டீ கடை பெஞ்ச்
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 அக்
2017
00:00

தொண்டர்களுக்கு 'போனஸ்' கொடுத்த எம்.பி.,
''மதுரை நகரிலும் நல்ல வசூலாம் வே...'' என, முதுகைப் பிடித்தபடி நாயர் கடைக்கு வந்தார் அண்ணாச்சி.
''என்னங்க... ஏன் பிடிப்பு ஏற்பட்டுச்சு...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''தீபாவளி பலகாரம் ஒரு கை பார்த்தேன்... காராபூந்தியையும், மிக்சரையும் சாப்பிட்டது, ஏதோ செய்யிது என்னை... சரியாயிடும்... விஷயத்துக்கு வாரேன்...'' என்ற அண்ணாச்சி, தொடர்ந்தார்...
''போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேர்மையானவராக இருந்தாலும், அவருக்கு கீழ் வேலை பார்க்கிற சில இன்ஸ்பெக்டர்களின் வலக்கை, இடக்கையாக இருப்பவர்கள், பணம் முதல் பட்டாசு வரை, 'வாங்கி' குவிச்சிட்டாவ...
''நேரடியாக வாங்கினால் சிக்கல் ஆகிடும்ன்னு, 'மப்டி'யில் ஆள் அனுப்பி வசூல் செஞ்சிருக்காவ... யார் யார் வசூல் செஞ்சாவன்னு, கமிஷனருக்கு லிஸ்ட் போயிடிச்சு...'' என்றார் அண்ணாச்சி.
''பெரும்பாலான, பி.ஆர்.ஓ.,க்கள், தி.மு.க.,வைச் சேர்ந்தவங்கங்கறது தெரியுமா பா...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.
''சரி... அதுக்கென்ன ஓய் இப்போ...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''இவங்க எப்படி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா செயல்பட முடியும்... அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மீடியாக்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய வேண்டிய இவங்க, காசு பார்க்கிறதையே, அரசு பணியா நினைச்சி செயல்படுறாங்க...
''பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க, பிரஸ் டூர் கூட்டிட்டு போனது, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ், அடையாள அட்டை அச்சடிச்சது... நிருபர்களை வேனில் அழைச்சிட்டு போனது... உணவு வாங்கிக் கொடுத்தது... துறை அமைச்சர் மற்றும் வேறு மாவட்ட அலுவலர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தந்ததுன்னு, ஏகத்துக்கும் பொய் கணக்கு எழுதிடுறாங்க...
''இது எப்படி இருக்கு... சாம்பிளுக்கு சொல்றேன்... திருச்சி, சேலம், கரூர், மதுரை, சென்னையில தலைமைச் செயலகம், வள்ளுவர் கோட்டம்ன்னு பட்டியல் நீளுது...'' என்றார் அன்வர்பாய்.
''தொண்டருக்கு, ஐநுாறு, தலைவனுக்கு, 25 ஆயிரம்ன்னு, தீபாவளி போனஸ் கொடுத்து, எம்.பி., அசத்தியிருக்காருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த ஊரு எம்.பி., ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''அரக்கோணம் எம்.பி., அரி, வழக்கமாக தீபாவளிக்கு தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுப்பாரு... இந்த முறை திருத்தணி நகராட்சியில ஒவ்வொரு வார்டுக்கும், 15 கட்சி தொண்டர்களை தேர்வு செஞ்சு, தலா, 500 ரூபாய் முதல், 3,000வரை கொடுத்திருக்காரு...
''மாஜி கவுன்சிலர்களுக்கு தலா, 10 ஆயிரம்... நகர, ஒன்றிய செயலர்களுக்கு தலா, 25 ஆயிரம்ன்னு, ரகவாரியாக மொத்தம், அஞ்சு லட்சம் ரூபாய் வரைக்கும் தீபாவளிக்கு போனஸ் கொடுத்து அசத்திருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
நண்பர்கள் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி நிலவியது.
மலிவு விலை பட்டாசு விற்ற டாக்டர்!
''ஈவு, இரக்கம் இல்லாம இருக்கா ஓய்...'' என, முதல் தகவலைத் துவக்கிய குப்பண்ணா, ''அரசு அலுவலகத்துல, எல்லா மட்டத்துலயும் ஊழல் அதிகமாயிருக்கு...'' என்றார்.
