"காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டினால், இரு மாநில முதல்வர்களும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர்; கூட்டம் வெற்றியடையாது; எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே' என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
"காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும்' எனக்கோரி, மே, 18ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, "காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, "காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, தமிழக அரசு கோரியுள்ளது; இதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக, மத்திய அரசு, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை எனில், கடுமையான கேள்விகள் எழுப்பப்படும்' என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது. சில மாதங்களுக்கு முன், தமிழக மற்றும் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை, மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில், போதுமான அளவில் மழை பெய்யாத காலங்களில், அணைகளில் இருக்கும் தண்ணீரை, இரு மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது, என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வலியுறுத்தல்: காவிரி நடுவர் மன்றம், 1991ம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மழை பொய்த்துப் போனால், அணைகளில் உள்ள தண்ணீரை, எப்படி பகிர்வது என்பது குறித்த, பங்கீட்டு பார்முலாவை தெரிவித்திருந்தது. அதைச் சுட்டிக் காட்டிய தமிழகம், அதன்படியே இப்போதும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென, வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. "இறுதி தீர்ப்பு வந்து விட்ட நிலையில், இடைக்கால உத்தரவு என்பதே இல்லை; இடைக்கால தீர்ப்பில், கூறப்பட்டிருக்கும் பங்கீட்டு பார்முலாவை அமல்படுத்த வேண்டிய சூழலே இல்லை' என வாதிட்டது. உடன், "இறுதி தீர்ப்பில் கூட, வறட்சிக் காலங்களில் அணைகளின் தண்ணீரை, பங்கிட்டுக் கொள்ளும் பார்முலா கூறப்பட்டுள்ளது. அதன்படியாவது, தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும்' என, தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, "இறுதி தீர்ப்பு ஒன்றும் அரசின் கெஜட்டில் வெளியிடப்படவில்லை. மேலும், தீர்ப்பு குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, பங்கீட்டு பார்முலாவை செயல்படுத்த முடியாது' என, கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பானது, அரசு கெஜட்டில் வெளியிடப்படவில்லை. அதனால், தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி, கெஜட்டில் வெளியிடாமல் மத்திய அரசும் காலம் தாழ்த்தி வருகிறது.
தமிழக கட்சிகள் தூக்கம்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடும்படி, நிர்பந்தம் கொடுக்க, டில்லியில் எந்த தமிழக கட்சிகளும் தயாராக இல்லை. பார்லிமென்டில், இதுகுறித்து வலுவான வாதங்களை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க, குறிப்பாக, தி.மு.க.,வும் தயாராக இல்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ளதோடு, மத்தியில் அரசு இயங்குவதற்கே காரணமாகவும், தி.மு.க., உள்ளது. ஆனாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, கெஜட்டில் வெளியிடும்படி வலியுறுத்த, இதுவரை போதுமான நடவடிக்கைகளை தி.மு.க., எடுக்கவில்லை. காலம் கடந்து போன சூழ்நிலையில் தான், இப்போது, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, தமிழக அரசு வலியுறுத்திக் கொண்டும், அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதுமான நிலைமைகள் உள்ளன. "காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக, மத்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும்' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்த பின்னரே, மத்திய அரசு வட்டாரங்கள் பரபரப்பில் ஆழ்ந்துள்ளன. "காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுமா' என்ற கேள்வியும், பலமாக எழுந்துள்ள நிலையில், "அதற்கான வாய்ப்பே இல்லை' என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் நேற்று டில்லியில் உறுதிபட தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பதெல்லாம் சரிதான். ஆனால், நடைமுறையில் உள்ள பிரச்னைகளை கையாள்வதில், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் இருக்கிறது. காவிரி ஆணையத்தை கூட்டுவதால், எந்த பயனும் இல்லை. அப்படியே கூட்டம் கூட்டப்பட்டாலும், அதில், பங்கேற்கும் இரு மாநில முதல்வர்களும், அவரவர் கோரிக்கையில் உறுதியாகவே இருப்பர். விட்டுத் தரவோ, சிக்கலை தீர்க்க சற்று கீழிறங்கி வரவோ மாட்டார்கள். அதனால், கூட்டம் வெற்றியடைய வாய்ப்பே இல்லை. எனவே, தோல்வியடையும் கூட்டத்தை, பிரதமர் தலைமையில் கூட்டுவதா என்பதே, மத்திய அரசுக்கு தற்போதுள்ள தயக்கம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
