பெண்களுக்கு, தங்கள் கூந்தல் மீது அலாதி பிரியம் உண்டு. பெண்களின் கூந்தல் அழகை வர்ணித்து, கவிதை பாடாத கவிஞர்களே இல்லை. "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்பது பற்றி, சர்ச்சை எழுந்து, அதற்காக, "நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே' என, சிவபெருமான் மீது, நக்கீரர் குற்றஞ் சாட்டியதை, திருவிளையாடல் கதையில் படித்திருக்கிறோம்.
இப்போது, நீண்ட கூந்தல் என்பது, பழங்கதையாகி விட்டது. மாறி வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப, கூந்தலை, தங்களுக்கு தேவையான அளவு மட்டும் வளர்த்துக் கொள்கின்றனர் இன்றைய பெண்கள். ஆனாலும், சீனாவில் ஹுயாங்குலோ என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்கள், இன்றும், தங்களின் கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பராமரித்து, வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில், 82 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள், சிவப்பு யவோ இனத்தினர் என அழைக்கப் படுகின்றனர். இங்கு வசிக்கும் பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும், சிவப்பு நிறத்தாலான உடை களைத் தான் அணிகின்றனர்.
இங்கு வசிக்கும் அனைத்து பெண்களுமே, மிக நீண்ட கூந்தலை உடையவர்கள். இவர்களின் கூந்தல் அளவு, சராசரியாக, ஐந்தடி முதல், ஏழு அடி வரை உள்ளது. மிக நீண்ட கூந்தலைக் கொண்ட பெண் கள் வசிக்கும் கிராமம் என்ற பெருமையும், இதற்கு உள்ளது. இதற்காக கின்னஸ் சான்றிதழும், இந்த கிராமத்துக்கு கிடைத்துள்ளது.
இங்குள்ள பெண்களின் கூந்தலுக்கு, பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. கூந்தல் விவகாரத்தில், கடுமையான விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள பெண்கள், தங்கள் கூந்தலை எப்போதுமே, அள்ளி முடிந்து, மூன்று அடுக்கு கொண்டை போட்டிருப்பர். பெண்கள், கூந்தலை விரிக்கும்போது, அதன் அழகை, அவர்களின் கணவர்களும், குழந்தைகளும் மட்டுமே பார்க்க வேண்டும். மற்ற வெளி நபர்கள் யாரும் பார்க்கக் கூடாது. மீறி யாராவது பார்த்தால், அவர்கள், அந்த பெண்ணின் வீட்டிலேயே, மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும்.
கோடை காலங்களில், ஆற்றுக்கு சென்று, அங்கு ஓடும் தண்ணீரில், கூந்தலை அலசிக் கொள்வர். அப்போது, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. கடந்த 1987ம் ஆண்டு வரை, இந்த கடுமையான விதிமுறைகள், பின்பற்றப் பட்டு வந்தன. இப்போது, இந்த விதிமுறைகளுக்கு மதிப்பில்லை. பெண் கள், தாங்கள் விரும்பும்போது, எப்போது வேண்டு மானாலும், கூந்தலை விரித்து, அதன் அழகை ரசிக்கலாம், சீவலாம், சிக்கெடுக்கலாம்.
இங்குள்ள பெண்கள், 16 வயதை எட்டும்போது மட்டும், கூந்தலை வெட்டிக் கொள்கின்றனர். அதற்கு பின், தங்கள் வாழ்நாளில் எப்போதுமே, கூந்தலை வெட்டிக் கொள்வது இல்லை. இப்படி வெட்டப்பட்ட கூந்தலையும், தூக்கி எறிந்து விட மாட்டார்கள். அந்த பெண்ணின், பாட்டியிடம், துண்டிக்கப்பட்ட கூந்தல் கொடுக்கப்படும். அதை அவர், சவுரியாக மாற்றி, அந்த பெண்ணை திருமணம் முடிக்கும் மாப்பிள்ளையிடம், திருமண நாளன்று கொடுப்பார்.
கூந்தலை கொண்டையிட்டு கொள்வதிலும், கடுமையான விதிமுறைகள் <உண்டு. திருமணமாகி, குழந்தைகள் இல்லாத பெண்கள், வெறும் கொண்டையுடன் காணப் படுவர். முடியை முன் இழுத்து கொண்டையிட்டிருந்தால், அந்த பெண்ணுக்கு, திருமணமாகி, குழந்தைகள் உள்ளன என்று அர்த்தம். கூந்தலை, துணியால் மூடியிருந்தால், அந்த பெண்ணுக்கு திருமண மாகவில்லை என, புரிந்து கொள்ள வேண்டும்.
கூந்தல் வளர்ப்பதில், பின்பற்றப்பட்டு வந்த, கடுமையான விதிகளில் சில, தற்போது காலாவதி ஆகிவிட்டாலும், நீண்ட கூந்தலை வளர்க்கும் பழக்கத்தை, பெண்கள் தொடர்ந்து பின்பற்று கின்றனர். அதெல்லாம் சரி, எதற்காக, இந்த பெண்கள், நீண்ட கூந்தலை வளர்க்கின்றனர் தெரியுமா? நீண்ட கூந்தல் இருந்தால், ஆயுட் காலம் அதிகரிக்கும், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இம்மக்களிடம் உள்ளது.
***
கவிப்பிரமேஷ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.