தற்போது மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் படி, 2006ம் ஆண்டு, ஜூன் மாதம் துவங்கப்பட்டு, நாடு தழுவிய அளவில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, புதிய குளங்கள் வெட்டுதல், பழைய குளங்களில் தூர் வாருதல், கால்வாய்கள், ஓடைகளில் தூர் வாருதல், செம்மைப் படுத்துதல், புதிய சாலைகள் அமைத்தல், காடுகள் வளர்த்தல், தரிசு நிலங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருப்பினும், காடு வளர்ப்பு, தரிசு நில மேம்பாடு தவிர்த்து, மற்ற வேலைகள், அரைத்த மாவையே, திரும்பத் திரும்ப அரைப்பது போல் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், மேற்படி சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைகள் அமைக்கும் பணி, முற்றிலுமாக நிறைவேற்றப்படவில்லை. ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணிகள், செம்மையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதும், புதிய செயல் திட்டங்களைத் திட்ட அலுவலருக்குப் பரிந்துரை செய்யவுமே, கிராம சபைகள் அமைப்பதன் நோக்கமாக இருந்தது.இது சரிவர நிறைவேற்றப்படாததால், எல்லா கிராமங்களிலும், புதிய பணிகள் துவங்கப்படாமல், செய்து முடிக்கப்பட்ட பணிகளோடு திருப்தியடைந்து, கிராமப்புற மக்கள் சோம்பிக் கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. வேலை செய்யாமலே கூலி வழங்கப்படுவதால், விவசாய வேலைகள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளன.விவசாயிகள், தம் சொந்த நிலத்தில் பாடுபடுவதை விட்டு விட்டு, கூலிக்கு மாரடிப்பது போல், ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சேர்ந்து, உழைக்காமல், பணம் சம்பாதித்து பயனடைந்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள், சிறு, குறு விவசாயிகளாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து கிராம மக்களும் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் என, முடிவு செய்து, யதார்த்த நிலைக்கு மாறாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது, அரசுகளுக்குத் தெரியாமல் போனது தான் ஆச்சர்யமாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது.மேலும், இத்திட்டத்தில் பல குறைபாடுகளும், ஊழலும், மலிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், குறைபாடு, ஊழல்களை முற்றிலுமாகக் களைய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது, மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாகத் தான் இருக்கிறது.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 100 சதவீதம் பயன் தரும் வகையில் நிறைவேற்றப்பட, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் காலம் தாழ்த்தாது, உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.முதலில் அரசுக்கும், திட்ட அலுவலருக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், தகுந்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவதற்கு ஏற்றாற் போல், அனைத்து கிராமங்களிலும், கிராம சபைகள் அமைக்கப்பட வேண்டும்.
கிராம மக்களுக்குத் தான், அவர்களுக்கு என்ன தேவை என்பது தெரியும். எனவே, கிராம சபைகளின்றி செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும், கிராமப்புற மக்களுக்கு முழுமையான பலனைத் தராது.
ஓடைகள், கால்வாய்களில் தூர் வாருதல், குளங்கள், வெட்டுதல், சாலைகள் அமைத்தல் ஆகியவற்றால் மட்டுமே, கிராம மறுமலர்ச்சியைக் காணலாம் என்பது, வெறும் பகற் கனவு.ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களைத் துவங்கி, அதற்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, விளை பொருட்களை லாபகரமான விலைக்குச் சந்தைப்படுத்துவதில் தான், கிராம மறுமலர்ச்சியைக் காண முடியும்.கிராமப்புற பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சங்களான, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, கைத்தொழில்கள் போன்றவற்றைச் செயல்படுத்துவதால் மட்டுமே, உண்மையான ஊரக வளர்ச்சியை உறுதிப்படுத்த இயலும்.எனவே, அனைத்து கிராமங்களை யும், ஒன்றியங்கள் வாரியாக ஒருங்கிணைத்து, கோழி, மாடு, ஆட்டுப் பண்ணைகளை, அனைத்து கிராமங்களிலும் அமைக்க வேண்டும்.