"தீவிரமாக படிக்கிறோம்': மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் இதுபற்றி கேட்டபோது, ""சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மத்திய அரசு தீவிரமாக படித்து வருகிறது. இதுகுறித்து, விரைவில் உரிய பதில் அளிக்கப்படும்,'' என்றார். காவிரியில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விட்டது. 40 முதல், 60 சதவீதம் வரை குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தேவை. எனவே, சம்பா பயிர் பலத்த கேள்விக் குறியில் நிற்கிறது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து, போதுமான அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால், மேட்டூரில் தண்ணீர் போதுமான அளவுக்கு இல்லை. இப்படி, பிரச்னை தீவிரமாக இருந்தும் கூட, இதுகுறித்து இன்னும் தமிழக எம்.பி.,க்கள் யாருமே, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஓன்பது ஆண்டுகளாக காவிரி ஆணையம் கூட்டப்படவில்லை.கர்நாடகாவில் பிஜேபி அல்லது காங்கிரஸ் அல்லது தேவகௌடாவின் கட்சி இவைகளே ஆட்சிக்கு வரும் நிலையில் அந்த மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை பற்றித்தான் மேற்கண்ட கட்சிகளின் மத்திய தலைமை சிந்திக்கிறது.1971 இல் இந்திரா காந்தி நியாயமாக செயல்பட்டிருந்தால் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்திருக்கும்.வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திரா காந்தி ஏன் நதி நீரை தேசிய சொத்தாக அறிவிக்கவில்லை.கடந்த நாற்பது ஆண்டுகளாக இனவெறியை தூண்டி கர்நாடகா பெருமளவில் காவிரியை ஆக்கிரமித்து விட்டது.உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர்மன்றம் இவைகளின் தீர்ப்புகளை கர்நாடக அரசுகள் காலில் போட்டு மிதிக்கின்றன.மாறி வந்த மத்திய அரசுகள் இந்த அநீதியை வேடிக்கை பார்க்கின்றன. கர்நாடகம் தன்னுடைய அணைகள் வழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்று அநியாயம் செய்கிறது.இந்திய கூட்டாட்சி சிதறினால் அதற்க்கான முழு பொறுப்பும் மத்திய அரசையே சாரும்.கர்நாடக காவிரி அணைகளை ராணுவத்தின் காட்டுப்பாட்டில் ஓப்படைத்து தமிழகத்திற்கு உரிய நீரை மத்திய அரசு தர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதம் நிகழும்.மேற்கு தொடர்ச்சி மலை உச்சியை மையமாக வைத்து தமிழகத்திற்கு உரிய நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கி "குமரி முதல் குடகு வரை தமிழ்நாடு" என்று தமிழக மக்கள் கிளர்ந்தெழுவர்.ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் தண்ணீர் சுமார் 65000 TMC .இதில் சுமார் 17500 TMC மட்டும் தான் உபயோகமாகிறது.எஞ்சிய சுமார் 47000 TMC (73 % ) வீணாக கடலில் கலக்கிறது.மத்திய அரசு நதி நீரை தேசிய சொத்தாக அறிவித்து இந்த வீணாகும் உபரி நீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டு நதிகள் இணையும் புதிய இந்தியாவை உருவாக்க முன்வரவேண்டும்.உச்ச நீதிமன்றம் 2002 இல் நதி நீர் இணைப்பு குறித்து தெரிவித்த கருத்துக்களை அப்போதைய பிஜேபி கூட்டணி அரசு ஏற்று செயல்படுத்த முனைந்தது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் நதி நீர் இணைப்பில் ஆர்வம் காட்டினார். ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக இதை கிடப்பில் போட்டுவிட்டது.ராகுல் காந்தி நதி நீர் இணைப்புக்கு எதிராக உள்ளார்.இந்த நிலை தொடர்ந்தால் நதி நீர் பிரச்சனைகளால் உள்நாட்டுப்போர் மூளும்.
BY
ஆறுபாதி ப.கல்யாணம்
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு இழப்பு ஏற்படலாம் என்று பாஜக கருதுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. "பாஜகவிற்கு அங்கே பின்னடைவு ஏற்பட்டு விட்டது நாம் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்" என்று நினைத்து கர்நாடகா சார்பாக மத்திய காங்கிரஸ் முயல்வதும் புரிந்து கொள்ளக் கூடியதே ஆனால் தமிழினத் தலைவரின் திமுக இன்னமும் மத்தியக் கூட்டணியில் உள்ளதே???? தமிழக நலனுக்கு ஏதாவது செய்யுமா இந்த விஷயத்தில்????
இதற்காக தமிழக முதல்வர் தனது பதவியை உதறி தள்ளி விட்டு கண்டனத்தை தெரிவிக்கலாமே?அல்லது கூண்டோடு ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவிக்கலாமே? அல்லது குறைந்த பட்சம் எதிர்கட்சி தலைவர்களை எல்லாம் டில்லி அழைத்து சென்று பிரதமரிடம் முறையிடலாமே?அல்லது கலைஞரை கலந்து ஆலோசிக்கலாமே?அல்லது அரசின் சார்பில் ஒரு கடையடைப்பு நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கலாமே? அல்லது ராசாவை கைது செய்ய பாராளுமன்றத்தை முடக்கியது போல இதற்காகவும் ஜெயா பாராளுமன்றத்தை முடக்கலாமே? ஒண்ணுமே செய்யாமல் வெறுமனே கடிதம் எழுதுவதற்கா உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?நீங்கள் அமர்ந்திருக்கும் முதல்வர் பதவிக்கே வித்திட்டவர்கள் டெல்டா பகுதி மக்கள் (சிறிரங்கம் )
மரியா ..உங்களுக்கு நல்ல யோனையே இந்த ஜன்மத்தில் தோணாதா? கலைஞரை வைத்து ஆலோசனையா? மக்களுக்கு நல்லது செய்யற வழக்கமே இல்லையே. சர்க்காரியா கமிஷன் வழக்கிலிருந்து தப்பிக்க காவிரிப் பிரச்னையில் இந்திராவிடம் சரணடைந்து நமக்கு துரோகம் செய்தவரை , வழக்கு நிதி என்ற பெயரில் ஏழை விவசாயிகளை ஏமாற்றியவரை இதற்கெல்லாம் கூப்பிடுவது மடியில் பூனையைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போலத்தான் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.