமணியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட பொறுப்பாளர்: ஒரு ஆசிரியராக, எங்களின் பிரச்னைகளை யாரும் புரிந்து கொள்வதில்லை. பையன் படிக்கவில்லை என்பதற்காக தானே கண்டிக்கிறோம். நாங்கள் அடித்தால், எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு பயந்து மாணவர்களை கண்டிக்காமல் விட்டால், புகையிலை, சிகரெட் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எளிதில் ஆளாகின்றனர். பெற்றோர்களை அழைத்து வரச் சொன்னால், தற்கொலை செய்து கொள்கின்றனர். பிள்ளைகளை வழி நடத்தாத பெற்றோர்கள் தான், எங்களை புரிந்து கொள்ளாமல் பிரச்னை செய்கின்றனர். மாணவர்கள் நன்றாக படிப்பதைத் தவிர, எங்களுக்கு வேறென்ன தேவை இருக்க முடியும். இதற்காக தான் ஆசிரியப் பணிக்கு வந்துள்ளோம். அடிக்ககூடாது, திட்டக்கூடாது, கண்டிக்ககூடாது என... ஆசிரியர்களின் கைகளை கட்டி போட்டு விட்டு, வெறுமனே பாடம் நடத்தச் சொல்கின்றனர். வாங்கிய சம்பளத்திற்கு பாடம் மட்டுமே நடத்துவது கொடுமை. இன்றைய மாணவ சமுதாயம், நாளைய நல்ல சமுதாயமாக மாற வேண்டாமா? தவறு செய்யும் ஓரிரு ஆசிரியர்களை "கவுன்சிலிங்' மூலம் திருத்தலாம்.


* எம்.சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: அடுத்தவர் முன்னிலையில் நம்மைத் திட்டினால், ஏற்றுக் கொள்வோமா? அதை ஆசிரியர்கள் உணரவேண்டும். தவறே செய்திருந்தாலும், சக மாணவர்கள் முன்னிலையில் திட்டக்கூடாது. தனியாக அழைத்துச் சென்று எடுத்துக் கூறலாம். முடிந்தவரை, நாமே திருத்தப் பார்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பெற்றோரை அழைத்து அவமானப்படுத்தக்கூடாது. வயதுத் தோழர்களை அழைத்து, அவர்களுடன் கலந்து பேச அனுமதிக்க வேண்டும். இந்தமுறை, நல்ல பயன் தரும். மாணவர்களின் தனித்துவத்தை அனுமதிக்க வேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு, மாணவர்களின் கையில் தான் இருக்கிறது. அவர்களின் வயதுடன் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது. ஒரு மாணவன் தப்பு செய்தால், இவன் இப்படித்தான் என முத்திரை குத்தக்கூடாது. அவனது குடும்பத்தால் ஏற்பட்ட பாதிப்பா, நண்பர்களின் சகவாசம் தவறா என்பதை ஆராய வேண்டும். அதை சரிசெய்ய வேண்டும். இதுதான் ஆசிரியர்களின் கடமை.


* ஆர். திருநாவுக்கரசு, போலீஸ் துணை கமிஷனர்: ஆசிரியர்கள் என்பதைத் தாண்டி, மாணவர்களின் "இரண்டாவது பெற்றோர்' என்ற சிந்தனை வரவேண்டும். கிராமப்புறங்களில் தான் ஆசிரியர்கள் அடிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. மாணவர்களை அணுகத் தெரியாதவர்கள் தான் எளிதில் கோபப்பட்டு, அடிக்கின்றனர். கையில் பிரம்புடன் வரும் ஆசிரியர்களைக் கண்டு, மாணவர்கள் பயப்படத் தான் செய்வர். படிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு இல்லாததே, குழந்தைகள் வரம்பு மீறி தவறு செய்வதற்கு காரணம். 30 வயதுக்கு மேல் நல்லது, கெட்டதை தெரிந்து கொண்டு, "டிவி'யில் கண்டதைப் பார்ப்பதற்கும், ஒன்றுமே தெரியாமல் குழந்தைகள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகளுக்காக சில விஷயங்களை தியாகம் செய்யத் தான் வேண்டும். எந்த அப்பா, குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறாரோ, அங்கே நல்ல சூழ்நிலை உருவாகும். குழந்தையும் தவறு செய்யாது. பெற்றோர்கள், குழந்தையுடன் நேரத்தை செலவிட்டால், பள்ளி வரை தவறுகள் நேராது. இவ்வாறு கூறினர்.


