குண்டாசுரன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2012
00:00

சொர்ணபுரியை ஆண்ட மன்னன் வர்மனின் தர்பாரில் நான்கு பண்டிதர்கள் இருந்தனர். அந்த பண்டிதர்களும், மன்னனிடம் ஏதாவது காரணம் காட்டி, பணம் பறித்துக் கொண்டே இருப்பர்.
ஒருமுறை அவர்கள் மன்னனிடம், ""அரசே! நேற்று உங்கள் ஜாதகத்தைப் பார்த்தோம். இப்போது துஷ்ட கிரகங்கள் உங்களை ஆட்டிப் படைக்க விரும்புவதாகத் தெரிந்து கொண்டோம். அவை முதலில் உங்கள் இரு கைகளையும் செயலற்றுப் போகும் படிச் செய்யும்,'' என்றனர்.
அதை கேட்ட மன்னன் பயந்து போய், ""இதற்குப் பரிகாரம் ஏதாவது செய்து, விலக்க முடியுமா?'' என்று கேட்டான்.
அவர்களும், ""ஏன் இல்லை? இதற்குப் பரிகாரமாக நீங்கள் ஒரு தங்கக் கோடாரி செய்து, அதனை வெள்ளிக்கிழமையன்று பூஜித்து ஊர்வலமாய் மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஒரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும். பிறகு அக்கோடாரியை மெத்தப் படித்த பண்டிதர்களாகிய எங்களுக்கு தானம் செய்து விட்டால், துஷ்ட கிரகங்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது,'' என்றனர்.
மன்னனும் அவ்வாறே, எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். ஒரு வெள்ளிக் கிழமையன்று அவன் ஒரு தங்கக் கோடாரியை வைத்து பண்டிதர்கள் மந்திரங்களை ஓத, பூஜை செய்தான். பிறகு மேளதாளத்துடன் ஊர்வலமாக அதனை எடுத்துக் கொண்டு நகருக்கு வெளியே ஏரிக்கரை மீது உள்ள ஒரு ஆலமரத்திற்குச் சென்றான்.
மன்னனுக்கு மரம் ஏறி பழக்கம் இல்லை. அதனால் மெதுவாக மரத்தின் மீது பலரது உதவியால் ஏறி, தன் கையிலிருந்த கோடாரியால் ஒரு வளைந்த கிளையை வெட்ட ஓங்கினான். ஆனால், கோடாரி அவனது பிடியிலிருந்து விடுபட்டு ஏரிக்குள் போய் விழுந்தது.
ஏரியில் கோடாரி விழுந்த இடத்தில் ஏராளமாய் தாமரை முளைத்திருந்தது. தங்கக் கோடாரியை எடுத்து வர ஒரு சில வீரர்கள் ஏரிக்குள் குதிக்கத் தயாராயினர். அப்போது தாமரை இலைகளிடையிலிருந்து ஒரு கரிய உருவம் நீர்மட்டத்திற்கு மேல் வந்து, தன் கையிலிருந்த இரும்புக் கோடாரியைக் கரை மீது விட்டெறிந்தது. அப்போது அவ்வுருவத்தைக் கண்டு எல்லாரும் நடுங்கினர்.
சேனாதிபதி மட்டும் கொஞ்சம் துணிவு கொண்டு, ""யார் நீ?'' என்று கேட்டான்.
அந்த உருவமும், ""நானா? நான் வந்து... குண்ட...'' எனக் கூறியவாறே சட்டென நீரினுள் சென்று விட்டது.
மன்னன் பண்டிதர்களிடம், ""இன்னும் மூன்று நாட்களுள் இந்த குண்டன் யாரெனக் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும். இவனைச் சும்மா விட்டு விட்டால் தங்கக் கோடாரியை இரும்புக் கோடாரியாக மாற்றியது போல நம் பொக்கிஷத்திலுள்ள தங்கத்தை எல்லாம் இரும்பாக்கி விடுவான்,'' என்றான்.
பண்டிதர்களும் கூடிப் பேசி இரண்டு நாட்களானதும் மன்னனைக் கண்டு, ""அரசே! அந்தக் கரிய உருவம் குண்டாசுரன். அவன் திரேதாயுகத்திலிருந்து வாழ்ந்து வருபவன். அவன் மாய மந்திரங்கள் கற்றவன் என்று புராணங்கள் கூறுகின்றன. மிகவும் பயங்கரச் செயல்களைக் கூசாமல் செய்பவன்,'' என்றனர்.
