ஆந்திராவில், சினிமா ரசிகர்களிடையே, "மெகா ஸ்டார்' என, பெயர் பெற்ற நடிகர் சிரஞ்சீவி, தற்போது தன் கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள் ளார். விரைவில் மூத்த தலைவர் ஒருவரை, கட்சித் தலைவராக நியமித்து, அவர் மூலம் கட்சியை வழிநடத்திச் செல்லவும் தீர்மானித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கட்சி துவங்கினார் சிரஞ்சீவி. ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் இவரது கட்சிக்கு, ஆந்திர மக்களிடையே, எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு மாற்றாக, மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற எண்ணத்துடன், மாநிலம் முழுவதும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தலை சந்தித்த சிரஞ்சீவிக்கு, தேர்தல் முடிவு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. இதனால், அதிருப்தியில் ஆழ்ந்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 42 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட்ட பிரஜா ராஜ்யம் கட்சிக்கு, ஒரு எம்.பி., சீட் கூட கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 18 தொகுதிகளில் மட்டுமே பிரஜா ராஜ்யம் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி ஒன்றில் வெற்றி பெற்றார். மற்றொன்றில் தோல்வியடைந்தார். மேலும், கட்சி சார்பில் போட்டியிட மனு செய்தவர்களிடம், சிரஞ்சீவி கோடிக்கணக்கில் பணம் வாங்கினார் என்ற புகாரும் எழுந்தது.
காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளில் இருந்து வெளியேறிய கட்சிமாறிகளை ஊக்குவித்து அரசியல் நடத்துகிறார் என்றும், இந்த கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களும், சிரஞ்சீவியை கடுமையாக குறை கூறினர். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னரும், இவரது கட்சியில் அதிருப்தி புயல் அடிக்கடி வீசிக் கொண்டே இருக்கிறது. சிரஞ்சீவி கட்சி துவங்கிய போது, அவருக்கு உறுதுணையாக நின்று, கட்சியில் முக்கிய பங்கு வகித்த இவரது சகோதரர்களான, நடிகர்கள் நாகேந்திரபாபு, பவன் கல்யாண் ஆகிய இருவரும், கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, கடந்த வாரம் அறிவித்தனர். இருவரும் திரைப்படத் துறையில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும், சிறிது காலம் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாகவும் கூறி, அண்ணன் சிரஞ்சீவியிடம் இத்தகவலை நேரில் தெரிவிக்காமல், மீடியா மூலம் சூசகமாக தெரிவித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், சினிமா தயாரிப்பாளரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் முக்கிய பொறுப்பாளருமான அல்லு அரவிந்தும், தற்போது கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகி, மவுனமாக ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி படுதோல்வி அடைந்ததற்கு, இவர் தான் முக்கிய காரணம் என, கட்சி நிர்வாகிகள் பலர் புகார் கூறியதால், அரவிந்த் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுக்குப் பின், சிரஞ்சீவிக்கு கட்சியில், புதிய தலைவலி உருவாகி உள்ளது ஒரு பக்கம், குடும்பத்தினர் விலகல் மறுபக்கம் தொடர்ந்து கட்சி நடத்த பொருளாதார பிரச்னை, அரசியல் அனுபவமின்மை, தன்னை ஆதரித்துவந்த சினிமா ரசிகர்களிடம் இருந்து இடைவெளி பெற்றுக் கொண் டது என, பலவித பிரச் னைகளை சந்திக்க வேண் டிய நிலைக்கு, சிரஞ்சீவி தற்போது தள்ளப் பட்டுள்ளார். பிரஜா ராஜ்யம் கட்சியை தோற்றுவித்தவர்களில், முக்கிய பங்குவகித்த டாக்டர் மித்ராவும், குடும்பப் பிரச்னை காரணமாக, கட்சியில் இருந்து விலகுவதாக, கடந்த வாரம் திடீரென அறிவிப்பை வெளியிட்டார். இப்பிரச்னைகளால் மிகவும் மனம் நொந்து போயுள்ள சிரஞ்சீவி, யார் வேண்டுமானாலும் கட்சியைவிட்டு போகட்டும், வரட்டும் என்றும், கட்சியை தொடர்ந்து நடத்த, அரசியல் அனுபவம் வாய்ந்த முக்கிய தலைவர்களிடம், கட்சியின் முழுபொறுப்பை ஒப்படைக்கும் முயற்சி யை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
ஆந்திராவில், விரைவில் நடக்கவுள்ள மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்கு முன், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்க, கட்சியினரை தயார்படுத்த முனைந் துள்ளார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகளை சரிகட்ட, பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து தானே விலகி, கட்சித் தலைவராக மூத்த உறுப் பினரான தேவேந்திர கவுடாவை நியமிக்கவும், சிரஞ்சீவி தீவிரமாக சிந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி கட்சி துவங்கிய பின், அவரது சினிமா ரசிகர்களிடம் இருந்து விலகிவிட்டார் என்ற கசப்பான அனுபவத்திற்கு மருந்து தேட, சினிமா ரசிகர்களை அழைத்து, கட்சிப் பதவிகளில் முக்கிய பொறுப்பு வழங்கி, அவர்களது செல் வாக்கை ஓட்டு வங்கியாக, கட்சியின் பக்கம் திசை திருப்பவும், சிரஞ்சீவி ஆலோசித்து வருகிறார். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, மக்களின் செல்வாக்கை பெற்றுள்ள சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியில், அடிக்கடி ஏற்பட்டு வரும் இந்த மவுனப் புயலால், கட்சியின் வளர்ச்சியும், சிரஞ்சீவியின் புகழும், தொடர்ந்து பின்நோக்கி செல்வதாக, அரசியல் பார்வையாளர் கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
| வாசகர் கருத்து |
All cannot become either MGR or NTR. There can be only one MGR and one NTR. Chiru is definitely a popular star and no doubt in that. For political round he has to wait for a long time. Then only he can get something.
|
by R. Muralidharan,Erode,India 24-06-2009 15:03:26 IST |