அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

நம்மைப் போன்ற சாதாரணர்களின் ரசிப்புத் தன்மை, பொழுதுபோக்கு, ஆர்வம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுபவர் லென்ஸ் மாமா!
அவரது வீட்டுக்குப் போன போது, "டிவிடி'யில், எப்போதோ, எங்கோ நடந்த குத்துச்சண்டையை ரசித்தபடி, "ம்... அப்படிப் போடு... விடாதே... அமுக்கிப் பிடி...' என குரல் கொடுத்தபடி, சோபாவில் அமர்ந்து, இவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த கோரத்தை சகிக்க முடியாத நான், ரிமோட்டால், "ஆப்' செய்தேன்... முறைத்த மாமாவிடம், "இது என்ன மாமா விளையாட்டு... ஒருத்தன் முகத்தை ஒருத்தன் பிளக்குறான்... மண்டையை உடைக்கிறான்... அலேக்காகத் தூக்கி, ஆளையே வீசுகிறான்... சுத்த காட்டு மிராண்டித்தனம்...' என்றேன்.
"இதைக் காட்டுமிராண்டித்தனம் என்றால், கால்பந்து, கார் ரேசிங், இவை எல்லாம் என்ன சாதுவான கேம்சா? இதை நான் கேட்கவில்லை... என் கதாநாயகன், குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி கேட்கிறார்.
"ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் ஒருமுறை முகம்மது அலியைப் பேட்டி எடுத்துப் போட்டிருந்தாங்க... பேட்டியில தான் இப்படி கேட்டு இருக்காரு...' என்றவரிடம், "முகமது அலியப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப நாள் ஆசை... அவரப் பத்தியும், அவர் கொடுத்த பேட்டி பற்றியும் சொல்லுங்களேன்...' என்று கேட்டேன்.
சொல்ல ஆரம்பித்தார் லென்ஸ் மாமா...
முகமது அலிக்கு இப்போ வயது 70 ஆயிடுச்சு... 20ம் நூற்றாண்டின் இணையற்ற ஸ்போட்ஸ்மேன் இவர். மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்.
அமெரிக்காவில் ஒரு பெயின்டருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல.... ஒரு கவிஞரும் கூட! கருப்பு இன மக்களின் உரிமைக்காக போராடுபவர்... கொடை வள்ளல். ஒன்பது குழந்தைகளுக்கு தந்தை; ஆறு குழந்தைகளுக்கு தாத்தா! கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியவர்.
ஒசாமா பின்லேடன் திடீரென்று புகழ் பெற்றதற்கு முன் வரை, உலகிலேயே மிகவும் அறியப்பட்ட, அனைவருக்கும் உடனே அடையாளம் தெரிகிற பிரபலமான முதல் இஸ்லாமியர் இவர். கிறிஸ்தவராக இருந்தபோது, இவரது பெயர் காஷியஸ் க்ளே.
இவரைப் பற்றி இதுவரை மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆசிரியர் குழு, இவரை சந்திக்கச் சென்ற தினம் செப்., 11ம் தேதி. பேட்டி ஆரம்பிப்பதற்கு முன் தான், தீவிரவாதிகள் தாக்குதலால் நியூயார்க் நகரத்தின், 110 மாடி கட்டடம் தகர்க்கப்பட்டு, தரை மட்டமானது, "டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அந்த சூழ்நிலையிலும் பேட்டி அளித்துள்ளார் அலி. ஆனால், அவ்வப்போது, "டிவி' ஸ்கிரீனை நம்ப முடியாதவராக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவர், "இந்த மாதிரி கொலைகளை எப்போதுமே நியாயப்படுத்த முடியாது. நம்பவே முடியவில்லை. ஏதும் அறியாத ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொல்வதை நான் ஆதரிக்கவே மாட்டேன்! இஸ்லாம், அமைதியின் மதம். தீவிரவாதத்தையோ, மக்களை கொல்வதையோ இஸ்லாம் அனுமதிக்காது... இவ்வளவு பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களை கொலை செய்தவர்கள், உண்மையான முஸ்லிம்கள் கிடையாது. இஸ்லாமியர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் தகுதி கிடையாது...' என்று கூறினாராம்!
அதே பேட்டியில், அவர் மேலும் சொல்கிறார்... "காஷியஸ் க்ளேயாக இருந்த நான், 1964ல், இஸ்லாமிய மதத்திற்கு மாறி, முகம்மது அலி ஆனேன். அப்போது நான் முஸ்லிம் என்றால் அமெரிக்காவில் அது நகைச்சுவையாக இருந்தது. என்னுடைய மதம், என் நம்பிக்கை என்பது சுவர்க்கத்திற்கு செல்லும் டிக்கெட். நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கப் போகிறோம். நாம் செய்திருக்கும் நல்லவை அதிகமாக இருந்தால் சுவர்க்கம், கெட்டவை அதிகமாக இருந்தால் நரகம்...' என்று கூறினாராம்.
பெண்களிடம் இவருக்குள்ள ஈடுபாடு பற்றி கேட்டபோது, "நான் பார்ட்டிகளுக்குச் செல்லும்போது, ஒரு தீப்பெட்டியை கண்டிப்பாக எடுத்துச் செல்கிறேன். டாப் கிளாஸ் அழகிகளை மதிக்கிறேன். அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு எண்ணம் வந்தால், அது பாவம் என எண்ணி, உடனே ஒரு தீக்குச்சியை கொளுத்தி விரலில் பிடித்துக் கொள்வேன். எவ்வளவு நேரம் எரியுமோ அதுவரை தீக்குச்சியை பிடித்துக் கொள்வேன். நகம், எண்ணமாகி சுடும்! அப்போது, அந்த உஷ்ணம் ஓடிப்போய் விடும்!' என்றார்.
