How Kovai corporation get best award? | அவலமா கிடக்குது 100 வார்டு: அரசு கொடுத்தது அவார்டு! | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அவலமா கிடக்குது 100 வார்டு: அரசு கொடுத்தது அவார்டு!

Updated : ஆக 22, 2012 | Added : ஆக 19, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வுமூலமெல்லாம் தர முடியாத பேரதிர்ச்சியை, கோவைக்கு "சிறந்த மாநகராட்சி' என்ற விருது வழங்கி, அதன் மூலமாக தந்திருக்கிறது தமிழக அரசு. இந்த ஆண்டின் "இணையற்ற முரண்' என்று இதனை வர்ணிக்கிறார்கள் கோவை மக்கள். சென்னைக்கு அடுத்ததாக பரப்பளவிலும், தொழில் வளர்ச்சியிலும் பெரிய நகரமாக இருப்பது கோவை. கடந்த ஆண்டு வரை 106 சதுர கி.மீ., பரப்பில் இருந்த கோவை மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தலுக்குப்பின் 257 சதுர கி.மீ., பரப்புள்ள பெரு நகரமாக மாறியுள்ளது; மக்கள் தொகையும் 16 லட்சமாக உயர்ந்துள்ளது. பழைய மாநகராட்சிப் பகுதியின் அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம் துவக்கப்பட்டது. மொத்தம் 3,200 கோடி மதிப்பிலான அந்த திட்டத்தில், பாதித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது.

பெயரளவில் திட்டங்கள்:முதற்கட்டமாக, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம், பி.எஸ்.யு.பி., (நகர்ப்புற மக்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கும் திட்டம்), மழைநீர் வடிகால் திட்டம் ஆகியவை கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டன. இவற்றில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மட்டுமே "பெயரளவில்' முடிக்கப்பட்டுள்ளது. நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்ட அந்த திட்டத்தில், குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் இருந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு வரையிலும் நடந்த முறைகேடுக்கும், ஊழலுக்கும் அளவே இல்லை. இன்று கோவை நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளுமே, இந்த திட்டத்தில் நடந்த ஊழலுக்கு சாட்சி. நகருக்கு கூடுதலாக 63 எம்.எல்.டி., குடிநீர் பெறுவதற்காக, 118 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம், கடந்த கவுன்சில் இருந்தபோதே, இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. ஆனால், புதிய கவுன்சில் பொறுப்பேற்று, பத்து மாதங்களாகியும் பணிகள் முடிந்தபாடில்லை. நகரின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், 377 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. முதல் இரு தொகுப்புகளிலேயே, மிகப்பெரிய அளவுக்கு ஊழல் நடந்தது; அதற்கு எதிராக, அ.தி.மு.க., ஆக்ரோஷமாகப் போராடியது.

கமிஷன் அதிகரிப்பு:
குழாய்கள் தரமற்றவையாக இருப்பதுடன், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் இழுபறியாவது என பலவிதப்புகார்கள் கிளம்பின. சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றும் மக்கள் குமுறினர். கடந்த பத்து மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. குடிசைகளற்ற நகரமாக கோவையை மாற்ற, பி.எஸ்.யு.பி., திட்டத்தில் பல ஆயிரம் வீடுகளுக்கு, மானியம் வாரி வழங்கப்பட்டது. அதை ஒதுக்கீடு செய்வதில், அதிகாரிகளும், கவுன்சிலர்களும் மானாவாரியாக "கமிஷன்' வாங்கினர். ஆனாலும், திட்டம் ஏழை மக்களைச் சென்றடைந்தது; இப்போது அதுவும் "ஏனோ தானோ'வென்று நடக்கிறது.