அத்துடன் முட்டை, பால் உற்பத்தியை மேம்படுத்தும் விதத்தில், மாவட்டம் தோறும் முட்டை வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; இவ்வாரியங்கள், கிராமப்புறங்களில் விவசாயிகளிடமிருந்து முட்டைகளை விலைக்கு வாங்கி, விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். இதனால், ஒவ்வொரு விவசாயியும் பயனடைவான். அடுத்தபடியாக, கிராமப் புறங்களில் மாட்டுப் பண்ணைகள் அமைக்க, மாநில அரசு கால்நடைத் துறை அலுவலர்களின் உதவியோடு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உற்பத்தி செய்யப்படும் பாலை, ஆவின் மூலம் சந்தைப்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், நாட்டில் பால் உற்பத்தி பெருகுவதோடு, பொது மக்களும் பயனடைய முடியும்; கிராமப்புற மக்களின் பொருளாதாரமும் உறுதி செய்யப்படும்.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பயன்தரும் வகையில் செயல்படுத்தப்பட, வேளாண் துறை மற்றும் கால்நடைத் துறை அலுவலர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தவிர, இத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது என்பதை, மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.மாநில அரசு தரிசு நிலங்கள் பற்றிய விவரங்களை, உடனடியாகத் தயார் செய்து, அந்நிலங்களில் பலன் தரும் மரங்களை நட்டு, சொட்டு நீர்ப்பாசனம் மூலம் காடு வளர்ப்பில் ஈடுபட வேண்டும். இதனால் மழை நன்கு பெய்வதோடு, நாட்டின் பொருளாதாரமும் உயரும்.பழ மரங்கள், தேக்கு போன்ற கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம், அரசுக்குக் கணிசமான வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.மழைநீர் பற்றாக்குறையால் அவதிப்படும் விவசாயிகள் பயனடையும் வகையில், சொட்டுநீர் பாசன வசதி, அனைத்து கிராமங்களிலும் செய்து தரப்படவேண்டும். இதன் மூலம் பழ மரங்கள், காட்டு மரங்கள், மூலிகைச் செடிகள், வாசனைச் செடிகள் ஆகியவை பயிரிடப்பட்டு, நல்ல ஆதாயம் பெற வாய்ப்பு உண்டாகும்.
நீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறையால், விவசாயம் அழிந்து வரும் இன்றைய சூழலில், தேவையற்ற வேலைகளைச் செய்து மனித உழைப்பைப் பாழ்ப்படுத்தியும், பணத்தை வீண் விரயம் செய்வதிலும் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதைக் கைவிட்டு, கிராமப்புற மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நீண்ட கால அடிப்படையில் பயனடையும் வகையில், மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றைச் செயல்படுத்துதல் வேண்டும்.நகர்ப்புறங்களில் நிறுவப்பட்டுள்ள, தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளில், தயாரிக்கப்பட்டு வரும் பொருட்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு தொழிலகங்களையோ அல்லது கிராமப்புற மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தயாரிப்பதற்கு ஏதுவாக அரசு வசதிகளைச் செய்து தரவேண்டும். இதனால் கிராமப்புற மக்கள், தொய்வின்றி பணம் சம்பாதிக்க முடியும்.மேலும், கிராமப்புறங்களில் கிடைக்கும் கச்சாப் பொருட்களைக் கொண்டு, உதாரணத்திற்கு தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும், வேம்பும், புளியும் அபரிமிதமாகக் கிடைப்பதால், அவற்றைக் கொண்டு சோப்பு தயாரித்தல், உரம் தயாரித்தல், வினிகர் தயாரித்தல் போன்ற தொழில்களைத் துவங்க முடியும்.உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களைத் துவங்கி, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, லாபகரமில்லாத விவசாயத்தை, லாபகரமான தொழிலாக ஆக்குவதை விடுத்து, மக்கள் வரிப் பணத்தை வீண் விரயம் செய்ய மட்டுமே பயன்படும் ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் மேலே கூறிய பயனுள்ள அம்சங்களையும் சேர்த்து செயல்படுத்தினால் மட்டுமே, கிராமப்புற மக்கள் முழுப் பலனையும் அடைவர். அதுவரை இத்திட்டத்தால் எவ்வித பலனும் இல்லை.இ-மெயில்: krishna_samy2010 @yahoo.com
ஜி.கிருஷ்ணசாமி ,எழுத்தாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் அதிகம் படிக்காததாலும் பாரம்பரிய தொழில் விவசாயம் என்பதாலும் என்னை ஒரு தீவிர விவசாயியா ஆக்கிகிட்டேன். விவசாயம் நல்லாதான் போயிகிட்டு இருந்துது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டு வந்ததால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்ப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுடுச்சு, மக்கள் உழைக்காமல் சோம்பேறிகலாக்கப்பட்டார்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் முறைகேடாக பணம் சம்பாதிக்க வசதியானது. இப்போ நான் விவசாயத்த குறைத்துக்கொண்டு XEROX & DTP கடை நடத்தி வருகிறேன்.
நல்ல திட்டம்..., மகாத்மா ஊராக வேலைவாய்ப்பு திட்டம்.., தங்கள் உரத்த சிந்தனை தவறானவை..,திட்ட தன்மை புரிந்து கொண்டு விவசாயிகள் உழைக்க வேண்டும்.., அதிகாரிகள் திட்ட மேலாண்மை சரிசெய்யவேண்டும்.., அரசுக்கு தெரிவித்து திட்டத்தை மேம்படுத்தவேண்டும்.., அவர்களுக்கு வழங்க வேண்டிய கூலிதொகை கூடுதலாக வழங்க வேண்டும் இதுதான் திட்ட வெற்றிக்கு வித்து ஆகும் -" உண்மை சிந்தனை" - பூபதியார்
இந்த திட்டத்தால் யார் பயனடைந்துள்ளனர் என்று பார்த்தால், அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்க்களும்தான். விவசாயிகள் தற்போது தற்காலிகமாக பயன் அடைந்தாலும், இது நிலைத்து நிற்கும் திட்டம் அல்ல. எப்போது அரசிற்கு பணமில்லையோ, அப்போது இந்த திட்டம் கைகழுவ பட்டுவிடும். அதுவரை விவசாயிகள் உழைக்காமல் சாப்பிடலாம். அதனால் இது அரசு ஊழியர்கள் போன்று நிரந்தர வேலைவாய்ப்பு திட்டமல்ல. அதனால் இந்த திட்டத்தை விவசாயிகள் நம்பாமல், சொந்த காலில் நிற்க பழகி கொள்ளவேண்டும். அதற்கு விவசாயிகளுக்கு கோழி பண்ணை, மாட்டு பண்ணை வைக்க குறைந்த வட்டியில் கடன் கொடுத்து உதவ வேண்டும். வட்டியை வேண்டுமானால் தள்ளுபடி செய்யலாம். ஆனால் அனாவசியமாக ஓட்டிற்காக ஒட்டுமொத்தமாக கடனை தள்ளுபடி பண்ணகூடாது. ஆனால் வீட்டின் குடும்ப தலைவர் அல்லது தலைவிக்கு பெரும் மருத்துவ செலவு அல்லது துயர் நேரிடும் போது, அந்த குடும்பத்திற்கு மட்டும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் இதைவிட்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுப்பது முட்டாள்தனம். வளர்ச்சிக்கு பணிக்கு கொடுக்கவேண்டிய நிதியை இலவசமாக கொடுப்பது முட்டாள்தனம். ஊழலை காரணம் காட்டி சிலர் இதற்கு நியாயம் கற்பிப்பார்கள். இதை ஒத்துகொள்ள முடியாது. நாங்கள் மட்டும் என்ன ஊழல் பண்ணுங்கள் என்றா சொல்கிறோம்?
அப்படியல்ல .நான் கூட ஒரு விவசாயிதான். கிராம பஞ்சாயத்துக்களின் நிலை என்ன அங்கும் ஊழலால் நிறைந்திருக்கின்றன. ஒன்று மற்றும் உண்மை நாங்களெல்லாம் ஆட்கள்ளில்லாமல் விவசாயம் செய்ய முயற்சிக்கிறோம். இந்த முறை மழை இல்லாததால் சொட்டு நீருக்கு மாறி விட்டோம். எனவே ஒன்று நாங்கள் மீண்டும் அதிக கடன்காரன் ஆவோம் அல்லது அதிநவீன விவசாயம் செய்வோம் .அரசு பணம் பாழாவது அரசு ooliyarkalinaal than .
பலனளிக்காத என்பதை விட உருப்படாத இந்த திட்டங்களை நிறுத்தி விட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு கமிஷனை வெட்டி விட்டு காண்டிராக்டர்களும் நகராட்சி, ஊராட்சி அலுவலர்களும் மஞ்சள் குளித்து கொண்டிருக்கிறார்கள். ஜெலலலிதா மேல் போடப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளை விட இம்மாதிரியானவர்களை துரத்தினால் ஏராளமான பினாமி சொத்துக்கள் வெளிவரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.