பார்க்கின்ஸன் என்ற நரம்புத் தளர்ச்சி நோயால் இப்போது முகமது அலி பாதிக்கப் பட்டிருக்கிறார். "எனக்கு மட்டும் ஏன் இந்த வியாதி என்று நான் யோசிப்பதில்லை. எல்லாமே கடவுள் கொடுப்பது. பல நல்லவையும் கொடுத்திருக்கிறார். அவர் நடத்தும் சோதனை இது...' என்றாராம் அலி!'
— இப்படி மூச்சு விடாமல் கூறி முடித்தார் லென்ஸ் மாமா!
***

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.
அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்?
இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு, முன்பு போல் வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம். இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!
இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில் தனக்கு சமமாகவோ, தனக்குப் போட்டியாகவோ வந்துவிடக்கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவை துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.
அவற்றில் ஒன்றாக, நான் சமீபத்தில் கேள்விப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஜாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர், யாருக்கும், யாருக்கும் நல் உறவு என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஏராளமாகப் பணம் ஒதுக்கி உள்ளதாம்!
இந்த பணத்தை உதவித் தொகையாக இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம்! இதேபோல, மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்.
"யோவ் மணி... இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?
இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம். யாருக்கு யார் எதிரி என்பதை தெரிந்து, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டிமேட்டாக' நாட்டைத் துண்டாடுவதுதான் அவர்கள் நோக்கம்!
இதன் முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. தம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றுள்ளனர்.
இதே செயல்முறையைப் பயன்படுத்தி, மற்ற மாநிலங்களிலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!
இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கிவிட்டது; இனியும் தூங்காதே!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Das - London,யுனைடெட் கிங்டம்
19-டிச-201201:15:35 IST Report Abuse
Kumar Das அமெரிக்காவை பற்றிய கட்டுரை, எனது மதிப்பிற்குரிய அந்துமணி அவர்களின் கருத்தா அல்லது வேறு எவரேனும் கூறியதா? இது எனக்கு USA & USSR கால ஸ்டார் வார் நாட்களை ஞாபகபடுத்துகிறது. தற்போது உலக ஒழுங்குகளும் உலக அரசியல் களங்களும் மாறிவிட்டன. அமெரிக்கா இந்தியாவை நண்பனாக பார்க்க ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. சீனாவின் அசுர வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம். இந்திய மக்களுக்கோ அரசுக்கோ பிற நாடுகளை ஆக்ரமிக்கும் எந்த எண்ணமும் இல்லை. ஆனால் சீனாவை அதன் நோக்கங்களை வளர்ந்த நாடுகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிக வேகமாக வளர்ந்து வரும் சீன ராணுவம் ஆசியா முழுவதுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை மறுக்க முடியாது. அமெரிக்காவின் துணை இன்றி நம்மால் ஒருபோதும் சீனாவை வெற்றி கொள்ள அல்லது சமாளிக்க முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை . அதை மத்திய அரசும் நன்றாக உணர்ந்துள்ளது என்பதை சமீபகால வெளியுறவு கொள்கைகளில் தென்படும் மாற்றத்தை கொண்டு உறுதிபடுத்தலாம். எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவை துண்டாட நினைப்பது சீனாவே.
Rate this:
Share this comment
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201218:50:56 IST Report Abuse
Poornima மறைமுகமாக சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, பின்னர் நாட்டாமை பண்ண நம் நாட்டுக்குள் வந்து பின்னர் நம்மையே அடிமை ஆக்கி விடுவார்கள். நமது நாட்டை விற்றுவிட நமது அரசியல்வாதிகளும் எந்நேரமும் தயாராகத் தான் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Shakthi - Puducherry,இந்தியா
17-டிச-201218:49:57 IST Report Abuse
Shakthi அமெரிக்க காரனை ஏன் குற்றம் சொல்றீங்க? இங்க இருக்க சில பல கேடுகெட்ட அரசியல் வியாதிகளே இத்தகைய செயல்களை செய்து வருகின்றனரே? நான் ஜாதி அரசியல் மொழி அரசியல் பற்றி குறிப்பிடுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
17-டிச-201216:40:29 IST Report Abuse
Divaharan தண்ணீர் பிரச்னையையும் இது மாதிரி பெரிதாக்கலாம் ?
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Coimbatore,இந்தியா
17-டிச-201211:21:59 IST Report Abuse
Subramaniam இது ஒன்றும் சாதாரண சிறிய விஷயம் அல்ல. தினமலர் போன்ற பெரிய பத்திரிக்கைகள் ஒன்றிணைந்து இந்த செய்தியை தலையங்கமாகவும், கட்டுரைகளாகவும் மக்களுக்கு எல்லோரிடமும் சென்றடைய செய்ய வேண்டும். எதோ ஒரு மூலையில் வெளியிடுவதால் இது நீர்த்து போக நூறு சதவீத வாய்ப்புள்ளது. தயவு செய்து பத்திரிக்கைகளும், இன்ன பிற ஊடகங்களும், இதை செய்ய செய்ய மன்றாடுகிறேன்...கவனிக்குமா தினமலர்...???
Rate this:
Share this comment
Cancel
TUM - chennai,இந்தியா
16-டிச-201216:41:37 IST Report Abuse
TUM Not only America, some waste people calculating how much youth in India, after some years what we will, so they are entering india by fixing companies and giving job opportunities for our country people, example Cunning Japan. because they cant stand alone in future, so they say India is our fri country (even we dont say), Japan company, or any country companies we should remove from our land, we should ourself, we can do, we are Indian, if we make unique we will top as soon.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.