புதுடில்லி: மார்க்சிஸ்ட் செல்வாக்கை நிலை நிறுத்தி கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளது; பினராயி போன்ற "பழைய தலை'கள் பதவிகளை பறிப்பது அதில் ஒரு கட்டம். லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்து விட்டநிலையில், இப்போதுள்ள மேற்கு வங்கம், கேரளாவில் தொடர்ந்து, செல் வாக்கை தக்க வைக்க முடியுமா என்ற அச்சம், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்துள்ளது. மூன்று முறைக்கு மேல் மாநிலப் பொதுச் செயலர் பதவி வகித்தவரிடமிருந்து அப்பதவியைப் பறித்து அடுத்தகட்ட தலைவர்களிடம் தருவது உட்பட சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க கட்சி மேலிடம் சமீபத்திய மத்திய குழு கூட்டத்தில் பரிசீலித்துள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் உட்பட சில மாநிலங்களில் பல ஆண்டாக பொதுச்செயலர் பதவியில் சிலர் தொடர்ந்து "ஆணியடித்து' உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்தி, இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த "தடை' விதிமுறை, கட்சியின் தேசிய பொதுச் செயலருக்குப் பொருந்தாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி உடனே கூறி விட்டார்.
தேசியப் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் கூறுகையில்,"இது கட்சியை திருத்தும் நடவடிக்கை அல்ல; நிர்வாகத்தோடு தொடர்புடையது' என்று தெரிவித்தார். இதை அமல்படுத்துவது பற்றி ஆலோசித்துவருவதாக யெச்சூரி கூறியுள்ளார். அப்படி அமலானால், ஒருவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே மாநிலத்தில் பொதுச் செயலராக இருக்க முடியும். ஊழல் பெருச்சாளிகளான பினராயி போன்றவர்களை அகற்றிவிட்டு, கட்சிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சவே இந்த நடவடிக்கை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கட்சி மீதான பினராயி போன்றவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என்று கட்சித் தலைமை நம்புவதாகத் தெரிகிறது.
| வாசகர் கருத்து |