ரூ.180 கோடி திட்டம் மோசம்:
நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கும் பொருட்டு, இதே திட்டத்தில் உக்கடம் மற்றும் அம்மன் குளத்தில் 3,840 வீடுகள் கட்டப்பட்டன. முடிவடையும் நிலையில், சில குடியிருப்புகள் மண்ணில் இறங்கியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. பாதிப்புக்குள்ளான கட்டடங்களை அகற்றி விட்டு, மற்ற குடியிருப்புகளை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு, குடிசை மாற்று வாரியத்துடையது. அதனை துரிதப்படுத்தி, உரிய பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டியது, மாநகராட்சி நிர்வாகம்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை.அடுத்து, மழைநீர் வடிகால் திட்டம். மொத்தம் 180 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம், எவ்வளவு மோசமாக நடந்து வருகிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆங்காங்கே அரைகுறையாக நிற்கும் கால்வாயையும், அதில் தேங்கியுள்ள குப்பை, சாக்கடை நீரைப்பார்த்தாலே தெரியும். இந்த திட்டங்களில் நடந்துள்ள குளறுபடி, ஊழல், முறைகேடு அனைத்துக்கும் அடிப்படைக்காரணம், இத்திட்டத்துக்கு முக்கியப் பொறுப்பு வகித்த சில அதிகாரிகள்தான். இவர்களோடு கைகோர்த்து காசு பார்த்த அன்றைய ஆளும்கட்சியினருக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்து விட்டனர்; அதிகாரிகள் தப்பி விட்டனர்.

சொன்னது என்னாச்சு? ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில் ஊழல் செய்த "அனைவருக்கும்'
தண்டனை கிடைக்கும் என்று முதல்வர் ஜெ., பிரசாரம் செய்தார். இதே கருத்தை தனது பிரசாரத்தில் வழிமொழிந்தார் இன்றைய மேயர் வேலுச்சாமி. ஆனால், இதுதொடர்பாக பெயரளவுக்குக் கூட எந்த விசாரணையும் இதுவரை நடக்கவேயில்லை.ஊழலில் "பலன்' பெற்ற அதே அதிகாரிகள், இப்போதும் "பசை'யுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டு, இன்றைய ஆளும்கட்சிக்கு நெருக்கமாகவுள்ளனர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், குறைந்தபட்சமாக அவர்களை மாற்றாமல் இந்த திட்டம் எதுவும் உருப்படாது என்பது ஊரறிந்த விஷயம்.

மிஷனுக்கான திட்டம்: பழைய திட்டங்களின் கதி இப்படி என்றால், புதிய திட்டம் போடுவதைப் பார்த்து, மக்களே அதிர்ந்து போயுள்ளனர். கடந்த ஆட்சியின்போது, எட்டு குளங்களை மேம்படுத்த 126 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட திட்டத்துக்கு, திருத்தப்பட்ட மதிப்பீடு என்று கூறி, குளத்துக்கு 25 கோடி ரூபாய் வீதமாக 200 கோடி ரூபாய்க்கு புதுத் திட்டம் தயாரித்துள்ளனர். இதில் மத்திய அரசிடமிருந்து 100
கோடி மானியமாக வாங்கி விட, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடுகிறது. மாநில அரசு இதற்கு 40 கோடி ரூபாய் தர வேண்டும்; மீதியை மாநகராட்சி செலவிட வேண்டும். இவ்வளவு பெரிய தொகை தேவையேயில்லை என்று கூறும் பொறியியல் வல்லுனர்கள், இது "கமிஷனுக்கான திட்டம்' என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஊழலின் மீது விசாரணையில்லை, பழைய திட்டங்களிலும் வேகமில்லை, புதிய திட்டங்களும் இல்லை, நேர்மையான அதிகாரிகளே இல்லை என பல வித குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மாநகராட்சி நிர்வாகத்தில், லஞ்சத்துக்கு மட்டும் குறைவேயில்லை என்பதுதான் நிதர்சனமான நிலைமை. கவுன்சிலில் ஆளும்கட்சியைச் சேர்ந்த மண்டலத் தலைவர் ராஜ்குமார் பேசிய பேச்சே, இதை உறுதிப்படுத்தியது. சில பகுதிகளைத் தவிர, நகரமெங்கும் குவிந்து கிடக்கும் குப்பைகளும், மோசமான சாலைகளும், தண்ணீருக்குத் தவிக்கும் விரிவாக்கப்பகுதிகளும் இந்த மாநகராட்சியின் நிர்வாக அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.பழி வாங்கும் போக்கு, புறக்கணிப்பு, பெருகிவிட்ட லஞ்சம் என பலவித குறைகளைப் பற்றி முதல்வரைப் பார்த்து முறையிட ஆளும்கட்சி கவுன்சிலர்களே தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்,கோவை மாநகராட்சிக்கு "சிறந்த மாநகராட்சி' விருதை முதல்வர் வழங்கியுள்ளார். இதை பார்க்கும்போது, கோவை மாநகராட்சியை விட மற்ற மாநகராட்சிகள் மோசமாக உள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது.