மாணவர்கள் எதையும் தாங்கும் சக்தி இல்லாதவர்கள்! மனநல டாக்டர் சி.ராமசுப்ரமணியன்: மாணவர்களை அடிப்பது, அவமானப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதற்காக ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறைசொல்ல முடியாது. மாணவர்கள் பள்ளியில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அந்தநேரம் ஆக்கப்பூர்வமாக செலவிடப்படவில்லை, என்பது தான் குறை. பிள்ளைகள் இப்படித் தான் வளரவேண்டும், வாழவேண்டும் என்பதற்கான, புத்தக கையேடு எதுவும் இல்லை. நமது சுற்றுப்புறத்தைப் பார்த்துத் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. மனிதனை மனிதனாக, ஒழுக்கசீலனாக உருவாக்கும் புனிதமான தலம் தான், கல்விச்சாலைகள். வகுப்பில் உள்ள 40 மாணவர்களும், 40 விதத் திறமைகளுடன் இருக்கலாம். அதை கண்டறிந்து, வெளிப்படுத்துவதே, ஆசிரியரின் கடமை. எல்லோரையுமே நிறைய மதிப்பெண் பெற வைப்பதால், சமுதாயத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எதிர்கால சமுதாயம் தீயவழியில் செல்லாமல் இருப்பதே முக்கியம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர், மாணவர்கள் மனநிலை வேறு. இப்போதும் அதேபோல அடிப்பது, அவமானப்படுத்துவதைத் தொடரக்கூடாது. சமுதாய வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியில் நாம் முன்னேறினாலும், மாணவர்கள் எதையும் தாங்கும் சக்தி இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். அதனால் தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுக்கு செல்கின்றனர். அன்பு, முறையான வழிகாட்டுதலே மாணவர்களை திருத்தும் வழி. மாணவன் தவறு செய்தால், அவன் மனம் திருந்தும் வகையில் தண்டிக்கவேண்டும். மனம் வருந்தச் செய்யக்கூடாது. மற்றவர்கள் முன்னிலையில் அடிக்கும் போது, ஏளனமாக பேசும் போது, மனதில் ஏற்பட்ட ரணத்தை, அவன் சாகும்வரை மாற்றமுடியாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை தருவதோ, தற்காலிக பணிநீக்கம் செய்வதோ தீர்வாகாது. அவர்களை உளவியல் ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.


மாணவர்களை எப்படி கையாள வேண்டுமென்ற, அடிப்படை அணுகுமுறையை கற்றுத்தர வேண்டும். தொட்டதற்கெல்லாம் அடிப்பதும், திட்டுவதும், ஏளனம் செய்வதுமாக இருந்தால், மாணவர்கள் மிகப்பெரிய மனநோயாளியாக மாறிவிடுவர். காலை 9 முதல் மாலை 4 மணி வரை, தொடர்ந்து பாடங்களை எழுதுவது, கேட்பதென, மாணவர்கள் சோர்ந்து விடுகின்றனர். ஆசிரியர்களும் களைத்து விடுகின்றனர். ஒவ்வொரு பாடவகுப்பு துவக்கத்திலும், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி மனதளவில் இளைப்பாற்ற வேண்டும். உட்கார்ந்து, எழச் சொல்வது, கையை தூக்கி, இறக்கி விடச் சொல்வது, புதிர், விடுகதை சொல்வதென ஐந்து நிமிடங்கள் மாணவர்களை சந்தோஷப்படுத்தினால், அடுத்த ஒருமணி நேரம் புத்துணர்வோடு பாடத்தை கவனிப்பர். வீட்டுப்பாடம் எழுதாதவர்கள், படிக்காதவர்களை கைதூக்கச் சொல்வதற்கு பதிலாக, எழுதியவர்கள், படித்தவர்களை கைதூக்கச் சொல்லலாம். மாணவப் பருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான், முக்கியமான கடமை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH.P - madurai,இந்தியா
30-ஜூலை-201200:13:04 IST Report Abuse
