ட்விட்டர் பாலிடிக்ஸ் - 66ஏ வந்தாச்சு வாய்ப்பூட்டு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மணி காலை ஐந்து. புதுச்சேரி குறிஞ்சி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவின் அமைதியைச் சீர்குலைத்தவாறு, போலீஸ் ஜீப் ஒன்று சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் வீட்டின் முன் நிற்கிறது. உடனே வந்து போலீஸ்காரர்கள் காலிங் பெல்லை அடிக்கிறார்கள். மகனை டியூஷன் கூட்டிக் கொண்டு போக வந்திருக்கும் ஆட்டோ டிரைவர்தான் என சற்று மெதுவாகவே வந்து கதவைத் திறந்தார் ரவியின் மனைவி. பார்த்தால் போலீஸ். கலவரமாகி உள்ளே போய் கணவரை எழுப்புகிறார். அவரும் சற்றுக் குழப்பத்துடனே வாசலுக்கு வருகிறார்.
“நாங்க போலீஸ்... நீங்க தானே ரவி’ என்று ஒருவர் கேட்க, “ஆமாம்’ என்று ரவி சொல்ல “எங்க கூட வாங்க உங்களை பற்றி புகார் வந்திருக்கு...’
ரவிக்கு திடீரென்று சந்தேகம். “வந்திருப்பவர்கள் போலீஸ்காரர்கள் தானா?’ சுதாரித்துக் கொண்டு ஐ.டி. கேட்க போலீஸுக்கு வழக்கமான கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. “ஒழுங்கா ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்க’ என்று ரவியை பேண்ட் போடக்கூட அனுமதிக்காமல், செல் எடுத்துக் கொள்வதைத் தடுத்து, ஷார்ட்ஸ்ஸோடு அழைத்துக் கொண்டு போனார்கள். ரவியின் மனைவிக்கும் மாமனாருக்கும் இந்த அதிரடி ஒன்றும் புரியவில்லை. எல்லாம் நிமிடத்துக்குள் நடந்து விட்டது. “கணவரை எங்கே கூட்டிப் போகிறார்கள்’ என்ற பயம் மனைவிக்கு தொற்றிக் கொண்டது.
“எனக்கே பெரிய ஷாக். நான் சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமகன். ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்தது போல் போலீஸ் கூட்டிப் போகிறதே... குழப்பம் ஏதாவது ஆள் மாறாட்டமா... யோசனையில் ஆழ்ந்தேன்’ என்று சொல்லும் ரவியின் கண்களில் சம்பவம் நடந்து முப்பது நாட்களாகியும் பயம் தெளியவில்லை. ஜீப்பில் போகும்போது, “கம்ப்யூட்டரில் என்ன எழுதினீங்க... கார்த்திக் சிதம்பரம் பற்றி...’ என்று எஸ்.ஐ. கேட்க, அப்போதுதான் ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பற்றி ஒரு கருத்து சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. “வதேராவை விட கார்த்திக் சிதம்பரத்துக்கு அதிக சொத்துக்கள் இருக்கு’ என்பதுதான் ரவி போட்ட செய்தி. “இதன் காரணமாகத் திட்டமிட்டு என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும்’ என்று முதல்நாள் இரவு கார்த்தி அனுப்பி ஃபேக்ஸ் புகார் மீதுதான் அத்தனை அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ். அண்ணா ஹசாரேயின் “ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைபிபன் சுறுசுறு ஆர்வலர் ரவி, கேஜரிவால், வதேராவைப் பற்றிய ஊழல் செய்திகளை அம்பலப்படுத்தியபோது கார்த்தியைப் பற்றிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்தார் ரவி.
“என் ட்விட்டரைத் தொடருபவர்கள் மொத்தம் 16 பேர். இவர்கள் என் நண்பர்கள். உறவினர்கள். கருத்துப் பரிமாற்றம் எங்களுக்குள்தான். ஒரு வருடத்துக்கு முன் சிதம்பரத்தைப் பற்றியும் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அதையும் குறிப்பிட்டு, “என் குடும்பத்தைத் திட்டமிட்டு களங்கப்படுத்துகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருக்கிறார் கார்த்தி. என்னைப் பிடித்துப்போன போலீஸுக்கு ட்விட்டர் என்றால் என்ன என்று கூடத் தெரியவில்லை. பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு மாலையில்ந ’திபதி முன் ஆஜர்படுத்தினார்கள். பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது. 2008, தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66ஏ ன் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு மூலம் அரசியல் சட்டம் நமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது,’ என்கிறார் ரவி சீனிவாசன்/
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கருத்துச் சொன்ன பலர் இந்த 66ஏ சட்டப்பிரிவின் கீழ் மாட்டிக் கொண்டு கேஸ், ஜெயில் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலைத்தளம் வழியாக விமர்சனம் செய்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார் மம்தா பானர்ஜி.
