அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

அன்புள்ள அம்மாவுக்கு—
என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறு வயது முதலே வீட்டு வேலை செய்து வருகி@றாம்.
என் அக்காவுக்கு, 23வது வயதில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவள். என் தங்கைக்கு திருமணம் ஆன பின், இந்த ஐந்து வருடத்தில், யாரோடும் பேசுவதும் இல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே போனாலும், அம்மா பாட்டி வீட்டிற்கு மட்டும் போய் வருவேன்.
திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். என் தம்பி திருமணம் செய்து கொள்வதற்காக, என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி நச்சரித்தான். "உன்னால் நானும் திருமணம் செய்ய முடிய வில்லை...' என்று, கூறியதால், அவசர அவசரமாக தாய்மாமனின் தம்பிக்கு, என்னை கட்டாயப் படுத்தி, திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் எங்கள் ஊரில் நடந்தது. திருமணம் முடிந்து, ஐந்து நாள் தான் என்னோடு எங்கள் ஊரில் இருந்தான். பிறகு, "சென்னையில் வீடு பார்த்து, அழைத்து போகிறேன்...' என்று சொல்லி போனான்; போனவன் தான், எட்டு மாதமாகியும், "அப்போ வருகிறேன்; இப்போ வருகிறேன்...' என்று கடைசி வரைக்கும், வரவே இல்லை.
என்னை திருமணம் செய்தவனுக்கு, அப்பா, அம்மா இல்லை. அக்கா, இரண்டு தம்பிகள் மட்டும், வேறு மாநிலத்தில் உள்ளனர். திருமணத்திற்கு மட்டும் எங்கள் ஊருக்கு வந்தனர். என்னை திருமணம் செய்தவனின் பழக்க வழக்கம் எதுவும், என் பெற்றோருக்கோ, எனக்கோ தெரியாது. என் தாய் மாமன் தான், எனக்கு திருமணம் செய்து வைத்தான். சென்னையில் வேலை. திருமணத்திற்கு பின், சென்னையில் தான் இருப்பான் என்று, பிறகு தான் தெரிந்தது.
அவனுக்கு ஏற்கனவே, ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளது என்று, அந்த பெண்ணே எனக்கு போன் செய்து கூறினாள். இதை பற்றி, என் தாய்மாமனிடம் கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று, மழுப்பி விட்டான்.
பணத்திற்காக ஏமாற்றி, என்னை திருமணம் செய்து வைத்து விட்டான் என் தாய்மாமன். இனி எனக்கு, அவனோடு வாழ்க்கை வேண்டாம் என்று பஞ்சாயத்து மூலம் பேசி, முடிவு செய்தனர். இனி எனக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நஷ்ட ஈடாக எனக்கு, 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், பஞ்சாயத்து தலைவர் கூறினார்.
இதற்கு, என் தாய்மாமன் பொறுப்பேற்று சம்மதித்தான். ஒரு வருடமாகியும், சட்டப்படியோ, முறைப்படியோ இன்னும் விவாகரத்து பத்திரமும், நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய பணமும், தர மறுக்கிறான்.
என்னை திருமணம் செய்தவனுக்கு, எங்கள் ஊரில் சொத்து உள்ளது. அதற்கு பொறுப்பு, என் தாய்மாமன் தான். என் பெற்றோரும், என் கூட பிறந்தவர்களும், என்னை பற்றியோ, என் வாழ்க்கையைப் பற்றியோ எதையும் கண்டு கொள்வது இல்லை. எல்லாரும் அவர்கள் குடும்பம், குழந்தைகள் என்று இருக் கின்றனர். நான் மட்டும், தனி மரமாகவும், அனாதையாகவும் இருக்கிறேன்.
நான் இருக்கும் ஊரில், என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர். முதலாமவர், டிரைவர், வயது 39. ஐந்து வருடமாக அவரை எனக்கு தெரியும். திருமணம் ஆனவர், விவாகரத்து ஆகிவிட்டது. சற்று குள்ளம்; படிப்பு இல்லை.
அடுத்தது, பிளம்பர். வயது 35. என்னை விரும்புகிறார். கருப்பு, பல் எல்லாம் கறையாக இருக்கும். "உனக்கு நகை போட்டு, திருமணம் செய்து கொள்கிறேன். ராணி மாதிரி பார்த்து கொள்வேன்...' என்று கூறினார். அவர் குணம் பிடித்தது; ஆனால், அவர் பல் பிடிக்கவில்லை.
அடுத்தவர், கட்டடத் தொழிலாளி, வயது 23. என்னை விட ஆறு வயது சிறியவன். பார்ப்பதற்கு, 30 வயது போல் இருக்கும். நான் ஒல்லியாக, உயரம் கம்மியாக இருப்பேன். பார்ப்பதற்கு, 20 வயது பெண் போல் இருப்பேன். எனக்கு, இவனை பிடித்துள்ளது.
என்னை விட சிறியவன் என்று, என் மனசாட்சி உறுத்துகிறது. அவன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். ஓடி போய் விடலாம் என்றும், பிறகு இரண்டு வருடம் போனால் சரியாகி விடும் என்றும் கூறுகிறான். அவனும் விரும்பு கிறான்; நானும் விரும்புகிறேன்.
ஏற்கனவே வாழ்க்கையை தொலைத்தவள். மறுபடியும் அப்படி ஏதாவது ஆனால், நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
எந்த ஒரு முடிவையும், என்னால் எடுக்க முடியவில்லை. நீங்கள் தான் அம்மா, எனக்கு நல்ல பதில் அளித்து, தெளிவு பெற வைக்க வேண்டும்.
உங்கள் முடிவை எதிர்பார்க்கும்,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
நீ, வேதனை மற்றும் குழப்பத்துடன் எழுதிய கடிதம் கிடைத்தது. நீ, உன் அக்கா மற்றும் தங்கை மூவருமே, வீட்டுவேலை செய்யும் பெண்கள். யார் முதலில் திருமணம் செய்து கொள்வது என்று, உங்கள் மூவருக்கிடையே போட்டி பொறாமை நிறைய இருந்திருக்கிறது.
திருமணமே வேண்டாம் என்றிருந்தாய். தம்பி திருமணம் செய்வதற்காக, உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினான் என்பதெல்லாம், நீ பூசி மெழுகும் பொய்கள். திருமணத்திற்காக ஏங்கியிருக்கிறாய். தகுந்த வாழ்க்கைத் துணை வேண்டும் என, மனதார அபிலாஷித்திருக்கிறாய்.
ஏதோ ஒரு கெட்ட நோக்கத்துடன், உன் தாய் மாமன் ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள தாய் மாமன் தம்பிக்கு உன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்திருக்கிறான். அரபு ஷேக்குகள், இந்தியா வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்வது போல, திருமணமான ஐந்தே நாள், உன்னுடன் தாம்பத்யம் நடத்தியிருக்கிறான் உன் கணவன். ஏற்கனவே, திருமணம் ஆன ஒருவனை மணந்திருக்கிறாய். உனக்கும், அவனுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது.
வீட்டு வேலை செய்யும் பெண்தானே நீ என்ற இளக்காரம், உன் தாய்மாமனுக்கு. உன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்தால், ஒன்றும் பெரிய பிரச்னை வராது என, நம்பியிருக்கிறான். ஆனால், நீ பஞ்சாயத்திடம் முறையிட்டு, நஷ்ட ஈடு, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் விவாகரத்து விடுதலை பத்திரமும் தர ஒப்புக்கொள்ள வைத்துள்ளாய்.
ஆனால், ஒப்புக்கொண்டபடி, நஷ்ட ஈடும், பத்திரமும் தர மறுக்கிறான் உன் கணவன். உன் கணவனுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறான் உன் தாய்மாமன். பஞ்சாயத்து தீர்ப்பை நிறைவேற்றாமல், தாமதப்படுத்தும் உன் தாய்மாமனின் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கலாம். உன் ஊரில் உள்ள கணவன் சொத்தை, உன் கணவன் அனுபவிக்காமல் தடுக்க முடியும் பஞ்சாயத்தால்.
உன்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் விரும்புவதாக எழுதியிருக்கிறாய்.
முதலாமவர், உன்னை விட ஒன்பது வயது மூத்தவர். என்ன காரணத்துக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார்? இவர் உனக்கு பொருத்தமானவர் இல்லை. மூன்றாமவர், உன்னை விட ஆறு வயது இளைஞன். உங்கள் திருமணத்திற்கு, அவனது வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதற்காக, ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது, உசிதமான காரியமில்லை. திருமணமான சில நாட்களில், மூன்றாமவனுக்கு, சலித்து போய் விடுவாய். இரண்டாமவர் பிளம்பர். வயது 35. இவரே, உனக்கு பொருத்தமானவர். பற்களில் கரை இருந்தால், பல் மருத்துவரிடம் சென்று, "ஸ்கேலிங்' செய்து கொள்ளலாம். வயது பொருத்தமும் இருக்கிறது. இவருக்கு, இது முதல் திருமணமும் கூட.
உன்னை திருமணம் செய்வதற்கு, பலத்த போட்டி இருக்கும் போல தெரிகிறது. நீ இரண்டாமவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டால், மீதி இருவர், உன் திருமணத்தை தடுக்க ஏதாவது பிரச்னை செய்வர். உன் முடிவை அவர்களிடம் இதம்பதமாய் பேசி, போட்டியிலிருந்து சமாதானமாய் விலகிப் போகச் சொல். உன்னை திருமணம் செய்து கொள்ள, புதிதாக பலர் முளைக்கக்கூடும். அப்படி யாரும் முளைக்காத வண்ணம் பார்த்துக் கொள்.
இரண்டாமவருடன் கூடிய உன் திருமணத்தை, பஞ்சாயத்து தலைமையில் நடத்து.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
22-டிச-201213:26:11 IST Report Abuse
Samuel Christopher அமுதா திரு, கல்யாணம் முடிந்த பின் மனதை அலைபாய விடாதீர்கள் எல்லா குடும்பத்திலும் கணவன் மனைவிக்கு இடையில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்,,மற்ற எல்லாரையும் பார்க்கும் பொது நல்லவர்கள் மாதிரி தான் தெரியும் ஏன் தெரியுமா? மற்ற சகோதரர்கள் சொன்ன மாதிரி இக்கரைக்கு அக்கறை பட்ச,,, கிட்ட போனால் தான் தெரியும் மாடு முட்டுமா என்று,,துரத்தில் இருக்கும் பொது எல்லாரும் நன்றாக தான் இருப்பார்கள்,, அது இயற்க்கை ,,ஆனால்,, பக்கத்தில் இருந்து நல்லவர்களாக எல்லா காரியங்களிலும் விட்டு கொடுத்து,, சந்தோசமாக வாழத்தெரிந்தவர்கள் தான்,, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்,, நல்லவர்கள் என்று பேர்வாங்க முடியும்,,, வாழ்க்கையில் சாதிக்கமுடியும்,, நன்கு சிந்தித்து சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் சரியா,, இன்னும் நிறைய எழுதலாம் உங்களின் கேள்விக்கு,,, ஆனால் பொதுவாக இது எல்லா புதுமண தம்பதிகளுக்கு வரக்கூடிய ஒரு எண்ணங்கள் என்று கூட சொல்லலாம் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் "யார் யாருக்கு எங்கேயோ அங்கேதான் வாழ்க்கை அமையும்" அது ஆண்டவனின் அமைப்பு" இதை மனதில் கொள்ளுங்கள் நீங்க சந்தோசமாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்,,,
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
19-டிச-201206:48:18 IST Report Abuse
Prabhakaran Shenoy இவர்கள் விலாசம் எழுதினால் நேராக சென்று பார்க்க வசதியாக irukkum
Rate this:
Share this comment
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
22-டிச-201214:49:18 IST Report Abuse
p.manimaranஇது கண்டிக்க தக்கது....