''என்ன பா... காலைலயே புலம்பிட்டிருக்கீங்க...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தனித் தனி பிரிவு, மெயின் ஆபீஸ்ன்னு, எந்த இடத்துல வேலை பார்க்கற ஊழியர்கள் இறந்தாலும், அந்த விபரத்தை, பணிபுரிந்த மற்றும் சென்னை, தலைமை அலுவலகத்தில் உள்ள, தலைமை பொறியாளர் - 'பெர்சனல்' பிரிவுக்கு சொல்லணும்... அதை, தலைமை அலுவலகத்துலேர்ந்து, 'கிராஸ் வெரிபிகேஷனுக்கு' அனுப்புவா...
''பின், ஊழியரின் பணி சான்று, இறப்பு சான்று, தாசில்தார் அலுவலக வாரிசு சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் தடையில்லா சான்றுன்னு சில சான்றிதழ்களைக் குடுத்தா, வீட்டில இருக்கற வாரிசு யாராவது ஒருத்தருக்கு வேலை கிடைக்கும்...
''ஆனா, இந்த சான்றிதழ்களைக் குடுத்துட்டு, 'தேவுடா' காத்துண்டு இருக்க வேண்டி இருக்கு... கையூட்டம் கொடுத்தா தான் வேலை நடக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''ரொம்ப அலம்பல் செய்யிதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சி, தொடர்ந்தார்...
''டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க, இந்த அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வர்றாங்க பாரும்... நோயாளிக்கு ரொம்பவே சிரமமா போகுது...
''மதுரை அரசு மருத்துவமனையில், போன, ௮ம் தேதி, அமைச்சர்கள் சில பேரு வாராவன்னு சொல்லிட்டு, டாக்டர்கள், 'திகுதிகு'ன்னு டான்ஸ் ஆடிட்டிருந்தாவ... 'என்ன லே நடக்குது இங்கே...'ன்னு நோயாளிகள் அலறி அடிக்க, அவங்களுக்கு சாப்பாடு கொடுக்க வந்த, 'விசிட்டர்'களையும், டாக்டர்கள் விரட்டி அடிச்சிப்புட்டாவ... ஒரு நா முழுக்க, நோயாளிகள் பாடு ரொம்பவே திண்டாட்டமா போச்சு... அவர் வந்துட்டு போன பிறகு, நிலைமை சீராச்சு வே...'' என்றார் அண்ணாச்சி.
''நானும் ஒரு டாக்டர் விஷயம் சொல்றேன் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''நல்லதா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''மாஜி அரசு பெண் டாக்டர், மலிவு விலையில, 'அம்மா' பட்டாசு விற்றதால, பொதுமக்கள் பாராட்டுனாங்க பா...'' எனக் கூறி, புன்முறுவல் பூத்த அன்வர்பாய், தொடர்ந்தார்...
''சென்னை துரைப்பாக்கம், 200 அடி சாலையில, பத்து ரூபாய் கட்டணத்துல, அம்மா கிளினிக்கை, பெண் டாக்டர் அபரூபா சுனந்தினின்னு ஒரு டாக்டர் நடத்துறாங்க...
''மறைந்த முதல்வரு ஜெயலலிதா, மக்கள் நல்வாழ்வு திட்டம் துவக்க விழாவுல பங்கேற்க வந்த போது, பெண் டாக்டரின் பணிகளை பாராட்டி, மக்களுக்கு சேவை செய்ய, கட்சியில இணைந்து பணியாற்றுங்கன்னு ஜெ., சொன்னாங்களாம்...
''அதனால, உள்ளாட்சி தேர்தல்ல, நெல்லை மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, சென்னை ஓமந்துாரர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் பணியை, ராஜினாமா செய்துட்டாங்க... இப்ப, தீபாவளி பண்டிகையை ஒட்டி, மலிவு விலையில, 'அம்மா' பட்டாசு விற்று, பொதுமக்களிடம், சபாஷ் வாங்கிட்டாங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.
''நல்லது...'' என்றபடி கிளம்பினார் குப்பண்ணா; நண்பர்கள் பின்தொடர்ந்தனர்!

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.