ஜன்னல்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
00:00

திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில், ஒரு கூடாரம் முளைத்திருந்தது; நிறைய பேரின் நடமாட்டமும் தென்பட்டது...
""பாமா... இங்க வந்து பாரு...'' என்று அவர் கூறியதும், மரக்கரண்டியுடன், அடுக்களையில் இருந்து ஓடி வந்த பாமா, மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். முகத்தில், சன்னமாய் ஆச்சரிய ரேகையும், மெல்லிய புன்னகையும் தோன்றியது.
""அடடே... யாருங்க இவங்க...?''
""எதுக்கு இப்படி இளிக்கறே... காலையில இருந்து உள்ளுக்கும், நடைக்கும் ஒன்பதாயிரம் தரம் நடக்கறியே, நீ பார்க்கல?'' எரிந்து விழுந்தார்.
""ம்ம்க்கும்... எனக்கு அதுதான் வேலையா? அந்த காலிமனை யாருதுன்னு கூட தெரியாது. நாம இங்க குடி வந்து, மூணு வருஷமாய் பொட்டல் காடாத்தான் இருக்கு. அந்த இடத்தை காவல் பண்றது தான், என் வேலையா?''
பாமா போய் விட்டாள். அவளைப் போல், நடேசனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அவருடைய, "சமூக பொறுப்புணர்வு' காலை வேளையில், நிச்சயம் சுறுசுறுப்பாய்த் தான் வேலை செய்யும்.
அரசுத் துறையில் உயர்வான வேலையில் இருந்து, 50 வயதில் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார். அதுவும் ஆயிற்று, ஐந்து வருடங்களுக்கு மேல்! வியாசர்பாடியில் மகனும், நீலாங்கரையில் மகளும் வசதியாக வாழ்கின்றனர். ஓய்வூதிய பணத்தில், இந்த சொகுசு பங்களாவை வாங்கிப் போட்டார். நிறைய நேரம் கிடைப்பதால், எண்ணற்ற சமூகநல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.
பாமாவிற்கு அவர்களை நிறைய பிடித்திருந்தது. சிறிசும், பெரிசுமாய் நிறைய பேர் இருந்தனர். ஒரு நடுத்தர வயது தம்பதி; அவர்களுடைய மகன், மகள், பேரப் பிள்ளைகள் போல் தோன்றியது பார்ப்பதற்கு.
மரத்தடியில் பெரிய பானையில் சமைத்தனர். கோணி மீது காய்கறிகளைப் போட்டு, அரிவாள்மனையில் அரிந்தனர். மண்பானையில் வேக வைத்த குழம்பின் வாசம், மூக்கை துளைத்தது.
மாலை நேரத்தில், கூடார வாசலை கூட்டி கோலமிட்டு, நீர் தெளித்து, துப்புறவு செய்தனர். லாந்தர் வெளிச்சத்தில் சமைத்து, நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டனர். இரவு வெகு நேரம் சிரிப்பும், பேச்சுமாய் கழிந்தது.
அவர்கள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கின்றனர் என்பது கூட, இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆண்களும், பெண்களுமாய் அனைவரும் வேலைக்கு போய் விடுகின்றனர். ஓரிருவர் மட்டும், கூடாரத்தில், பகல் வேளையில் இருக்கின்றனர்.
""பாமா... அவங்க யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்...'' வீட்டிற்குள் நுழையும் போதே, பத்து வயது குறைந்த உற்சாகத்தில் உள்ளே வந்தார், நடேசன்.
""யாராம்?'' அசுவாரஸ்யமாய் கேட்டாள்.
""மெயின் ரோட்டை ஒட்டி ஒரு காலிமனை இருக்குல்ல... அத ஒட்டி ஒரு ரோடு போகுது. அங்க, ஒரு காலிமனையில தான், இத்தனை நாளும் இருந்திருக்காங்க... இப்போ, அங்கே கட்டட வேலை ஆரம்பமானதும், இவங்க இங்க இடம் மாறிட்டாங்க... இவங்களுக்கு, இப்படி இடம் விட்டு, இடம்விட்டு போறது தான் பொழப்பே...''