“மும்பையில் கடைகள் மூடப்பட்டது பால் தாக்கரேயின் மீதுள்ள மரியாதை அல்ல; பயம்’ என்று சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொன்ன இரு இளம்பெண்கள் போலீஸால் கைது செய்யப்பட்டார்கள். (இதனால் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்) பாடகி சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களில் தமது கருத்தை ட்விட்டரில் போட, விவாதத்தின் தொடர்ச்சியில் சின்மயி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் “தனிப்பட்ட’ வகையில் போக, அவர் புகார் கொடுக்க இருவர் மீது வழக்குப் பாய்ந்தது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்க விவகாரத்தில், கோஷ்டிப் பூசலில் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இருவரை இதே 66 ஏ ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்து 12 நாட்கள் ஜெயிலில் வைத்து விட்டது. “நாடு முழுவதும் இந்தச் சட்டப் பிரிவு கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதை உடனே சட்டப் புத்தகத்திலிருந்து எடுக்க வேண்டும்’ என்று மனித உரிமை ஆர்வலர்களும், சமூக வலைத்தள ஆர்வலர்களும் களத்தில் குதிக்கிறார்கள். வரும் காலத்தில் இவர்கள் குரல் இன்னமும் பலமாகவே ஒலிக்கும். புதுச்சேரி ரவியிடம் தொலைபேசியில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, அவருக்காக நீதிமன்றத்தில் வழக்காடத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
அதேநேரத்தில் சமூக நிலையைப் பற்றிப் புரிதலோ, ஆர்வமோ பலருக்கு இருப்பதில்லை. கருத்தைப் பதிவு செய்பவர்கள் எல்லோருமே, சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிபுணர்களாகவோ, தொடர்புடையவர்களாகவோ இருப்பதில்லை. மின்னலெனப் பளிச்சென்று மனத்தில் தோன்றியதை உடனே பதிவு செய்கிறார்கள். இதனால் கோபம், பகை உருவாகி, வம்பு வழக்கு என்று வந்து சேருகிறது.
“சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற பரந்த தளம். அவற்றைக் கையாள்வதற்கு சுயகட்டுப்பாடு தேவை’ என்கிறார் பிரபல தினசரி பத்திரிகையின் வலைத்தள ஆசிரியர். “ஒரு பதிவர் தாம் தொடங்கி வைத்த விவாதத்தின் மீது வரும் கருத்துக்கள் அது திப்பட்ட தாக்குதலாக மாறும்போது, அந்த நபரை தமது பதிவை விட்டு நீக்க முடியும். வேண்டும் என்றே விவாதத்தில் தொடர்ந்தால் நிலைமை இன்னமும் மோசமாகும்.
மேலும் சமூக வலைதளங்களில் உள்ள பதிவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் கருத்துப் பரிமாற்றம் அவர்களுக்குள்ளேயே ஆரோக்கியமாக இருக்கும். இதைவிட்டு பதிவர்கள், தங்கள் கருத்துக்களை பொது மக்கள் கவனிப்புக்கு விஸ்தரிக்கும்போது கற்களும் வீசப்படலாம்; மலர்களும் கொடுக்கப்படலாம்.
நான்கு நண்பர்கள் அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியைக் குறித்து பேசும்போது எப்படியும் பேசிக் கொள்ளலாம். ஆனால் அதையே ட்விட்டரில் பதிவுசெய்தால் விபரீதம்.
மும்பையே கலவர பீதியில் இருக்கும்போது தாக்கரேயைக் குறித்து அப்படிச் செய்தியைப் போட்டிருக்கக்கூடாது. இந்தச் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குபவர்களும், வதந்தியைப் பரப்பியவர்களும் இருக்கிறார்கள். எனவே கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கும், சட்டவிரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கவும் சட்டங்கள் தேவை. தண்டனைகள் மூலமே தவறுகள் குறையும்’ என்கிறார் அந்த வலைத்தள ஆசிரியர்.
“கம்ப்யூட்டர் வழியாக ஒருவரை அச்சுறுத்தும்படி செய்தியை, கருத்தைப் பதிவு செய்வது, அதன் மூலம் தொந்தரவு, எரிச்சல், சங்கடம் ஏற்படுத்துவது ஆகியவை தகவல் தொழில் நுட்பச் சட்டப் பரிவு 66ஏ கீழ் மூன்றாண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய அல்லது அபராதம் அல்லாத தண்டனைக்குரியது. இதைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்’ என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவுசெய்திருக்கிறார் மனித உரிமை ஆர்வலர் அ. மார்க்ஸ்.
“அரசியல் சட்டம் பிரிவு 19(2)ன் கீழ் நமக்கு அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு முரணான பிரிவு இது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் முதலில் கொண்டு வந்தபோது இந்தப் பிரிவு இல்லை. அப்புறம்தான் திருத்தம் கொண்டு வந்து சேர்த்தார்கள். சமூக வலைத்தளங்களில் சொல்லும் கருத்தையே பொது இடங்களில் பேசினாலோ, எழுதினாலோ தண்டனை அவதூறு வழக்குத்தான் போட முடியும்.
கார்த்தி சிதம்பரம் பற்றி பொதுமேடைகளில் இன்னமும் மோசமான விமர்சனம் வைக்கப்படுகிறதே. அதற்கெல்லாம் வழக்குக் கிடையாது. ட்விட்டரில் கண்ணியமான விமர்சனக் கருத்து சொன்னால் வழக்கா? கருத்துக்களால் பாதிக்கப்பட்டால் அவதூறு சட்டப்படி வழக்குப் போட்டு நிவாரம் பெறலாமே. அதைவிட்டு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பயமுறுத்தும் கிரிமினல் பிரிவுகள் எதற்காக? வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது பதிவர்கள் ஆணித்தரமான பதில்களை வைக்கும் அளவுக்கு திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
கார்த்தி சிதம்பரம் கோபப் படாமல் “எங்கே நிரூபியுங்கள்?’ என்றல்லவா எதிர் சவால் விட வேண்டும். அதை விட்டு வாய்ப்பூட்டுப் போடும் விதமாக வழக்கைப் போடத் தூண்டுவது எந்தவிதத்தில் சரி? 66ஏ பிரிவை நீக்கும்வரை எங்கம் போராட்டம் தொடரும்’ என்கிறார் மார்க்ஸின் வழக்கறிஞர் ரஜினி.
“மொத்தப் படித்த வழக்கறிஞரும் அமைச்சருமான கபில்சிபல், “66ஏ குறிப்பிடுவது ஜாமீனில் வரக்கூடிய குற்றம்தான்’ என்று அடக்கி வாசிக்கப் பார்க்கிறார். இது அநியாயம்’ என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றிடிபேன்.
“கைது செய்த பிறகுதானய்யா ஜாமீன். எங்கள் கேள்வியே எதற்குக் கைது? மாற்றுக் கருத்துகளோ விமர்சனங்களோ இருககக் கூடாது என்று கருதும் அரசியல்வாதிகள் ஏற்பாடுதான் இந்தக் கொடுமையான சட்டப்பிரிவு. கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் இவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளோ, விமர்சனமோ சமூக வலைத்தளங்களில் வரக்கூடாது என்பதுதான் இந்தக் கொடுமையான சட்டப் பிரிவு. கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் இவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளோ, விமர்சனமோ சமூக வலைத்தளங்களில் வரக்கூடாது என்பதுதான் நோக்கம். ஏனென்றால் இந்தச் சமூக வலைத் தளங்கள் இன்று கருத்துகளை உருவாக்கும் மாபெரும் தளங்களாக மாறிவிட்டனவே’ என்கிறார் அவர்.
மொத்தத்தில் இந்த விவகாரம் இன்னமும் சூட்டைக் கிளப்பும் வகையில் வெடிக்கப் போகிறது. கருத்தோடு கருத்து மோதலாமே தவிர, கண்ணியமான கருத்துக்களுக்கு சிறைவாசம் என்ற நிலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதே!

- ப்ரியன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.