E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சங்கீதத்துக்கு ப்ரமோஷன்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:00

அம்ருதா முரளி! கர்நாடக இசைவானில் தனக்கென ஓர் இடம்பிடித்திருக்கும் இளம் பாடகி. வாய்ப்பாட்டு - வயலின் என இரட்டைக் குதிரைகளில் “ஜம்’மென்று சவாரி செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஒரு சந்தோஷ செய்தி இருக்கவே, அதைத் தமது மனத்துக்கு நெருக்கமான ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டார்.
“கல்கி’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இசை ஆர்வலருமான சீதா ரவியை அம்ருதா சந்தித்து உரையாடிய போது தெறித்த சுவாரஸ்ய சங்கதிகள்:

காலை பத்து மணி! அடையார், கஸ்தூரிபாய் நகரிலிருக்கும் சீதா ரவியின் வீடு! தங்க நிற உடலும், நீலநிற பார்டரும் கொண்ட காஞ்சிபுரப் பட்டுப் புடைவையில், உயரமாக, ஒயிலாக வந்து இறங்கினார் அம்ருதா.
“வாம்மா, வெல்கம்!’ தமக்கே உரித்தான மெல்லிய புன்னகையுடன் வாசலுக்கே வந்து வரவேற்றார் சீதா ரவி.
“முதல்ல, அந்த ஹேப்பி நியூஸைச் சொல்லிடு!’
“அக்கா, எனக்கு மியூஸிக் அகாடமியில சீனியர் ஸ்லாட் கிடைச்சிருக்கு!’
“அடிசக்கை! ப்ரமோஷனா? ரொம்ப நல்ல விஷயம்தான். ஹார்ட்டி கங்கிராட்ஸ்!’ அன்புடன் கரம் பற்றிக் குலுக்குகிறார்.
“அம்ருதா முரளிக்கு மட்டுமில்லே. தரமான சங்கீதத்துக்கும் இந்த ப்ரமோஷன் ஒரு அங்கீகாரம். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் அம்ருதா...’
“தேங்ஸ்கா...’
அம்ருதா சோஃபாவில் அமர, சீதா ரவி ஆர்வத்துடன் கேள்விகளை அடுக்குகிறார்.
சீதாரவி: இந்த லெவலுக்கு வர்றதுக்கு என்ன மாதிரியான வொர்க் பண்ணினே?
அம்ருதா முரளி: இந்த லெவல், அந்த லெவல்னு யோசிச்சு வொர்க் பண்ணலை; எங்கக் குடும்பத்துல பாடகர்கள் யாரும் கிடையாது. எல்லோருக்கும் பாட்டு கேட்கப் பிடிக்கும். எனக்குச் சிறு வயதிலிருந்தே வாய்ப்பாட்டு - வயலின் இரண்டையும் கற்றுக் கொடுத்தாங்க. கடவுள் அருளாலேயும் குருமார்களின் ஆசியினாலயும் னெக்கு நல்ல ட்ரைவ் இருக்கு. கடுமையா உழைச்சா, எந்தத் துறையிலயும் முன்னுக்கு வரலாங்கிறது புரியுது. அதனால், உன்னதமான சங்கீதத்தை இலக்கா வெச்சுக்கிட்டு, “அடுத்து... அடுத்து’ன்னு தேடிப் போய்க்கிட்டேயிருக்கேன்.
சீதா ரவி: பொதுவா, பெண் பாடகிகள் பலரும், தங்களுடைய குரல் இனிமையை நம்பித்தான் களம்றங்குவாங்க! ஆனா, உன் விஷயத்துல அப்படியில்ல; நீ செம்மங்குடி ஸ்கூலைச் சேர்ந்தவ; குரலினிமையை விட, சங்கீதத்தின் கம்பீர்யத்தையும் பாவத்தையும் மட்டுமே நம்பி, உயர்ந்த சங்கீதத்தைத் தர துடிக்கிற பெண். இன்றையச் சூழல்ல இது சாத்தியம்தானா? நீடிச்சு நிற்கணுமே, எப்படிச் சமாளிப்பே?
அம்ருதா முரளி: சிரமம்தான்! அதைச் சமாளிக்கிறதுதானே என்னோட சவால்! பெண் பாடகிகளின் சாரீரம் ரொம்ப இனிமையா இருந்தா, ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்தான். ஆனால் வல்லினம் - மெல்லினம் மட்டுமே சங்கீதம் ஆயிடாது.நல்ல சங்கீதத்தின் பரிமாணமே வேற!
சீதா ரவி: ஐ டு அக்ரீ! உன் கச்சேரிகளை நிறையக் கேட்டிருக்கேன். “லோகா வன சதுரா’, “ஜம்பூபதே’ போல கனமான நிதானமா பாட வேண்டிய கீர்த்தனைகளை, நீ ஒரே கச்சேரியில பாடறதை ரசிச்சுருக்கேன். ஹெவியா லிஸ்ட் போடறதுக்கு ஒரு தைரியம் வேணும்!
அம்ருதா முரளி: ஆமாக்கா! எனக்கு லைட்டா பாடறதுல ருசி இல்லதான்! ஆனா, கச்சேரில ஒரு அழகான மிக்ஸ் இருக்கணும். சில இடத்துல சில பாடல்களும் சில மொழிகளும்தான் எடுபடும். ஆடியன்ஸோட சந்தோஷமும் ரசனையும் முக்கியம்தான்; ஒத்துக்கறேன். அதுக்காக சங்கீதத்தை ஒரேயடியா டைல்யூட பண்ணிடக்கூடாது இல்லையா?
சீதா ரவி: உன்னுடைய ப்ளஸ் பாயின்டே பாவம்தான்! அது எப்படி வருது? பாவம்னா என்ன?
அம்ருதா முரளி: பாவம்தான் சங்கீதத்தின் ஜீவன். சொல்லிக் கொடுத்து வர முடியாது. முதல்ல, சங்கீதமும் சாகித்தியமும் இணைகின்ற உயிர்ப் புள்ளியைச் சரியா உள் வாங்கிக்கணும். பாடல் வரிகளை உணர்ந்து, பாடியவரின் அதே மனோ பாவத்தோடு நெருங்கிப் பாடினால், பாவம் வந்துவிடும். சாஹித்யம் - பாட்டோட வார்த்தைகள் இடம்பெறாத ஆலாபனை, கல்பனை ஸ்வரம் போன்றவற்றிலும் பாவம் நிச்சயம் உண்டு. அதைத் தேடிக் கண்டுபிடிச்சுட்டா நத்திங் லைக் இட்!
சீதா ரவி: ஓகே! முன்பெல்லாம் பெண் பாடகிகளுக்கு மிருதங்கம் வாசிக்க மாட்டோம்னு சில ஆண்கள் கொள்கையாவே வெச்சுருந்தாங்க. இப்ப எப்படி?
அம்ருதா முரளி: இப்பவும் சில சீனியர் ஆர்டிஸ்ட்கள் ஸ்ட்ரிக்டாவே “ஸாரி’ சொல்றாங்கதான்! ஆனால் சமீபகாலமா மியூஸிக்கலி ஃப்ரெண்ட்லி ஆடிட்டியூட் இருக்கு. நானும் விஜய் சிவா, டி.எம். கிருஷ்ணா போன்றவர்களுக்கு வயலின் வாசிக்கிறேன். கச்சேரி வட்டாரத்துல கலகலப்பு கூடி, கட்டுப்பெட்டித்தனம் குறைஞ்சு போச்சு.
சீதா ரவி: பாட்டுப் பாடற; வயலினும் வாசிக்கிற... இரண்டுல ஏதாவது ஒண்ணு தான்னா, உன்னோட சாய்ஸ் எது?
அம்ருதா முரளி: கண்டிப்பா, பாட்டுப் பாடத்தான் ஆசை! ஆனால் இப்ப இரண்டையும் மேனேஜ் பண்ண ஆசையும் இருக்கு; எனர்ஜியும் இருக்குங்கிறதனால நோ ப்ராப்ளம்!
சீதா ரவி: ஒய்.ஏ.சி.எம்.ல நீ தீவிரமா இருந்த இல்லியா?
அம்ருதா முரளி: ஆமாக்கா! “யூத் அசோஸியேஷன் ஃபார் கிளாஸிக்கல் மியூஸிக்’ அப்படிங்கிற அமைப்புல அஞ்சு வருஷம் இணைத் தலைவியா இருந்தேன். பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கர்நாடக இசையைப் பரப்புவதற்காக அப்போ நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினோம்... கச்சேரியையே லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் ஆக்கி லெக்-கான் கொடுப்போம். இப்போ “சமுதாயா ஃபவுண்டேஷன்’ மூலமும் அதே மாதிரி நிகழ்ச்சிகளை கார்ப்பரேஷன் பள்ளிகள்ல வழங்கறோம். ஒருமுறை வடபழனியில ஒரு மாநகராட்சிப் பள்ளிக்குப் போயிருந்தோம். லெக்-கான் முடிஞ்ச பிறகு சின்னச் சின்ன தமிழ்ப் பாடல்களைப் பாடினேன். உடனே சில குழந்தைகள், ஒன்று சேர்ந்து, கைக் காசையெல்லாம் போட்டு, பேனா வங்கி வந்து எங்களுக்குப் பரிசு தந்தாங்க. அந்த அன்பான தருணத்தை மறக்க முடியாது.
சீதா ரவி: “மாஸ்டர்ஸ் இன் ஃபைனான்ஸ் மேனேஜ்மெண்ட்’ படிச்ச பெண் நீ! ஆனா கச்சேரிக்கு ரேட் பேச படிப்பு கைகொடுக்கிறதா?
அம்ருதா முரளி: பணம் பண்ற கோர்ஸ் படிச்சிருந்தாலும், மூளை அதுல போகலையே! என் வாழ்க்கை முழுக்க ஃபுல் டைம் சங்கீதம்தான். ஐ என்ஜாய் மியூஸிக். ஐ என்ஜாய் வாட் ஐ ஸிங். ஐ ஸிங் ஃபார் மை எக்ஸ்பீரியன்ஸ். பணம் பெருசா வரலைன்னாலும், போதுமான அளவுக்கு வருது!
சீதா ரவி: சரி, எப்ப கல்யாணம்?
அம்ருதா முரளி: என்னையும் என் ஃப்ரொஃபஷனையும் புரிஞ்சுக்கிட்டு, ஆதரிக்கிற மனிதர் கிடைச்சதும்! (வெட்கத்துடன்...)
சீதா ரவி: சீக்கிரமே கிடைப்பார்!
சிறிது வயத்துக்கும் ஈயப்படும் மதிய உணவு வேளை நெருங்குகிறது.
தாமே சமைத்த உணவை அன்புடன் பரிமாற, முதலில் ரவா கேசரியைச் சுவைக்கத் தொடங்கினார் அம்ருதா முரளி.
சீதா ரவி: அம்ருதா, வீட்டுப் பொறுப்புகளிலும் கொஞ்சமாவது பங்கு எடுத்துப்பியா?
அம்ருதா முரளி: ம்... குடும்ப வாழ்க்கை தர பாதுகாப்புனாலதான் வேரெதையுமே வெற்றிகரமா செய்ய முடியும்...
சீதா ரவி: அப்போ வீடு, பாட்டு, வயலின், ஃப்ரெண்ட்ஸ்னு மல்டி டாஸ்கிங் பண்ற அனுபவம் கச்சேரி மேடையிலயும் மல்டி டாஸ்கிங்குக்கு உதவுதில்லையா?
அம்ருதா முரளி: நிச்சயமா... ஒரே நேரத்துல ஆடியன்ஸ், பக்கவாத்தியம், நம்பளோட குரல், கற்பனைன்னு... பலப் பல விஷயங்களைக் கையாண்டு இணைக்கணுமே... வாழ்க்கை அனுபவமும் குறிப்பாக பெண்கள் ஏற்கற மல்டி டாஸ்கிங் பொறுப்பும் அதுக்கு நிச்சயம் உதவுது...
சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உணவில் கவனம் செலுத்துகிறார் அம்ருதா முரளி.

- மங்களேஸ்வரி

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.