துப்பறியும் புலிகள் 007
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 டிச
2012
00:00

சாம் தான் படித்துக் கொண்டிருந்த பாட புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, அம்மாவைப் பார்த்தான். அதாவது அம்மாவின் வைரத் தோடையே பார்த்தான்.
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த அவன் அம்மா, தன் மகன் மவுனமாகத் தன் முகத்தையே பார்ப்பதைக் கண்டு, ""என்ன சாம் அப்படிப் பாக்கறே? உன் அம்மா பழைய அம்மா தான்,'' என்றாள் புன்சிரிப்போடு.
""அதிலேம்மா, உன் வைரத் தோடைப் பார்த்தேன். உலகிலேயே மிக உறுதியான பொருள் வைரம்தானாம். என் பாடத்திலேயே வருது. இத்தனூண்டு சின்னக் கல்லுக்கு அத்தனை உறுதியான்னு வியப்பாக இருந்தது அதான்...'' என்றான் சாம்.
""உண்மைதான். கண்ணாடிகளை வெட்ட வைரத்தினால் தான் முடியும். யந்திரங்களில் தேய்மானத்தைத் தவிர்க்க வைரக் கற்களையே பயன்படுத்துகின்றனர். கைக் கடிகாரத்தில் 16 ஜூவல்ன்னு போட்டிருக்கே, அதன் அர்த்தம் என்ன? இயற்கை வைரமில்லாவிட்டாலும், சிந்தடிக் செயற்கை வைரக்கற்களை யந்திர உராய்வு ஏற்படும் பகுதிகளில் பதித்திருப்பர். இன்னும் வைரங்களைப் பத்தி எவ்வளவோ சொல்லலாம் அது உறுதிமட்டுமல்ல, விலை உயர்ந்ததும் கூட. சரி! அப்பா வர நேரமாச்சு,'' என்று சப்பாத்திக்கு சாகு தயாரிக்க எழுந்தாள்.
பள்ளிக்கூட லைப்ரரியில் போய், வைரம் பற்றி மேலும் தகவல்களை அறியப் புத்தகங்களைப் புரட்ட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான் சாம். அவன் அப்பாவும் உள்ளே வந்தார். ஏதோ பிரச்னையோடு வருகிறார் என்பதை அவர் முகம் கூறியது.
""உடைகளை களைந்து, உடல் சுத்தம் செய்து, மாற்றுடையணிந்து வெளியே வந்து உட்கார்ந்தவரிடம், ""என்ன ப்ராப்ளம் அப்பா?'' என்று கேட்டான் சாம்.
""போலீஸ் இலாகாவே பிராப்ளம்களை சால்வ் பண்ணத் தானே இருக்கு. இன்று காலையில் வைர மாளிகை வையாபுரியிடம் துப்பாக்கி முனையில் இரு முகமூடிக் கொள்ளையர் ஒரு வைர நெக்லஸை பறித்துக் கொண்டு போய் விட்டனர். அதன் விலை ஒரு கோடி பெறுமாம். நல்லவேளை, வையாபுரி அதை இன்ஷ்யூர் செய்திருக்கிறார்; நஷ்டமில்லை: ஆனால், "அந்த விலை மதிப்பற்ற பொக்கிஷம் போயிற்றே' என்று புலம்புகிறார். எங்கள் இலாகாவுக்கு ஒரு சவாலாக இருக்கிறது இந்தப் பகல் கொள்ளை,'' என்றார்.
""அதெப்படி, காலை வேளையில் கடையில் யாருமில்லையா?'' என்று சாம் கேட்டான்.
""உனக்கு எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன். அப்பத்தான் புரியும். இது கொஞ்சம் சிக்கலான கேஸ்,'' என்றார் அப்பா.
""சப்பாத்தி ஆறிப் போறது. அதைச் சாப்பிட்டு கொண்டே அப்பாவும், பிள்ளையும் கொள்ளைக் கேஸை அலசலாம்,'' என்று ஆணை பிறப்பித்தாள் அம்மா. அடுக்களை அதிகாரத்தை மீற முடியுமா?
டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவைச் சுவைத்துக் கொண்டே விவரித்தார் சாமின் அப்பா.
""வையாபுரியோட நகைக்கடை பிரபலமானது; கடையில் மானேஜரும், இரண்டு சிப்பந்திகளும்தான். மானேஜர் லீவிலே போயிருக்கார். ஒரு சிப்பந்தி வசூலுக்கு வெளியே போயிருக்கான். இன்னொரு ஆள் வீட்டிலே ஏதோ விசேஷம்னு முதல் நாளே பர்மிஷன் வாங்கிட்டு போயிருக்கான். முகமூடிக்காரங்க வந்த போது வையாபுரி மட்டும் தான் கடையிலே இருந்திருக்கார்.
""இந்தக் கேஸிலே இன்னும் பல சுவையான தகவலெல்லாம் இருக்கு. எனக்கே இப்போது தான் தெரியுது. நாம் வைரக் கடையிலே ஷோ கேஸிலே பார்க்கிறோமே அதெல்லாம் நிஜமான வைர நகைகள் இல்லே. போலி! கண்ணாடிக் கற்களால் உருவாக்கப்பட்டவை. வாங்குபவர் எந்த டிசைனை விரும்புகிறாரோ, அதன் நிஜத்தை, உள்ளே இரும்புப் பீரோவிலிருந்து பிறகு எடுத்து வந்து தருவார்களாம். இரவு கடை மூடும் போது, ஷோ கேஸிலுள்ள போலியை இரும்புப் பெட்டியிலுள்ள அதே போன்ற நிஜ நகையின் அருகில் வைத்துப் பூட்டுவார்களாம். மறுநாள் ஷோ கேஸில் போலி மட்டுமே வரும். இது நடைமுறை!''
""அப்படியா...?'' வியந்தான் சாம்.
""கடை திறந்ததும் வையாபுரி, கடையின் பின்னால் உள்ள ஹாலில் இருக்கும் இரும்பு பீரோவிலிருந்து ஷோ கேஸில் வைக்க, போலி கண்ணாடிக் கல் நெக்லஸை எடுத்துக் கொண்டு திரும்பி இருக்கிறார். அப்போதுதான் முகமூடிக்காரர் இருவரும் திருடும் பிரவேசம் செய்திருக்கின்றனர்.
""வையாபுரி வெலவெலத்துப் போய் விட்டார். கர்ச்சீபீனால் மூக்கையும், வாயையும் மூடிக் கொண்டிருந்தார்களாம் திருடர்கள். கையில் நெக்லஸுடன் திகைத்துப் போய் நின்ற வையாபுரியிடமிருந்து அதைப் பறிக்கப் பார்த்திருக்கிறான் ஒரு திருடன். அது போலி என்று அறிந்து வெறுப்போடு அதை கல் தரையில் வீசி விட்டு, துப்பாக்கியை அவர் உடலில் அழுத்தி பீரோவை திறக்கச் செய்து, நிஜ நெக்லஸை எடுத்துக் கொண்டு ஓடிப் போயிருக்கின்றனர். பீதியில் அவரால் கூச்சல் போடக் கூட முடியவில்லையாம்.
""இந்த அசல்-நகல் விஷயம் திருடர்களுக்கு எப்படித் தெரிந்தது? யாரோ இந்த ரகசியம் அறிந்தவர்கள் தான் திருட்டுக்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும்,'' என்றான் சாம்.
""வையாபுரியும் கூட இதையே தான் கூறி ஆச்சர்யப்படுகிறார். தொழில் ரகசியமான இது, பிறருக்கு தெரிய வழியே இல்லை. சாதாரண மனிதர்களால் எது போலி நெக்லஸ், எது நிஜ வைர நெக்லஸ் என்று கூற முடியாதாம். அந்த ரகசியம் அதைச் செய்த பொற்கொல்லர், இவர், இவர் மானேஜர் மூவருக்குத் தான் தெரியுமாம்.. "பொற்கொல்லரும் மானேஜரும் ரொம்ப நம்பிக்கையானவர்கள். இருபது வருஷமாக என்னிடமிருக்கிறார்கள். அவர்களை சந்தேகிக்க முடியாது,'' என்கிறார்.
