Independence war: A flash back | சுதந்திர போர் - ஒரு "பிளாஷ்பேக்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர போர் - ஒரு "பிளாஷ்பேக்

Added : ஆக 14, 2012 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

அந்த இரவு நடந்தது என்ன:1947, ஆகஸ்ட் 14 இரவு... இன்று போல,"டிவி'க்களின் நேரடிஒளிபரப்பு இல்லை... இருப்பினும் நாட்டின், அனைத்து திசைகளிலும் சுதந்திர குதூகலம் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.தலைநகர் டில்லிவிழாக் கோலத்தில்மூழ்கியிருந்தது.

ஆனால், விடுதலை முயற்சிகளை முன்னின்று நடத்தி வந்த காந்திஜி, சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் கோல்கட்டாவில் மவுன விரதம் மேற்கொண்டிருந்தார். தேசம், மத ரீதியாக பிரிக்கப்பட்டதிலும், நாடு துண்டாடப்பட்டதிலும் துவண்டு போனார் காந்திஜி.1946 டிசம்பரில்தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நிர்ணயச் சபை, 1947 ஆகஸ்ட் 14, நள்ளிரவு முதல்தற்காலிக பார்லிமென்டாக செயல்படத் துவங்கி இருந்தது. முதலில், சபையின் தலைவர்ராஜேந்திர பிரசாத் பேசினார். நிரம்பி வழிந்த சபையில், அவரது உரை உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.

""கடவுளுக்கு நன்றி... மாபெரும் தியாகங்களையும், எண்ணற்ற துயரங்களையும் விழுங்கி பிறந்துள்ள, இச்சுதந்திரத்திற்குக் காரணமான, புனிதப் போரில் நம்மை 30 ஆண்டுகளாக வழி நடத்தி வந்துள்ள காந்திஜிக்கு, இத்தருணத்தில் மரியாதையும் அன்பும் செலுத்தி பெருமை கொள்ள வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

தன்னம்பிக்கை மிடுக்குடன் அடுத்து பேச வந்த நேரு ""இந்த நள்ளிரவின் உச்சத்தில், உலகம் உறங்குகையில் இந்தியா தனது சுதந்திரத்திற்காகவும், புதிய வாழ்க்கைக்காகவும் விழித்துக் கொண்டுள்ளது. நெடுங்காலம் இதற்காகக் காத்திருந்த நாம், இந்த நேரத்தில் இந்தியாவிற்காகவும், அதன் மக்களின் விடியலுக்காகவும், அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்'' என தனது வேட்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்தார்.

தொடர்ந்து, அரசியல் நிர்ணய சபையை தற்காலிக பார்லிமென்டாக மாற்றிடும்தீர்மானத்தை சபையில் முன் மொழிந்தார்நேரு. முஸ்லிம் லீக்கை சேர்ந்த சவுத்ரிகாலீக் உஸ்மான் வழி மொழிந்தார்.பின் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதற்குள் விடிய தொடங்கியது. இந்திய பெண்களின் சார்பில், ஹென்சா மேத்தா தேசியக் கொடியை, அவையில் சமர்ப்பித்தார். ஆக.15 காலை,செங்கோட்டையில் யூனியன் ஜாக் கொடிஇறக்கப்பட்டு இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, நேரு தலைமையில், 14 உறுப்பினர்களைக் கொண்டசுதந்திர இந்தியாவின், முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. பின், அரசு மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில், நேரு கேட்டுக் கொண்டபடி சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மவுன்ட்பேட்டன் பதவியேற்றார்.


தேசத்தை உருக்கியதேசிய கீதம்:

சுதந்திர போராட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தும்வகையில் ஆங்காங்கே தலைவர்களின் மேடை பேச்சுகள், கூட்டங்கள் நடந்தன. இதைப் போல், நம் கவிஞர்களின் பாடல்கள், மக்கள் மனதில் அடங்கிக் கிடந்த சுதந்திர தாகத்தை கொழுந்து விட்டு எரிய வைத்தன. கோல்கட்டாவில் பிறந்த பங்கிம் சந்திராஎன்பவர் 1882ம் ஆண்டு "வந்தே மாதரம்' எனத் துவங்கும் தேசபக்தி பாடலை எழுதினார்.ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு இசையமைத்தார். இது, வங்கத்திலும், சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டது. 1870களில் ஆங்கிலேயர்கள், "கடவுளே, எங்கள் ராணியை காப்பாற்று (எணிஞீ குச்திஞு tடஞு கிதஞுஞுண) என இங்கிலாந்து ராணியை புகழும் பாடலைகட்டாயமாக்கினர். இதை எதிர்க்கும் வகையில், பங்கிம் இந்த பாடலை இயற்றினார்.இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இப்பாடல் "இந்தியாவின் நாட்டுப் பாடல்' என்ற பெருமை பெற்றது. 1896ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் இப்பாடலை பாடினார். இவரே 1911ம் ஆண்டு "ஜன கன மன' எனத் துவங்கும் தேசப் பக்தி பாடலைப் பாடினார்.இப்பாடல், வங்க மொழியில் இயற்றப்பட்டது. இப்பாடல், அதே ஆண்டு டிச.27ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், முதன் முதலாக பாடப்பட்டது. சுதந்திரம்
பெற்ற பின் இப்பாடலே தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. 2011 டிச.27 ல் இப்பாடல் பாடப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்தது.


துணைக்கண்டம் என்ற பெயர் ஏன் :

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து,ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்தது. மொழி, மத வேறுபாடு காரணமாக அவற்றை பிரிக்க வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்தனர். நாடு பிரியாமல் இருந்திருந்தால், வளர்ச்சிஏற்பட்டிருக்குமா அல்லது வீழ்ச்சி ஏற்பட்டிருக்குமா என்ற ஒரு சர்ச்சை இருந்தாலும், பெரிய சக்தியாக தற்போது இந்தியா வளர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.சிறுபான்மையினர் பிரச்னை காரணமாக, 1947 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு, தனி நாடாக அறிவிக்கப்பட்டது.இந்தியர்களுக்கு பெருமையையும், பூரிப்பையும் தரக் கூடியது வேற்றுமையில் ஒற்றுமை. தற்போது மாநிலங்கள், மொழி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மொழிகள், மதங்கள், சாதிகளின்எண்ணிக்கையை பார்த்தால், மலைப்பு ஏற்படும். ஆனால், அனைவரையும் இந்தியர் என்ற உணர்வு, ஒன்று சேர்க்கிறது. எத்தனை பிரிவினைகள் இருந்தாலும், இந்தியர் என ஒன்றுபடுவது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.பிரிவினை ஏற்பட்ட போதிலும், துணைக் கண்டம் என்ற பெயரைஇந்தியா தக்கவைத்துக் கொண்டது. ஆசியக் கண்டத்தில் உள்ள, அனைத்து வகையான தட்பவெப்ப நிலையும், நில அமைப்பும்இந்தியாவில் உள்ளது. அதனாலேயே இந்தியா ஒரு துணைக் கண்டம் என அழைக்கப்படுகிறது.


"செய் அல்லது செத்துமடி':

சுதந்திர போரட்டத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தை, பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின், 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்தகாங்கிரஸ் மாநாட்டில்"வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும், ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்.இதையடுத்து, இப்போராட்டம் நாடு முழுவதும்தீவிரமடைந்தது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல், மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம், வன்முறையாக மாறியது. இது, ஆங்கிலேயர் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது, என உணர வைத்தது. அந்தளவுக்கு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆகஸ்ட் மாதம்இந்தியா சுதந்திர நாடானது.


எப்படி இருக்க வேண்டும் தேசியக்கொடி :

இந்திய தேசியக்கொடி எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும், அதை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை, இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.
விதிகள்:
* தேசியக்கொடி செவ்வகவடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேல்புறம் காவிவண்ணம், நடுவில் வெண்மை, கீழே பச்சை, வெண்மையின்நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும்.
* தேசியக்கொடி கம்பளி, கதர் மற்றும் பட்டுத் துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
* கீழ்க்கண்ட அளவுகளில் கொடி இருக்கலாம்.6300 து 4200, 3600 து 2400, 2700 து 1800, 1350 து 900,900 து 600, 450 து 300, 225 து 150,150 து 100 (அளவு மில்லி மீட்டரில்)
* தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் தேசியக் கொடியை பயன்படுத்த தடையில்லை. ஆனால் அதற்குரிய மரியாதையுடன் கடைபிடிக்க வேண்டும்.
* பொது இடத்தில் தேசியக்கொடியை அவமதித்தல்,கிழித்தல், எரித்தல் போன்றவை தண்டனைக்குரிய செயல்.
* எந்த பொருளையும் மூடி வைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடி இருக்கக்கூடாது.
* தேசியக்கொடியை சட்டையாகவோ, கைக்குட்டையாகவோ பயன்படுத்தக் கூடாது.
* உதயத்துக்கு பின்பு தான் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும், அதே போல சூரியன் மறைவதற்கு முன்பே இறக்கி விட வேண்டும்.
* அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில், வலது புறம் நமது தேசியக்கொடியும், இடது புறம்அந்நாட்டுக்கொடியும் இடம் பெற வேண்டும்.
* பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் போது, நமது கொடி முதலில் ஏற்றப்பட்டு, கடைசியாக இறக்கப்படவேண்டும். பிற நாட்டு கொடிகள், அந்நாட்டின் ஆங்கிலபெயர்களின் அகர வரிசையில் அமைய வேண்டும்.
* ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோர் மறைவின் போது, நாடெங்கிலும், சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிஆகியோர் மறைவின் போது டில்லி மற்றும் அவர் சார்ந்தமாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால், அந்தந்த மாநிலங்களிலும்,தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும்.
* அரைக்கம்பத்தில் உள்ள தேசியக்கொடியை இறக்கும் போது, முழுக்கம்பத்துக்கு ஏற்றிய பின்பே இறக்க வேண்டும்.
* தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிக்கம்பம் தான், இந்தியாவிலேயே பெரியது.