விருதும், விவாதமும்:
கோவை மாநகராட்சிக்கு, "சிறந்த மாநகராட்சி' என்ற விருதை, சமீபத்தில் தமிழக அரசு வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் மேயர் வேலுசாமிக்கு, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து, கட்சிகளின் கருத்து வருமாறு: * கார்த்திக், முன்னாள் துணை மேயர் (தி.மு.க.,): சுகாதாரப்பணிகள் முடங்கியுள்ளன; குடிநீர் வினியோகம் படுமோசமாக உள்ளது. எங்களது கவுன்சில் இருந்தபோதே, பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம் 90 சதவீதம் முடிந்து விட்டது; பத்து மாதங்களாக 10 சதவீத வேலை முடியவில்லை. பி.எஸ்.யு.பி., திட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவு கொடுத்தோம்; ஆனால், இந்த கவுன்சிலில் ஆயிரம் வீடுகளுக்குக் கூட, மானியம் தரப்படவில்லை. * நாச்சிமுத்து, முன்னாள் சுகாதாரக்குழு தலைவர் (தி.மு.க.,): எங்களது ஆட்சியில் நடந்த பணிகளுக்கும், செம்மொழி மாநாடால் நடந்த பணிகளுக்கும் இந்த ஆட்சியில் விருது கொடுத்துள்ளனர். * பாண்டியன், வடக்கு மாவட்ட செயலாளர் (தே.மு.தி.க.,): தி.மு.க., ஆட்சியில் இருந்ததை விட, கோவை மாநகராட்சியில் ஊழல் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு விருது என்றால், மற்ற மாநகராட்சிகளின் நிலை இதைவிட பரிதாபமாக இருக்குமோ? * ஈஸ்வரன், கோவை மாவட்ட செயலாளர் (ம.தி.மு. க.,): ஒரே ஒரு நாள், கோவையை முதல்வர் சுற்றிப் பார்த்து விட்டு, இந்த விருதை வழங்கியிருக்க வேண்டும். விரிவாக்கப்பகுதிகளில், வாரத்துக்கு ஒரு முறை வந்த குடிநீர், 15 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. நகரின் நெரிசலைக் குறைக்க "பார்க்கிங்', மெட்ரோ ரயில் என எந்தத் திட்டத்தையும் அரசுக்கு இந்த மாநகராட்சி பரிந்துரைக்கவில்லை. எந்த தொலை நோக்கும் இல்லாத மாநகராட்சிக்கு விருது தந்தது வியப்பளிக்கிறது. * கிருஷ்ணசாமி, முன்னாள் கவுன்சிலர் (ம.தி.மு.க.,): கொல்கத்தாவை விட அசுத்த நகராக மாறி வருகிறது கோவை. மாநகராட்சியை எதிர்ப்பவர்கள் வீடு, கடைகளின் முன் குப்பைத் தொட்டி வைப்பது, சாக்கடை தோண்டுவது என பழி வாங்கும் போக்கு பகிரங்கமாக நடக்கிறது. லஞ்சமில்லாமல் எந்த வேலையும் நடப்பதேயில்லை. முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகளை "கவனித்ததால்' கிடைத்த விருதாகவே இதைக்கருத வேண்டியுள்ளது. * பத்மநாபன், முன்னாள் மண்டலத்தலைவர் (மா.கம்யூ.,): புதிய கட்டமைப்பு வசதிகள், புதிய திட்டங்கள் எதுவுமே இல்லை. நூறு கோடி ரூபாயாக டிபாசிட் உயர்ந்துள்ளது மட்டுமே ஒரே முன்னேற்றம்; அரசின் அளவுகோல், அது மட்டும்தானா? பென்சில் சீவும் வேலைதான் அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு மேசையிலும் "இவருக்கு இவ்வளவு' என்று பென்சிலில் "ரவுண்டு' போட்டு லஞ்சம் வாங்கும் வேலை, பகிரங்கமாக நடக்கிறது.

இதில் எதற்காக இந்த விருது?. * திருமுகம், முன்னாள் ஆளும் கட்சித் தலைவர் (காங்.,): ஜே.என்.என். யு.ஆர். எம்., திட்டத்தில் எங்களால் துவக்கப்பட்ட வேலைகள்தான், இன்றும் தொடர்கின்றன; புதிதாக எந்த வேலையும் நடக்கவில்லை.

தேவராஜ், முன்னாள் கவுன்சிலர் (இந்திய கம்யூ.,):
எங்கே பார்த்தாலும் குப்பை; குப்பை அள்ளுவதில் ஊழல். இரு மடங்காக கணக்கு எழுதப்பட்டு, அதில் 40 சதவீதம் "கமிஷனாக' அட்வான்சாக கை மாறுகிறது. இவ்வளவு மோசமான முடிவில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேயர் பேச்சு :கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட ஜவகர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. 573 கி.மீ., தூரம் நிறைவேற்ற வேண்டிய பாதாள சாக்கடைத் திட்டத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில் வெறும் 63 கி.மீ., தூரம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க., பொறுப்பேற்ற பத்து மாதத்தில் 283 கி.மீ., தூரம் பணிகள் முடிந்துள்ளன. 731 கி.மீ., தூரம் முடிக்க வேண்டிய மழைநீர் வடிகால் பணிகளில், தி.மு.க., ஆட்சியில் 102 கி.மீ., மட்டுமே முடிக்கப்பட்டது. நாங்கள் பொறுப்பேற்ற பின் 385 கி.மீ., தூரம் முடித்துள்ளோம். கடந்த ஆட்சியில் மெதுவாக நடந்த பணிகள், இந்த ஆட்சியில் படுவேகமாக நடக்கிறது. இதனால் பல பகுதிகளில் ரோடு தோண்டப்பட்டுள்ளதால் பாதிப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஆட்சியில் ரூ.4.62 கோடியில் 17 கி.மீ.,தூரத்துக்கு மட்டுமே மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.14.5 கோடியில் முதல் கட்டமாக 47 கி.மீ., தூரத்திலும், ரூ.51.26 கோடியில் பாலங்கள் அமைக்கப்பட்டன. மேலும் ரூ.20 கோடியில் 77 கி.மீ., தூரத்தில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. மொத்தம் ரூ.85 கோடியில் 261 கி.மீ., தூரம் பாலங்கள் கட்டப்படுகின்றன. பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டப் பணிகள் துரிதமாக நடக்கின்றன. அக்., நவம்பரில் முடியும். இத்திட்டத்தில் 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும். பணிகள் முடிய இன்னும் ஓராண்டு இருந்தாலும், தற்காலிகமாக 30 மில்லியன் லிட்டர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்து வந்த நிலை மாறி, இன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கிறது. மின்வெட்டு காலங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்தி தண்ணீர் வினியோகம் நடக்கிறது. நகரின் மத்தியில் உள்ள 21 வார்டு மக்கள் சிறுவாணி குடிநீரை மட்டுமே நம்பியுள்ளனர். மாற்று ஏற்பாடாக, ரூ.15 கோடியில் ராமகிருஷ்ணாபுரம் குடிநீர் தொட்டியில் இருந்து பாரதி நகர் தொட்டிக்கு 13 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம்-ஆழியாறு குடிநீர் திட்டங்களை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்படி, தலா ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயில் 6,000 வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ரூ.12.5 கோடியில் 50 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் மூடும் பணி இரண்டு மாதத்தில் முடிந்து விடும். புதிதாக சேர்க்கப்பட்ட 40 வார்டுகளில் எல்.