புதுடில்லி : ""ஜார்க்கண்டில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயார்,'' என அம்மாநில காங்., பொறுப்பாளர் கேசவராவ் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜார்க்கண்ட் காங்., வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க, காங்., மத்தியக் குழு நேற்று கூடி விவாதித்தது. கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
பின், ஜார்கண்ட் மாநிலத்திற்கான காங்., பொறுப்பாளர் கேசவராவ் கூறுகையில், ""தொகுதி உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் - ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா இடையே தொடர்ந்து பேச்சு நடக்கிறது. உடன்பாடு ஏற்பட்டால் பிரச்னை இல்லை. அதற்கு மாறாக கருத்து வேறுபாடுகள் நிலவினால், காங்., தனித்தே போட்டியிட தயாராக உள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 31ல் போட்டியிடுவது என, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் தலைவர் மராண்டி மிகவும் உறுதியுடன் இருக்கிறார். ஆனால், அந்தக்கட்சிக்கு 25 தொகுதிகளையே ஒதுக்க காங்., முடிவு செய்துள்ளது.
| வாசகர் கருத்து |