""அப்படியா! அந்த குண்டாசுரனை கொன்று, அவனது உடலை கொண்டு வருபவனுக்கு என் நாட்டில் பாதியைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
மன்னன் இவ்வாறு கூறிய மறுநாள் அரண்மனைத் தலைமைச் சமையற்காரன் அனந்தராமன், மன்னன் உணவு உண்டு விட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அவன் முன் போய் நின்று, ""அரசே! நீங்கள் மன்னிப்பதாக இருந்தால் நான் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்,'' என்றான்.
மன்னனும், ""சரி... விஷயத்தைச் சொல்,'' என்றார்.
""நீங்கள் ஏரியில் பார்த்த கரிய உருவம் பண்டிதர்கள் கூறியது போல குண்டாசுரனும் இல்லை அண்டாசுரனும் இல்லை. அவன் நம் சமையலறையில் வேலை செய்யும் குண்டப்பன். நான்தான் அவனை வெள்ளிக்கிழமையன்று மரங்களிலுள்ள உலர்ந்த மரக்கிளைகளை வெட்டி விறகு கொண்டு வரும்படி ஏரிக்கரைக்கு அனுப்பினேன்.
அவன் எப்போதும் கருப்பு வேட்டி, கருப்புச் சட்டை, கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டிருப்பவன். அவன் மரக்கிளைகளை வெட்டப் போனபோது, நீங்கள் மேளதாளத்துடன் கோடாரியோடு வருவதைக் கண்டு பயந்து ஏரிக்குள் குதித்து மறைந்து கொண்டான். உங்கள் கோடாரி தவறிப் போய் ஏரிக்குள் விழவே, வீரர்கள் தன்னைத் தான் தாக்குகிறார்களோ என நினைத்துத் தன் முண்டாசுத் துணியால் முகத்தையும் மூடிக் கொண்டு நீர் மட்டத்திற்குமேல் வந்து தன் இரும்புக் கோடாரியை விட்டெறிந்தான். அதற்குப் பின் அவனுக்குத் தங்களது கோடாரி விழுந்தது தெரிந்தது. அவன் ஏரிக்குள் மூழ்கித் தேடி அதை எடுத்து வந்து விட்டான்,'' என்று கூறி குண்டப்பனைக் கூப்பிட்டான்.
குண்டப்பனும் தங்கக் கோடாரியுடன் வந்து மன்னன் முன் நின்று, ""அரசே! நான் தான் அந்தக் கரிய உருவம். பயத்தில் சரியாகப் பேசமுடியாமல் என் பெயரைக் கூட குண்ட என்று பாதியோடு நிறுத்தினேன்,'' என்று கூறித் தங்கக் கோடாரியை அவனிடம் கொடுத்தான்.
சமையற்கார அனந்தராமனும், ""நம் சமஸ்தானப் பண்டிதர்கள் எப்படியாவது இந்தத் தங்கக் கோடாரியைப் பெறத் திட்டம் போட்டனர். அது பலிக்கவில்லை. கரிய உருவம் பற்றிக் கேட்டால் ஏதோ புராணங்களையே அலசிப் பார்த்ததாகக் கூறி குண்டாசுரன் என்ற பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்ற பார்த்தனர்,'' என்றான்.
மன்னனுக்கும் அந்த நான்கு பண்டிதர்களும் ஏதோ சாஸ்திரம் பரிகாரம் என்றெல்லாம் சொல்லிப் பணம் பறிக்கின்றனர் என்பது தெரிந்துவிட்டது. உடனே, நான்கு பண்டிதர்களையும் வரவழைத்து, ""இவன்தான் நீங்கள் சொன்ன குண்டாசுரன். நீங்கள் ஆசைப்பட்ட தங்கக் கோடாரி இதோ! என்னை ஏமாற்றிய உங்களுக்கு பத்து வருடம் சிறைவாசம்,'' எனக் கூறி அவர்களை சிறையில் அடைத்தான்.
குண்டப்பனை மன்னன் பாராட்டி தன் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையை எடுத்துப் பரிசாக அளித்தான். அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.