இ.டி.பல்புகள் மாற்றப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக மாநகராட்சி முழுவதும் 21 ஆயிரம் டியூப் லைட்டுகளும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படுவதால் மின்சாரம் மிச்சமாகும். மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படும். இவ்வாறு, மேயர் வேலுசாமி கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman iyer - boston,யூ.எஸ்.ஏ
20-ஆக-201205:39:36 IST Report Abuse
raman iyer அடப்பாவிகளா மக்களின் சொத்தை இப்படி கோடி கோடி கோடியாய் முழுங்கிரான்களே ,என்னையா பண்ணுவீங்க இத்தன கொடிகளையும் வெச்சிக்கிட்டு ,மக்களின் வயிற்றேரிச்சலேயும் கொட்டிக்கிட்டு நீங்கலீல்லாம் அழிஞ்சு ஒழிந்கலேங்கலேன்யா ,அப்பயாச்சும் நாடு உருப்படும் ,மறைமுகமாக அழிப்பதைவிட வேறு வழியே இல்லை கோவை மக்கள் தான் தீர்ப்பு கொடுக்கணும் இன்னொரு பக்கம் வந்தவரை வாழ வைக்கும் என்று மார்பை தாண்டிக்கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் ,நாட்டையே உலுக்கி அழிக்கும்படியான தீய சக்திக்கும் இடம் கொடுக்குரானகளே ,ஒருபக்கம் அடாவடி ,இன்னொரு பக்கம் பேரம் மகா ஊழல் சுரங்கம் தோண்டுவது குவாரி ஊழல் என்று பெரும் ஊழல் அங்கு உள்ளது ,இது தான் வந்தவரை வாழ வைக்கும் ஊரோ
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
20-ஆக-201214:00:38 IST Report Abuse
K.Sugavanamஎல்லாரும் விலை இல்லா வாந்தி பேதியில தான் போவான்.அவ்வளவு சுகாதார சீர்கேடு....
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஆக-201214:13:38 IST Report Abuse
Matt P எங்கும் அரசியல் ..எதிலும் அரசியல் ....இது தான் இந்திய மத்திய மாநில அரசுகளின் இயல்பு....மக்களாட்சியின் மகத்துவம் ..மதி மயங்குகிறது....தொண்டாற்ற வேண்டியது மக்களுக்கு...கட்சி சார்ந்த மக்களுக்கு அல்ல..
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
19-ஆக-201206:19:13 IST Report Abuse
K.Sugavanam அவார்டு வாங்கிய மாநகராட்சியோட நிலைமையே இப்படி நாறிச்சுன்னா,மத்த மாநகராட்சிகளில் எப்புடி கப்படிக்கும்.மக்களே,பாருங்க.நாஞ்சொல்றேன்.. ..
Rate this:
Share this comment
Cancel
Malleeswaran - Dindigul,இந்தியா
19-ஆக-201206:16:51 IST Report Abuse
Malleeswaran மாண்புமிகு அம்மா அவர்கள் கோவையின் அவலத்தை ஆய்வு செய்து அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
19-ஆக-201215:42:20 IST Report Abuse
K.Sugavanamகோவை மட்டும் அல்ல அனைத்து மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி என் எல்லா துறைகளிலும் கழிவுகள் நீக்க பட வேண்டும். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை