அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது... தெய்வ பக்தி மிகுந்தவர். அவரது சமகாலத்து அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு, தேவர் பேசினார். அவரது அந்தப் பேச்சு, எந்தத் தொகுப்பிலும் இதுவரை வெளிவரவில்லை... எதிர்பாராத விதமாக என்னிடம் சிக்கியது அந்த தொகுப்பு. பேச்சில் இருந்து ஒரு பகுதி...
காது குத்தல், கல்யாணம் என்ற வைபவம் தமிழன் மட்டுமே ஒரு தெய்வ வழிபாடாகக் கொண்டாடும் வைபவம். சிவகங்கை அரண்மனையில் கோலாகலமாக நடத்தப்பட வேண்டிய இந்த வைபவம், தென்னவராயன் புதுக்கோட்டை கிராமத்தில், பொட்டலில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் ஏன் நடக்கிறது?
தமிழன் இறை பக்தி மிகுந்தவன். தனக்குக் குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து தன் குழந்தையின்
முகமண்டலத்தைப் பார்க்கிறான்; மூக்கை பார்க்கிறான்; அழகான வாயைப் பார்க்கிறான்.
அதே சமயம், குழந்தையின் காதைப் பார்க்கிறான்; அதன் வடிவத்தைப் பார்க்கிறான். தனக்கு இந்த குழந்தை பாக்கியத்தை அளித்த இறைவனின் ஓங்கார வடிவமாக காது அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறான்.
ஓங்கார வடிவமாக அமைந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி செலுத்த எண்ணி, தன் குழந்தைக்கு முதன், முதலாக கொண்டாடும் வைபவத்தை, காது குத்து கல்யாணமாக நடத்தி, ஓங்கார வடிவத்திற்கு நிரந்தர காணிக்கையாக, தங்கத்தாலான ஒரு ஆபரணத்தை காதில் அணிவித்து, அதையே ஒரு விழாவாக நடத்துகிறான்.
கடவுள் நாத வடிவம்; அந்த நாதத்தை அறிவது காது தான். காதின் வழியாகத் தான் ஆதிகாலத்தில் மனிதன் ஞானம் பெற்றான். அதை உணர்ந்து காதணி வைபவத்தை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணினான் தமிழன்.
வினாயகரை வணங்கும் போது, "துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று வணங்குகிறான். பிள்ளையாரை ஞானக் கடவுளாகத் தமிழன் உணர்ந்து, தான் வணங்கும் போது, இரு காதுகளையும் இழுத்து வணங்கி, தலையில் குட்டிக் கொள்கிறான், ஏன்?
பழங்காலத் தமிழன் உடற்கூறு சாத்திரத்தை நன்குணர்ந்தவன். காதின் வழியாகச் செல்லும் சிறு நரம்புகள் இயங்கித் தான், தலையில் இருக்கும் மூளைக்கு ஞானம் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தான்.
ஆசிரியரிடம் படிக்க, குழந்தையை சேர்க்கும் தாய், "ஐயா, நல்லா காதை திருகி, தலையில் குட்டி சொல்லிக் குடுங்க...' என்பாள். ஏன் காதை திருகச் சொல்ல வேண்டும்? தலையில் குட்டச் சொல்ல வேண்டும்?
காதிற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தி, தூங்கும் மூளையை எழுப்பி விடத்தான் காதை முறுக்கி, தலையில் குட்டச் சொல்கின்றனர். மூக்கைத் திருகவோ, கையை முறுக்கவோ சொல்வதில்லை!
இப்போதெல்லாம் பள்ளியில் மாணவன் காதை வாத்தியார் திருகி, தலையில் குட்டினால், பெற்றோர் கச்சை கட்டி சண்டைக் கோழியாக அல்லவா மாறி விடுகின்றனர்.
***
கொங்கு நாட்டு வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது... கணவனின் அன்பு கிடைக்காத பெண், திசைமாறி செல்ல எப்படி தூண்டப்படுகிறாள் என்பது குறித்து எழுதியுள்ளார். அத்துடன் தன்னைப் போல மற்ற பெண்களும் துன்பம் அடையக் கூடாதே என்ற எண்ணத்தில், தன் கடிதத்தை வெளியிடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்பு நண்பர் அந்துமணி அவர்களுக்கு, உங்கள் அபிமான வாசகி, ரசிகை, வணக்கத்துடன் எழுதுவது... கடந்த ஒரு வருடமாக என்னுடைய எண்ணங்கள், என் உணர்வுகள், சோகங்கள் ஆகியவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் விருப்பப்பட்டேன். ஆனால், இன்று தான் செயல் வடிவம் கொடுத்திருக்கிறேன்.
நான், நல்ல, ஒழுக்கமுள்ள, கடவுள் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். தற்போது வயது 29. எனக்கு 15 வயதில் திருமணம் நடைபெற்றது. 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சிறிய வயதில் திருமணம் நடைபெற்றதால், கணவனிடம் எப்படி நடந்து கொள்வது என்று எனக்கும், மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று என் கணவருக்கும் தெரியவில்லை.
அவருக்கு தேவை பணமும், செக்சும்தான். முதல் இரவில் கூட நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தினமும் சண்டை. இடையில், "அபார்ஷன்' வேறு. என்னிடம் அன்பாக, ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.
என் கணவர், இரண்டரை வருட கான்ட்ராக்டில் அரபு நாடு சென்றார்.
