வாசகர்களின் கலகலப்பான குற்றால டூர் - போனோமே குற்றாலம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
00:00

ஆடி மாதம் வந்தால் குற்றலாம் சீசனை அனைவரும் எதிர்பார்ப்போம். ஆனால், இந்த வருடம், "தினமலர்-வாரமலர் வாசகர்கள் வந்தால்தான் சீசனை துவக்குவேன்...' என்று குற்றாலம் அடம்பிடித்து விட்டது போலும். வாசகர்கள் வரும்வரை வறண்டுகிடந்த குற்றால அருவிகள் அனைத்தும், ஜூலை 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தினமலர்-வாரமலர் வாசகர்களுக்கான 24 வது வருட குற்றால டூரின்போது புதிய ஜீவனுடன் பொங்கி பிரவாகமெடுத்ததில், வாசகர்கள் அளவில்லாத ஆனந்தம் அடைந்தனர்.
மதுரை ஓட்டல் பிரேம்நிவாசிற்கு வாசகர்கள் அனைவரும் வெவ்வேறு ஊரில் இருந்து வந்து சேரும்போது, முதல் நாள் இரவு 12:00 மணிவரை ஆகி விட்டது. ஆனாலும், பரவாயில்லை என்று ஓட்டல் நிர்வாகிகளான ராமசாமியும்- விசாலாட்சி யும் விழித்திருந்து, சுடச்சுட சுவையான உணவு வழங்கிய போது, வாரமலர் இதழின் விருந்தோம்பல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை வாசகர்கள் முதல் நாளே புரிந்து கொண்டு விட்டனர்.
அறிமுக விழா முடிந்து மதுரை மீனாட்சி டிராவல்ஸ் வால்வோ ஏசி சொகுசு பஸ்சில் பயணத்தை துவக்கியபோதே மகிழ்ச்சியும் துவங்கி விட்டது. "எல்லா கவலை களையும் இறைவனிடம் இறக்கி வையுங்கள் அவன் பார்த்து கொள்வான்...' என்று மதுரை மீனாட்சி அம்மனின் பக்தரான பாலகிருஷ்ண சுவாமிகளின் ஆசி, கல்லுப்பட்டியில் எதிர்பாராமல் கிடைக்க, அனைவருக்கும் இன்னும் சந்தோஷம்.
அந்த மகிழ்ச்சியுடனேயே ராஜபாளையம் வழியாக சென்ற போது, "எங்கே எங்க ஊரை தாண்டி போறீங்க... ஏதோ எங்களால முடிஞ்ச அன்பை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுங்க...' என்று ராஜபாளையம் ராஜேஸ்வரி எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் ராமசுப்பிரமணியராஜாவும், ஆனந்த திருமண மண்டப நிர்வாகி மோகனும், வாசகர்கள் இளைப்பாற, திருமண மண்ட பத்தையும், களைப்பு போக்க சிற்றுண்டியும் வழங்கியதுடன், "எங்களால் முடிந்த எளிய அன்பளிப்பு...' என்று விலை உயர்ந்த பை ஒன்றையும் கொடுத்தனர். அந்த பைக்கு கூட விலை வைத்து விடலாம். ஆனால், அவர்கள் ராஜபாளையத்தில் வரவேற்கும் போதும், வழியனுப்பும் போதும் காட்டிய மலர்ந்த முகத்திற்கும், வெளிப்படுத்திய புன்சிரிப்பிற்கும் விலையே கிடையாது.
பஸ் குற்றாலத்தை எட்டிப் பார்த்ததும், அதுவரை மலைகளுக்குள் ஒளிந்திருந்த சீசனும், வாசகர்களை தொட்டுப் பார்த்தது. பஸ்சை விட்டு இறங்கியதும் வாசகிகள் நாகலட்சுமி, சித்ரா, தேன்மொழி, சுசீலா, தனலட்சுமி, தேவி ஆகியோர், "பஸ்சுக்குள்ளே இருந்ததைவிட இப்பதான் குளிருது, ஆனா, ரொம்ப இதமாயிருக்கு...' என்றபடி உற்சாகமாக நடைபோட்டு தங்குமிடத்தை அடைந்தனர்.
வாசகர்கள் குற்றாலத்தில் தங்குவதற்காக, தனித்தனி அறைகள் கொண்ட, இயற்கை உரங்களால் வளர்க்கப்படும், மரங்கள் சூழ்ந்த அலங்கார் ரிசார்ட்சில் அறைகளின் சாவியோடு, ரிசார்ட்சில், மலர்ந்த மலர்களையும், பழங்களையும் கொடுத்து வரவேற்றார் ரிசார்ட்சின் நிர்வாகி ஈஸ்வர்ராஜ்.
குற்றாலத்தை பொறுத்தவரை, தரமான உணவுக்கு மட்டும் தட்டுப்பாடு என்பதால், பல பிரபலங்களுக்கு சமைத்து கொடுத்த திண்டுக்கல் கீதா மெஸ் சந்திரசேகர் தலைமையிலான ஊழியர்களைக் கொண்டு, விதம், விதமான சாப்பாடு தயார் செய்து, வேளை தவறாமல் கொடுக்கப் பட்டது. போதும் போதாதற்கு வாசகர்கள் போகுமிடமெல்லாம் அவர்களுக்கு சூடான மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜியும் கொடுத்து மகிழ்ந்தனர். "எங்களால சாப்பிட முடியல, விட்டுருங்க....' என்று வாசகர்கள் மாரியப்பன், முத்துலட்சுமி ஆகியோர் கையெடுத்து கும்பிட்டே விட்டனர்.
எல்லாம் சரி... குற்றாலத்திற்கு வந்த வேலையை (குளிப்பதற்கு) கவனிப்போம் என்று முதலில் ஐந்தருவிக்கு வாசகர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வருடம், மஞ்சள் வண்ண பனியனை சீருடையாக அணிந்து சென்றனர். ஏற்கனவே சிறப்பு அனுமதி பெற்றிருந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மேற்பார்வையில் எந்தவித தள்ளுமுள்ளும் இல்லாமல் அருவியில் நீ....ண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். இதே போல, மெயினருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவியிலும் ஆனந்த குளியல் தொடர்ந்தது. எந்த அருவி என்றாலும் ஆணும், பெண்ணும் தனித்தனியாகத் தான் குளிக்க வேண்டும். ஆனால், புதுமணத் தம்பதியான ராஜ்-ஆக்னஸ் ஆகிய இருவரும்,"எங்களை பிரிக்காதீங்கப்பா...' என்று புலியருவில் சேர்ந்தே குளித்தனர். "ஏன் புது மணத் தம்பதிகளுக்கு மட்டும் தான் இந்த சலுகையா நாங்க கொஞ்சம்தாம்பா பழசு...' என்று நகைச்சுவையாக கூறிய சண்முகசுந்தரம்-கீதாராணி தம்பதியினர் வேடிக்கையாக பேசி, அனைவரையும் சிரிக்க வைத்தனர். இவர்களுடன் வந்து அனை வராலும் செல்லமாக பாலா என்றழைக்கப்பட்ட சிறுவன் கார்த்திக் பாலாஜி, "நமக்கு அருவியெல்லாம் சரிப்பட்டு வராது, ஓடுற தண்ணிதான் சரி...' என்று சொல்லி, ஓடும் தண்ணியில் உருண்டு, புரண்டு குளித்த அழகே தனி.
ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டான் பாலா. ஐஸ்கிரீம் கொடுத்தால் ரிசார்ட்சில் உள்ள ஆமைக்கு Œõப்பிட கொடுப்பான். கேட்டால், "அது யார்ட்டப்பா கேட்கும் நாமதானப்பா கொடுக்கணும்...' என்பான், எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரியப் போகும் சோகத்தில் அனைவரும் பஸ்சில் மவுனம் சாதித்த போது, "இனிமேதான் நாம நிறைய பேசணும். எல்லாரும் அவுங்க, அவுங்க போன் நம்பர கொடுங்க...' என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
நாவிற்கும், உடம்பிற்கும் இனிமை கிடைத்தது; கொஞ்சம் காதிற்கும் அது கிடைக்கட்டுமே என்ற காரணத்தோடு நகைச்சுவை பேச்சாளர் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியர் ஞானசம்பந்தனின் தனிப்பேச்சிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரும் மனைவி அமுதாவுடனும், மகன் குருவுடனும் வருகை தந்து, வாசகர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் அருவிகளிலும் குளித்து மகிழ்ந்ததுடன், வயிறு குலுங்க, குலுங்க சிரிக்கும்படி பேசி மகிழ்வித்தார்.
இந்த பட்டிமன்றத்தில் மஞ்சுளா, ராதிகா, தேவகி ஆகியோர் அருமையாக பேசினர். அதிலும், தேவகியம்மா பேசும்போது, "நடுவரே நீங்க என்ன தீர்ப்பு சொல்றது, நான் சொல்றேன் தீர்ப்பு...' என்று சொல்லி, "மற்றவர்கள் பார்த்தால் அது எனக்கு தொல்லை, நான் மட்டும் பார்த்தால் அப்படியில்லை...' என்றபோது நடுவர் உட்பட அனைவருமே சிரித்து விட்டனர்.
இரண்டாவது நாள் அருவி குளியலோடு படகு பயணத்திற்கும், குற்றாலநாதர் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, படகு குழாமில் வாசகர் பெரியவர் மாசிலாமணி வேட்டியை மடித்துக் கட்டி கிரிக்கெட் விளையாடிய அழகை காண, கண்கோடி வேண்டும். அப்பா ஆனந்தமாக கிரிக்கெட் விளையாடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்து சிரித்தார் அவருடன் வந்திருந்த மகள் அனிதா.
இரண்டு நாளும் வாசகர்களை கலகலப்பாக வைத்திருந்த மதுரை சமூகவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன், அன்றைய தினம் மாலை புது அவதாரமெடுத்தார். வாசகர்கள் அனைவரையும் கூட்டி வைத்து,"இப்போது நாட்டிற்கு தேவை தேசிய ஒருமைப்பாடும், பண்பாடும்தான். அந்த ஒளிமயமான எதிர்காலத்தை அன்பு வழியாக உருவாக்குவோம்...' என்று ஆளுக்கொரு விளக்கு கொடுத்து உறுதி மொழி எடுக்க வைத்தார். வாசகர்கள் நெகிழ்ந்து விட்டனர்.
இரவு உணவிற்கு பின் வாசகர்கள் அநேகமாக தூங்கப் போய் விடுவர், ஆனால், இந்த வருடம் வாசகி ஷீபா செல்வியால் அனைவரும் தூக்கம் மறந்து விழித்திருந்தனர். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக பேசி, நடித்து, நடனமாடி , சிரிக்க, சிரிக்க பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தி, "சூப்பர் ஷீபா' என்று பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார்.
மூன்றவாது நாள் குளியலும், ஷாப்பிங்கும் முடிப்பதற்குள் மாலையாகி விட்டது.
பிரிய மனமில்லாமல், குற்றாலத்திற்கு ஒரு குட்பை சொல்லி, கிளம்பி மதுரை வந்து, அவரவர் ஊர்களுக்கு செல்லும் போது பலரது கண்களிலும் கண்ணீர். அதிலும் வாசகி தீபா, லவினா, தனலட்சுமி, சித்ராதேவி, திவ்யா, உமா ஆகியோர் கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது.
***

அவரே... அவரே அந்துமணி!
குற்றால டூரில் கலந்து கொண்ட வாசகிகளின் இரண்டாவது எதிர்பார்ப்புதான் அருவி குளியல். முதல் எதிர்பார்ப்பு என்னவென்றல் அவர்களுக்கு பிரியமான அந்துமணியை பார்க்க வேண்டும் என்பதுதான். எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக வாரமலர் இதழில் வந்த அந்துமணி தொடர்பான படங்களை எல்லாம் வெட்டி எடுத்து வந்திருந்தனர்.
ஆனாலும், அந்த படங்கள் யாருடனும் ஒத்துப்போகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். டாக்டர் கண்ணன் மீது மட்டும் கொஞ்சம் பேருக்கு சந்தேகப் பார்வை விழுந்தது. அவரோ, "நான் அவன் இல்லை' பாணியில், "நான் அந்துமணி இல்லை...' என்று தெளிவுபடுத்திய பின், நிஜமான அந்துமணியை தேடும் பணி தீவிரமானது.
"அந்துமணியை பார்க்க முடியும்ன்னா... நான் டூருக்கு வர்றேன்; இல்லை என்றால் வரவில்லை என்று சொல்லித்தானே நான் டூருக்கு வந்தேன். இப்ப ஊருக்கே திரும்பப் போகிறேன். ஆனா, நீங்க அந்துமணியை காட்டவேயில்லை...' என்று சண்டையிடுவது போல பேசிய வாசகிகள் பலர்.
ஆனால், உண்மையில் அவர்களை ஏமாற்றவில்லை. அவர்கள் விரும்பியது போல அந்துமணியை பார்த்தனர், பேசினர், ஆனால், அவர்தான் அந்துமணி என்பது தெரியாமலே! படகு குழாமில், உங்களது படகைச் சுற்றி தன்னந்தனியே துடுப்பு படகில் பயணித்தவரும் அவரே... இரண்டாவது நாள் இரவு, பாட்டுக்கு பாட்டு போட்டியில் வாசகி ஷீபா தூள் கிளப்பிய போது, "ஜட்ஜம்மா...' என்று அடிக்கடி கூப்பிட்டு, நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவரும் அவரே... அவ்வளவு ஏன், மதுரை ரயில் நிலையத்தில் ஒருவரையும் விட்டுவிடாமல் அனைவரிடமும் சென்று கைக்கொடுத்தும், கைக்குவித்தும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாரே...' அவரே... அவரே... அந்துமணி!

எல். முருகராஜ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SURESH - madurai,இந்தியா
10-ஆக-201213:27:57 IST Report Abuse
SURESH இதில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்???
Rate this:
Share this comment
Cancel
சரவணகுமார் சு - கோயம்புத்தூர்,இந்தியா
08-ஆக-201220:59:15 IST Report Abuse
சரவணகுமார் சு அட போங்கப்பா இங்க நான் கஜினி முஹம்மது - 2 கம்முன்னு இருக்கேன் நீங்க என்னவோ 3 , 5 ங்கறீங்க.
Rate this:
Share this comment
Cancel
prakash - coimbatore,இந்தியா
07-ஆக-201218:39:51 IST Report Abuse
prakash நானும் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். வாய்ப்பு கெடைக்கவில்லை. மனசு கஷ்டமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
வாசுதேவன் - CHENNAI,இந்தியா
07-ஆக-201205:19:47 IST Report Abuse
வாசுதேவன்      நானும் கடந்த 5 வருடங்களாக போட்டியில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன். தினமலர் குடும்பத்தில் பங்கு கொள்ள ஆவலாய் உள்ளேன். அடுத்த வருடம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். வெற்றி பயண நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.