திருச்சி: ""எங்கள் நாட்டில் நடந்த சம்பவத்துக்கு, எங்களை ஏன் துன்புறுத்தவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?,'' என்று இலங்கை நாட்டிலிருந்து வந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இலங்கை, புத்தளம் மாவட்ட,ம் சிலாவம் பகுதியைச் சேர்ந்த 184 பேர் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, கடந்த இரண்டாம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். இதையறிந்த பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை நாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டிமாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று காலை அவர்கள் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற போதும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர். இதனால், வேளாங்கண்ணியிலிருந்து, அதே வேன்களில், அவர்கள் நாடு திரும்ப, திருச்சி விமான நிலையம் புறப்பட்டனர். வரும் வழியில், திருவாரூர் பைபாஸ் ரோட்டில் அவர்களின் வேன் மீது செருப்பு வீசப்பட்டது. பின், திருச்சி மாவட்டம், காட்டூர் அருகே வந்த போது, அவர்களுடைய வேன்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். அதன் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இலங்கை நாட்டினர், திருச்சி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டனர்.
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து செலீன் என்ற பெண்மணி கூறும் போது, ""நாங்கள் என்ன பாவம் செய்தோம்?. எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அன்னையை கும்பிட குழந்தைகளுடன் வந்தோம். எதிர்ப்பால், மீண்டும் ஊர் திரும்புகிறோம். ஏன் எங்களை தாக்குகின்றனர். எங்கள் நாட்டில் நடந்ததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும். கடவுளை கும்பிட கூட அனுமதி மறுப்பது சரியில்லை,'' என்று கூறினார்.
இலங்கை நாட்டைச் சேர்ந்த ஜூட் என்பவர் கூறுகையில், ""அப்பாவிகளான எங்கள் மீது, தாக்குதல் நடத்துவது எந்த வகையில் சரி. குழந்தைகளும், பெரியவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், பத்து நாட்களுக்கு விசா இருந்தும், எங்களால் இங்கு தங்க முடியவில்லை. மாதாவை கூட தரிசிக்க முடியவில்லை, என்பது வருத்தமளிக்கிறது,'' என்று கூறினார்.
இலங்கையின் உளவுத்துறை அதிகாரி ரோஷன் கூறுகையில், ""சாமி கும்பிட வந்தவர்களை, இப்படி விரட்டி அடிப்பது சரியில்லை. இவர்கள், நாடு திரும்ப உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்றே (நேற்றே) அவர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவர்,'' என்று கூறினார்.