தமிழக எறிபந்து அணியின், நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து, இந்திய அணியில் இடம் பிடிக்கத் தயாராகியிருப்பவர், வர்ஷா சி.சதீஷ். களத்தில் மின்னலாய் செயல்படும் இந்த இளம் வீராங்கனை, இன்று தமிழக ஜூனியர், சீனியர் அணிகளின் முக்கிய தூண்களில் ஒருவர்.
தன் சாதனை பற்றி அவரே கூறுகிறார்: கைப்பந்து, கூடைப்பந்து போல, எறிபந்து, வழக்கமான விளையாட்டில்லைதான். ஆனால், நான் படிக்கும், "ஆஸ்ரம்' பள்ளியில், எறிபந்தும், கிரிக்கெட்டும் தான் பிரபலமான விளையாட்டுகள். ஆகவே, இயல்பாகவே எறிபந்தை கவனிக்க ஆரம்பித்த நான், அதில் ஆர்வத்துடன் விளையாடத் துவங்கினேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, முதல் முறையாக, காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றேன். அதையடுத்து, கரூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில், சென்னை மாவட்ட அணி சார்பில் ஆடி, முதலிடம் பெற்றேன். கோவை, திருநெல்வேலியில் நடந்த மாநிலப் போட்டிகளில், இரண்டாவது இடம் கிடைத்தது.
ஒன்பதாம் வகுப்பில் நுழைந்தபோது, தமிழக அணியில் இடம்பெற்று விட்டேன். தேசிய அளவில் முதல்முறையாக, மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டேன். அதில், இறுதிப் போட்டியில், மத்தியப்பிரதேச அணியைச் சந்தித்தோம். உள்ளூர் அணி என்ற முறையில், அவர்களுக்குச் சில சாதகங்கள் இருந்தன. நெருக்கடி, டென்ஷன் போன்றவற்றால், அம்மாநில அணியிடம் தோல்வியுற்று, இரண் டாவது இடம் பெற்றோம்.
அதே ஆண்டில், கோவாவில் நடைபெற்ற, தேசிய சப்- ஜூனியர் போட்டியில் பங்கேற்றோம். நம் அணி வீராங்கனைகளிடையே நல்ல புரிதல், ஊக்கம், தன்னம்பிக்கை இருந்தது. அதனால், ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வந்த நாங்கள், இறுதி போட்டியில் டில்லி அணியை சாய்த்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள், 0 - 8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தோம். அப்போது நான், சர்வீஸ் போட்டு, அணிக்குத் தொடர்ந்து, மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தேன்.
அதுவே, என் சக வீராங்கனைகளுக்கு புதுவேகம் கொடுக்க, நாங்கள் துடிப்புடன் விளையாடி, வெற்றியை எங்களுக்கு உரியதாக் கினோம்.இதுவரை நான் ஆடிய போட்டி தொடர்களிலேயே, மறக்க முடியாததாகவும் இது அமைந்தது. கடந்தாண்டு பிப்ரவரியில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் எறிபந்து போட்டியிலும் முதலிடம் பெற்றோம். நான் சீனியர் நிலைக்கு உயர்ந்ததும், லூதியானாவிலேயே நடைபெற்ற தேசிய சீனியர் எறிபந்து போட்டியில், தமிழக அணி சார்பில் ஆடினேன்.
சீனியர் அளவில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே, "சாம்பியன்' ஆனது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
என் சக பள்ளி தோழியரான நிவேதா, ஸ்வேதா, ருத்ரப்பிரியா ஆகியோர், என்னுடன் தமிழக அணியிலும் ஆடுகின்றனர். எங்களுக்கு இடையே, நல்ல புரிந்துணர்வு இருப்பது ஆட்டத்தில் உதவுகிறது. இதுவரை மாநில அளவி லான போட்டிகள் ஐந்திலும், தேசிய அளவில், ஆறு போட்டிகளிலும் பங்கேற்றோம். கோவையில் நடைபெற்ற மாநிலப் போட்டியில், "சிறந்த வீராங்கனை' விருது பெற்றதை, முக்கிய கவுரவமாக கருதுகிறேன்.
எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும், நாட்டுக்காக ஆடுவது தான் பெரிய பெருமையாக இருக்கும். நானும், இந்திய அணிக்காக ஆடும் இனிய வாய்ப்பை, ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளில், நான் அதைச் சாதித்து விடுவேன் என்று நம்புகிறேன். விளையாட்டு ஆர்வம் இருந்தாலும், நான் படிப்பிலும் சோடை போனதில்லை. பத்தாம் வகுப்பு பயிலும் எனக்கு, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று, உற்சாகப் படபடப்பு மாறாமல் கூறி முடித்தார் வர்ஷா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.