Rate this:
Share this comment
Cancel
hasan - koothanallur,இந்தியா
19-டிச-201200:53:29 IST Report Abuse
hasan அம்மணி சகுந்தலா கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சி புரிந்து கொள்ளும் ஆற்றல் ஏதுமின்றி வெறும் வாயை மென்று ஆருடம் கூறுகிறார். அரபுநாடுகளில் அரபுகள் இதனை விட நினைத்துகூட பார்க்க முடியாத அட்டகாசங்களை செய்கின்றனர் என்று நான் சொல்லுவதிலிருந்தே இங்கு அரபுக்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அம்மணி...அரபு ஷேக்குகள், இந்தியா வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்வது போல,... என எழுதியுள்ளார். தாயுடன் பிறந்த தாய் மாமனே அதுவும் இந்தியாவில் உள்ளவனையே கண்டு பிடிக்க முடியாத போது..அட்ரெஸ் இல்லாத அரபுக்கு சட்டமும் சமுதாயமும் எப்படி அனுமதி கொடுக்கும்னு யோசிக்கணும்..அரபு ஷேக் கல்யாணம் பண்ணி விட்டு கம்பி நீட்டி விடுவானா? பெண்ணை பெற்றவன் பென்னைக்கொடுப்பவன் :"என் பெண்ணை கல்யானம் பண்ணி நாலு நாளில் விட்டு விட்டு போய்விடு என சொல்லி விடுவானா? ஆலோசனை சொல்லும்போது பொறுப்புணர்வு தேவை..இப்படிக்கு ஹசன் கூத்தாநல்லூர்
Rate this:
Share this comment
Cancel
Amudha Thiru - Chennai,இந்தியா
17-டிச-201217:40:27 IST Report Abuse
Amudha Thiru நான் கல்லூரியில் படிக்கும்போதே ஒருத்தனை ஒரு தலையாக காதலித்தேன். ஆனால் சொல்லவில்லை.எப்போதாவது போனில் மட்டுமே பேசி கொள்வோம். அவனும் என்னை காதலித்ததை 4 ஆண்டுகள் பிறகு தெரிந்து கொண்டேன். கல்லூரி 2 ஆம் ஆண்டில் இருக்கும் போதே, என் தோழி ஒருத்தி அவனையே காதலித்திருக்கிறாள். நான் காதலிக்கவில்லை அவள் தான் உயிரையே வைத்திருக்கிறாள் என்று சொல்லி அவன் மனதை மாற்றி அந்த இருவரையும் சேர்த்து வைத்து விட்டார்கள் என் சில தோழிகள். இது தெரியாமலே அவனை நான் காதலித்தேன். அவனுடைய எண்ணம் செயல்கள் எல்லாம் என்னுடன் ஒத்தே போகும். இந்த நிலையில் கல்லூரி முடிந்தது. எங்கள் போன் பேச்சும் நின்றே போனது. கல்லூரி முடிந்த 1 வருடத்தில், அவனையும் என் தோழியையும் அடிக்கடி தனி இடத்தில சேர்த்து பார்த்ததாகவும் அவர்கள் காதலித்த கதையையும் இன்னொருத்தி சொல்லி அறிந்து கொண்டேன். கொஞ்சம் அழுதேன். பிறகு தேற்றி கொண்டேன். இதற்கிடையில் அதே தோழியை ரயிலில் சந்திதேன். அப்போது தான் அவளுடைய காதல் கதையை சொன்னாள். அவர்கள் காதலித்ததையும் பெற்றோர்கள் சம்மதிக்காததால் விஷம் குடித்து காப்பாற்ற பட்டதையும் சொன்னாள். பிறகு இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்றும். அந்த நிமிஷம் நான் நினைத்தது, விஷம் குடிக்கும் அளவுக்கு இவள் sincere ஆக காதலித்திருக்கிறாள். இவள் காதல் ஜெயிக்க வேண்டும் என்று தான். இது நடந்த சில நாட்கள் கழித்து, அவனே என்னை தொடர்பு கொண்டான். frily ஆக பேசி கொண்ட நாங்கள், ஒரு புத்தாண்டில் மனதில் இருந்ததை எல்லாம் சொல்லி விட்டோம். நீ என்னை காதலிக்கவே இல்லையா என்றான். நான் காதலித்ததையும் அவன் சொல்வதற்காக காத்திருந்ததையும் சொன்னேன். ஆனால் என் தோழிகள் அவன் மனதை மாற்றி அந்த பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் ஒரு வருடம் காத்திருந்துவிட்டு அவளுடைய காதலை ஏற்று கொண்டதாகவும் சொன்னான். இப்போது அவளுடைய பெற்றோர்கள் ஏற்று கொள்ள மறுப்பதாகவும், பேச்சு வார்த்தை கூட இல்லை என்றும் கூறினான். விரும்பினால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், பெற்றோர் சம்மததுடன் என்றான். என் சகோதரி இது சரியாக வராது என்று அறிவுரை கூறினாள். அதனால் அதை விடுத்து arranged marriage செய்து கொண்டேன். எல்லா குடும்பத்தையும் போலவே எங்களுக்கும் சண்டை வரும். அதிலும் தற்சமயம் நான் வேலையை விட்டு வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து கொள்வதால் அடிக்கடி சண்டை வருகிறது. எங்கள் திருமணம் நடந்து அடுத்த 1 மாதத்தில் என் காதலனும் என் தோழியும் ஜோடியாக வந்து அவர்கள் கல்யாண பத்திரிகை வைத்து விட்டு சென்றார்கள். இப்போது என் மனம் குழப்பத்தில் இருக்கிறது. சண்டை வரும் போதெல்லாம், அவனையே திருமணம் செய்திருந்தால் இவ்வளவு சண்டை இருக்காது. என் வாழ்கையை அவள் வாழ்கிறாளே. அவன் என்னை இன்னும் நினைப்பானா? என்றெல்லாம் ஒரே குழப்பத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு பதில் சொல்லுங்களேன்.