RAMESH.P ஆசிரியர்கள் என்றால் எல்லோரும் மெட்ரிக்குலேசன் ஆசிரியர்களைத்தான் நினைக்கின்றனர். இன்றைய சூழலில் ஓர் ஆசிரியர் அரசுப்பள்ளியில் பணிக்கு சேரும் போது குறிப்பாக ஆண்கள் பள்ளியில் சேரும் போது ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். பள்ளிக்கு மது பாட்டிலுடன் வரும் மாணவர்கள், அனைவருக்கும் கல்வித்திட்டம் மற்றும் நபார்ட் போன்ற துறைகள் கொடுக்கும் கட்டிடங்களில் உள்ள விலை உயர்ந்த அரசு சொத்தான எஜுசாட் ஆண்ட்டனா(சுமார் ௨ லட்சம் பெருமானம்) , மின் சாதனங்களை உடைப்பது ....உச்ச கட்டமாக பாடம் சொல்லித்தரும் வகுப்பறைக்குள் மலம் கழிப்பது போன்ற இழி செயல்களை செய்கின்றனர்.இவர்களை கண்டிக்க ஆசிரியர் முயன்றால் அவருக்கு எதிராக வழக்கு போடுவது ,மிரட்டுவது என்று இக்கால மாணவர்கள் முற்றிலும் சீரழிவு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் .இவர்களை ஒரு நன்னடத்தை வகுப்பு நடத்தி திருத்துவது என்பது முடியாது . ஒட்டு மொத்த சமூக காரிணிகள் சரிசெய்யப்பட்டால் மட்டுமே மாணவனை பள்ளிக்குள் ஒழுக்கமானவனாக பார்க்க முடியும் . மாணவரின் ஒழுக்கத்திற்கு ஆசிரியர் தான் காரணம் என்று குற்றம் சுமத்தாமல்........ஆசிரியரும் ஒரு காரணம் என்றால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
மக்கள் குரல் - முத்து நகர் / இந்தியா,இந்தியா
30-ஜூலை-201200:12:11 IST Report Abuse
மக்கள் குரல் ஆசிரியர் மற்றுமொரு பெற்றோர். பிள்ளைய அடிச்சி வளக்கணும் முருங்கைய ஒடிச்சி வளக்கணும் இது பழமொழி , எல்லா குழந்தையும் அடிவாங்குவது இல்லை , தவறு செய்யும் குழந்தைகள்தான் அடிவாங்கும் ஏன் அடித்தார்கள் என்று புரியும் அதற்க்கு . எல்லோரையும் அசிரியர்கள் அடிப்பதும் இல்லை ,நான் படிக்கும் போது என்னுடைய ஹெட் மாஸ்டர் அவர்கள் வந்தாலே எல்லோரும் பயந்து அமைதியா இருப்போம் ஆனால் அவர் யாரையும் அடித்து நான் பார்த்தது இல்லை , 5 வரை குழந்தைகள் செய்வது என்ன என்பது தெரியாமல் செய்யும் , அவர்களிடம் மிரட்டி உருட்டி சொல்லி தரலாம் . +1 +2 படிக்கும் மாணவனுக்கு என்ன சொல்ல அடிக்கவும் முடியாது . அப்படியானால் முதலாம் ஆண்டில் இருந்து ஒழுக்கம் வரவேண்டும் முக்கியமாக ஆறாவது படிக்க வேறு பள்ளியை நாட வேண்டும் அப்போது கூடா நடப்பு காரணத்தால் தவறு இளைக்கும் மாணவனை தண்டிப்பது அசிரியர் கடமை இல்லையேல் அந்தமானவன் இன்னும் மூன்று நான்கு பேரையும் சேர்த்து கெடுப்பான் . என்னுடைய பையன் என வக்காலத்து வாங்கினால் அவன் இன்னும் மோசமானவனாக மாற பெற்றோர் காரணமாகிறார்கள் . ஒருசில அசிரியர்கள் எதற்கெடுத்தாலும் அடிக்கிறார்கள் அது கூடாது ,
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
29-ஜூலை-201219:55:25 IST Report Abuse
Natarajan Ramanathan மாணவர்களை அடிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் அது எந்த அளவு என்பதில்தான் சிக்கல். நான் படிக்கும்போது அடியே வாங்கியதில்லை. ஆனால் ரவுடித்தனம் பண்ணும் மாணவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடவேண்டியவர்களே. இப்போது ஒரே குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களே பெரும் பிரச்சனை செய்கிறார்கள். மிகவும் செல்லம் கொடுத்து கெடுத்துவிடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
29-ஜூலை-201215:34:58 IST Report Abuse
