ஹெர்குலிஸ்! (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2012
00:00

இதுவரை: தன்னுடைய ஐந்தாவது சாகசத்தை செய்யச் சென்றான் ஹெர்குலிஸ். இனி-

இரண்டு நாய்களும் தயங்கியபடியே பன்றியை நோக்கி மெல்ல நடந்தன.
கோபத்துடன் பாய்ந்த பன்றி ஒரு நாயின் முதுகில் கடித்து அப்படியே இழுத்தது. அதைக் கீழே தள்ளி மிதித்துக் கொன்றது.
இன்னொரு நாயைத் தன் பற்களால் குத்திக் கிழித்தது. அதைத் தூக்கி ஓடையில் எறிந்தது.
கண் மூடிக் கண் திறப்பதற்குள் இரண்டு நாய்களையும் கொன்றது பன்றி.
அடுத்ததாக, ஹெர்குலிஸை எப்படித் தாக்கலாம், என்று அவனை முறைத்துப் பார்த்தது.
அவனோ கையில் கதையைப் பிடித்தபடி பன்றியை நோக்கி வந்தான்.
பன்றி என்ன நினைத்ததோ தெரிய வில்லை. அவனைத் தாக்காமல் திரும்பிய அது, மலை மேல் ஏறத் தொடங்கியது.
அவனும் அதைத் தொடர்ந்து அந்த மலையில் ஏறினான்.
மேலே செல்லச் செல்ல பனி அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பன்றியின் காலடி ஓசையை கேட்டுத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தான்.
நீண்ட நேரம் ஓடியதால் பன்றி களைத்து விட்டது. இப்போது அதனிடம் பழைய வேகம் இல்லை. நடக்கத் தொடங்கியது.
இதைப் பார்த்த ஹெர்குலிஸ் தன் வில்லில் அம்பு பூட்டி அதற்குக் குறி வைத்தான். ஒன்றன் பின் ஒன்றாகப் பல அம்புகளை விட்டான். எந்த அம்பும் அதன் தோலைத் துளைக்கவில்லை.
தன் கையிலிருந்த கதையை அதன் மேல் வேகமாக வீசினான். அதற்கும் அது கவலைப்படவில்லை.
களைப்பு அடைந்த அது அருகிலிருந்த புதருக்குள் நுழைந்தது. ஓய்வு எடுக்க முயற்சி செய்தது. ஆனால், அவனோ அதை ஓய்வு எடுக்க விடாமல், விரட்டிக் கொண்டே இருந்தான்.
எரிச்சல் அடைந்த அது, கோபத்துடன் அவனைத் தாக்க ஓடி வந்தது. உடனே அவன் பின் வாங்கினான்.
பன்றி ஓடினால் அதைத் துரத்தினான். தன்னைத் தாக்க வந்தால் பின்னால் ஓடினான். இப்படியே அதற்குப் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்தான்.
வழியிலிருந்த பெரிய சுனை ஒன்றில் குதித்து, அக்கரை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
இதற்காகவே காத்திருந்த அவன் அதன் மீது வேகமாகப் பாய்ந்தான். தன் கையிலிருந்த வலையை அதன் மேல் வீசினான். பன்றியை அதற்குள் தள்ளினான். பிறகு வலையின் வாயை இறுகக் கட்டினான்.
வலைக்குள் சிக்குண்ட பன்றி விடுபடுவதற்காகப் போராடியது. அதனால் முடியவில்லை.
பன்றியுடன் வலையைத் தூக்கி, தன் தோள் மேல் வைத்துக் கொண்டு புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
பன்றியைச் சுமந்து வந்த ஹெர்குலிஸை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.
""மாவீரன் ஹெர்குலிஸ் வாழ்க!'' என்று முழக்கம் செய்தனர்.
தான் சுமந்து வந்த பன்றியை அரசன் யுரிஸ்தியசு முன்னர் போட்டான் ஹெர்குலிஸ்.
வலைக்குள் அந்தப் பன்றி கன்னங்கரேலென்று பிசாசு போலக் காட்சி அளித்தது.
வலைக்குள் இருந்து விடுபடத் தன் உடலை நெளித்துக் கொண்டு திமிறியது. அதன் பயங்கரமான கத்தல், அச்சத்தைத் தருவதாக இருந்தது. அதன் கூர்மையான பற்கள் வளைக்கு வெளியே தெரிந்தன.
வலையை அறுத்துக் கொண்டு அது வெளியே வந்து விடுமோ? அதை யாராலும் அடக்க முடியாதே... என்ன செய்வது? என்று நடுங்கினான் யுரிஸ்தியசு. வீரர்கள் சூழ்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான்.
அவன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்கிறான் என்பது ஹெர்குலிசுக்குப் புரிந்தது.
இடி போன்ற குரலில் சிரித்த ஹெர்குலிஸ், ""கோழையே! வலைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் பன்றிக்கே இப்படி அஞ்சுகிறாயே. நான் செய்ய வேண்டிய அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்,'' என்றான்.
"இப்படி இவன் என்னையே கேலி செய்கிறானே. என்ன சோதனை வைத்தாலும் எப்படியாவது அதில் வெற்றி பெற்று விடுகிறானே. இதனால் இவன் மேலும் புகழ் பெறுகிறானே. இவனை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும். ஏதேனும் இழிவான வேலை வைக்க வேண்டும். அதைச் செய்ய இயலாமல் இவன் கூனிக் குறுகித் தலை குனிய வேண்டும். அது யாராலும் செய்ய இயலாத தாகவும் இருக்க வேண்டும். இவன் செருக்கை அடக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது' என்று சிந்தித்தான்.
இழிவான வேலை ஒன்று அவன் உள்ளத்தில் தோன்றியது.
""ஹெர்குலிசே! நான் உனக்கு வைக்கும் ஐந்தாவது சோதனை இதுதான். நீ ஏஜியசு மன்னனின் மாட்டுத் தொழுவங்களைக் கழுவித் தூய்மை செய்ய வேண்டும். அந்த வேலையை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும்,'' என்றான்.
""அப்படியே செய்து முடிக்கிறேன்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
ஏஜியசு மன்னன் ஆண்டு வந்த ஈலிசு நகரத்தை அடைந்தான் ஹெர்குலிஸ். அரசன் ஏஜியசுவிடம் முப்பதாயிரம் மாடுகள் இருந்தன. தன் மாடுகளுக்கு நோய் எதுவும் வரக் கூடாது என்று தெய்வத்திடம் வரம் வாங்கி இருந்தான் அவன்.
அந்த மாடுகளுக்குத் தலை நகரத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தொழுவங்களைக் கட்டியிருந்தான் அவன். அந்த தொழுவங்கள் பெரிய நகரம் போல இருந்தன.
அந்த மாடுகள் அனைத்தும் நன்கு கொழுத்து இருந்தன. ஏராளமான செல்வத்தை அவனுக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தன.
கஞ்சனான அவன் அங்கே போதுமான வேலையாட்களை வைக்கவில்லை. அதனால் பல ஆண்டுகளாக தொழுவங்களிலிருந்து மாடுகளின் சாணம் எடுக்கப்படவில்லை. வைக்கோலும்; குப்பைக் கூளங்களும் ஆங்காங்கே மலை போலக் கிடந்தன.
அந்தத் தொழுவங்களின் அருகே யாரும் செல்ல முடியாது. அவற்றில் இருந்து கெட்ட நாற்றம் வீசியது.
தொழுவங்களுக்குச் சிறிது தொலைவில் மலை ஒன்று இருந்தது. அதன் உச்சியில் ஏறிய ஹெர்குலிஸ் அந்தத் தொழுவங்களைப் பார்த்தான்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு தொழுவங்களாகவே இருந்தன.
அவற்றிற்குச் சிறிது தொலைவில் பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
"தேவாதி தேவன் ஜீயசு தன் வீரர்கள் அனைவருடன் முயற்சி செய்வதாக வைத்துக் கொள்வோம். அவராலும் ஒரே நாளில் இந்தத் தொழுவங்களைத் தூய்மைப்படுத்த முடியாது. யாராலும் செய்ய இயலாத செயல் இது. நான் இதை அப்படியே செய்து முடித்தாலும், உலகம் என்னை இகழ்ந்து பேசும். என்னை அவமானப்படுத்தவே இப்படிப்பட்ட சோதனை வைத்துள்ளான். இப்போது என்ன செய்து?' என்று சிந்தித்தான் ஹெர்குலிஸ்.
அங்கிருந்து சிறிது தொலைவில் பேரோசையுடன் ஓடிக் கொண்டிருந்தது மினியசு ஆறு. அதைப் பார்த்தான் அவன்.தொழுவங்களைச் சூழ்ந்து மேய்ச்சல் நிலங்களும், மலையும் இருப்பதைக் கவனித்தான்.
தொழுவங்களைத் தூய்மை செய்ய நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
அரசவைக்குச் சென்ற அவன் அரியணையில் வீற்றிருந்த ஏஜியசுவை வணங்கினான்.
""அரசே! தேவாதி தேவன் ஜீயசின் கட்டளையை ஏற்று இங்கு வந்துள்ளேன். என் பெயர் ஹெர்குலிஸ். உங்கள் தொழுவங்களைத் தூய்மை செய்ய வேண்டும். ஒரே நாளில் அதைச் செய்து முடிக்க வேண்டும். இதுவே, எனக்கு இடப்பட்ட கட்டளை!'' என்றான்.
அவனை வியப்புடன் பார்த்த ஏஜியசு, ""உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கான பேர்கள் பல நாட்கள் முயற்சி செய்தாலும் இயலாத செயல் ஆயிற்றே. தனியாளாகிய உங்களால் ஒரே நாளில் இதைச் செய்து முடிக்க முடியுமா?'' என்று கேட்டான்.
""அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் இதைச் செய்து முடிக்க முடியும்!''
""என்ன உதவி வேண்டும்? தயங்காமல் கேளுங்கள்,'' என்றான் அரசன்.
- தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.