Advertisement
அதிமேதாவி அங்குராசு!
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

14 டிச
2012
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

மண் கேக் சாப்பிட்ட மக்கள்


ஜமைக்காவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டித்தீவுதான் ஹெயிட்டி. இது தற்போது அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகின்றனர். ஹெயிட்டியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால், அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக, எப்போது சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே அது நினைவில் இல்லை.
குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகின்றனர். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்த நாள் பட்டினி; அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண் கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கின்றனர். விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹெயிட்டியை கடுமையாக பாதித்திருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடு களையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளைநிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள்தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டனர். நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980ல் ஹெயிட்டியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால், விலைதான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.
போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய், இறுதியில் பிச்சையெடுக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களும், குழந்தைகளும், வயதானவர் களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக, ஹெயிட்டி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண் கேக் சாப்பிடும் செய்திகளும், படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பொருளா தாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாதவையே.

இயற்கை அடிச்சா இருக்க முடியுமா?


சமீப காலமாக உலகச்சுற்றுச் சூழலை உற்றுக் கவனித்தால் ஒன்று நன்றாகப் புலப்படும். இது இயற்கையின் சீற்றம் உலகின் பல பகுதிகளிலும் வறட்சி, வெள்ளம், புயல், பூகம்பம், கடல் கொந்தளிப்பு, காடுகள் தீப்பற்றி எரிதல் என்று அழிவு தொடர்பான செய்திகளை பார்க்கலாம். இதற்கெல்லாம் காரணம் பசிபிக் கடலில் ஓடும் வெப்ப நீரோட்டத்தின் மாறுதல்கள்தான் என்கின்றனர். வெப்ப நீரோட்ட விளைவை, "எல் நினோ' என்றும், குளிர் நீரோட்ட விளைவை, "லா தினா' என்றும் அழைக்கின்றனர்.
1977ம் ஆண்டு பசிபிக் கடல் பகுதியில் கடல் மட்டத்தின் வெப்பநிலை இயல்பான அளவை தாண்டி, வழக்கத்தை விட வெப்ப நீரோட்டம் பொங்கி எழுந்தது. இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 லட்சம் மடங்கு அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதே போலத்தான் அழிவையும் ஏற்படுத்தியது. அப்போது ஆரம்பித்த அழிவுப்படலம் இன்னமும் முடிந்த பாடில்லை. பசிபிக் கடலின் வெப்ப மாற்றத்தால் கடல் தாவரங்கள் அழிந்தன. கடல் மீன்கள் மாயமாய் மறைந்தன. மீன்களை நம்பி உயிர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்கள் உயிரை விடத் தொடங்கின. 70 கடல் சிங்கங்கள் பட்டினியால் செத்து கரை ஒதுங்கின. பெரிய பெரிய திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதெல்லாம் முன்பு அடிக்கடி கேள்விப் படாத ஒன்று. இப்படி பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றம் உலகத்தின் பல பாகங்களின் தட்ப வெப்ப நிலையை மாற்றியது. ஆசியாவின் மத்திய பகுதியில் அனல் பறந்தது. பிரேசில் காடுகள் தீப்பிடித்து எரிந்தன. மழை இல்லாமல் விவசாய நிலங்கள் கருகின. "எல் நினோ' என்பது வெறும் வறட்சியை மட்டுமே கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அதற்கடுத்த வருடமே அடித்து பெய்த தொடர்மழை பல நாடுகளில் வெள்ள, சேதத்தை ஏற்படுத்தியது. பயிர்களும், உயிர் களும் மடிந்தன. பஞ்சம் தலை தூக்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சரி, பசிபிக் கடலில் ஏற்படும் இந்த சின்ன மாற்றம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் கட்டாயம் ஏற்படுத்தும். வறட்சி என்றால் மழையே பெய்யவில்லை என்று அர்த்தமில்லை. வழக்கமாக பெய்யும் மழையில் 10 சதவீதம் குறைந்தால் கூட வறட்சிதான். அதே போல் 10 சதவீதம் அதிகமாக மழை பெய்தால் வெள்ளம்தான். காடுகளை அழிப்பது, நகர மயமாக்கல் போன்ற காரணங் களால்தான் பருவமழை தவறி விட்டது. ஒரு மரத்தை வெட்டினால் கூட அடுத்த வருடம் துளித்துளியாக மழை குறையும் என்கின்றர்.
"எல் நினோ' பிரச்னை மட்டுமல்ல... வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலை புகை என்று மேலும் மேலும் சுற்றுச்சூழலை மோசமாக்கி அண்டார்டிகா பனி படலத்திலும் கூட கரி படர்ந்துள்ளது. நாகரிகத்திற்கு நாம் கொடுத்த விலைதான் இது. இயற்கையை நாம் கிள்ளுக்கீரையாக நினைத்து இஷ்டத்துக்கு பாழ்படுத்திய தன் விளைவுதான் இத்தனை பாதிப்பு. இயற்கையை பாழ்படுத்தாதீர்கள். அது பதிலடி கொடுத்தால் நம்மால் தாங்க முடியாது.
மரம் நடுவோம்; இயற்கையை காப்போம்!

கலாம் காலம்!


இந்தியாவில் அதிகம் பேசப்படாத தலைவர் திப்பு சுல்தான் என்பது கலாமின் கருத்து. காரணம் 1799-ல் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த போது திப்புசுல்தானிடம் ராக்கெட் டெக்னாலஜி இருந்ததாம். இதைக் குறிப்பிட்டு சில இடங்களில் பேசியிருக்கும் கலாம், "உண்மையில் உலகம் ராக்கெட் ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கும் முன்பே அதை முழுமையாகக் கண்டறிந்த நபர் நம்மிடம் இருந்திருந்திருக்கிறார்' என்றால் ஆச்சரியமாக இல்லை!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!


இது "ராயல் கச்சோடி' செய்முறை அறியும் நேரம்.
தேவையானவை:
மேல்மாவுக்கு... மைதா- அரைகப், கோதுமை மாவு - 2 கப், எண்ணெய்-2 டீஸ்பூன்.
பூரணத்துக்கு... ஊற வைத்த பச்சைப்பயறு-அரை கப், பொடித்த முந்திரி, திராட்சை, கசகசா, உடைத்த தனியா, மிளகு-தலா 1 டீஸ்பூன், மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்.
எண்ணெய் பொரிப்பதற்கு.

எப்படி செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைக்கவும். பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருள்களைக் கரகரப்பாக அரைத்து, 1 டீஸ்பூன் எண்ணெயில் வதக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை குட்டிக் குட்டி பூரிகளாக செய்து, அதில் பூரணத்தை ஸ்டப் செய்து, உருட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். விருப்பப்பட்டால் தயிர் அல்லது கிரீம், கொத்தமல்லித் தழை கொண்டு அலங்கரிக்கலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.