""அப்படியா... இதக் கண்டுபிடிச்சு நமக்கு என்ன ஆகப் போறது...''
""அடிப்போடி இவளே... நம்பளப் போல, சமூகப் பொறுப்புள்ள மனுஷனோட முதல் வேலை என்ன தெரியுமா... நம்மள சுத்தி நடக்குற மாற்றங்களை கண்டுபிடிச்சு, எந்தத் தப்பும் நடக்காம தடுக்கறது தான்... உன்கிட்ட போய் சொல்றேன் பாரு, தண்டம் தண்டம்.''
பாமாவிற்கு அவர்களிடம் எந்தத் தவறும் இருப்பதாய் தோன்றவில்லை. கள்ளம்கபடம் இல்லாமல் இருந்தனர். வாழ்க்கையை துளித்துளியாய் அனுபவித்து வாழ்கின்றனர். இரவானால், டிரான்சிஸ்டரில் அவர்கள் பாட்டுக் கேட்டு, சிரித்து விமர்சனம் செய்தபடி, தங்கள் வீட்டு சிறிசுகளை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது, அழகிலும் அழகு!
இதுபோன்ற அடிமட்ட மக்களிடம் இருக்கும் ஒட்டுறவு, தாத்பர்யம், தம்மைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திடம் இல்லையென்ற அங்கலாய்ப்பு, அவளுடைய மனசில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது...
அன்று வெள்ளிக்கிழமை...
அந்தப் பகுதியில் இருந்த விநாயகர் கோவிலில், குடமுழுக்கு விசேஷம் நடந்தது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நடேசனின் முயற்சியும், கைங்கர்யமும் பெருமளவில் இருந்தது.
"ஸ்வேதா... நம்ம அபரஞ்சி விநாயகருக்கு நாளைக்கு குடமுழுக்கு. ஒரு நடை வந்துட்டுப் போயேன்...' நேற்று மகளுக்கும், மகன் விக்னேஷுக்கும் போன் செய்து அழைத்துப் பார்த்தாள். இருவருமே முக்கிய வேலை இருப்பதாய் கூறி விட்டனர்.
கூடாரத்தில் இருந்த பெண்களும், ஆண்களும், புதுசு உடுத்தி, கோவிலுக்கு போவதும், வருவதுமாய் இருந்தனர். கோவில் பிரசாதத்தை வாங்கி வந்த அவர்களில், மூத்த பெண்மணி, உருண்டை பிடித்து தர, அத்தனை பேரும் அவளைச் சுற்றி அமர்ந்து, கையேந்தி கவளம் வாங்கி உண்டனர். அவர்களுக்குள், பேசிச் சிரிக்க, நிறைய விஷயமிருக்கும் போல; அடிக்கொரு தரம் சிரித்துக் கொண்டே இருந்தனர்.
""வாங்க ஸ்டீபன் சார்...'' என்ற நடசேன், மனைவியை அழைத்து,""பாமா... யாரு வந்திருக்காங்க பாரு...'' என்றார்.
சப்பாத்திக்கு மாவு பிசைந்த கையுடன் வெளியில் வந்தவள், அவருக்கு வணக்கம் தெரிவித்தாள். பக்கத்து ப்ளாட் ஸ்டீபன், நடேசனைப் போலவே சமூக சேவகரும் கூட. வேலைக்கு போகிற வேலை இல்லாததால், வெட்டி வேலையை, வேலையாக்கி கொள்பவர்.
""நடேசன் சார், நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க... நான் ஆடிட்டர் வரதன் மூலமா, இந்த இடம் யாருதுன்னு கண்டுபிடிச்சு, இப்படி ஒரு கும்பல், அவங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிற தகவலை, மெயில் பண்ணிட்டேன். பொறுத்திருங்க, ரெண்டொரு நாள்ல எல்லாம், "க்ளியர்' ஆயிடும்.''