maran வயதிற்கு ஏற்றாற்போல் கண்டிப்பு, அன்பு பாசம் வைத்து அதுவும் தன பிள்ளைபோல் நினைக்கும் யார் ஒருவர் ஆசிரியராக உள்ளனரோ அவர்தான் சரியானவர்
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
29-ஜூலை-201215:23:50 IST Report Abuse
A R Parthasarathy முன்பெல்லாம் குருகுல வாசம் என்று சொல்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வீடு தேடிச்சென்று கல்விகர்பார்கள். ஆசிரியர்களுக்குண்டான பணிவிடைகளை செய்து கல்வியை கற்றுவருவார்கள். நாங்கள் படிக்கும் காலங்களில் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். வகுப்புக்கு வெளியில் நிற்க வைப்பார்கள். பெஞ்சின் மேல் ஏறி நிற்க சொல்வார்கள் வகுப்பு முடியும் வரை. இரண்டு மாணவர்கள் தவறு செய்திருந்தால், ஒருவர் காதை மற்றவர் பிடித்து தோப்புகரணம் போட வைப்பார்கள். அப்படியெல்லாம் படித்தவர்கள் தான் இன்று சமுகத்தின் பல பெரிய பொறுப்புகளை தங்கிபிடுத்துகொண்டிருக்கிறோம். எனவே, தவறிழைக்கும் மாணவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களின் உரிமையில் தலையிட்டால் நம்முடைய பிள்ளைகளின் கல்விதான் பாதிக்கப்படும். அதேநேரத்தில் ஆசிரியர்களும், மாணவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு துண்டுவதும், சிறுநீரை குடிக்க சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். இருசாராரும் தன்னிலை உணர்ந்து நடந்து கொண்டால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது.
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
29-ஜூலை-201215:12:11 IST Report Abuse
A R Parthasarathy "கல்வியை பற்றி கூறும் போது "கர்கைநன்றே கர்கைநன்றே, பிச்சைபுகினும் கற்கை நன்றே என்றும் "உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்ததும் கர்கைநன்றே" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இது மாணவனுக்கு. அதுபோல ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் இலக்கணம் இருக்கிறது. "தேனவடங்க சொரியவேண்டும்"என்கிறார்கள். அதாவது, ஒருவன் தன்னுடைய இரண்டுகைகளிலும் ஏதானும் porulai வைத்திருக்கும்போது முதுகில் அறிபெடுத்தால், அடுத்தவர் உதவியை நாடி சொரியசொல்வோம். அப்படி soribavar antha arippu pokumbadi சொரியவேண்டும் என்று solvaarkal. இந்த தகுதிகள் இருசாரருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
29-ஜூலை-201215:04:57 IST Report Abuse
குடியானவன்-Ryot நான் படிக்கும்போது என் ஆங்கில ஆசிரியர் அழகர்சாமி என்னையும் என் நண்பர்களையும் அடித்து பல பரம்பு குச்சிகளை உடைதுள்ளார் அதற்காக நாங்கள் அப்போது மிக வருத்தமடைதேம் ஆனால் எங்கள் 10௦ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது அந்த வருத்தம் காணமல் போய்விட்டது. +1 +2 படிக்கும் பொது நான் குறும்பு செய்ததால் ஒரு இரு முறை அவரிடம் அடிவாங்கினேன், அவரின் கண்டிப்பால் +2வில் என் வகுப்பு நண்பர்கள் அனைவரும் 900 மேல் மதிப்பெண் எடுத்தோம். நான் இந்த 12 வருடங்களாக ஒவ்வொரு முறை மதுரைக்கு போகும்போதும் அவரை பார்துவிடமட்டோமா என்ற ஆவலுடன் சென்று கொண்டுரிகிறேன்.... கடவுள் என்று ஒன்று இருந்தால் அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாங்குகிறேன்.....
