அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு,
எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான் தான்.
அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறுமைசாலி; அவ்வப்போது மது அருந்துவார்.
அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவார். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்காது.
என் அக்காக்களை விட, நான் நன்றாக இருப்பேன் என்பதால், என் அம்மாவிற்கு, என் மேல் மிகுந்த சந்தேகம். நான் அவர்களை அசிங்கப்படுத்தவே பிறந்திருப்பதாக கூறுவார். இது போதாதென்று, எனக்கு வலிப்பு நோயும் உள்ளது.
நான், தற்போது, எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்து, தனியார் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். நல்ல கல்வி, பொருளாதார சுதந்திரம் இருந்தும், வீட்டில், நான் அழாத நாள் இல்லை.
கல்லூரியில் படிக்கும் போது, ஒருவனை காதலித்தேன். நண்பர்களாக ஆரம்பித்த பழக்கம்; என் நண்பர்களின் கேலி, கிண்டலால் காதலாகியது. அவன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால், உடனடியாக பதிவுத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினான். அப்படி செய்தால், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்றான்.
அப்போதிருந்த நிலையில், அவன் சொன்னதையெல்லாம் செய்தேன். அவன் ஆசைக்கு இரையானேன். அது, "கலப்பு திருமணம்' என்பதால், வேலை வாய்ப்பகத்தில், பதிந்து வைத்தால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என்று கூறினர். எனவே, இருவரும், ஐ.சி.எம்., கேட்டகிரி என்று பதிந்துள்ளோம்.
இந்நிலையில், என் மொபைலுக்கு, ஒரு ராங் நம்பரிலிருந்து போன் வந்ததால், என்னை சந்தேகப்பட்டான். நான் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும், அவன் நம்பவில்லை. பதிவுத் திருமணம் செய்த பின், என்னை அடிக்கடி திட்டி, சண்டையிட்டான். எல்லாவற்றையும் பொறுத்து கொண்டேன்.
அவன் எந்த வேலைக்கும் செல்லாமல், என்னிடம், "உனக்கு தேவையான நகை, வீட்டுப்பொருட்கள்' எல்லாவற்றையும் வாங்கி, இப்போதே சேர்த்து வை. உன் சம்பளத்தை வீட்டில் கொடுக்க வேண்டாம். பின்னால் நமக்கு தேவைப்படும்' என்று கூறினான்.
என் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவன் கூறியபடி, நானும் சேமித்தேன். அதையும் அவ்வப்போது, வாங்கி செலவு செய்தான்.
இந்நிலையில், ஒருநாள் என்னை மிகவும் திட்டி, சண்டையிட்டு பேசவில்லை. நான் தொடர்பு கொண்டால், எதுவும் பதில் இல்லை. நானும் பேசாமலிருந்தேன். ஐந்து மாதமாக எந்த தொடர்பும் இல்லை. அப்போதுதான், அவன் சுயரூபம் தெரிந்தது. இப்போது என் பிரச்னை என்னவென்றால், அவன் என்னை, பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். இனி, யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. வாழ்நாள் முழுவதும், தனியாக வாழ்ந்து, என் தம்பி, தங்கையை நன்றாக படிக்க வைத்து, ஏழை பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும்.
தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், வழி இல்லை. இனி எப்படி இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது, "ஐ.சி.எம்., சீனியாரிட்டி' மூலம் அரசாங்க பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். (பி.டி.அசிஸ்டென்ட்ஸ்) வரும் டிசம்பர் 30க்குள், பணி கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஐந்து மாதத்திற்கு பின், திடீரென்று, "கலப்பு திருமண' உதவித் தொகை வந்துள்ளது. நீ வந்தால் தான் தருவர் என்றான். நானும் சென்று வாங்கினேன்; 20 ஆயிரம் தந்தனர். 10 ஆயிரம் பாண்டாகவும், 10 ஆயிரம் செக்காகவும் என் பெயரில் வந்தது. "செக்'கை உடனே மாற்றி, பணத்தை அவனிடமே தந்து விட்டேன். 10 ஆயிரம் "பாண்ட்' ஐந்து வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்றனர். அப்போதும், நான், அவனிடம் வேறு எதுவும் பேசவில்லை. இன்று வரை ஏதாவது பேசினாலும், சண்டை தான்.
