இது உங்கள் இடம்

பதிவு செய்த நாள் : ஜன 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
இது உங்கள் இடம்


கழிசடைகள் கனவை தகர்ப்பர்!

எம்.பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: அரசியலில் அடியெடுக்கும், மிஸ்டர் ரஜினி... முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை. ஒருவேளை அப்பதவி கிடைத்து விட்டால், நீங்கள் சாதிக்க வேண்டியவை இவை...முதல்வர், அமைச்சர், அரசு அதிகாரி, ஊழியர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும், 'லோக் ஆயுக்தா' அமைப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், தகுதி, திறமை அடிப்படையில், ஊழலற்ற முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.கோடி கொடுக்காமல், தகுதி, அனுபவம், திறமை அடிப்படையில், சிறந்த அறிஞர்களை, கல்வியாளர்களை, பல்கலையின் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அரசு கான்ட்ராக்ட்களில், 'கட்டிங்' இன்றி, காரியம் நடக்கும், 'மாயாஜாலத்தை' ஏற்படுத்த வேண்டும்.ஓட்டை உடைசல்களுக்கு பதிலாக, ஒய்யார வசதியுடன், மக்கள் பயணம் செய்வதற்கான பஸ்களை வாங்க வேண்டும். தமிழக நதிகளை இணைக்கும் நல்ல காரியத்தை துவக்கி வைக்க வேண்டும்.அமெரிக்க கவிஞர், ராபர்ட் பிராஸ்ட், 'இருண்ட வனம், மிக அடர்ந்த வனம்; என் கடமைகளோ ஏராளம். துயில் கொள்ளும் முன் தொடர்ந்திட வேண்டும். தொலைவோ பல கல் நடந்திட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.அதுபோல், அரசியலில் மேடு, பள்ளம், தடைகளை தாண்ட வேண்டும். விடா முயற்சி வேண்டும். தமிழகம் இருண்ட வனம் மட்டுமல்ல; அடர்ந்த வனம். அங்கு, சிறு நரி முதல், சிங்கங்கள் வரை பசியோடு காத்திருக்கும்; உங்களை கபளீகரம் செய்ய படாதபாடு படும்!உங்கள் முயற்சியின்போது, நேர்மை, நிதானம், ஒழுக்கம், கட்டுப்பாட்டை கடைபிடிப்பதுடன், உங்கள் ரசிகர்களும் கடைபிடித்து நடக்க வேண்டும். நீங்கள் துவக்கவுள்ள கட்சி சார்பில், 234 தொகுதிகளில் நிலவும் பிரச்னை, அவற்றிற்கான தீர்வு, செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றை, இப்போது முதல், தகவல் திரட்டுங்கள்...அவற்றை தீர்க்க முனைப்போடு செயல்படுங்கள்; இத்திட்டங்களை நிறைவேற்ற பணமும், அரசின் அனுமதியும் வேண்டும். தொகுதி பிரச்னைகளை தீர்க்க, நீங்கள் முயலும்போது, முட்டுக்கட்டை போட்டு, அவற்றிற்கு மூடு விழா நடத்த, எதிரிகள் முயல்வர்.இவற்றை எல்லாம் இப்போதே கவனத்தில் கொள்ளுங்கள் ரஜினி!

---


யாரையும் பிரிக்க நினைப்பதில்லை!