சுதந்திர போர் - ஒரு "பிளாஷ்பேக்'

:* இந்திய விடுதலைப் போர், 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திலிருந்து துவங்கியது. இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என இதை அழைக்கின்றனர்.
* காங்கிரஸ் கட்சி, 1885, டிச.28ல் ஹியூம் என்பவரால் மும்பையில் துவங்கப்பட்டது. மும்பையில் நடந்த முதல் மாநாட்டிற்கு உமேஷ் சந்திர பானர்ஜியும், கோல்கட்டாவில் நடந்த இரண்டாம் மாநாட்டின் தலைவராக தாதாபாய் நவுரோஜியும், சென்னையில் நடந்த 3ம் மாநாட்டிற்கு சையத் தியாப்ஜியும் தலைமை வகித்தனர். இந்திய விடுதலை இயக்கத்தை இக்கட்சி முன்னெடுத்துச் சென்றது.
* 1905ல் ஆங்கிலேயர்கள், வங்கப் பிரிவினை கொண்டு வந்தனர். இதை எதிர்க்கும் வகையிலும், சுயராஜ்யம், தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற தீர்மானங்களை முன்னிறுத்தி 1906ல் சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. 1907ல் காங்கிரஸ் கட்சி, பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் பிரிந்தது.
* 1909ல், இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இந்திய துறை செயலர் ஜான் மார்லி, வைஸ்ராய் மிண்டோ ஆகியோர் இதற்கான பரிந்துரைகளை வழங்கினர். இது மிண்டோ - மார்லி சீர்திருத்தம்.
* 1915ல் காந்தி, தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.
* 1916ல் தன்னாட்சி இயக்கம், சென்னையில் அன்னி பெசன்ட், மும்பையில் திலகர் தலைமையில் துவங்கியது.
* விடுதலை வேட்கை உடையவர்களை அடக்கவும், காலனி அரசுக்கு எதிரானவர்களை ஒழிக்கவும் 1919ல் ரவுலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. விசாரணையின்றி சிறையில் வைக்க உத்தரவிட்ட இந்த சட்டத்தை கறுப்புச் சட்டம் என்றனர். இச்சட்டத்தை எதிர்த்து, முதல் சத்தியாகிரகத்தை காந்தி மேற்கொண்டார்.
* 1920ல், காந்தியாலும் காங்கிரஸ் கட்சியாலும் தோற்றுவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், 1922ல் வாபஸ் பெறப்பட்டது.
* சட்டமன்ற புறக்கணிப்பு என்ற காந்தியின் கொள்கையை எதிர்த்து, சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோரால் அலிப்பூர் சிறையில் இருந்த போது 1922ல் சுயராஜ்யக் கட்சி துவங்கப்பட்டது.
* 1927ல் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வருவதற்காக சைமன் குழு நியமிக்கப்பட்டது. 1928ல் இந்தியா வந்த சைமனை எதிர்த்து நடந்த கிளர்ச்சிப் போராட்டத்தில், லாலா லஜபதிராய் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1930ல் சட்ட மறுப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, முதற் கட்டமாக உப்பு வரிக்கு எதிராக காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகம் துவக்கினார்.
* 1931ல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி - இர்வின்
ஒப்பந்தம் கையெழுத்தானது. பகத்சிங் , ராஜகுரு தூக்கிலிடப்பட்டனர்.
* 1935ல், இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இந்தியர்களுக்கு தன்னாட்சி உரிமைகள் வழங்கும் பொருட்டு, சட்டம் இயற்றப்பட்டது. 1937ல்
மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. 1939ல் காங்கிரசிலிருந்து வெளியேறி, பார்வர்டு
பிளாக் என்ற கட்சியை நேதாஜி துவங்கினார்.
* 1941ல், லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில், ஜின்னா பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்தார்.
* 1942ல் உடனடி சுதந்திரம் கேட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் துவக்கினார்.
* 1947ல், கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் ஜூன் 3ம் தேதி, இந்தியாவை இரு நாடுகளாக பிரிப்பதாக அறிவித்தார். ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான்
பிரிந்தது. ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றது.