இந்த விஷயம் எதுவும் என் வீட்டிற்கு தெரியாது. இப்போது இவனிடம் இருந்து, நான் எப்படி மீள்வது? என் வீட்டிற்கு தெரியாமல், "விவாகரத்து' வேண்டும் என்று கேட்டால் தர முடியாது என்கிறான். இவையெல்லாம், என் வீட்டிற்கு தெரிந்தால், அப்பா தாங்க மாட்டார். அம்மா என்னை கொன்று விடுவார். வீட்டில் இல்லாத நிம்மதி, இவனிடம் கிடைக்கும் என்று நம்பி, இவனை காதலித்தேன். ஆனால், இவனோ, என்னை பயன்படுத்தி விட்டு, இப்போது மேலும், கொடுமைப்படுத்துகிறான்.
* எனக்கு என் வீட்டிற்கு தெரியாமல் இவனிடம் இருந்து, "விவாகரத்து' வாங்க என்ன வழி?
* "ஐ.சி.எம்., சீனியாரிட்டி' மூலம் கிடைக்கவிருக்கும் வேலைக்கு, விவாகரத்தால், ஏதாவது பாதிப்பு வருமா?
* உதவித்தொகை பெற்றதில், மீதம் 10 ஆயிரம் பாண்ட், அவனிடம் உள்ளது. அது எனக்கு தேவையில்லை என்ற போதிலும், அதனால், ஏதாவது பிரச்னை வருமா?
என் நண்பர்கள் அனைவரும், தற்போது, எனக்காக சங்கடப்படுகின்றனர். விவாகரத்து கேட்டதற்கு, நான் பணிபுரியும் இடத்தில், என்னை பற்றி தவறாக கூறி விட்டான். நல்ல வேளையாக நான், பணிபுரிந்தது வெளியூர் என்பதால், என் வீட்டாருக்கு, எதுவும் தெரியவில்லை. நான் அந்த வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன். மேலும், என்னை அசிங்கப்படுத்தப் போவதாக கூறுகிறான்; பயமாக உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், இந்த விஷயம் வெளியில் தெரிவதற்கு முன், நான் சாவதை தவிர, வேறு வழியில்லை. அவனிடமிருந்து, மீண்டு வர வழி கூறுங்கள்.
குறிப்பு: "கல்யாண சான்றிதழ்' என்னிடம் உள்ளது. அதை கேட்டு மிரட்டுகிறான்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத அபலைப்பெண்.

அன்புள்ள மகளுக்கு,
உன் கடிதம் கிடைத்தது - விவரமறிந்தேன்.
பெற்ற மகள்களுக்கிடையே அழகை வைத்து, உடல் சுகவீனத்தை வைத்து பாரபட்சம் காட்டுவது, ஒரு நல்ல தாய்க்கு அழகல்ல. அந்த தவறை உன் தாய் தொடர்ந்து செய்துள்ளார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். சில காக்கைகளுக்கு, ஒரு குஞ்சு தகரக்குஞ்சாகவும், ஒரு குஞ்சு பித்தளைக் குஞ்சாகவும், ஒன்று பொன் குஞ்சாகவும் படுவது வேதனைக்குரிய விஷயம். சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டை காட்டி வினையை விதைக்கின்றனர். அறுவடை காலத்தில், வினையையே அறுப்பர்.
பெற்ற தாயின் உதாசீனமே, உன்னை மிக எளிதாக, காதல் வலையில் சிக்க வைத்து விட்டது. நட்பாய் ஆரம்பித்து, நண்பர்களின் கேலி பேச்சுகளால் காதலாய் பரிணமித்து விட்டது. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவனை காதலிப்பது பெரிய குற்றமல்ல. ஆனால், காதலித்தவன் தீயவனாய், சுயநலவாதியாய், சந்தேகப்பிராணியாய் அமைவதே, ஒரு பெண்ணின் பெரிய துரதிருஷ்டம்.
காதலனை பதிவு திருமணம் செய்து, "அலைபாயுதே' படத்தில் வருவது போல, உன் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தாயா என்பதை உன் கடிதத்தில் தெளிவாக நீ குறிப்பிடவில்லை. உன் வீட்டிற்கு தெரியாமல் மட்டுமே விவாகரத்து பெற வேண்டும் என்பது என்ன கட்டாயம்?
தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த உன் காதலன், உன்னை பதிவு திருமணம் செய்து கொண்டது, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும், ஊக்கத்தொகை பெறலாம் என்கிற ஆசைகளுக்காகவே.
ஆண் துணை இல்லாமல், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என, எழுதியிருக்கிறாய். ஆனால், வழி இல்லை, இனி எப்படி இருக்கப் போகிறேன் என தெரியவில்லை என, அடுத்த இரு வாக்கியங்களில் எழுதியிருக்கிறாய். இது, முன்னுக்கு பின் முரண். நீ குழப்பமான மனநிலையில் இருப்பதையே, இவ்வாக்கியங்கள் காட்டுகின்றன.
அவனுடனான ஆறேழு மாத தாம்பத்தியத்தில் நீ கர்ப்பம் தரிக்கவில்லை. உன் விருப்பத்துக்காகவோ, கணவனின் கட்டாயத்துக்காகவோ, தற்காலிக கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்தியிருக்கலாம்.
மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறாய். அதற்கான பதில்களை பார்ப்போம்.
* வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி என, கேட்டிருக்கிறாய். இப்படி ஒரு நிபந்தனையை உனக்கு நீயே விதித்திருப்பது உன் தரப்புக்கு ஒருபலவீன புள்ளி. தெரிந்தால் அப்பா தாங்க மாட்டார், அம்மா கொன்று விடுவார் என்பதெல்லாம் தேவையற்ற எண்ணங்கள்.
* கலப்புத்திருமண பிரிவு மூப்பின் மூலம், உனக்கு அரசு வேலை கிடைக்க இருக்கிறது. இந்நேரத்தில், விவாகரத்து பெற்றால், வேலைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என, கேட்டிருக்கிறாய். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் விவாகரத்து விருப்பத்தை, மேலும், ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடு. காதல் கணவனின் கெட்ட குணங்களை திருத்தப் பார். இந்த திருமண பந்தத்தை அறுத்தெறிவதில் மிகவும் அவசரப்படுகிறாயோ என, தோன்றுகிறது. ஏ@தனும் தவறான வழிகாட்டல் இருந்தால், அதை கத்தரித்துவிடு.
* ஐந்து வருடங்களுக்கு பின், மாற்றிக் கொள்ளக் கூடிய பத்தாயிரம் ரூபாய் பத்திரம் அவனிடம் இருப்பதால், உனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
* திருமண சான்றிதழை உன் கணவன் கேட்டு மிரட்டுவதாக கூறுகிறாய். வேண்டுமானால், ஒரு ஒளி அச்சு நகல் கொடு. என்ன செய்கிறான் என பார்ப்போம். சமுதாயத்திடமும், உன் பெற்றோரிடமும் உன் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள, உன் கணவனுடன் மனம் விட்டுப் பேசு. இருவருமே கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்கள்.
உங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தால், அதை வெளிப்படை ஆக்கு. உன் கணவனின் ஆட்டம் குறையும்.
கலப்பு திருமணம் செய்து கொள்வோர், வெகு சீக்கிரம் பிரிந்து விடுவர் என்கிற பொய் புனைவை அழித்தொழிக்கவாவது, உன் திருமணத்தை காப்பாற்றப் பார். குட் லக் மகளே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (53)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MASI - JAYANKONDAM,இந்தியா
06-டிச-201210:59:52 IST Report Abuse
MASI கலப்புத்திருமண பிரிவு மூப்பின் மூலம், உனக்கு அரசு வேலை கிடைக்க இருக்கிறது. இந்நேரத்தில், விவாகரத்து பெற்றால், வேலைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என, கேட்டிருக்கிறாய். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் விவாகரத்து விருப்பத்தை, மேலும், ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடு. காதல் கணவனின் கெட்ட குணங்களை திருத்தப் பார். இந்த திருமண பந்தத்தை அறுத்தெறிவதில் மிகவும் அவசரப்படுகிறாயோ என, தோன்றுகிறது. ஏ@தனும் தவறான வழிகாட்டல் இருந்தால், அதை கத்தரித்துவிடு.
Rate this:
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
06-டிச-201210:10:40 IST Report Abuse
Ubaidullah Razzaq இந்த ஒரு தீர்ப்பு வரவேற்க தக்க தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
05-டிச-201211:15:08 IST Report Abuse
praven.dr@gmail.com Moral: Do not be a coward and run away whenever there is a problem, remember that every problem has a solution, never ever break someone’s heart, you may not know when it will happen to you.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
04-டிச-201213:35:56 IST Report Abuse
Ganapathy Kannan "நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன் இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்காது. என் அக்காக்களை விட, நான் நன்றாக இருப்பேன் என்பதால், என் அம்மாவிற்கு, என் மேல் மிகுந்த சந்தேகம். நான் அவர்களை அசிங்கப்படுத்தவே பிறந்திருப்பதாக கூறுவார்". பெண்ணே, தாங்கள் அழகாக இருப்பதனால் உங்கள் அன்னைக்கு உங்களைப் பிடிக்காமல் போகவில்லை. ஆண்களிடம் சாதாரணமாகப் பழகும் செயல்தான் அவரைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா. அழகாக உள்ளோம் என்ற கர்வமே உங்களை ஆண்களிடம் பழக அதிகமாக ஈடுபடுத்துகிறது என்பதை அவர் உணர்ந்ததாலேயே மிகுந்த கண்டிப்புக் காட்டியுள்ளார். ஆனால் அளவுக்கு மீறிய கண்டிப்பாக அது ஆகிவிட்டபடியால், அதன்பின் உள்ள, உங்கள்மேல் அவர் கொண்ட உண்மையான அக்கறையும், சூழ்ச்சிக்கார ஆண்களிடம் நீங்கள் சிக்கி சீரழிந்து விடக் கூடாதே என்ற, ஒரு தாயின் பரிதவிப்பும் உங்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டன. ஒரு தாயை விட யாரும் நன்றாக அறிந்து விட முடியாது தன் மகளின் மாறுபட்ட இயல்புகளையும், வித்தியாசமான செய்கைகளையும். அதனால்தான் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடும் ஆணையோ அல்லது பெண்ணையோ பார்த்து பெற்றோர்கள் திட்டுகிறார்கள். தன் அழகின் மேல் உள்ள மையல், எந்நேரமும் கண்ணாடிமுன் நிற்கத் தூண்டுகிறது. அப்படி வளர்த்த, கர்வம் நம்முடன் பழகுபவர்கள் நம் அழகிற்காகவே பழகுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, நம்மை முட்டாளாக்கி வைக்கிறது. எனவேதான் பெரியவர்கள், ஆண் பெண் இருவருமே ஒழுக்கம் என்ற எல்லைக் கோட்டுக்குள் இருந்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள். இரு பாலருமே ஒழுக்கமாக வாழ்க்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், உடனே அவர்களைப் பார்த்து கலாசாரக் காவலர்கள், பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புபவர்கள் என்று ஒரு சாரார் முத்திரை குத்துகிறார்கள், திருடாமல் உழைத்து வாழப்பழகுங்கள் என்ற சொல்பவரை ஏசுவது போன்று. இப்போது பாருங்கள் இந்தப் பெண்ணின் வேதனையை. இதுபோன்ற வேதனை வந்துவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பெற்றோரின் கவலையாக இருந்திருக்கும். ஏன் எந்தப் பெற்றோருமே தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வேதனை வருவதை விரும்பமாட்டார்கள் தானே? "இவையெல்லாம், என் வீட்டிற்கு தெரிந்தால், அப்பா தாங்க மாட்டார். அம்மா என்னை கொன்று விடுவார். வீட்டில் இல்லாத நிம்மதி, இவனிடம் கிடைக்கும் என்று நம்பி, இவனை காதலித்தேன். ஆனால், இவனோ, என்னை