எனவே, அம்மா வீட்டில் இருந்தேன். அப்போது, வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் பழகி வந்தோம். என் கணவரிடம் கிடைக்காத அன்பு, பாசம், ஆறுதல் இவரிடம் கிடைத்தது. என் கணவர் அனுப்பும் பணத்தை, 25 ஆயிரம் ரூபா# வரை இவருக்கு கொடுத்து விட்டேன்.
என் கணவர் திரும்பி வந்து, இந்த விவரத்தை கேள்விபட்டு என்னை அடித்து, மிரட்டி திருந்தும்படி கேட்டு, பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்றார். உறவினர்கள் அனைவரும் எனக்கு அறிவுரை கூறினர். அங்கேயும் இவர் வந்து, "நீ இல்லாவிட்டால், நான் இறந்து விடுவேன். நீ தான் என் உயிர். உன்னையும், உன் குழந்தைகளையும், என் குழந்தைகள் போல காப்பாத்துவேன்...' என்று, என் மனதைக் கரைத்து, அவருடன் வரும்படி அழைத்தார். நானும் புத்தி கெட்டுப் போய், என் மகளுடன் சென்று விட்டேன்.
கடந்த ஒரு வருடம் முன், எனக்கு இவருடன் திருமணம், பத்து பேர் முன்னிலையில் கோவிலில் (என் அம்மா, புதியவரின் அம்மா, அப்பா, தம்பி உட்பட) நடந்தது. அதற்கு முன்பே, என் முதல் கணவரிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி விட்டேன். இந்தத் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்யவில்லை; போட்டோவும் எடுக்கவில்லை. ஆறு மாதம் சந்தோஷமாக இருந்தோம்.
இப்போது அவருக்கும், இன்னொரு மலையாள பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு, நெருக்கமா# பேசி வருகின்றனர். என்னையும், அவர்கள் வீட்டிற்கு வரும்படி கட்டாயப்படுத்துகிறார். தட்டி கேட்டால், "உன்னுடன் வாழ முடியாது. உன்னைப் பிடிக்கவில்லை. நீ, உன் அம்மா வீட்டுக்கு போ. நீ எவனுடன் வேண்டுமானாலும் போ; எனக்கு கவலையில்லை...' என்கிறார்.
முன்பு என்னிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்தியவர், "இப்போது எனக்கு பணம் இருக்கிறது. எனக்கு யாரும் தேவையில்லை. அவள் தான் என் உயிர்...' என்கிறார்.
தற்போது பையன் விடுதியிலும், பெண் அம்மாவிடமும் வளர்கின்றனர்.
இவரையும் விட்டுப்போனால், ஊரார் மிக கேவலமாக பேசுவர் என்று, இவரின் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஊதாரித்தனமாக செலவு செய்கிறார். வீட்டு செலவுக்கு பணம் தருவதில்லை. அவளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு சுடிதார், நைட்டி எடுத்துத் தருகிறார். நான் கேட்டால், "நீயே இந்த வீட்டில் இரு. நான், எனக்கு ஆறுதல் கிடைக்கும் வீட்டிற்கு செல்கிறேன்...' என்று பயமுறுத்துகிறார். என் குழந்தைகளுக்காக இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு, இந்த கேவலமான பிழைப்பு பிழைக்கிறேன்.
சம்பந்தப்பட்ட பெண், மலையாள கிறிஸ்டியன்; படித்து இருக்கிறாள். கறுப்பு. என் நிலைமையை அவளிடமே கூறினேன். இவரிடம், "டைம் பாஸ்'காகத்தான் பழகுவதாகவும். தன் மனதில் சலனம் இல்லை என்கிறாள்.
இன்று, என் இரண்டாவது கணவர் என்னை விட்டுப் பிரிந்து, அவளுடன் ஐக்கியமாகி விட்டார். என் வாழ்க்கையை கெடுத்ததற்கும், ஏற்கனவே நான் பணமாகவும், நகையாகவும் கொடுத்ததை திருப்பிக் கேட்ட போது, அவர் ஆபீசில் வைத்து, "நீ தே... தொழில் செய்கிறவள். உன்னை நான் திருமணமே செய்யவில்லை. உன்னை நாலு வருடமாக வைத்து இருந்தேன். உன் கேரக்டர் சரியில்லாததால், உன்னை விட்டு பிரிந்தேன். ஆபீசில் வந்து என்னை, "பிராத்தல்' பண்ண கூப்பிட்டதாக போலீசில் புகார் செய்வேன்...' என கூறினார். நான் பயந்து போ#, திரும்பி விட்டேன்.
இதை ஏன் தங்களுக்கு எழுதுகிறேன் என்றால், என் போன்ற மனசை அடகு வைக்கும் பெண்களுக்கு, இது ஒரு பாடமாக அமையட்டும் என்று தான்.
படிக்க வேண்டிய வயதில் படிக்காமலும், கண்ட சினிமாக்களை பார்த்து, சிறிய வயதில் திருமணம் செய்து கொள்ளும் என் போன்ற பெண்களும், என் கதையை அறிந்து திருந்துவர்.
முதலில் நல்ல கல்வியறிவும், சொந்தக் காலில் நிற்கும் திறமையை வளர்க்க வேண்டும். எந்தக் காலத்திலும் தாலி கட்டிய கணவனை விட்டு பிரியக் கூடாது. அப்படி பிரிந்தாலும் தனியே வாழ வேண்டும்.
— பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கடிதம் எழுதிய வாசகிக்கு நன்றி!
***

Advertisement