தோழா... தோழா....!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2012
00:00

முன்னொரு காலத்தில் ஏரிக்கரையை அடுத்து ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் கிளையில் காக்கை ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் அடிப்பகுதியில் இருந்த வளையில் எலி ஒன்று தங்கி இருந்தது. அந்த ஏரியில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது.
அவை மூன்றும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஓய்வு கிடைத்த போது அவை அந்த ஏரிக்கரையில், மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன.
வழக்கம் போல அன்றும் அவை பேசிக் கொண்டிருந்தன. அப்போது மான் ஒன்று நடுங்கியபடி அங்கே ஓடி வந்தது. நாலா பக்கமும் அச்சத்துடன் பார்த்தது. ஏரியில் தண்ணீரைக் குடிக்கலாமா? வேண்டாமா? என்று தயக்கத்துடன் நின்றது.
அதைப் பார்த்த காக்கை, ""மானே! எந்தத் தயக்கமும் இன்றித் தண்ணீரைக் குடி. இங்கே உனக்கு எந்த ஆபத்தும் வராது,'' என்று அன்புடன் சொன்னது.
தலையை உயர்த்தி எங்கிருந்து குரல் வருகிறது என்று பார்த்தது மான்.
""நாங்கள் மூவரும் நண்பர்கள். நீ முதலில் தண்ணீரைக் குடி. பிறகு நாம் பேசலாம்,'' என்றது எலி.
அச்சம் நீங்கிய அது, தண்ணீரைக் குடித்தது. பிறகு அவற்றைப் பார்த்தது.
""மானே! உனக்கு என்ன துன்பம் வந்தது? ஏன் நடுங்கியபடியே ஓடி வந்தாய்?'' என்று கேட்டது ஆமை.
""காட்டிற்கு வேட்டையாட வந்த வேடர்கள் என்னைத் துரத்தினர். அவர்களிடம் தப்பித்து இங்கே ஓடி வந்தேன். இங்கேயும் வந்து விடுவார்களோ என்று அஞ்சினேன்!'' என்றது மான்.
""இதுவரை வேடர்கள் யாரும் இங்கே வந்தது இல்லை. நீ கவலை இல்லாமல் இங்கேயே இருக்கலாம்!'' என்றது காக்கை.
""உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,'' என்றது எலி.
அவற்றை நன்றியுடன் பார்த்த மான், ""நான் உங்களுடன் இங்கேயே தங்கி விடுகிறேன். நல்ல நண்பனாக நடந்து கொள்வேன்,'' என்றது.
""இன்று முதல் நாம் நால்வரும் நண்பர்கள்,'' என்றது ஆமை. அதன் பிறகு அவை நான்கும் அங்கே மகிழ்ச்சியாக இருந்தன.
நடிள்தோறும் அந்த மான் சிறிது தொலைவில் இருந்த வயலுக்குச் சென்றது. அங்கே வயிறார மேய்ந்து விட்டுத் திரும்பியது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தது.
வழக்கம் போல வரும் மான் அன்று வரவில்லை. இதனால் அவை மூன்றும் கவலை கொண்டன.
""நம் நண்பனுக்கு ஏதோ ஆபத்து. நான் சென்று பார்த்து வருகிறேன்,'' என்று அங்கிருந்து பறந்தது காக்கை.
சிறிது நேரத்தில் திரும்பிய அது, ""நண்பர்களே! மான் வலையில் சிக்கி உள்ளது. வேடன் அங்கே வருவதற்குள் அதைக் காப்பாற்ற வேண்டும்.
""எலியே! நான் உன்னைத் தூக்கிச் சென்று அங்கே விடுகிறேன். உன் கூர்மையான பற்களால் வலையை அறுத்து அதை விடுவி,'' என்றது.
உடனே காக்கையின் முதுகில் அமர்ந்தது எலி. அங்கிருந்து பறந்த காக்கை மானின் அருகே எலியை இறக்கி விட்டது. வேகமாக வலையை அறுக்கத் தொடங்கியது எலி. ஏரிக்கரையில் இருந்த ஆமைக்கு இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்புடன் அது மான் இருந்த இடத்திற்கு வந்தது.
அப்போதுதான் வலையில் இருந்து விடுபட்ட மான். ஆமை அங்கே வருவதைப் பார்த்துத் திகைத்தது.
""நண்பா! நீ ஏன் இங்கே வந்தாய்? எங்களைப் போல உன்னால் வேகமாக ஓடித் தப்ப முடியாதே,'' என்று கேட்டது.
""உனக்கு ஆபத்து என்றதும் என்னால் எப்படி அங்கே இருக்க முடியும்? நீ உயிர் பிழைத்து விட்டாய். அது போதும்! எனக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை,'' என்றது ஆமை.
அப்போது மரத்தில் இருந்த காக்கை, ""வேடன் வருகிறான். ஓடித் தப்பித்துக் கொள்ளுங்கள்,'' என்று குரல் கொடுத்தது.
மான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. எலியும் அருகில் இருந்த புதருக்குள் ஒளிந்து கொண்டது.
அங்கே வந்த வேடன். மான் ஓடுவதையும், வலை அறுந்து கிடப்பதையும், பார்த்துத் திடுக்கிட்டான்.
ஆமை ஒன்று மெல்லச் செல்வது அவனுக்குத் தெரிந்தது. "ஆமையாவது கிடைத்ததே!' என்று அதைப் பிடித்தான். தன் கைத் தடியில் வைத்துக் கட்டினான். கைத் தடியைத் தோளில் வைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவை மூன்றும் ஆமைக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பார்த்தன. பதறிபடியே ஒன்றாகச் சேர்ந்தன.
""நம் உயிரைக் கொடுத்தேனும் நண்பனைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கண் கலங்கச் சொன்னது மான்.
என்ன செய்வது என்று சிந்தித்தது காக்கை.
""நண்பர்களே! அந்த வேடன் நம் ஏரிக்கரை வழியாகத்தான் செல்வான். அதற்குள் மான் அங்கே ஓடி இறந்தது போலக் கிடக்க வேண்டும். நான் அதைக் கொத்தித் தின்பதைப் போல நடிக்கிறேன். இதைப் பார்த்ததும், அவன் ஆமையை ஏரிக்கரையில் வைப்பான். மானின் அருகே வருவான். இந்த வாய்ப்பை எலி பயன்படுத்தி ஆமையின் கட்டுகளை அறுத்து விட வேண்டும். ஆமை ஏரிக்குள் மூழ்கித் தப்பிக்க வேண்டும். இதைப் பார்த்ததும் நான் குரல் கொடுப்பேன். மானும் ஓடித் தப்பிக்க வேண்டும்,'' என்று தன் திட்டத்தை சொன்னது.
அதன்படியே, ஏரிக்கரைக்குச் சிறிது தொலைவில் செத்தது போலக் கிடந்தது மான். அதைக் காக்கை கொத்திக் கொண்டிருந்தது.
களைப்புடன் அங்கே வந்தான் வேடன். மான் இறந்து கிடப்பதையும், அதைக் காக்கை கொத்துவதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
ஆமையை ஏரிக்கரையில் வைத்து விட்டு, மானின் அருகே வந்தான்.
விரைந்து செயல்பட்ட எலி ஆமையின் கட்டுகளை ஒருநொடிக்குள் அறுத்தது. ஆமையும் ஏரிக்குள் மூழ்கி மறைந்தது.
ஆமை தப்பித்ததைப் பார்த்த காக்கை குரல் கொடுத்தபடியே பறந்தது. இறந்தது போல் நடித்த மானும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
எதிர்பாராதது நடந்ததைக் கண்ட வேடன் திகைத்தான். ஏரிக்கரைக்குத் திரும்பினான். அங்கே ஆமை இல்லாததைப் பார்த்து, ஏமாற்றம் அடைந்தான்.
தன் தலைவிதியை நொந்தபடியே அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அவை நான்கும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.