புதுடில்லி:""ஊழலை ஒழிக்கும் விஷயத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நாட்டு மக்களையும், பார்லிமென்ட்டையும் ஏமாற்றி விட்டது. அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரசை தோற்கடிப்போம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என, ஆவேசப்பட்ட பாபா ராம்தேவ், தன் உண்ணாவிரத போராட்டத்தை, நேற்றுடன் முடித்துக் கொண்டார். அம்பேத்கர் மைதானத்திலிருந்து, தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும், பாபா ராம்தேவ், கடந்த ஆறு நாட்களாக, டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.இவரது கோரிக்கையை, மத்திய அரசு கண்டு கொள்ளாததை அடுத்து, நேற்று முன்தினம், தன் ஆதரவாளர்களுடன், பார்லிமென்டை நோக்கி, பேரணி மேற்கொண்டார். அவரையும், அவரது ஆதரவாளர்களையும், போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
கெடு:
அனைவரையும் அம்பேத்கர் மைதானத்தில் தங்க வைத்தனர். இதன்பின், அவர்களை விடுவிப்பதாக போலீசார் அறிவித்ததும், ராம்தேவ், வெளியேற மறுத்து விட்டார். தன் ஆதரவாளர்களுடன், மைதானத்திலேயே, போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையே, சுதந்திர தின விழா நடக்கவுள்ளதால், மைதானத்தை விட்டு, இன்று (நேற்று) பகல் 1 மணிக்குள் வெளியேறும்படி, ராம்தேவுக்கு, டில்லி போலீசார் கெடு விதித்திருந்தனர். இந்நிலையில், நேற்று, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக, ராம்தேவ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, குழந்தைகள் கொடுத்த பழச்சாறை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.முன்னதாக, காங்கிரஸ் அரசையும், பிரதமரையும், கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசியதாவது:என்னுடைய போராட்டத்துக்கு, 400 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கவும், நடவடிக்கை எடுப்பதாக கூறி, நாட்டு மக்களையும், பார்லிமென்ட்டையும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏமாற்றி விட்டது. காங்கிரசை தவிர, அனைத்து அரசியல் கட்சிகளும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கவிழும்:
கறுப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில், பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால், கண்டிப்பாக, மத்திய அரசு தோற்று விடும். முலாயம் சிங் யாதவும், மாயாவதியும், ஆதரவை வாபஸ் பெற்றால், ஒரே நாளில், மத்திய அரசு கவிழ்ந்து விடும்.கறுப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங், நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படவில்லை எனில், பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், நாளை (இன்று) தேசியக் கொடி ஏற்றுவதை, எங்களால் தடுக்க முடியும். ஆனால், அது சரியான நடவடிக்கை அல்ல. அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க மாட்டோம். கண்டிப்பாக, காங்கிரசை தோற்கடிப்போம். கறுப்பு பணத்தை மீட்பதற்கு, யார் உதவுகின்றனரோ, அவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்போம். சுதந்திர தின விழா நடக்கவுள்ளதால், அதற்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதற்காக, இங்கிருந்து வெளியேறுகிறோம்.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.இதையடுத்து, நேற்று இரவு, ஹரித்வாரில் உள்ள, தன் ஆசிரமத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
மாயாவதி பாய்ச்சல்:
கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்ட ராம்லீலா மைதானத்துக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ஆகியோர், நேற்று முன்தினம், நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதத்தை, எங்கள் கட்சி ஆதரிக்கிறது. ஊழலுக்கு எதிராக, யார் போராட்டம் நடத்தினாலும், அதை ஆதரிப்போம். அதேநேரத்தில், உண்ணாவிரத மேடையில், கட்காரி, சரத் யாதவ் போன்ற, தே.ஜ., கூட்டணி தலைவர்களை அனுமதித்ததை, ஏற்க முடியாது. ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் அரசியல் கூடாது என்பதே, எங்கள் கருத்து.இவ்வாறு மாயாவதி கூறினார்.