சிப்பாய்க் கலகம்:

முதல் இந்திய சுதந்திரப்போர் என அழைக்கப்படும் சிப்பாய்க்கலகம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரப்போக்கை கண்டித்து மே 10, 1857 ல் ஏற்பட்டது. இக்கிளர்ச்சியில் பலர் பங்குபெற்றனர். சிப்பாய்க் கலக கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் படைக்கு பெரும் சவாலாக இருந்தனர். ஜூன் 20 1858 குவாலியர் நகர் வீழ்ச்சியோடு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்று, விக்டோரியாமகாராணியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வந்தது. இந்திய மன்னர்களின்ஒற்றுமையின்மை, 1757 ல் பிளாசிப்போர் வெற்றி போன்றவற்றால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வங்காளம் வரை பரவியது. பக்சார் போர் வெற்றியால் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. பின் பல மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமையும் பெற்றது. தொடர்ந்துஇந்நிறுவனம் சென்னை, மும்பை போன்ற பிரதேசங்களிலும் தனது கம்பெனியை விரிவுபடுத்தியது.1806 ல் வேலூர் சிறையில் பணியாற்றிய இந்து, முஸ்லீம் சிப்பாய்களுக்கிடையே பிரிட்டிஷார் உருவாக்கிய சீருடை விதிமுறைகள் காரணமாக கிளர்ச்சி வெடித்தது. இக்கிளர்ச்சியே பிரிட்டிஷாருக்கு எதிராகஏற்பட்ட முதல் கிளர்ச்சி.


சாதித்த சத்தியாகிரகம் :

உலகில் உள்ள போராட்டகளில் எல்லாம் வலிமையானது. ஆயுதத்தால் பெற முடியாததை பெற்றுத் தந்தது. காந்தி என்ற தனி மனிதரை உலகமேதிரும்பிப் பார்த்து "மகாத்மா' என கூற வைத்தது. இந்த பெருமை எல்லாம் சத்தியாகிரகம் என்ற போராட்டத்துக்குத் தான் சேரும். சத்தியாகிரகம் என்பது வன்முறையற்ற வழியில், அடக்குவோரின் சட்டத்தை ஏற்கமறுப்பது. இது சமஸ்கிருத சொல். "சத்ய' என்றால் உண்மை. "ஆக்ரஹா' என்றால் உறுதியாக பற்றியிருத்தல். சத்தியாகிரகம், பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. இதில் உப்புச்சத்தியாகிரகம் சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தது. இந்திய கடலிலிருந்து எடுக்கப்படும் உப்புக்கு பல மடங்கு வரியை ஆங்கிலேயர்கள் விதித்தார்கள். இதை எதிர்த்து அறவழியில் போராட முடிவெடுத்த காந்திஜி, கடலுக்கு சென்று, உப்பு காய்ச்ச முடிவெடுத்தார். காந்திஜி, சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு, மார்ச் 12, 1930ல் நடை பயணத்தை துவக்கினார். ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றனர். தமிழகத்தில், ராஜாஜி தலைமையில், காமராஜர் உட்பட பலர் வேதாரண்ய போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜாலியன் வாலாபாக் படுகொலை:


1919 ஏப்.13, இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் திடலில், அன்று ஜெனரல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் தலைமையில், நடத்தப்பட்டதுப்பாக்கிச் சூடு நிகழ்வே ஜாலியன் வாலாபாக் படுகொலை.
படுகொலைக்கு காரணம்: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதேசி இயக்கம், சுதந்திர போராட்டங்கள், சத்தியாகிரகம் போன்றவை முனைப்புற்றன. பிரிட்டிஷ் அரசு, சத்தியாகிரக இயக்கத்தை, தங்களுக்கு வந்த பேராபத்து எனக் கருதி, மக்களிடையே வளந்து வரும் போராட்ட எழுச்சியை, ஆரம்பத்திலேயே கிள்ளி எரிந்துவிட முடிவு செய்தது. இதற்காக, "சிட்னி ரவுலட்' என்பவரின் தலைமையில், ரவுலட் சட்டத்தை பிறப்பித்தது. இதை எதிர்த்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை.
என்ன நடந்தது: ஏப்.13ல் சீக்கிய புத்தாண்டு. அன்று ஜாலியன் வாலபாக் திடலில், கண்டன பொதுக்கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திடலில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இத்திடல் நான்கு பக்கம் பெரிய மதில்களால் சூழப்பட்டு இருந்தது. உள்ளே மற்றும் வெளியே செல்ல ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. கூட்டத்தினரைக் கண்டு கொதிப்படைந்த ஜெனரல் டயர், அவருடன் சென்ற சிப்பாய்களை அழைத்து, எந்த எச்சரிக்கையும்தராமல், கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். வெளியே செல்ல ஒரே வழி இருந்ததால், பலர் உள்ளே மாட்டிக் கொண்டனர்.பத்து நிமிடங்கள் நடந்த துப்பாக்கி சூட்டில், பெண்கள், குழந்தைகள் உட்பட 379 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இயக்கங்களும், தலைவர்களும்:

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு, பல்வேறுதலைவர்கள், போராட்டங்கள் நடத்தினர். யார் எந்தபோராட்டத்தை நடத்தினர்.
மகாத்மா காந்தி - ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், சத்தியாகிரக இயக்கம், வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம்.
வல்லபாய் படேல் - வரி கொடா இயக்கம்
அலி சகோதர்கள் - கிலாபத் இயக்கம்
அன்னிபெசன்ட் - ஹோம்ரூல் இயக்கம்
அரவிந்த கோஷ் - வங்க புரட்சி
அப்துல் கபார்கான் - சிவப்பு சட்டை இயக்கம்
ஆச்சார்யா துளசி - அனுவிரத இயக்கம்
ஆச்சார்யா - சர்வோதயா இயக்கம்
வினோபாபாவே - பூமி தான இயக்கம்
சுந்தர்லால் பகுகுணா - சிப்கோ இயக்கம்
குரு கோபிந்த சிங் - கால்சா இயக்கம்
தயானந்த சரஸ்வதி - ஷித்தி இயக்கம்
பாபா ஆம்தே - நிட் இந்தியா இயக்கம்


நான்கு நாட்டுக்கு சுதந்திரம்:

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆக., 15ம் தேதி, வேறு சில நாடுகளுக்கும் சுதந்திர தினமாக உள்ளது.
* தென் கொரியா - 1945 ஆக., 15ல் ஜப்பானிடம் இருந்து சுதந்திரம்.
* வட கொரியா - 1945 ஆக., 15ல் ஜப்பானிடம் இருந்து சுதந்திரம்.
* காங்கோ - 1960 ஆக., 15ல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம்.
* பக்ரின் - 1971 ஆக., 15ல் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம்.


சக்கரம் சொல்லும் கதை:

நமது தேசியக் கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. 1947, ஜூலை 22ம் நாள் இந்திய அரசால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. சக்கரம் 24 ஆரங்களுடன் நீல நிற வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம்,சட்டம், ஒழுங்கு, உண்மை போன்றவற்றைகடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உணர்த்துகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaffar mohammed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201216:14:23 IST Report Abuse
jaffar mohammed மிக மிக அருமையயான கருத்துகள். எல்லோரும் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியனாக இருப்பதற்கு நாம் எல்லோரும் பெருமை பட்டு கொள்ள வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
bala - Bedok,சிங்கப்பூர்
15-ஆக-201213:08:00 IST Report Abuse
bala மிகச் சிறந்த கருத்துக்கள்... அனைத்துமே எனக்கு இப்போதுதான் தெரிந்தது... இதை தொகுத்த நபருக்கும், தினமலருக்கும் நன்றி.. அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்........
Rate this:
Share this comment
Cancel
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
15-ஆக-201212:07:56 IST Report Abuse
Chidambaranathan Ramaiah அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
bala - littl india,சிங்கப்பூர்
15-ஆக-201204:46:24 IST Report Abuse
bala முதல் சுதந்திர போராட்டம் 1808 இல் மருதுபண்டியர்களால் ஆரம்பிக்கபட்டது தெனிந்தியாவில் .49 ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட சிப்பாய் கழகம் எப்படி ????????????????
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
15-ஆக-201200:33:07 IST Report Abuse
Nagaraj மிக மிக அருமையயான கருத்துகள். எல்லோரும் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியனாக இருப்பதற்கு நாம் எல்லோரும் பெருமை பட்டு கொள்ள வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை