ஸ்ரீ கிருஷ்ணகான சபா அமரர் யக்ஞராமன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மிக வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் தரப்படுகின்றன. அந்த வகையில், இவ்வருடம் ஒரு வாரம் மிகக் கோலகலமாக, மிக வித்தியாசமான கோணத்தில் அமைக்கப்பட்டு, அரங்கு நிறைந்த ரசிகர்கள் அனைத்து தரப்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஏழுநாள் நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, "மாத்ருதேவோ பவ' - என்ற அம்மாவின் பெருமை கூறும் கருத்தாக்கம் நிகழ்ச்சி வடிவமைப்பு அபாரம்.சர்ச்சில் பாண்டியன் மனதை வருடும் தென்றலாக, அமைத்திருந்தார்,. "அம்மா' ஒரு படிப்பினை, பத்துமாதம் தன் வயிற்றில் நம்மை சுமந்து ஆளாக்கி, இம்மண்ணிற்கு நம்மை அறிமுகப்படுத்தியவளுக்கு எடுத்த ஒரு அற்புதமான விழா. இதற்கு, முழு ஆதரவை அளித்த கிருஷ்ண கானசபாவின் பிரபு பாராட்டுதலுக்குரியவர். ஏனென்றால், திரை இசையையும், இறை இசையையும் இணைக்கும் போது கவனமாக கையாள வேண்டும். அம்மாவை, தங்கள் குரலால் நமது மனதில் நினைவலைகளையும், செவிக்கு தேன் தமிழ்பழமையும், கண்களில் ஈரத்தையும் கொடுத்த பாடகிகள் சைந்தவி, ஸ்ரீ லோகா பார்த்த சாரதி, மான சிப்ரசாத், சரஸ்வதிப்பிரபு பியானோவில் அனில் ஸ்ரீ நிவாசன் ஆகியோர். கடந்த, 35 வருடங்களில், திரை இசையைப் பொறுத்த வரை பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
ஒரு சில பாடல்கள் விதி விலக்காக இருந்தாலும் பாடலின் வரிகள், இசைக்கருவிகளின் ஆதிக்கம், இதனால், வார்த்தைகள் நம் காதுகளுக்கு எட்டும் முன்பே காணாமல் போய் விட்டன. ஆனால், இறை இசையை பொறுத்த வரை பிரச்னையே இல்லை. வார்த்தைகள் தெள்ள தெளிவாக இருப்பதால், பாடும் போது மனதை தொட்டு விடும்.
ஆனால், தமிழ்திரை உலகின் "வரப்பிரசாதப் பாடல்' அம்மா என்றழைக்காத பாடல் ,அதைத் தொடர்ந்து, சைந்தவி "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' பாடி தன் ரசிகர்களை மகிழ்வித்து அம்மாவை தேட வைத்து விட்டார். சைந்தவி மற்றும் ஸ்ரீலேகா மானசி பாடிய கருணை தெய்வமே கற்பகமே பாடல் ரசிகர்களுக்கு கண்ணில் கற்பகாம்பாளை கொண்டு நிறுத்தியது.
நம் பாரத பூமி ஒன்று தான் நாம் வாழும் நாட்டை அன்னை வடிவமாக பார்க்கின்றது என்பதையும், அதன் மூலம் தாய்ப் பாசத்தோடு சேர்ந்த தேசப்பற்றை, பாலாடை கொண்டு புகட்டுவது போல் பாடிக் கொடுத்தனர்.
இவ்வனைத்துப் பாடல்களும், ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல், அனில் ஸ்ரீனிவாசன் பியானோவில் ஒரு பாடலோடு, மற்றொரு பாடலை அருமையாக மாலையாக்கி, நம்மை பெற்ற அன்னை முதல், இவ்வுலகில் உள்ள அனைத்து அன்னையரையும் வலம் வந்து, இறுதியில் நம் பாரத தாயை பணிந்து, அவர் முடித்தது அருமை.