ஹெர்குலிஸ்! (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2012
00:00

இதுவரை: நீண்ட நாள் கெட்ட நாற்றம் எடுத்த தொழுவங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் ஹெர்குலிஸ். இனி-

""அரசே! நான் தொழுவங்களைக் கழுவித் தூய்மை செய்யும் போது பூமி அதிரும். அதனால் உங்கள் மாடுகள் அஞ்சி நடுங்கும். இங்கும், அங்கும் ஓடும்; அவற்றிற்குத் துன்பம் ஏற்படும். உங்கள் மாடுகள் பாதுகாப்பாக இருக்க அவை அனைத்தையும் மலை உச்சிக்கு ஓட்டி செல்ல வேண்டும்,'' என்றான் ஹெர்குலிஸ்.
""அப்படியே செய்கிறேன்,'' என்றான் ஏஜியசு.
""அரசே! எனக்கு ஒரு கோடாரியும், மண் வெட்டியும் வேண்டும்,'' என்றான் ஹெர்குலிஸ்.
""அப்படியே ஆகட்டும்!'' என்றார் அரசர்.
உறுதியான கோடாரியையும், மண் வெட்டியையும் பெற்றுக் கொண்டு வெளியே வந்தான்.
தொழுவத்திற்கு அருகில் இருந்த மலையில் ஏறினான். அங்கிருந்த பெரிய மரம் ஒன்றை வெட்டி வீழ்த்தினான். அதன் கிளைகளையும், அடி மரத்தையும் நீண்ட, நீண்ட உருட்டுக் கட்டைகளாக வெட்டினான்.
அதன் பிறகு ஆற்றங்கரைக்கு வந்தான். மண் வெட்டியால் பெரிய வாய்க்கால் ஒன்றை வெட்டினான். அந்த வாய்க்காலி லிருந்து சிறு சிறு வாய்க்கால்கள் அமைத்தான். அவற்றில் ஓடி வரும் தண்ணீர் தொழுவங்களில் பாயுமாறு செய்தான்.
நீண்ட பெரிய வாய்க்காலை ஆற்றுடன் இணைத்தான்.
பிறகு அவன் அந்த ஆற்றைப் பணிவாக வணங்கினான்.
""உலகுக்கு எல்லாம் வளம் தரும் மினியசு தாயே, உன் அடியவனான என்னை மன்னித்து விடு. ""தாயே! நானாக உங்களுக்கு எந்தக் கெடுதியும் செய்ய மாட்டேன். இது உங்களுக்குத் தெரியும். என்ன செய்வேன். விருப்பம் இல்லாமலே இந்தச் செயலைச் செய்கிறேன். தேவ கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டி உள்ளது. ""தாயே! ஆற்றின் குறுக்கே மரக் கட்டைகளால் அணை கட்டப் போகிறேன். தேங்கும் தண்ணீர் வாய்க்கால் வழியே வெள்ளம் போலப் பாய வேண்டும். அந்த வெள்ளம் தொழுவங்களைக் கழுவிக் தூய்மை செய்ய வேண்டும். என் வேலை இனிதே நடைபெற உங்கள் அருள் வேண்டும்,'' என்று வேண்டினான்.
அதன் பிறகு அவன் விரைவாகச் செயல்பட்டான். மரக்கட்டைகளை ஆற்றின் குறுக்கே நட்டு, அணை அமைத்தான். ஆற்றில் வந்த தண்ணீர் அந்த அணையைக் கடக்க முடியாமல் தேங்கியது.
சிறிது சிறிதாகத் தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது. அணை அருகே கடல் போலத் தண்ணீர் காட்சி அளித்தது.
நிறைய தண்ணீர் தேங்கியதை அறிந்த ஹெர்குலிஸ், பெரிய வாய்க்காலைத் திறந்து விட்டான். அதன் வழியாக வேகமாக ஓடி வந்த ஆற்று வெள்ளம் பல வாய்க்கால் களுக்குள் நுழைந்தது.
வாய்க்கால் தண்ணீர், தொழுவங்களில் வந்து சேர்ந்தது. ஆற்று வெள்ளம் தொழுவங் களுக்குள் வேகமாகப் பாய்ந்தது.
அங்கிருந்து மலை அடிவாரம் வரை வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. அருகிலிருந்த மரங்கள் எல்லாம் வெள்ள நீரில் மூழ்கி விட்டன.
தன் எண்ணப்படி எல்லாம் நடக்கிறது என்பதை அறிந்த ஹெர்குலிஸ் மகிழ்ச்சி அடைந்தான்.
ஆற்று வெள்ளம் காலையிலிருந்து மாலை வரை தொழுவங்களுக்குள் பாய்ந்து கொண்டே இருந்தது. அதனால் தொழுவங்கள் அழுக்கே இல்லாமல் தூய்மை ஆயின. அதே போல மேய்ச்சல் நிலங்களும் தூய்மை ஆயின.
ஆற்றின் குறுக்கே தான் கட்டியிருந்த அணையை அகற்றினான் ஹெர்குலிஸ். ஆறு முன்பு போல் ஓடத் தொடங்கியது.
வெற்றிப் பெருமிதத்துடன் யுரிஸ்தியசு முன்னால் வந்து நின்றான் ஹெர்குலிஸ்.
நடந்ததை எல்லாம் அறிந்தான் யுரிஸ்தியசு.
"இவனுக்கு இழிவான வேலை தந்து அவமானப்படுத்த நினைத்தேன். இவனோ கையில் அழுக்கே படாமல் திரும்பி விட்டான். ஏஜியசுவின் தொழுவங்களையும் தூய்மை செய்துவிட்டான். என்ன சோதனை வைத்தாலும் இவன் செய்து முடிக்கிறான். இதனால் இவன் புகழ் மேலும் பரவுகிறதே' என்று வெறுப்புடன் அவனைப் பார்த்தான்.
""எனக்கு நீ வைத்திருக்கும் ஆறாவது சோதனை என்ன?'' என்று சிரித்தபடியே கேட்டான் ஹெர்குலிஸ்.
"இவன் உயிருடன் திரும்பக் கூடாது. என்ன சோதனை வைப்பது?' என்று சிந்தித்தான் யுரிஸ்தியசு.
""ஹெர்குலிஸ்! ஆர்கேடிய நாட்டில் ஸ்ட்ரெம்பிள்சு என்ற ஆறு ஓடுகிறது. அதைச் சூழ்ந்து பெரிய சதுப்பு நிலம் உள்ளது. அங்கே அசுரப் பறவைகள் கூட்டமாக வாழ்கின்றன. அவை மனிதர் களையும், விலங்குகளையும் கொன்று தின்கின்றன. நீ அவற்றை அங்கிருந்து விரட்ட வேண்டும். இதுவே, நான் உனக்கு வைத்துள்ள ஆறாவது சோதனை!'' என்றான்.
இதைக் கேட்ட ஹெர்குலிஸ் திகைத்தான்.
"ஸ்ட்ரெம்பிள்சு சதுப்பு நில அசுரப் பறவைகளைப் பற்றி அவன் கேள்விப் பட்டிருந்தான். அந்தப் பறவை பயங்கரமான தோற்றம் உடையது. ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாகவே அவை பறந்து செல்லும். அப்பொழுது வானத்தில் பறவைகள் கூட்டம்தான் தெரியும். வானமே தெரியாது.
"அவற்றின் கால் நகங்கள் கூர்மையானவை; இறக்கைகள் பித்தளையால் ஆனவை. அவை, தங்களின் ஒவ்வொரு இறகையும் கூர்மையான அம்பு போலப் பயன்படுத்தும். அந்த இறகு அம்புகள், இரும்புக் கவசத்தையும் துளைத்து விடும்.
"அவை வாழும் சதுப்பு நிலத்தை யாராலும் நடந்து செல்ல முடியாது. சேற்றில் கால்கள் சிக்கிக் கொள்ளும். அங்கே தண்ணீர் ஆழமாக இல்லாததால், படகிலும் செல்ல முடியாது. தனக்குப் பெரிய சோதனை காத்திருக்கிறது!' என்பதை உணர்ந்தான் ஹெர்குலிஸ்.
வீரமும், துணிவும் கொண்டிருந்த அவன், "எப்படியும் அந்த அசுரப் பறவைகளை விரட்டுவோம். நம்மால் முடியாதது உண்டோ!' என்று எண்ணி அங்கிருந்து புறப் பட்டான்.
பல நாட்கள் பயணத்திற்குப் பின் ஆர்கேடிய நாட்டை அடைந்தான் ஹெர்குலிஸ்.
அசுரப் பறவைகள் வாழும் ஸ்ட்ரெம்பிள்சு சதுப்பு நிலப் பகுதிக்குள் நுழைந்தான். அங்கே எங்கு பார்த்தாலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புக் கூடுகள் கிடந்தன. இவ்வளவு எலும்புக் கூடுகளை ஒன்றாகப் பார்த்திராத ஹெர்குலிஸ் திகைத்தான்.
"அந்த அசுரப் பறவைகள் தசையைத் தின்று விட்டு எலும்புகளைப் போட்டு விடுகின்றன. அவையே இங்கு குவியல் குவியலாகக் கிடக்கின்றன. இங்கு வந்த யாரும் இதுவரை தப்பிச் சென்றது இல்லை' என்பதும் அவனுக்குப் புரிந்தது.
அவற்றின் நாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டான்.
இந்த நிலையில் அந்தப் பறவைகளை எப்படி விரட்டுவது என்று குழம்பியபடி நின்றான்.
அவன் நிலையைப் பார்த்த அதினா தேவதை அவனுக்கு உதவி செய்ய நினைத்தாள். அவன் முன் தோன்றினாள். அவள் கையில் பித்தளையினாலான பெரிய தட்டுகள் இரண்டு இருந்தன. அவற்றை ஹெர்குலிஸிடம் தந்தாள்.
""ஆபத்து ஏற்படும் போது இந்தத் தட்டுகளைப் பயன்படுத்து. இவற்றை ஒன்றோடு ஒன்று மோதி பேரோசை எழுப்பு,'' என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
தன் காதுகளில் மெழுகை அடைத்துக் கொண்டான். இரண்டு தட்டுகளையும் ஒன்றோடு ஒன்று மோதினான். இடி இடிப்பது போன்ற பேரோசை எழுந்தது. தொடர்ந்து அந்தத் தட்டுகளை மோதிய வண்ணம் இருந்தான் ஹெர்குலிஸ்.
அந்த ஓசையைத் தாங்க முடியாத அசுரப் பறவைகள் பயங்கரமாக அலறின. கூட்டமாக வானத்தில் வட்டமிடத் தொடங்கின.
கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கில் பறந்த அந்தப் பறவைகளை பார்த்தான் ஹெர்குலிஸ்.
"பயங்கரமான அந்தப் பறவைகள் அனைத்தையும் கொல்ல முடியாது. சிலவற்றைக் கொன்றால் போதும்... மற்ற பறவைகள் அஞ்சி ஓடி விடும்' என்று நினைத்தான்.
ஹைட்ரா பாம்பின் நஞ்சு தோய்க்கப் பட்ட அம்புகளை எடுத்து, தன் வில்லில் பூட்டினான். பறவைகளைக் குறி பார்த்து அம்புகளை எய்து கொண்டே வந்தான்.
- தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.