""மர்மமாகத்தானிருக்கிறது...'' என்று யோசனையிலாழ்ந்தான் சாம்.
அவன் சிந்தனையைக் கலைக்க விரும்பாத அவன் அப்பா, படுக்கச் சென்றார்.
மறுநாள் காலை சாமிடம் அவன் அப்பா "" என்ன வைரத் திருட்டு பற்றி ஏதாவது துப்புத் துலங்கியதா?'' என்று கேட்டார்.
""வையாபுரியின் கடையை ஒருமுறை பார்த்த பிறகுதான் எதையும் திட்ட வட்டமாகக் கூற முடியும்,'' என்றான் சாம்.
அலுவலகம் போகும் வழியில் வைரமாளிகைக்கு விஜயம் செய்யலாம் என்றார் அப்பா. அதன்படியே சாமை பத்து மணி வாக்கில், கடைக்கு அழைத்துப் போனார். சிறிய கடைதான். விலை மதிப்புள்ள வைர நகைளைப் பாதுகாப்பாக வைக்க, பின்னால் இருந்த அறை ரொம்ப பந்தோபஸ்தாகக் கட்டப்பட்டிருந்தது. சுவர்களும் தளமும் பாலீஷ் செய்த கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருந்தன. மூன்று இரும்புப் பீரோக்களைத் தவிர அந்த காப்பக அறையில் தரை விரிப்புக் கூட இல்லை.
அந்த ஸ்டராங் ரூமை நோட்டமிட்டு விட்டு அப்பாவுடன் கிளம்புமுன், திருடர்கள் தரையில் வீசிய போலி நெக்லஸையும் காண்பிக்கச் சொல்லிப் பார்த்தான் சாம். பிறகு வையாபுரியிடம் விடை பெற்று, அப்பாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான்.
""என்ன ஷெர்லக்ஹோம்ஸ்! உங்கள் அபிப்பிராயமென்ன? திருடனைப் பிடிக்க ஏதாவது க்ளு கிடைத்ததா?'' என்று கேட்டார் அவன் அப்பா.
""வைர நெக்லஸ் திருடு போகவே இல்லை அப்பா! அது வையாபுரியிடம் தான் இருக்கிறது!'' என்றான் துப்பறியும் புலியான சாம்!
""என்ன...என்ன...?'' என்று பரபரத்தார் அவர். ஏன் நீங்களும் தானே?
சாம் எப்படி கண்டுபிடித்தான் என்று உங்கள் மூளையை கசக்கி யோசியுங்கள் செல்லூஸ்.

விடைகள்:
வையாபுரிக்குத் தொழிலில் நஷ்டம். நெக்லஸ் மீதுள்ள இன்ஷ்யூரன்ஸ் பணத்தைப் பெற நாடகமாடியுள்ளார். திருடர்கள் போலி நகை என்று அந்தக் கண்ணாடிக்கல் நெக்லஸைக் கல் தரையில் வீசி இருந்தால் அதில் கற்கள் உடைந்து, சிதறிப் பாழாகி இருக்கும். வைரம் மட்டுமே அபார உறுதியுடையது. கல் தரையில் வீசினாலும் சிதறாது. சாம் பார்த்த போலி நெக்லஸ் புதுமை மறையாமல் அப்படியே இருந்தது. ஆகவே, அது தரையில் வீசப்பட வில்லை; திருடர்களே வரவில்லை. நிஜ வைர நெக்லஸை ஒளித்துவிட்டு, இப்படியொரு கொள்ளைக் கதையைக் கூறி இன்ஷ்யூரன்ஸ் பணம் ஒரு கோடி ரூபாயை பெறத் திட்ட மிட்டிருக்கிறார் வையாபுரி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.