Rate this:
Share this comment
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201212:49:40 IST Report Abuse
Rajagiri.Sivaவீட்டுக்கு வீடு வாசற்படி, பிரச்சனை இல்லாத குடும்பம் தரணியில் இல்லை. சண்டைகளும், சச்சரவுகளும் சகஜம்தான்...சகித்துகொள்ளாமல் அனுசரித்து செல்வதே இல்வாழ்க்கை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணர்ந்தால் சரி.......
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
18-டிச-201213:36:53 IST Report Abuse
Narayan Arunachalamதோழியே... தங்கள் மடலில் இருந்து அறிவது என்னவென்றால்.. தங்களை விட தங்கள் நண்பர் தான் அதிக குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது...இல்லையெனில்.. தங்களது தோழி விஷம் குடித்து காப்ற்றபட்டது தெரிந்தும் பிறகு உங்களை சில நாட்களில் தொடர்பு கொண்டு பேசியதை பற்றி அறியும்போது அவரது மனது ஒரு நிலையாகவும் இல்லை.. தோழி இல்லை என்றால் நீங்கள் என்ற அளவிலே அவர் மனது இருந்திருக்க கூடும் என்றும் என்ன தோனுகிறது.. எனவே நீங்கள் அவரை மணக்காமல் விட்டது நன்மைக்கே என்று நினையுங்கள்.. மேலும்.. எந்த ஒரு ஆணோ, பெண்ணோ.. தோழர் மற்றும் தோழி வற்புறுத்தலினால் காதலை ஏற்று கொள்வது என்பது cinemaavil nadakka கூடும்..நிஜ வாழ்க்கைக்கு ஏற்காது.. மேலும் அவர்கள் காதல் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நீங்கள் அவர்களுக்கு திருமணம் ஆனா பின்பும் அவரை நினைத்து ஏங்குவது தங்கள் பிரச்னினைக்கு தீர்வு ஆகுமா... தங்கள் தற்போதைய பிரச்சினைக்கு காரணம்.. உங்கள் நண்பரோ அல்லது தோழியோ அல்ல... கணவர், குழந்தை என்று இருந்தும் தேவை இல்லாமல் ஒரு கற்பனை உலகில் வாழ ஏங்குகிறீர்கள். நீங்களே சொல்லி இருகிறீர்கள் " எல்லா குடும்பத்தை போல எங்களுக்கும் சண்டை வரும்" இதை உணர்ந்த நீங்கள் உங்கள் முன்னாள் கடலரை மனண்டிருன்டாலும் சண்டை வரும்.. அது எந்த விதமாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாதல்லவா.. தங்களை பொறுத்தவரை.. வேலைக்கு செல்லாததால் தன பிரச்சினை வருகிறது என்று தெரிந்தால் அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து தங்களை முழுமையாக.. பிஸியாக வைத்து கொண்டாலே உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
18-டிச-201216:20:53 IST Report Abuse
Ganapathy Kannanசகோதரி, தயவுசெய்து தாங்கள் தங்கள் மன ஊசலாட்டத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள். ஒரு முடிவு எடுத்து அதை செயல்படுத்தியும் விட்டீர்கள். இனிமேல் அப்படி திருமணம் செய்தது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். தங்கள் கணவருடன் மனம் விட்டு பேசுவதின் வழி மற்றும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுத் கொடுத்தலின் வழி, தேவையற்ற வீண் சண்டைகளைத் தவிர்க்கலாம். வேடிக்ககையாக ஒன்று சொல்வார்கள், உலகில் அமரகாதல் என்று போற்றப்படும் காதல் அனைத்தும் ஏன் அவ்வாறு அழைக்கப் படுகிறது என்றால், அந்தக் காதல் நிறைவேறாததால் தான் என்று. யாருக்குத் தெரியும் அந்தக் காதல், கல்யாணத்தில் முடிந்திருந்தால், இருவரும் எப்படியெல்லாம் சண்டை போடுவார்களோ. பார்வதி கிடைக்காத தேவதாஸ், குடித்து கெட்டழிந்தததைவிட, ஒரு வேளை அவன் பார்வதியை திருமணம் செய்து கொண்டிருந்தால், குடும்பத் சண்டைகளினால், இதைவிட அதிகமாக குடித்துக் குடல் வெந்திருக்கலாம். இன்னும் சில வருடங்கள் கழித்து, உங்கள் தோழி மற்றும் காதலரின் ஜோடியைப் பார்த்து, நல்லவேளை, இவனை நான் திருமணம் செய்து கொள்ளாததால் தப்பித்தேன் என்று நீங்கள் நினைக்கும் நிலை கூட வரலாம். அவன் இன்னும் என்னை நினைப்பானா என்று ஏன் சிந்திக்கிறீர்கள். நரி இடம் போனால் என்ன. வலம் போனால் என்ன. மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்று எண்ணுங்கள். அவன் உங்களையே நினைத்து. உங்கள் வாழ்க்கைக்குள் வர முயற்சித்தால். அதோடு உங்கள் வாழ்க்கை காலி என்பதை புரிந்து கொள்ளுங்கள். எவ்வாறாயினும் உங்கள் கணவரை, உங்கள் முன்னால் காதலருடன் எந்த வகையிலும் ஒப்பீடு செய்யாதீர்கள். அது உங்கள் மணவாழ்க்கையைத் தான் மகிழ்ச்சியற்றதாக ஆக்கும். மனிதர்களின் இயல்புகள் அனைத்தும், நன்மைகளும் தீமைகளும் கலந்ததே. உங்கள் முன்னாள் காதலரிடமும் யாருக்கும் பிடிக்காத குணங்கள் இருக்கக் கூடும். அதுபோலவே, உங்கள் கணவரிடம் எல்லோருக்கும் பிடிக்கும் நல்ல குணங்கள் எத்தனையோ இருக்கலாம். எனவே உங்கள் மனப்போக்கினால் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள வழிவகை தேடவேண்டுமே தவிர, மனமகிழ்ச்சியைப் போக்கிக் கொள்ள அல்ல. தனியே அமர்ந்து, தங்கள் கணவர் தங்களை மகிழ்விக்க செய்த செயல்களையும், அன்புப் பரிமாற்றத்தையும் நினைவு கூருங்கள். அவர் உங்கள் மீது கோபிக்கும்போது, அவர் உங்கள் மேல் அன்பு காட்டிய தருணங்களையும் கட்டாயம் நினைவில் கொள்ளுங்கள். வெறுப்பு தோன்றுவது சற்று மட்டுப்படும். நான் இதை திருமணமான எல்லாத் தம்பதிகளளுக்கும் தான் பரிந்துரைக்கிறேன். ஆண் பெண் இருவருமே தங்கள் துணை தங்கள் மேல் கொண்ட கோபத்தை மட்டுமே எப்போதும், கணக்கில் கொள்ளாமல், அன்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி அன்பாக இருந்த துணை தற்போது இப்படி நடப்பதற்கு, நாம் எந்த வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதையும் சீர்தூக்கிப் பார்த்தால், வீண்சண்டை உருவாவதன் ஆணிவேர் எங்கு ஆரம்பிக்கிறது என்று கண்டுகொள்ளலாம். எங்கேயோ எப்போதோ சந்திக்கும் நமக்கு யாரென்றே தெரியாத ஒரு நபருக்கு, நம் கால் அவர்மேல் தெரியாமல் பட்டுவிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அப்படியிருக்கையில், ஒருவருக்கொருவர் என்று வாழ்க்கையையே பகிர்ந்துகொணடுள்ள, கணவன் மனைவி இருவரும், தாங்கள் மற்றவருக்கு தெரிந்தோ தெரியாமலோ மனதில் வருத்தம் ஏற்படுத்தி விட்டால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதில் ஏன் நமது கர்வம் நம்மைத் தடுக்கிறது. மன்னிப்பு கேட்டுப் பாருங்கள். கேட்டுக் கொண்ட அதே நிமிடத்தில், உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் மன இடைவெளி மறைந்து, அன்பு இன்னும் இறுக்கமாவதை நிச்சயம் உணர்வீர்கள். "எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்று திருவள்ளுவர் ஒன்றும் தெரியாமலா சொல்லியிருப்பார் ? -அன்புடன் கண்ணன்...
Rate this:
Share this comment
Amudha Thiru - Chennai,இந்தியா
21-டிச-201212:41:30 IST Report Abuse
Amudha Thiruநன்றி கண்ணன், நாராயணன் மற்றும் ராஜகிரி. எனக்கு இப்போது மிகவும் தெளிவாக உள்ளது. பொட்டில் அறைந்தது போல் விளக்கி விட்டீர்கள்....
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
21-டிச-201215:47:37 IST Report Abuse
Narayan Arunachalamதோழியே. எங்களுது கருத்துக்களை postive ஆக எடுத்துக்கொண்டதற்கு நன்றி... தங்கள் இல்லறம் செம்மையுற வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201217:31:13 IST Report Abuse
Ganapathy Kannan இந்தப் பெண் எழுதியுள்ள உறவு முறைகளில், பல குழப்பங்கள் மற்றும் குளறுபடிகள் உள்ளன. முதலில் இந்தியத் திருமணச் சட்டம், இவரைக் கட்டியவருக்கு, இதற்கு முன்னதாகவே திருமணம் ஆகி, அந்தக் குடும்பம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் இன்னபிற, அரசாங்க ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பட்சத்தில், இவரின் திருமணத்தை அங்கீகரிக்காது. மற்றும் இவர் அவருடைய மனைவி என்ற உரிமையையும் சட்டம் வழங்காது. ஆனால் இவர்கள் இருவரும் முதல் மனைவிக்குத் தெரியாமல் தொடர்ந்து குடும்பம் நடத்தி (அல்லது அவருக்குத் தெரிந்திருந்தும் சட்டப்படி காவல்துறையில் புகார் செய்யமலிருந்தால்) குழந்தைகள் பிறந்திருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு, அந்த கணவரின் குழந்தைகள் என்ற உரிமை இருந்திருக்கும், அதுவும் இந்த ஊரில், அரசாங்க ஆவணங்களில் அவர் தந்தையாகவும், மற்றவர்கள் அவருடைய குடும்பத்தினர்களாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே. ஆனால் அதே நேரத்தில், முதல் மனைவி, அவர் இந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று காவல்துறையில் புகார் செய்யும் பட்சத்தில், திருமணமான புதிதிலேயே, இரண்டாவது திருமணம் முடித்தவர்கள் மாப்பிள்ளை மற்றும் பெண் உட்பட பெண்ணைப் பெற்றவர்கள் என்று அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் பெண்ணின் நல்லநேரமோ அல்லது கெட்ட நேரமோ அந்த அயோக்கியன் தொலைந்து போனான். அவனுடன் தொடர்ந்து வாழ்ந்தாலும இந்தப் பெண்ணுக்குக் கிடைக்கப் போவதென்னவோ நிம்மதியற்ற வாழ்வும், வேதனையான நிகழ்வுகளும்தான். இதுபோல் வசதியற்ற அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்த நிலையில் ஒரு பஞ்சாயத்தும் நடந்து விவாகரத்துப் பத்திரமும், பணமும் தரவேண்டும் என்று முடிவு செய்திருப்பது, பொருளாதார ரீதியில் இந்தப் பெண்ணுக்கு உதவக் கூடும். ஆனால் அந்த விவாகரத்துப் பத்திரம் எதற்கும் உதவப் போவதில்லை என்றே கருதுகிறேன். இவர் வேறொரு திருமணம் முடிப்பதற்கு முன்னால் முதலில் செய்ய வேண்டியது, பஞ்சாயத்தில் பேசியபடி, பேசிய பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதுதான். இவர் உள்ள சூழ்நிலையில் அப்பணம் இவருக்கு மிகவும் பொருளாதார பலத்தைத் தரும். 