காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக வெடித்துள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம், பார்லிமென்டை முடக்கியதோடு, அரசியல் ரீதியான திருப்பங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜ., அல்லாத ஒரு அணியை, இடதுசாரிகளோடு சேர்ந்து, உருவாக்குவதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், காங்கிரஸ் மீது, கசப்பில் உள்ள தி.மு.க., மூன்றாவது அணியில் சேருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், எட்டு நாட்களாக, பார்லிமென்டை முடக்கியுள்ளது. "பிரதமர் பதவி விலக வேண்டும்' என பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆனால், "சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என, சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், தெலுங்குதேசம் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், திடீர் கோஷம் எழுப்பியுள்ளன.
அரசியல் காய்நகர்த்தல்:
இவர்களோடு, அ.தி.மு.க.,வும் சேர்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தோழமையாக செயல்பட்ட, பிஜு ஜனதாதளம், இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்த கட்சிகளைக் கொண்டு, மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணியை உருவாக்கும் நோக்கோடு, முலாயம் சிங், தன் அரசியல் காய் நகர்த்தலை துவங்கியுள்ளார் என்கிறது, டில்லி வட்டாரம். பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ,, வுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன், பிரதமராகலாம் என, முலாயம்சிங் கருதுகிறார். அதற்காக, மூன்றாவது அணிக்கு ஆள் திரட்டுவதோடு, காங்கிரசுடனும் மறைமுக இணக்கமும் காட்டி வருகிறார். பா.ஜ., மற்றும் மதசார்பற்ற கட்சிகளை சமமாக கருதி, அக்கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என, முதல்வர் ஜெய லலிதா கருதுகிறார். அதற்காகவே, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் களில், பா.ஜ., வோடு இணக்கம் காட்டிய, அ.தி.மு.க., தற்போது, மூன்றாவது அணியோடு இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த இருவரின் அரசியல் கணக்குகள் தான், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், மாறுபட்ட குரல் ஒலிக்க காரணமாக மாறியுள்ளது. பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்ற குழப்பமும், அதற்கான மோதலும் இப்போதே துவங்கி விட்டது. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க, அக்கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் மறுத்து விட்டார். சரத் யாதவ் போன்றவர்களும், பா.ஜ.,வுடன் முழு இணக்கமாக இல்லை.
வாய்ப்புகள் அதிகம்:
காங்கிரசில் ராகுலை முன்னிறுத்துவதை ஏற்க மம்தா, சரத்பவார் உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை. சோனியாவின் கட்டுப்பாட்டில் இருப்பவர் பிரதமர் பதவியில் தொடர்வதையே, தங்களுக்கு சாதகமாக அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மூன்றாவது அணி பலம் பெற்றால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறி, அவர்களோடு இணைய வாய்ப்புள்ளது.
கசப்பில் தி.மு.க.,:
லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் பலம் பெறுகின்றன என்றால், தி.மு.க.,வும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசுடன் கசப்பு காட்டி வரும், தி.மு.க., இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மூன்றாவது அணியில் இணைந்து, காங்கிரசுக்கு எதிர்ப்பு காட்டலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில், மூன்றாவது அணியை துவக்குவதில் முலாயம் மும்மரம் காட்டினாலும், அதில் முதன்மை பெறப்போவது, அ.தி.மு.க.,வா அல்லது தி.மு.க.,வா என்பது லோக்சபா தேர்தல் நேரத்தில் முடிவாகும்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கூட்டணி ஆட்சி என்பது கூட்டுக் கொள்ளை ஒரு கட்சி ஆட்சி தனிக் கொள்ளை 98 -2004 அரசு ஒன்றைத் தவிர மற்ற கூட்டணி அரசுகள் நாட்டை அழிவுப் பாதையில்தான் கொண்டு சென்றுள்ளன. இதில் திமுக தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது- எந்தக் கூட்டணி அரசில் முக்கியமான இலாக்காக்கள் கிடைக்குமோ - அதுவும் குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு- அந்தக் கூட்டணி மட்டுமே ஏற்புடையது என்கிறபோது அவர்களுக்கு சிக்கலே கிடயாது மொத்தத்தில் கூட்டணி அரசு வருவதற்கு பதில் சோனியா குடும்பத்தினரே தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் கூட அது ஏற்றதாகத்தான் இருக்கும்
திமுகவா அதிமுகவா என்பதெல்லாம் இல்லை, அதிமுக தான் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். முலாம், நாயுடு காம்றேட்களோடு நெருக்கமாக இருப்பது ஜெயா தான். பாஜக வுடன் கூட்டணி வைத்தால் கவிழ்ந்து விடுவோம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருப்பதால் தான் தாமரை இல்லை தண்ணீராகவே இருந்து வருகிறார். ஆனால் தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் பிஜேபியுடன் போய் விடுவார். அதே நேரம் இப்படி அணி பிரிவதால் பலன் பெற போவது காங்கிரஸ் கூட்டணி தான். ஆக மொத்தம் 2014 க்கு பிறகும் இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி சோனியா தான் அதை நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும். பிறகு எதற்காக திமுக இக்கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.