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201212:46:08 IST Report Abuse
Matt P வீட்டில் அதிகமான குழந்தைகள் செல்லமாக வளர்க்கபடுகின்றன. பள்ளிகூடங்களில் ஆசிரியர்களால் மட்டும் அடிக்கப்பட்டு வீட்டில் அடிபடாத குழந்தைகளின் பெற்றோர்கள் பொங்கி எழுவதிலும் நியாயம் இருக்க தான் செய்கிறது....வீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகூடங்களில் எப்படி நடக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சொல்லி தர வேண்டும். அடியே படாமல் தன சுய சிந்தனையாலியே படித்து வாழ்க்கையில் சாதித்த பெர்யவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.,,மேலே கருத்து சொன்ன பெரியவர்கள் எல்லோரும் அடிப்பதை தவறாக தான் சொல்கிறார்கள்.ஒருவரை தவிர ..சிறியவர்களை அடிப்பதும் பலம் குறைந்தவர்களை அடிக்கும் உரிமையாக தான் எடுத்து கொள்ள முடிகிறது...தலைக்கு மேல் வளர்ந்து விட்டால் யாரும் தொட மாட்டார்கள். ,,,பயம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Sethu Sabapathy - chennai,இந்தியா
29-ஜூலை-201207:38:32 IST Report Abuse
Sethu Sabapathy "மாணவர்களை எப்படி கையாள வேண்டுமென்ற, அடிப்படை அணுகுமுறையை கற்றுத்தர வேண்டும். தொட்டதற்கெல்லாம் அடிப்பதும், திட்டுவதும், ஏளனம் செய்வதுமாக இருந்தால், மாணவர்கள் மிகப்பெரிய மனநோயாளியாக மாறிவிடுவர். காலை 9 முதல் மாலை 4 மணி வரை, தொடர்ந்து பாடங்களை எழுதுவது, கேட்பதென, மாணவர்கள் சோர்ந்து விடுகின்றனர். ஆசிரியர்களும் களைத்து விடுகின்றனர். ஒவ்வொரு பாடவகுப்பு துவக்கத்திலும், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி மனதளவில் இளைப்பாற்ற வேண்டும். உட்கார்ந்து, எழச் சொல்வது, கையை தூக்கி, இறக்கி விடச் சொல்வது, புதிர், விடுகதை சொல்வதென ஐந்து நிமிடங்கள் மாணவர்களை சந்தோஷப்படுத்தினால், அடுத்த ஒருமணி நேரம் புத்துணர்வோடு பாடத்தை கவனிப்பர். வீட்டுப்பாடம் எழுதாதவர்கள், படிக்காதவர்களை கைதூக்கச் சொல்வதற்கு பதிலாக, எழுதியவர்கள், படித்தவர்களை கைதூக்கச் சொல்லலாம். மாணவப் பருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான், முக்கியமான கடமை" மிகவும் சரியான கருத்து, இதனை நடைமுறைப்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும், மாணவ சமுதாயம் முன்னேற்றப்பாதையில் செல்லும், ஆசிரியர்களின் புகழ் பெருகும் என்பது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
29-ஜூலை-201207:20:19 IST Report Abuse
ஆரூர் ரங வீட்டில் அடி உதை மூலமே வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு வெறும் அன்பின்மூலம் ஆசிரியர் பாடம் நடத்தமுடியுமா? ஒழுக்கக் கேடாக நடந்துகொள்ளும் மாணவர்களை பள்ளியை விட்டு நிறுத்திவிட்டால் வெளியில் ரவுடிகளாகித் திரிவரே .அல்லது பெற்றோர் தன பிள்ளைகளுக்கு ஆசிரியர் என்னென்ன தண்டனைகள் தர ஒப்புதல் அளிக்கின்றனர் என்பதை எழுதி வாங்கிக்கொண்டு பள்ளியில் சேர்க்கமுடியுமா? ஐம்பஹு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் பொறுமையை சோதிக்கும் ரவுடி மாணவர்களை தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால் மற்ற மாணவர்களின் கதி? ஒரே தீர்வு, தகுதி பெற்ற உளவியல் அறிந்த கவுன்சிலர்களை எல்லாப்பள்ளிகளிலும் போதுமான அளவுக்கு நியமிப்பதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை