பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண்மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர்நாடக சங்க கலையரங்கத்தில் கோலாகலமாக நடந்தேறியது. திட்டத்தட்ட, ஒரு மினி கல்யாண வைபவ நிகழ்ச்சியாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களிடையே ஒற்றுமை, நட்பு, நல்லெண்ணத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட கலைகள்.
பரதாஞ்சலி நாட்டியப் பள்ளியின் குரு, நாட்டியாச்சார்யா அனிதா குகா, நாட்டியம் மட்டுமின்றி, நல்ல விஷயங்களையும் தன் சிஷ்யமணிகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர். முதலிடம் பெற்று விளங்குவதால், நாட்டியத் துறையில் மிக உயர்வான நிலையை அடைந்து, நல்ல புகழுடன் விளங்குவதோடு, இறைவனின் மீது அசைக்க முடியாத பக்தியும் உடையவர் என்பதால், அவருடைய நடன வடிவமைப்பில், கூடுதல் கவனத்துடன் அக்கறை செலுத்தி, சிறப்பாகத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் ஆற்றலுடன் விளங்குகிறார் என்று புகழும், பாராட்டும் பெற்றுள்ளார் அனிதா குகா.
சிரேயா சுரேஷ், ஐஸ்வர்யா நரசிம்மன் இருவருடைய கொடியுடலும், பிடியிடையும், உயரமும், அழகிய முகமும், விழிகளும் அவர்கள் மேடையில் தோன்றிய உடனேயே, ரசிகர்களை கொள்ளை கொண்டன. பாரம்பரிய தோடய மங்களம் (நாட்டை - ஆரபி - பந்துவராளி) ராகமாலிகை - தாள மாலிகையில் கருட கமன வரிகளில், கருடனின் அசைவுகளை முத்திரையாக அழகுற ஆடியது மனம் கவர்ந்தது.
தஞ்சை நால்வருடைய புகழ் பெற்ற ஜதீசுவரம் (வசந்தா - ரூபகம்) (கலாஷேத்திர குரு டாக்டர் ருக்மணி வடிவமைப்பு) பார்க்க கொள்ளையழகாக இருந்தது. சுருதி முத்திரைகள் படு ஜோராக, கண்களுக்கு விருந்தாக இருந்தது. பத்ம ஸ்ரீ மதுரை கிருஷ்ண அய்யங்காருடைய (ராகமாலிகை - மிச்ர சாபு) அம்பாள் மீது இயற்றிய சப்தம் (கல்யாணி - சாவேரி - சண்முகப்ரியா) போன்ற ராகங்களில் அம்பிகையின் சிறப்புகளையும், அசுரவதம் - கருணை இவைகளை மிக அழகாக நாட்டியத்தில் இருவரும் திறம்பட ஆடியது மனம் கவர்ந்தது.
நிகழ்ச்சியின் பிரதான வர்ணத்திற்கு, கீபோர்டு கலைஞர் பி.ஆர்.வெங்கடசுப்ரமண்யன் இயற்றிய, "ஆனந்தம் என் சொல்லுவேன்!' (சிம்மேந்திர மத்யம் - அமிர்த வர்ஷிணி - தோடி - அம்சாநந்தி) போன்ற ராகங்களில், மிக அருமையாக ஸ்ரீகிருஷ்ணர் மீது இயற்றப்பட்டுள்ளது, உண்மையிலேயே ஆனந்தம் அளிக்கும் விஷயமாக கண்களுக்கும், கருத்திற்கும் நல்ல விருந்தாக அமைந்திருந்தது.
அருமையான பொறிபறந்த ஜதிகள், அடவு கோர்வைகள், பாதவேலைகள் பரவச மூட்டின. சஞ்சாரியாக குசேலருக்கு கண்ணன் கருணை புரிந்த வரலாற்று நிகழ்ச்சியில், குசேலருடைய பாதங்களை பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ணன் கழுவி, நீரை பயபக்தியுடன் தன் தலையில் தெளித்துக் கொண்டு, அவரை உபசரிக்கும் காட்சியின் வடிவமைப்பு, பண்டைய நாட்களின் பண்பை அறிவுறுத்தியது. இது மட்டுமின்றி, காளிங்க நர்த்தனம் அடவுகளில் ராதா - கிருஷ்ண முத்திரைகள் அருமை.
நிகழ்ச்சியில் ஊத்துக்காடு வேங்கடகவியின் பதம் (நாட்டை - ஆதி) அம்புஜம் கிருஷ்ணாவின் ( சுத்தசாவேரி - ஆதி) எல்லாமே மிக உயர்வாக கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்தன. வயலின் மேதை லால்குடி மோகன கல்யாணி ராகம் - ஆதி தாள வர்ணத்துடன் நிகழ்ச்சி உயர்வான நிருத்த, நிருத்ய - பாத வேலைகளுடன் அமர்க்களமாக இருந்தது. நாட்டிய வழங்குமுறை, மிக அழகாக, எழில் ததும்ப மன நிறைவை அளித்தது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடினர் .
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நந்தினி ரமணி, நாட்டியக் கலையில் தலை சிறந்தவர். நடனமணி. அவருடைய சிறந்த பாராட்டும், ஆசிகளும் குரு அனிதாவிற்கும், சிஷ்யைகளுக்கும் மனமார கிடைத்தது. சசிதரன் பாட்டும் சிறப்பாக இருந்தது. ராம்சங்கர் பாபு ( மிருதங்கம்) முருகானந்தம் (வயலின்) ரமேஷ் (குழலிசை) இவற்றுடன் நிகழ்ச்சி தொகுப்பாளினி ரேவதி சங்கரனுடைய இலக்கிய நடை தொகுப்பு நன்றாக இருந்தது.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.