""தம்பி! ஏன் கவலையாக இருக்கிறாய்? என்ன நடந்தது என்று சொல். என்னாலான உதவி செய்கிறேன்,'' என்று அன்புடன் சொன்னார். நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னான்.
""இவ்வளவுதானா? இந்த மலையை நான் ஒரு நொடிக்குள் பிளந்து காட்டுகிறேன்,'' என்றார் முதியவர்.
ஆடிக் கொண்டிருந்த தன் முன்பற்களில் ஒன்றைப் பிடுங்கினார். அதை மந்திர மலையின் மேல் வீசி எறிந்தார்.
அந்தப் பல் மலையின் மேல் மோதியது. நூறு இடிகள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போலப் பேரோசை எழுந்தது.
அந்த மலை அப்படியே இரண்டாகப் பிளந்து விழுந்தது. உள்ளே இருந்த அரக்கனின் மாளிகை தெரிந்தது.
அவருக்கு நன்றி சொல்லி விட்டு, அவன் அரக்கனின் மாளிகையை நோக்கிச் சென்றான்.
அந்த மாளிகைக்குள் நுழைந்தான். பெரிய அரண்மனை போல அந்த மாளிகை காட்சி அளித்தது. ஒவ்வொரு இடமாக இளவரசியைத் தேடிச் சென்றான்.
அங்கே ஓர் அறைக்குள் இருந்து இடி போன்ற ஓசை வந்தது. எங்கிருந்து ஓசை வருகிறது என்று அந்த அறைக்குள் பார்த்தான்.
அரக்கன் ஒருவன் அங்கே தூங்கிக் கொண்டிருந்தான். பெரிய மீசையுடன், நீண்ட பற்களுடன் பயங்கரமாக இருந்தான்.
அந்த அரக்கனின் குறட்டை ஒலிதான் இடியோசை என்பது அவனுக்குப் புரிந்தது.
அடுத்த அறையைப் பார்த்தான். அங்கே இளவரசி அழுது புலம்பியபடி இருந்தாள்.
அவள் அருகே சென்ற அவன், ""இளவரசியாரே!'' என்று அன்புடன் அழைத்தான்.
தலை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
""உங்களை மீட்டுச் செல்லவே வந்துள்ளேன். அரக்கன் விழிப்பதற்குள் நாம் புறப்பட வேண்டும். விழித்துக் கொண்டால், நமக்கு ஆபத்து. விரைவாகப் புறப்படுங்கள்,'' என்றான்.
கண்களைத் துடைத்துக் கொண்ட அவள் அவனுடன் புறப்பட்டாள்.
இருவரும் அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தனர்.
"முழு நிலவு வர இன்னும் நான்கு மணி நேரமே உள்ளது. பிளந்து கிடக்கும் மலைப் பகுதியை அதற்குள் ஒன்று சேர்க்க வேண்டும். யாராலும் பிரிக்க முடியாதபடி இறுகக் கட்ட வேண்டும். இல்லையேல் அரக்கன் விழித்துக் கொள்வான். அரக்கன் விழித்துக் கொண்டால், இத்தனை முயற்சியும் வீணாகி விடும். என்ன செய்வது? வழி ஏதும் தெரிய வில்லையே' என்று தவித்தான் அவன்.
அங்கே இருந்த ஆல மரத்தின் அடியில் கிழவி ஒருத்தி சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் தலை நிறைய பூ இருந்தது.
அவளிடம் சென்ற அவன் நடந்ததை எல்லாம் சொல்லி, ""பாட்டி! பிளந்து கிடக்கும் இந்த மலையை ஒன்று சேர்க்க வேண்டும். யாராலும் பிளக்க முடியாதபடி இறுகக் கட்ட வேண்டும். இல்லையேல் அரக்கன் விழித்துக் கொள்வான். வழி தெரியாமல் தவிக்கிறேன்,'' என்றான்.
""இவ்வளவுதானா? கவலையை விடு, என்று தன் தலையில் இருந்து தலைமுடியை இழுத்தாள். அந்த முடியின் நடுவில் பெரிதாகச் சுருக்கு ஒன்று போட்டாள். பிளந்து கிடக்கும் மலைப் பகுதிகள் இரண்டையும் சுற்றுமாறு அந்த முடியை வீசினாள்.
அந்தச் சுருக்கு இரண்டு மலைப் பகுதிகளையும் சுற்றிக் கொண்டு நின்றது. கையில் இருந்த முடியின் இரண்டு முனைகளையும் இழுத்தாள் அவள். என்ன வியப்பு! அந்தச் சுருக்கு இரண்டு மலைகளையும் சிறிது சிறிதாக ஒன்று சேர்த்தது. மேலும் இழுத்தாள் பாட்டி.
மலைப் பகுதிகள் இரண்டும் சேர்ந்தன. முன்பு இருந்தது போல மலை அங்கே இருந்தது.
பிறகு அவள் அந்தச் சுருக்கு அவிழாத வண்ணம் நான்கைந்து முடிச்சுகள் போட்டாள்.
""தம்பி! வலிமையான இந்தச் சுருக்கை அவிழ்க்கவோ, அறுக்கவோ யாராலும் முடியாது. அரக்கன் வெளியே வருவான் என்று நீ அஞ்ச வேண்டாம். இளவரசியுடன் மகிழ்ச்சியாகப் புறப்படு. நீங்கள் நலமாக இருப்பீர்கள்,'' என்று வாழ்த்தினாள்.
அவளுக்கு, நன்றி சொல்லிவிட்டு இளவரசியுடன் புறப்பட்டான்.
இளவரசி உயிருடன் திரும்பியதை அறிந்த அரசனும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடே விழாக்கோலம் பூண்டது. அவனுக்கும், இளவரசிக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
கோலாகலமாக நடந்த அந்த திருமணத்தில் பல நாட்டு அரசர்களும் கலந்து கொண்டனர்.
குட்டீஸ் இந்தக் கதையில் புதிர் ஒன்று உள்ளது. உங்களில் யார் சரியான விடை சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்.
""இந்தக் கதையில் வருபவர்களில் யார் ஆற்றலில் பெரியவர்? குலகுருவா? அரக்கனா? உழவனா? கிழவியா? அல்லது மேஷாக்கா?''
பிளந்து கிடக்கும் பெரிய மலையை முடி ஒன்றினால், இறுகக் கட்டினாள் கிழவி. அப்படிப்பட்டவள் எவ்வளவு பெரியவளாக இருக்கவேண்டும். அவளோடு குடும்பம் நடத்தும் அவளுடைய கணவர் தான் உண்மையிலேயே பெரியவர்.
சூப்பரா குட்டீஸ்
முற்றும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.