பயன்படுத்தி விட்டு, இப்போது மேலும், கொடுமைப்படுத்துகிறான். எனக்கு என் வீட்டிற்கு தெரியாமல் இவனிடம் இருந்து, "விவாகரத்து&39 வாங்க என்ன வழி?" - பெண்ணே, தாங்கள் தெரியாமல் திருமணம் செய்ததை மட்டும் அப்பா தாங்குவாராக்கும். ஏன் தெரியாமல் விவாகரத்து வாங்கவேண்டும். மீண்டும் வீட்டில் பார்த்து வைக்கும், வேறு ஆணைத் திருமணம் செய்து கொண்டு, அந்த ஆண் மகனின் வாழ்க்கையோடு விளையாடவா? வீட்டுக்குத் தெரியாமல் இவ்வளவு விசயங்களைச் செய்த நீங்கள், இப்போது மட்டும், ஏன் தெரியாமல் மறைக்க வேண்டும். செய்ததை நேர்மையான முறையில் குடும்பத்தினருக்குத் தெரியப் படுத்தி, விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். உள்ளபடியே உங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை, கணவருடன் பேசி களைய முயற்சி செய்யுங்கள். ஆணா பெண்ணோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வார்த்தைகளே அவர்கள் வாழ்க்கைக்கு எதிராகி, இடைவெளி ஏற்படுத்துகிறது. காதலிக்கும் காலத்தில், அவரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பார்த்துத் தானே காதலிருத்திருப்பீர்கள். எனவே பேசி மீண்டும் கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சிப்பதில் தவறில்லை. அப்படியும் எதுவும் ஒத்து வரவில்லை எனில், பகிரங்கமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து, முறையாக விவாகரத்து வாங்கி விடுங்கள். ஆனால் அத்துடன் இளையவரான உங்கள் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. தங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து, உங்கள் மேல் அன்புசெலுத்தி, திருமணம் செய்ய விரும்பும் ஆண்மகனோடு, மீண்டும் வாழ்க்கையைத் துவக்குவதே தாங்கள் செய்ய வேண்டியது. ஆனால் ஒன்று, குடும்பம் என்று இருந்தால், தம்பதிகளுக்குள் மனவேறுபாடுகள் வரத்தான் செய்யும். அதனை பேசி சரிசெய்ய முயற்சி செய்யாமல், விவாகரத்து தான் செய்வேன் என்றால், வாழ்க்கையில் எத்தனை முறைதான் விவாகரத்து செய்து கொள்வது. அதற்காக ஒரு மிருகம் நமக்கு கணவனாகவோ அல்லது மனைவியாகவோ வந்து சேர்ந்தால், அந்த நரகத்திலேயே நாமும் உழல வேண்டும் என்பதில் எதுவும் நியாயம் இருக்கிறதா என்ன ? - அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment
bala - Bedok,சிங்கப்பூர்
05-டிச-201209:24:51 IST Report Abuse
balaதிரு. கண்ணன்... உங்கள் கருத்துக்கள், தமிழ், எழுதிய விதம் என எல்லாமே அருமை.......
Rate this:
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
04-டிச-201213:14:19 IST Report Abuse
Narayan Arunachalam இந்த பெண்மணியின் வார்த்தை பிரயோகங்களை கவனிக்கும் வகையில் ( எத்தனை முறை.. கணவனை அவன் என்று அழைத்துள்ளார்? ஆசையில் கணவனை.. அவன் என்று அழைப்பது வேறு.. இது பெண்களை.. அவள்/ இவள் என்று அழைக்கும் ஆண்களுக்கும் பொருந்தும் ) இவர்.. அவரது கணவனை விட்டு மனதளவில் வெகு தூரம் வந்து விட்டார் போல தெரிகிறது... தற்போது இவரது முதல் பிரச்சினை.. வீட்டிக்கு தெரியாமல் விவாக விலக்கு பெறுவது எப்படி மற்றும்.. அரசாங்க வேலை கிடைத்தால் தக்க வைத்துக்கொள்ளுவது எப்படி.. இன்றைக்கு வீட்டிக்கு தெரியாமல் விவாக விலக்கு வாங்கி விட்டாலும்.. நாளை அது தெரியாமல் போகாது என்று சொல்ல முடியாது.. இனி மேலாவது.. பெற்றோரை அணுகி உண்மையை சொல்லி.. அவர்கள் ஆதரவினை பெறலாம். பொதுவாக பெற்றோர்கள்.. குழந்தைகள் தவிக்கும்போது நிச்சயமாக கை விடமாட்டார்கள்... .. அவர்கள் வழி காட்டுதலின் பேரில் விவாக விலக்கு பெற்றாலும்.. அதனை.. வேலை க்கு தொடர்பு படுத்தி.. காலம் தாழ்த்துவதோ, தள்ளி போடுவதோ சரியான தீர்வு ஆகாது.. அப்படியே கிடைத்தாலும்.. நாளை..