கனிம வளத்தை பொறுத்தவரை மணல் குவாரியோ, கல்குவாரியோ எதுவாக இருந்தாலும் பணம் கொழிப்பதால் அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கின்றன. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால், "கோலார்' சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பதைப் போல என்பதால், என்னென்ன வகையில் அரசு வருவாயை ஆக்கிரமிக்க முடியுமோ, அந்தந்த வகையிலெல் லாம் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு அரசு துறையினரும் உடன்பட்டதே முதற்காரணம்.
குவாரி விதிகள்: குவாரிகளைப் பொறுத்தவரை கனிமவளத்துறையின் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறுபவரே குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். குவாரியின் எல்லையை காட்ட மஞ்சள் கற்களை ஊன்றியிருக்க வேண்டும். குவாரி அருகில் 7.5 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். குவாரி அருகில் இருந்து 10 மீட்டருக்குள் நீராதாரங்கள், வழித்தடப் பாதைகள் இருக்கக் கூடாது. 50 மீட்டர் தொலைவுக்குள் உயர், குறைந்த அழுத்த மின்பாதை இருக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 50 மீட்டருக்குள் இருக்கக் கூடாது.
குவாரி கற்கள் வெட்டப்படும்போது தூசு கிளம்பும் என்பதால், மாசு கட்டுப்பாடு ஏற்பாடாக அருகில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களின்
கழிவுகளை, குத்தகை இடத்திற்குள்ளேயே போட்டு வைத்திருக்க வேண்டும். பின்
அவற்றை அரசே ஏலமிடும். குவாரி குறித்து முன்கூட்டியே "மைனிங் பிளான்' என்ற
ஒன்றை உரிமையாளர் வழங்கி, "அப்ரூவல்' பெற வேண்டும்.அதனடிப்படையிலேயே
குவாரி இயங்க வேண்டும். மைனிங் பிளானில், குவாரி அமைவிடம், பாதுகாப்பு,
அதில் வெட்டி எடுக்கப்பட உள்ள கற்களின் அளவு, வெட்டிய கற்களை எடுத்துச்
செல்லும் முறை உட்பட குவாரியின் அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும்.
இதுதவிர பல்வேறு சிறுசிறு நிபந்தனைகள் இவ்விஷயத்தில் வகுக்கப்பட்டுள்ளன.ஆனால் மைனிங் பிளான் ஏதோ கடனுக்கு அப்ரூவல் பெறப்பட்டதாகவே இருக்கிறது. மற்றபடி எந்த விதிமுறையும் கடைபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெயருக்கு ஏதோ சில இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். போர்ஜரி சீட்டு: நடைச்சீட்டுப்படி லாரிகளில் கற்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. ஒரே சீட்டை வைத்து பலமுறை, அனுமதிக்கப்பட்ட கற்களுக்கு மேல் லாரிகளில் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உதாரணமாக கீழவளவில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம் 3 ஏக்கர் அளவில் குவாரியை செயல்படுத்தி வந்தது.
அதில் ஒரு மூலையில் 20 சென்ட் அளவிற்கே கிரானைட் கற்கள் இருந்துள்ளன. எதிர்பார்த்த
அளவிற்கு கற்கள் கிடைக்காததால், அருகில் அரசு
Advertisement
புறம்போக்கு நிலத்தில் இருந்த
குவாரியை ஆழமாக தோண்டிவிட்டனர். அந்த கற்களை பட்டா நிலத்தில் கிடைத்தவை
போல அனுமதி பெற்று, கடத்தியுள்ளனர். இப்படி பல்வேறு வழிகளில், குவாரி
முறைகேடுகள் நடக்கின்றன. இதனால் அரசு கஜனாவுக்கு வர வேண்டிய தொகையில்
இழப்பு ஏற்படுகிறது.புறம்போக்கு நிலங்களில் கைவரிசை:குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும்
கற்கள் முழுவதுமே கிரானைட் கற்களாக இருக்கும் எனக் கூற முடியாது. பயன்படாத
கழிவு கற்களும் இருக்கும். எனவே பட்டா நிலங்களில் கற்களை வெட்டி எடுக்கும்
நிறுவனங்கள், குவாரியில் 10 அல்லது 20சதவீதம் அளவுக்கே "ரெக்கவரி' இருப்பதாகக் காட்டுகின்றன. வரிஏய்ப்புக்காக மீதியுள்ள 80 சதவீதம், "கழிவு கற்கள்' என காட்டப்படுகின்றன. சில பட்டா நிலத்தில் உள்ள குவாரியில் கிரானைட் கற்களே கிடைக்காமல் இருக்கலாம். அல்லது உண்மையிலேயே 10 சதவீத அளவிற்கே கிரானைட் கிடைத்து இருக்கும். ஆனால் 60 சதவீத அளவிற்கு கிரானைட் கிடைத்ததாக கூறுவோரும் உள்ளனர். இதற்கு காரணம், அரசு புறம்போக்கு நிலத்தில் வெட்டிய கற்களை கடத்தி, தங்கள் நிலங்களில் வைத்து, அதிகாரிகளின் ஒப்புதலை பெறுகின்றனர். அதிகாரிகளின் உதவியுடன், பட்டா நிலங்களில் வெட்டியது போல கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று வெளியே கடத்தப்படும். இப்படி, மதுரை மாவட்டத்தில், சில புறம்போக்கு நிலங்களில் வெட்டிய குவாரிகள் தற்போது அவசர, அவசரமாக மூடப்பட்டு வருகின்றன.