அ.இதயதுல்லா, திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: இஸ்லாமியர்களின் திருமணம் ஒரு ஒப்பந்தமே; அதை அங்கீகரிக்கப்பட்ட ஜமாத் எனும் அமைப்பினர், பள்ளிவாசலில் வைத்தோ அல்லது திருமண மண்டபத்தில் வைத்தோ, இரு வீட்டாரின் உறவினர்களின் முன்னிலையில் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் மணமக்களும், வக்கீல் ஒருவரும், சாட்சிகளாக நான்கு பேரும் கையெழுத்திடுவர். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய விரும்பினால், ஜமாத் அமைப்பை தான், அவர்கள் அணுகுவர்.பல முறை அழைத்து, சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்வர். தங்கள் நிலைப்பாட்டில் கணவன் - மனைவி உறுதியாக இருந்தால், அவர்களுக்கு முதல் தலாக் அல்லது குலா சொல்லப்படும்; குலா என்றால், சுதந்திரம் என்று பொருள்! அடுத்து, ஆறு மாதங்கள் கழித்து, ஜமாத் மீண்டும் கூடி, தம்பதி இடையே சமாதானம் செய்து வைக்க முயற்சிக்கும். அப்போதும், பிரிவதில் உறுதியாக இருந்தால், இரண்டாவது தலாக் அல்லது குலா சொல்லப்படும்.அடுத்து, ஆறு மாதம் கழித்து கூடும் ஜமாத் அமைப்பு, தம்பதியை எச்சரிக்கும். மூன்றாவதாக தலாக் அல்லது குலா பெற்று விட்டால், நீங்களே நினைத்தாலும் மீண்டும் சேர முடியாது என்பதை விளக்கும். இந்த நேரத்தில், 100க்கு, 80 சதவீத தம்பதியர், தங்கள் பகையை மறந்து, இணைந்து விடுவர். ஒரு ஆண்டிற்கும் மேலான கால இடைவெளி மற்றும் அனுபவங்கள், அவர்களை இணைத்து வைக்கிறது.ஒரே நேரத்தில், மூன்று முறை, 'தலாக்' என்று சொன்னால், விவாகரத்து ஆகி விட்டது என்று நினைத்தால், அது தவறு. முத்தலாக் தடை சட்டத்தின்படி கைது செய்யப்படும் கணவன், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவராகவே தொடர்ந்து நீடிப்பார். தண்டனை முடிந்து வெளியே வரும், தன் கணவரால் ஏற்படும் எதிர்கால பிரச்னைகளை, எந்த புத்திசாலி பெண்ணும் விரும்ப மாட்டார்.நீதிமன்றங்களின் இறுதி தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் பிடிக்கும். முத்தலாக் தடை சட்டம் பயன் தருமா என்பதை, காலம் தான் தீர்மானிக்கும். புனிதமான திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இணையும் தம்பதியர் கடைசி வரை, சேர்ந்து வாழவோ அல்லது பிரிந்து செல்லவோ முடிவெடுக்கும் உரிமையை, இஸ்லாம் வழங்குகிறது. இறைவனை சாட்சியாக வைத்து, இணையும் தம்பதியை பிரிக்க, இஸ்லாம் யாரையும் அனுமதிப்பதில்லை.---


இவ்வளவு விடுமுறை தேவையா?

ஆர்.ராஜராஜன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாநிலம் முழுவதும், 239 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும்' என, உ.பி., முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அது, வரவேற்கத்தக்கது. தமிழகத்தில், ஆண்டுக்கு ஆண்டு விடுமுறை நாட்கள் அதிகரித்து வருகின்றன; இது கண்டிக்கத்தக்கது!பொங்கலுக்காக, பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக, ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது. ஜன., 14 பொங்கல் தினம்; முந்தைய நாள், இரண்டாவது சனிக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை; ஜன., 15, 16 ஆகிய நாட்களும் விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜன., 12 வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாள் என அறிவித்தது, தமிழக அரசு. ஏற்கனவே புயல், மழை காரணமாக, பல நாட்கள் பள்ளிகள் இயங்கவில்லை. பொதுத்தேர்வுகள் துவங்க, இன்னும் சில வாரங்களே உள்ளன. திடீர் திடீர் விடுமுறை அறிவிப்புகளால், பள்ளிகள் மூடப்படுவது சரிதானா... ஆண்டிற்கு, 220 நாள் பள்ளிகள் இயங்கினாலே, மாணவர்களுக்கான பாடங்களை முடிப்பதில் சிரமம்; இதை, ஆசிரியர்களிடம் கேட்டால் தெரியும். தேவையில்லாமல் விடுமுறை விடப்படுவதால், மாணவர்களின் படிப்பு பாழாகிறது!பொங்கல் கொண்டாட ஏதுவாக, ஜன., 12 விடுமுறை விடப்படுவதாக அறிவித்தாலும், போக்கு வரத்து ஊழியர்கள், 'ஸ்டிரைக்'கால் ஒருநாள் முன்னதாக பள்ளிகள் மூடப்பட்டன; இந்நிலை மாற வேண்டும்.அரசியல்வாதிகள் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு, அதிகாரிகள் துணை போவது வருத்தத்திற்குரியது!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜன-201809:33:05 IST Report Abuse
g.s,rajan கவலைப் படாதீர்கள் இனி பள்ளி கல்லூரிகளில் E லேர்னிங் வந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை