புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்களுக்காக, டில்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில், நான்கு படுக்கை அறைகளுடன் கூடிய, சொகுசு வீடு கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீடும், இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்கள், டில்லியில் தங்கியிருப்பதற்காக, டால்கடோரா சாலையில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு, ஏழு தளங்களைக் கொண்டதாகவும், ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள் என, மொத்தம் 14 வீடுகளை உடையதாகவும் இருக்கும். இந்த குடியிருப்பு வளாகத்தில், பொது வரவேற்பறை, உடற்பயிற்சிக் கூடம் உட்பட அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், நான்கு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை என்பது உள்ளிட்ட, வசதிகளை கொண்டதாக இருக்கும். இந்த குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகளை, அடுத்த மாதம் துவங்கி, 16 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.