Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
பாமர மனிதர்களுக்கு ரேஷன் சப்ளை: மத்திய அரசு யோசனை
நவம்பர் 04,2009,00:00  IST

Latest indian and world political news information

""பாமர மனிதனுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பொது வினியோகத்துறை என்ற ரேஷன் மூலம் வழங்கப்படுவதில்  ஒழுங்குமுறை ஏற்படுத்துவதின் மூலமே பிரச்னை தீரும். அதைத்தான் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு  வலியுறுத்தி வருகிறது,'' என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ஆண்டு தோறும் நடக்கும் பொருளாதார பத்திரிகையாளர் மாநாட்டை, நிதியமைச்சர் பிரணாப், டில்லியில் நேற்று துவக்கி வைத்தார். பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலக டைரக்டர் நீலம் கபூர் மற்றும் நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இந்தியாவிலும், சீனாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதன் அடையாளமாக மொத்த வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, பாமர மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகின்றனர் என்பதை அரசு அறியும். குறிப்பாக பருவமழை பாதித்திருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் ஊக்குவிப்பு மூலம் உற்பத்தியை  அதிகரிக்க அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அரசு தரும் ஊக்குவிப்பும் நிறுத்தப்பட மாட்டாது.



விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த ஐந்தாண்டுகளில் உயர்த்தப்பட்டிருக்கிறது. நெல் விலை 78 சதவீதம், கோதுமை விலை 75  சதவீதம் மற்றும் கரும்பு விலையும் பிழிதிறனுக்கு  ஏற்ப அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே  கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரை விலை  அதற்கேற்ப உயருவது இயற்கையே. ஆனால், மக்களுக்கு  உணவு  சீராகக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். அதற்காக, பாமர மக்களுக்கு  கோதுமை,  அரிசி ஆகியவை  கிலோ மூன்று ரூபாய் என்ற விலையில் தரப்படுகிறது. ரேஷன் கடைகளில் தரப்படும் மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு அரசு தரும் மானியம் 31 ரூபாய். ஆனால், பொதுவினியோகத் துறை  மூலம் சப்ளை செய்யப்படுவது  சீராக்கப்பட வேண்டும்.



யாருக்கு இத்திட்டம் போய்ச்சேர வேண்டுமோ அதில் குளறுபடி இன்றி வினியோகம் இருக்க வேண்டும். இத்திட்டத்தில், திறமை வாய்ந்த நடைமுறை உருவாக்கப்பட மாநில அரசுகளை வலியுறுத்தியிருக்கிறோம். மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கூட  இதை வலியுறுத்திக் கூறப்பட்டது. ஆகவே, பொதுவினியோக நடைமுறை சீராக்கப்படுவது, பிரச்னைகளை குறைக்கும். இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும். பொருளாதார மந்த நிலை, உலகளாவிய  அளவில்   ஏற்படுத்திய பாதிப்பு  காரணமாக,  ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்  இந்த பாதிப்பில்  மோசமான நிலையைச் சந்தித்திருக்கின்றன. இந்த நாடுகளுக்கு  ஏற்றுமதி  செய்வது  கடினம். அத்துடன் விவசாய உற்பத்திக் குறைவு  மற்ற அம்சங்கள் சேர்ந்து மொத்த வளர்ச்சியைக்  குறைத்து விட்டது.



இந்நிலையில், அரசு அடுத்த பட்ஜெட்டில் என்ன முன்னுரிமை திட்டம் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு இப்போது இடம் இல்லை. ஆனால், திட்டமில்லா  செலவுகளைக்  குறைக்க வேண்டும்,  திட்டத்தின் கீழ் செலவிடப்படும் நிதி உரிய காலத்தில் உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை  கவனிக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரணாப் கூறினார். இணையமைச்சர் பழனிமாணிக்கம் உடனிருந்தார். இன்று நடக்கும்  கூட்டத்தில்  டெலிகாம் துறை மற்றும் ரசாயனம் மற்றும் எரிபொருள் துறை  அமைச்சர்கள்  பங்கு பெற வாய்ப்பில்லை. அத்துறைகள் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டில் இத்துறைகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



தங்கம் வாங்கியதில் மகிழ்ச்சி



இக்கூட்டத்தில், மகிழ்ச்சி செய்தியாக பிரணாப் முகர்ஜி கூறியதாவது: ரிசர்வ் வங்கியானது,  உலக வங்கியிடம் இருந்து தங்கம் வாங்கியுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி. ஒரு காலத்தில்  பிரிட்டனில் தங்கத்தை அடகு வைத்து, நம் அன்னியச் செலாவணிக்காக பணம் சேகரிக்கப்பட்ட நிலை மாறி, இன்று அதிகளவில் அன்னியச் செலாவணி இருக்கிறது என்ற அளவில்  மகிழ்ச்சிப்படலாம். இந்த அரசைப் பொறுத்தளவில், ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது  எல்லாருக்கும் உணவு, எல்லாருக்கும் கல்வி மற்றும் எல்லாரும் நல்ல சுகாதாரத்துடன் இருக்க நடவடிக்கை என்பதே முக்கியம். இவ்வாறு பிரணாப் கூறினார்.



- எம்.ஆர்.இராமலிங்கம் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 THANKS TO PRANAB MUKHARJE  
by M PALANIKUMAR,UNITED ARAB EMIRATES,India    11/4/2009 10:14:33 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்