இது தொடர்பாக அந்த நபர் ஒரு வழக்கு தொடர்ந்தால்.. அது வேலைக்கு மேலும் சிக்கல் உண்டாகலாம்... எனவே.. இரண்டையும் சம்பந்த படுத்துவது நல்ல செயல் அல்ல.. வேலை விஷயத்தில் தெளிவு வேண்டும் என்றால்.. நல்ல சட்ட ஆலோசகரை அணுகி தெளிவு பெறலாம்.. அந்த நபருடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்.. திருமணத்தை உடனடியாக பகிரங்க படுத்தி அவரது குடும்பத்தினரை அறிய செய்யலாம்.. இந்த பெண்மணி குறிப்பிட்டுள்ள சில விவரங்களை பார்க்கும்போது அந்த நபருடன் மனம் விட்டு பேசுவது பலன் தராது என்றே தோன்றுகிறது... அவரது பெற்றோர்கள் அல்லது அவரை கேள்வி கேட்க கூடிய ஒரு சில பெரியவர்கள் முன்னிலையில் முதலில் பேசி பார்க்கலாம்.. அதற்கு பிறகு ஓரளவிற்கு ஈடுப்பாடு உருவான பின் .. சிறந்த மன நல ஆலோசகரை அணுகி.. பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம்.. இதற்க்கு இவர்கள் இருவர் மட்டும் அல்லாமல்.. இருவரது குடும்பத்தினரும் முனைந்தால் தான் நடக்கும். ..நல்ல தீர்வு கிடைக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-டிச-201209:38:55 IST Report Abuse
p.manimaran பெண்கள் நல்ல கண்டிப்புடன் வளர்க்கும்போது இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
03-டிச-201223:29:00 IST Report Abuse
Sam ஏமாற்றும் கலப்பு மணம் வேண்டவே வேண்டாம். அது காதல் அல்ல காதல் நாடகம். பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இது போல எமாற வேண்டாம் .
Rate this:
Share this comment
Cancel
Kongu Nandhu - Tiruchengode,இந்தியா
03-டிச-201219:58:25 IST Report Abuse
Kongu Nandhu நீ இப்போ யோசித்து என்ன போரஜனம் உன்ன மாதரி பெண்கள் நல்லா தான் சமுதாயம் சீர் குலைகிறது
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
03-டிச-201217:26:17 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி போலி திருமணம் ஒன்றை செய்து நீங்கள் கற்பையும், பணத்தையும் இழந்து விட்டீர்கள்.. ஆக இவனை விவாகரத்து செய்துவிட்டு இனி ஒருவன் வாழ்வை சூறைக்காற்றாக ஆக்காமல், தொட்டதே விட்டது, விட்டதே தொட்டது என்று வாழுங்கள்.. அழித்துவிட்டு அழித்துவிட்டு எழுத இது ஒன்றும் சில‌ேட் பலகை அல்ல,, எப்படியும் இனி ஒரு ஆண்மகனை பொய் சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும்,, உங்களிடம் இனி ஒன்றுமே இல்லை ஒரு புது மணமகன் இடம் கொடுப்பதற்கு,, சோ யுவர் லைப் இஸ் ஓவர்.. நோ ரெக்கவரி....
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
03-டிச-201213:25:40 IST Report Abuse
V.B.RAM """"கலப்பு திருமணம் செய்து கொள்வோர், வெகு சீக்கிரம் பிரிந்து விடுவர் என்கிற பொய் புனைவை அழித்தொழிக்கவாவது"""" நடக்காத காரியம் .
Rate this:
Share this comment
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
03-டிச-201219:09:33 IST Report Abuse
 KUNDRATTHU BAALAAஎப்பொழுதும் நாசாமா தான் போகும் க.தி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.