காபியுடன் வந்த பாமாவுக்கு, "சுரீ'ரென்று சுட்டது; காபியும், அவர்களுடைய வார்த்தையும்.
நடேசன் பெருமிதமாய் அமர்ந்து இருந்தார். அன்னிய நாட்டின் அபகரிப்பில் இருந்து, தாய்நாட்டை மீட்ட மிதப்புடன்... பாமாவுக்குத் தான் அதிக வருத்தமாய் இருந்தது.
இரண்டாம் நாள் காலையில், போலீசும், நில
உரிமையாளரின் வக்கீலும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும், கூடார வாசிகளுக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது.
வாசலில் நின்ற ஸ்டீபனும், நடேசனும், கட்டை விரலை உயர்த்தி, வெற்றிச் செய்தியை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியில் கூடார வாசிகள், மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் அங்கிருந்து கிளம்பினர். பெண்களும், குழந்தைகளும், மிகுந்த கண்ணீருடன் ஆளுக்கொரு சாமான்களை கையில் பற்றியபடி, இலக்கின்றி நடந்து, கண்களில் இருந்து தேய்ந்து மறைந்தனர்.
ஸ்டீபனும், நடேசனும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு, நில உரிமையாளரின் வக்கீலிடம், நிலத்திற்கு வேலியிடும்படி, இலவச அறிவுரையை வாரி வழங்கி விட்டு வந்தனர்.
""பாமா... விடிஞ்சு இவ்வளவு நேரமாகுது... அந்த ஜன்னலை திறந்து வச்சா என்ன?'' எரிச்சலாய் கேட்டபடி, ஜன்னலை திறக்க முற்பட்டார் நடேசன்.
""திறக்க பிடிக்கல... நீங்க திறக்கறதும் பிடிக்கல...'' என்றாள். ஆச்சரியமாய் பார்த்தார் நடேசன்.
""பாவம்... அவங்க இருக்கறதுக்கு இடமில்லாம தானே, இங்கே வந்து இருந்தாங்க. வசதியான வாழ்க்கை மட்டுமே தெரிஞ்ச உங்களுக்கு, வாழ்வாதாரத்தை பத்தின கவலையில்ல... யாரோட இடத்துலயோ இருக்குற அவங்களை, குத்துயிரும் கொலை உயிருமா இங்கிருந்து விரட்டியடிச்சது, எப்படி மனிதாபிமான வேலையாகும்... இது தான் சமூக சேவையா?''
""ஓ... அதுதான் உன் கோபமா... இப்படிபட்டவங்களை தங்க விடறது தப்பு பாமா...''
""ஒத்துக்கறேன்... ஆனா, இவங்க அப்படியில்லைன்னு உங்களுக்கும் நல்லாத் தெரியும். இந்த பகுதியிலேயே, பல வருஷமா இருக்காங்கன்னு நீங்க தானே சொன்னீங்க... வீடில்லாத எல்லாருமே, தப்பானவங்களா இருக்க வேண்டிய அவசியமில்லையே... எல்லாரையும் நம்பறது எப்படி தப்போ, யாரையும் நம்பாம இருக்கறதும் தப்பு தான்.''
தேவையான விஷயத்துக்கு கூட, பாமா, இப்படி கோபங்கொண்டு பேசியதில்லை. நடேசனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
""சரி விடு... உனக்கு அதெல்லாம் புரியாது. போய், காபி கொண்டா.''
தன்னுடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்தி விட்டு பேசும் கணவனை, இன்னும் கோபமாய் பார்த்தாள்.
""ஆமா... எனக்கொன்னும் புரியாது... உங்களுக்குத்தான் எல்லாம் புரியும். ஆறு மாசத்துக்கு ஒருமுறை கூட, நம்ப புள்ளைங்க இந்தப் பக்கம் எட்டிப் பாக்குறது இல்லை. இவ்வளவு பெரிய வீடும், ஜன்னலும், தள்ளி நின்னு என்னை எளக்காரம் பண்றதை, நான் யார்ட்ட சொல்லி அழ முடியும்?
""இந்த நேரத்துல தான், எனக்கு அந்தக் குடும்பம் ரொம்பவும் வடிகாலா இருந்தது. சிரிப்பும், கூத்துமா அவங்க இருக்கறதை பார்க்கையிலே, நானும் அவங்கள்ல ஒருத்தியா என்னை கற்பனை பண்ணி, சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். இப்போ... ஜன்னலைத் திறந்தா தெரியற வெறுமை, என் முகத்தை கண்ணாடியில பாக்குற மாதிரி இருக்கு. நாம என்னத்தை அனுபவிச்சுட்டோம், அவங்களை விட...'' இயலாமையாய் சொன்னாள்.
""அதே தான்... அதே கோபந்தான் எனக்கும் பாமா... உட்கார வச்சு, பத்து பேருக்கு சாப்பாடு போடற வரும்படி இருக்கு... ஆனா, நம்பள தேடி வர யாருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும், ருசிச்சு, கழிச்சு வாழற அவங்களைப் பார்த்தா, எனக்கு கோபம் வந்தது... "நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதிச்சுத் தான் நிம்மதியா, சந்தோஷமா வாழ முடியும்டா நடேசா'ன்னு, எப்பவும் எங்கப்பா என்கிட்ட சொல்வாரு. எனக்கு அது கிடைக்கல... ஆனா, இது எதையுமே செய்யாம, அவங்களுக்கு அது கிடைக்குது... அத நினைச்சா தான், எனக்கு வெறுப்பா இருக்கு.''
கணவனை உற்றுப் பார்த்தாள் பாமா. சமூகசேவை என்று அனத்திக் கொண்டிருந்த கணவனுடைய உண்மை முகம், அப்பட்டமாய் அந்த நொடியில் புலப்பட்டது. அவளுடைய பார்வை வீச்சைத் தாங்காமல், தலை கவிழ்ந்தபடி எழுந்து போனார், நடேசன்.
அதன்பின், அவர் என்றைக்குமே ஜன்னலைத் திறக்க எத்தனிக்கவே இல்லை!
***

எஸ். பர்வின் பானு

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201200:49:37 IST Report Abuse
shyam கதையின் முடிவு ஏமாற்றத்தை தருகிறது.
Rate this:
Share this comment
Cancel
JK - India,இந்தியா
30-ஜூலை-201220:46:49 IST Report Abuse
JK முதலில் கூடாரம் போடுவார்கள், பிறகு கொடி நடுவார்கள், தங்களுக்குள் ஒரு தாதாவை வளர்ப்பார்கள், அப்புறம் ஒரு அம்மன் கோவில் முளைக்கும், அதற்கு வசூல் வேட்டை, கள்ளசாராயம், கஞ்சா, விபச்சாரம், விலையில்லா மின்சாரம் (இவர்களே கொக்கி போட்டு எடுத்து கொள்வது), குப்பை கூலம், சாக்கடை நடுவில் ரோடை தேடி நடக்க வேண்டும், ராத்திரி முழுவதும் சண்டை கலாட்டா , அசந்தால் வீடு புகுந்து திருட்டு, வீட்டை பூட்டி விட்டு போகமுடியாது, அப்புறம் தேர்தல் வந்தால் போச்சு, நிலம் கோவிந்தா, என்ன சொன்னீர்கள்? ஜன்னலா, அதை மறந்தும் திறக்கமுடியாது, திருட்டு தொல்லையும் கொசுவும் நாற்றமும் தான் மிஞ்சும், ஜன்னல் வைத்து வீடு கட்டியிருந்தால் அதை அப்படியே புடுங்கி எறிய வேண்டியதுதான், ஒரு நாள் ஆட்டோவில் போகும் போது, எதிர்படும் ஆட்டோக்கள், தாண்டி போகும் ஆட்டோக்கள் எல்லாம் எங்கள் ஆட்டோ டிரைவருக்கு வணக்கம் வைத்தனர், விசாரித்ததில் அவர் குடிசை வாழ் மக்கள் சங்கதலைவராம், வித்தௌட்டில் சென்னை வந்த விஞ்ஞானி, எங்கெல்லாம் புறம் போக்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ அங்கே குடிசை போட்டுகொண்டு, கும்பலை உருவாக்கி, சங்கம் தொடங்கி, குடிசை மாற்று வாரியத்தில் இதுவரை ஐந்து வீடு அவர் குடும்பத்திற்கு உள்ளது, அதை வாடகைக்கு விட்டுவிட்டு, வெளியே பிளாட்டில் குடியிருப்பு. இந்த குடிசை மற்று வாரியம் எப்போது இந்த உயர்ந்த சேவையை நிறுத்தும் என்று தெரியவில்லை. சென்னையில் திடீர் குடிசைகளுக்கு காரணம் இந்த குடிசை மாற்று வாரியம் தான், ஓட்டுக்கு லஞ்சம் மறைமுகமாக கொடுக்கும் விலையில்லா திட்டம் போல. கௌசல்யா, சுரேஷ் மற்றும் பர்வின் பானு, நீங்கள் காலி மனை வைத்திருந்தால் சொல்லுங்கள், இவர்களை அங்கு அனுப்பி வைக்கிறேன், எனக்கு தெரியும் உங்களுக்கு ஈகோ கிடையாது, ரொம்ப மனிதாபிமானம் மிக்கவர்கள், அவர்களுக்கு உங்கள் நிலத்தை கொடுத்துவிட்டு, எதிர் வீட்டில் ஜன்னல் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ரசியுங்கள். வயிற்றில் தானாக குமிட்டி எரியும்.
Rate this:
Share this comment
Cancel
SURESH - Madurai,இந்தியா
30-ஜூலை-201215:52:36 IST Report Abuse
SURESH படித்த நடேசனுக்கும் அறியாமை உள்ளது. இவரைப்போல 1௦௦௦ நாடேசன் ஒவ்வொரு ஊருலேயும் இருக்கத்தான் செயுறர்கள்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
30-ஜூலை-201203:57:17 IST Report Abuse
GOWSALYA இப்படியும் "" ஈகோ "" உள்ள மனிதர்கள் நிறைய இருக்கார்கள்.
Rate this:
Share this comment
Cancel
29-ஜூலை-201220:36:53 IST Report Abuse
திருமதி பாலாகிரி சென்னையில் சேரி உருவான விதமே இப்படிதான். குடிசை மாற்று வாரியம் வீடு கட்டிகொண்டே போகுமாம், சென்னையில் தினமும் குடிசை முளைக்குமாம். வேளச்சேரி பக்கம் வந்து பாருங்கள் சொந்த வீடுக்காரர்கள் படும் அவஸ்தையை. கொக்கி போட்டு இலவச கரண்ட், பணம் கட்டுபவர்களுக்கு லோ வோல்டேஜ், வழி முழுக்க குப்பையும் சாக்கடை தண்ணியும் ஆறாக ஓடும், அடுத்து சமூக விரோதிகளின் கூடாரம், சுட்டுகொல்லப்பட்ட வங்கிகொள்ளயர்கள் தங்கி இருந்தது இங்குதான், துரைப்பாக்கத்தில் வாரம் ஒரு கொலை அப்புறம் கொள்ளை எல்லாம். இதுவெல்லாம் ஒரு கதை ?
Rate this:
Share this comment
Cancel
BALA - CD,இந்தியா
29-ஜூலை-201216:23:05 IST Report Abuse
BALA " எல்லாரையும் நம்பறது எப்படி தப்போ, யாரையும் நம்பாம இருக்கறதும் தப்பு தான். - " "நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதிச்சுத் தான் நிம்மதியா, சந்தோஷமா வாழ முடியும்டா நடேசான்னு, எப்பவும் எங்கப்பா என்கிட்ட சொல்வாரு. எனக்கு அது கிடைக்கல..." THANKS எஸ். பர்வின் பானு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.