நவ., 27 - திருக்கார்த்திகை
தன்னை பக்திப் பெருக்குடன் அணுகுவோர் மட்டுமே, நெருங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் அண்ணாமலையார். "அண்ணா' என்றால், "நெருங்க முடியாதவர்...' என்று பொருள். சிவன், இங்கு நெருப்பின் வடிவமாகத் திகழ்வதால், அவரை நெருங்க முடியாது என்பர். ஆனால், அண்ணாமலையார் மீது பக்தி செலுத்துவோர், மிக எளிதாக அவரை அணுகி விடலாம். கார்த்திகை தீபத்திருவிழா அன்று, அவர் தன்னை சிறிய ஜோதியாய் சுருக்கி, எல்லார் கண்களுக்கும் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கிறார்.
இதற்காகத்தான், மும்மூர்த்திகளும் இணைந்து நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றை, அண்ணாமலையின் தலவரலாறாக ஆக்கியுள்ளனர்.
விஷ்ணு, பிரம்மாவுக்குள் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை எழுந்தது. சிவனிடம் அவர்கள் இதுபற்றி கேட்டனர். தன் திருவடியை விஷ்ணுவும், சிரசை, பிரம்மாவும் பார்த்து வர வேண்டும். யார் பார்த்து வருகின்றனரோ, அவரே பெரியவர் என, சிவன் போட்டி வைத்தார்.
பிரம்மா அன்னப்பறவை வடிவெடுத்து, சிரசைக் காண பறந்து சென்றார். அப்போது சிவன் நெருப்பு வடிவாக, மேலும் கீழுமாய் நின்றார். விஷ்ணு, வராக வடிவெடுத்து, பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச் சென்றார்.
அவரது திருவடியைக் காண முடியாத விஷ்ணு திரும்பி விட்டார். பிரம்மாவுக்கும் இதே நிலை. ஆனாலும், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சிவனின் சிரசைப் பார்த்து வந்ததாகத் தவறான தகவலைச் சொல்லி விட்டார். இதனால், சிவனின் சாபத்தை பெற்று, தனக்குரிய வழிபாட்டை இழந்தார்.
சிவன் நெருப்பாக நின்றதால், விஷ்ணு, பிரம்மாவாலேயே அவரை காண முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தன் பக்தர்களுக்காக அவர் தன்னைத்தானே சுருக்கி, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதுதான் மானிடப்பிறப்பின் மகிமை. மனிதராய் பிறந்தவர்களுக்கு மட்டுமே, தேவர்களுக்கு கூட கிடைக்காத பாக்கியம் கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இறைவனின் திருவடியை அடைந்து, பிறப்பற்ற நிலையை அடையும் பாக்கியத்தை நாமெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பக்தி என்றால், ஏதோ கையை சிரசுக்கு மேல் உயர்த்தி, "சிவாயநம' என்று சொல்லி விட்டால் போதாது. வாழும் காலத்தில், பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை பொருளாகவோ அல்லது உடல் உழைப்பாகவோ செய்ய வேண்டும். நல்ல குணங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். தீமை செய்வோர் திருந்த வேண்டுமென, இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
திருக்கார்த்திகையன்று, வீடுகளில் தீபம் ஏற்றும் முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ சாத்தியிருப்பது அவசியம். நீண்டநேரம் எரியும் வகையில், அதிக எண்ணெய் அல்லது நெய் விட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றிய பிறகே, வாசலில் தீபங்களை வைக்க வேண்டும். அப்போது, அருட்பெருஞ்ஜோதியான இறைவன், நம் வீட்டு விளக்கிலும் சுடராக வந்தமர்வார். திருவண்ணாமலையில், மலைதீபம் ஏற்றும் நேரத்தில், நம் வீட்டிலும் விளக்கேற்ற வேண்டும். அப்போது, அண்ணா மலையையும், அண்ணாமலையாரையும், அபிதகுஜாம்பிகையையும் மனதில் சிந்திக்க வேண்டும். திருவிளக்கு குறித்த பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். கார்த்திகை பொரி உருண்டையை பிரசாதமாகப் படைப்பது நல்லது. பிடி கொழுக்கட்டை, பால், பழம், வெற்றிலை பாக்கு, கல்கண்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
திருக்கார்த்திகையன்று வீட்டிலும், தெருவிலும் விளக்கேற்றினால் போதாது. உள்ளத்தில், "நற்சிந்தனைகள்' என்னும் விளக்கேற்ற வேண்டும். அவை, சிந்தும் ஒளியால் நாமும் நாடும், நலம் பெற வேண்டும்.
***
தி. செல்லப்பா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.