புதுடில்லி:"மத வன்முறையை தூண்டும் வகையிலும், நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும், வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் பீதியை உண்டாக்கும் வகையிலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், சமூக வலைதளங்கள் மூலமாக, வதந்திகளை பரப்பி விடுகின்றனர். அவர்களை அடக்கி, ஒடுக்குங்கள்' என, பாகிஸ்தான் அரசை, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
"தென் மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம்' என, எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., மூலமாக, சமீபத்தில் வதந்திகள் பரவின.
நிரம்பி வழிந்தது:
இதையடுத்து, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் வசித்த, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், திடீரென தங்களின் சொந்த ஊர் கிளம்பிச் சென்றனர்.இதனால், அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் கூட்டம் அதிகமானதால், பெங்களூருவில் இருந்து கவுகாத்திக்கு, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த, மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் கூறியதாவது:வடகிழக்கு மாநிலத்தவரை பீதியடைய வைத்த வதந்திகள் பரவுவதற்கு, பாகிஸ்தான் இணையதளங்களே காரணம். அந்நாட்டைச் சேர்ந்த, 76 இணையதளங்கள், இந்த வதந்திகளை பரப்பும் பணியில் ஈடுபட்டன.புயலிலும், நிலநடுக்கத்திலும் உயிரிழந்தவர்கள் படங்களை, மியான்மர் கலவரத்தில் இறந்தவர்கள் போல, அந்த இணையதளங்கள் சித்தரித்துள்ளன. தற்போது, அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 34 இணையதளங்களை முடக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு சிங் கூறினார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக தகவல் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, "இந்தியாவில் மதவன்முறையை தூண்டும் வகையிலும், வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், சமூக வலைதளங்கள் மூலமாக, வதந்திகளை பரப்பி வருகின்றனர். தவ றான படங்களையும், செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு, அடக்கி, ஒடுக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
அழைப்பு:
பயங்கரவாதிகளின் இதுபோன்ற சதிச் செயல்களை முறியடிக்க, இந்திய அரசுக்கு பாகிஸ்தான் அரசு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தவிர, இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஷிண்டே பேசினார்.ஷிண்டேவுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த மாலிக், புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட விசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பாகிஸ்தான் வரும்படி அழைப்பு விடுத்தார்.இவ்வாறு தகவல் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய அசாம் முதல்வர் தருண் கோகோய் கூறியதாவது:அசாமில், சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்கு, அன்னிய சக்திகளின் சதியே காரணம் என, நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். மத்திய உள்துறை அமைச்சகத்தின், தற்போதைய அறிக்கை அதை உறுதி செய்துள்ளது. இருந்தாலும், இதில், எந்த சக்திகளுக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டறிய, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு கோகோய் கூறினார்.
அசாமின் தூப்ரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, ஆங்காங்கே நடந்த வன்முறையில், ஒருவர் காயம் அடைந்தார். சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதேபோல், சிராங் மாவட்டத்திலும், சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
உள்துறை புகாருக்கு மறுப்பு:
மத்திய உள்துறைச் செயலரின் குற்றச்சாட்டை, பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று அவர்கள் கூறியதாவது:"வடகிழக்கு மாநிலத்தவர் திடீரென சொந்த ஊருக்கு ஓட்டம் பிடிக்க காரணமான வதந்திகள் எல்லாம், பாகிஸ்தானில் இருந்து வெளியானவை' என, இந்திய உள்துறைச் செயலர் தெரிவித்திருப்பது பொறுப்பற்றது. இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு தவறுகளுக்கும், பாகிஸ்தானை குறை சொல்ல முடியாது. அங்கு நடந்த சம்பவங்களுக்கு எல்லாம், பாகிஸ்தானே காரணம் என, நள்ளிரவில், அந்நாட்டின் உள்துறைச் செயலர் அறிக்கை வெளியிட்டிருப்பது சரியானதல்ல.இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் முன், இந்திய நிர்வாகத்தினர் தூதரக ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். தாங்கள் கண்டறிந்த விவரங்களை, இந்தியா எங்களுக்கு முறைப்படி தெரிவித்திருந்தால், நாங்கள் தேவையான உதவிகளை நிச்சயம் செய்திருப்போம். இவ்வாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்பா ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சி, உதிரி கட்சி உறுப்பினர்களே, இந்தியா என்றால் நீங்கள்தான், மக்கள் என்றால் நீங்கள்தான், அரசு என்றால் நீங்கள்தான், நீங்கள் சொல்வதுதான் சட்டம், நீங்கள் செய்வதுதான் சரி, நீங்கள் நடத்துவதுதான் நாட்டின் நடப்பு, நீங்கள் சொல்வதுதான் செய்தி, அப்படி இருக்க ஒருவரை ஒருவர் நீங்கள் தாக்கிக்கொண்டும், கொடுக்கும் செய்திகளையும் பார்த்தல் பாக்கிஸ்தான் செய்தி ஒன்றுமே இல்லை, மக்கள் சாதாரனமாகவே குழம்பிப் போயிருக்கிறார்கள், அதில் நீங்கள் பாகிஸ்தான் என்றாலும் சரி, அமெரிக்க என்றாலும் சரி எல்லாம் ஒன்றுதான், காரணம், இன்றைக்கு மக்கள் அடிமாடுகளாகி விட்டனர். வாழ்வு என்பது உங்களுக்கு மட்டுமே, மக்களுடைய கடமை மாட்டு வண்டியில் பூட்டப்படும் மாடுகளைப் போல் ஆகிவிட்டது, சிந்திக்கவும் முடியவில்லை, சிந்தித்தாலும் பைத்தியம் என்று பெயர் சூட்டப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப் படுகிறது, கூட்டத்தைக் கூட்டி மக்களுக்கு சீர்திருத்தம் செய்தால் தீவிரவாதி என்று முடி சூட்டப்பட்டு ...> ஆக தான் வாழ பிறர் மேல் பழி போடுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. வந்தே மாதரம்
"வடகிழக்கு மாநிலத்தவர் திடீரென சொந்த ஊருக்கு ஓட்டம் பிடிக்க காரணமான வதந்திகள் எல்லாம், பாகிஸ்தானில் இருந்து வெளியானவை" என, இந்திய உள்துறைச் செயலர் தெரிவித்திருப்பது பொறுப்பற்றது. இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு தவறுகளுக்கும், பாகிஸ்தானை குறை சொல்ல முடியாது". சரியான கருத்து. தற்போதைய பிரச்சனைக்கு காரணம் மத்திய அரசின் கையாலாகாத்தனம் தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.