பெங்களூரூ: கர்நாடகாவில் பா.ஜ., அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்கிறது. முதல்வர் எடியூரப்பாவின் சமாதானத்தை பெல்லாரி சகோதரர்கள் ஏற்க மறுப்பதால், அங்கு குழப்பம் நீடிக்கிறது. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அவர்கள் பா.ஜ.,மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இரு தரப்பினரும், டில்லியில் முகாமிட்டு, கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில், உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது' என, பா.ஜ., மேலிடம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பெல்லாரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறியதாவது: இந்த நேரத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான். பா.ஜ., தலைமையிலான அரசு அமைப்பதற்கு ரெட்டி சகோதரர்கள் மிகவும் உதவினர். ஆனால், இதற்கு பின் சில தவறான புரிதல்களால் கருத்து வேறுபாடு அதிகரித்து விட்டது. கட்சியின் மேலிடத் தலைவர்கள் இதை சரிசெய்துள்ளனர். இதனால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, கட்சியின் மேலிட தலைவர்கள் புதிய திட்டத்தை செயல்படுத்துவர்.
பா.ஜ., தலைமையிலான அரசு அமைந்தபோது, ஜெகதீஷ் ஷெட்டாருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இதனால், அவர் அதிருப்தியில் இருந்தார். அமைச்சர் பதவி குறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காக ஷெட்டார் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
ரெட்டி சகோதரர்கள் பிடிவாதம்: அரசு அமைக்க உதவியதாக பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம், அவர்களுடன் சமாதானமாக போவதற்கு எடியூரப்பா முயற்சித்தாலும், அதை அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், மாநில வருவாய் துறை அமைச்சருமான கருணாகர ரெட்டி கூறியதாவது: எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு பதிலாக யாரை முதல்வராக்க வேண்டும் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. பிரச்னை முடிந்து விட்டது என, எடியூரப்பா கூறுவது தவறு. கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஜனார்த்தன் ரெட்டி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார். எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்த கோரிக்கையையும் நாங்கள் வலியுறுத்தவில்லை. எங்கள் கட்சி தேசியக் கட்சி, முடிவு எடுப்பதற்கு சிறிது கால தாமதமாகும். அதுவரை பொறுமையாக இருப்போம் இவ்வாறு கருணாகர ரெட்டி கூறினார்.
டில்லியில் முகாமிட்டுள்ள ஜனார்த்தன் ரெட்டி, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், ""எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்கள் நலன் கருதியும், கட்சியின் நலன் கருதியும், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும். எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது,''என்றார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பதிலாக, அமைச்சரவையில் பெல்லாரி சகோதரர்களுக்கு சாதகமாக சில மாற்றங்களை செய்யலாம் என, கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் தரப்பிலும் சில மாற்றங்களை செய்வது என, கூறப்பட்டது. ஆனால், இதை பெல்லாரி சகோதரர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
| வாசகர் கருத்து |
பாரதிய ஜனதாவின் ஆட்டம் அவ்வளவு தான். சகோதரர்களுக்கு நன்றி
|
by HABEEBTHEEN,Riyath,Saudi Arabia 11/4/2009 2:03:56 PM IST |
பெல்லாரி பிரதர்ஸ் மூலமா பா.ஜா.க விற்கு மூடுவிழா கர்நாடகத்தில ஆரம்பம் ?
|
by n ஷண்முகம்,Kolkata,India 11/4/2009 10:23:02 AM IST |
இந்த பெல்லாரி பிரதர்ஸ்... கருணாநிதி அன் கோவினரை மிஞ்சிடுவாங்க போலிருக்கே...!
|
by s. அப்துல்லா கான்,UAE,India 11/4/2009 9:51:09 AM IST |
இந்த பா.ஜ.கட்சி காரங்க அவ௦ங்களுக்குலேயே அடிச்சிக்குவாங்க. பிறகு எப்படி வளரும். இனிமே பா.ஜ.கட்சி வளருவதுக்கான வாய்ப்பே இல்ல. மோடி மட்டும் மிச்சம் இருக்காரு.
|
by இந்தியன்,chennai,India 11/4/2009 8:44:23 AM IST |
மகாராஷ்டிரா விவகாரம் முதல் பக்கத்தில், கர்நாடக விவகாரம் எங்கோ ஓர் மூலையில். மேலும், பாரதிய ஜனதா பார்ட்டியில் ஜாதி கலவரம் தலை விரித்து ஆடுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
|
by M Nagarajan,Leeds,United Kingdom 11/4/2009 3:11:02 AM IST |