8 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்தி ஒரு பெண்ணை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போன அந்த அயோக்கியனுக்கும் ஓரளவாவது, அது ஓரத்தில் வேதனையை ஏற்படுத்த வேண்டும். அதை வாங்காமல், இவர் திருமணம் முடித்தார் என்றால், இனிமேல் என்றுமே அதை வாங்குவது என்பது முடியாது. இதில் பணம் ஒருபுறம் இருந்தாலும், இதன்மூலமாக அவன் செய்த தப்புக்கு, சிறிதளவேனும் பொருளாதாரத் தண்டனை கிடைத்தது என்ற ரீதியில் சிறிது நீதி கிடைக்க வழி ஏற்படுகிறது. திருமணம் முடிப்பதில் இவர் நிதானமாக சிந்தித்து, மணமகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இளமையையோ, அழகையோ மட்டும் அடிப்படையாக வைத்து, கணவனைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இவருடைய இளமை மாறும் காலத்தில், இவர் இப்போது விரும்பி மணம்புரியும் மணமகனின் இளமையே இவர் வாழ்க்கைக்கு எதிராக மாறலாம். மணமகன், நிதானமாக போக்கும், நல்ல குணமும், நடுத்தர வயதையும் உடையவராயிருந்தால் இவர் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று தோன்றுகிறது. எவ்வாறாயினும், ஒரு நல்ல கணவனை அடைந்து, அவர் நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதே நம் அனைவரும் விருப்பம் என்பதில் எந்தவித மாறுபாடும் இல்லையல்லவா ? - அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment
Cancel
Madan Kumar - Melbourne,ஆஸ்திரேலியா
17-டிச-201216:48:03 IST Report Abuse
Madan Kumar என்னோட உள் மனசு சொல்லுது அந்த பொண்ணு முதல் கணவரோட பல் ஆல ரொம்ப பாதிகப்பட்டுருப்பாங்கனு. ஆனா இங்க யாருமே அதுக்கு மதிப்பளிக்க வில்லை. கண்டிப்பா பல் டாக்டர் கரை யை எடுக்க முடியும். ஆனா first impression is the best impression . நாம எல்லாம் படிசத தான் அந்த சின்ன பொண்ணு ஆசை படுது. அது தப்புன்னு எனக்கு தொணுல.
Rate this:
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
17-டிச-201215:08:11 IST Report Abuse
Narayan Arunachalam 23 வயது ஆண் 30 வயது போல் இருப்பார்.. 30 வயது ஆகிய நான் 20 வயசு போல் இருப்பேன்..தங்களுடைய மற்ற விவரங்களை பார்க்கும்போது இந்த ஒரு கண்ணோட்டமும் சற்று தெளிவில்லாதது போல் உள்ளது.. இதனை சற்று நன்றாக தெளிவு படுத்திகொள்ளுங்கள்.. இருப்பினும்.. திருமணம் பற்றி முடிவு எடுக்க இது ஒரு அளவு கோல் ஆக முடியாது.. மேலும்.. முதல் நபர் 39 வயது.. படிப்பு இல்லை.. நீங்கள் 14 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறீர்கள் ஆகவே எது வரை படிததுளீர்கள் என்று தெரியவில்லை.. இருப்பினும்.. நான் 30 வயது ஆனாலும் 20 வயது போல் இருப்பேன் மற்றும் அவருக்கு 39 வயது.. இந்த ஒரு எண்ணமே உங்களை அவரிடம் ஒட்டாமல் இருக்க செய்ய வாய்ப்பு அதிகம் நீங்கள் இருவரும் திருமணம் செய்ய நேர்ந்தால்.. 2) வயது ( 35) குணம் பிடித்தது அனால் பல் பிடிக்கவில்லை.. என்கிறீர்கள்.. திருமணத்தில் எது முக்கியம்.. குணமா.. பல்லா என்று ஆராயாமல் கேள்வி கேட்டு உள்ளீர்கள்.. அது உங்கள் சொந்த விருப்பம் ஆக இருந்தாலும்.. பல் நன்றாக இருக்கும் ஒருவரை மணந்தால் கூட பிறகு அது உடையவோ அல்லது விழவோ வாய்ப்பு உண்டு.. பல்லில் கரை இருந்தால் நீக்கிவிடலாம்.. குணத்தில் கரை இருந்தால் நீக்குவது கடினம்.. 3) காமம் சார்ந்த இன கவர்ச்சியாகவே தெரிகிறது.. ஓடி போய்விடலாம் பிறகு சரியாகி விடும் என்று அவர் கூறுவதில் இருந்து அவரது அறிவு முதிர்ச்சி சிறிது யோசிக்க வைக்கிறது.. எது எப்படி பார்த்தாலும்.. இவர் தான் உங்களுக்கு சரி என்று எங்களை போன்ற மற்றவர்கள் பெரும்பாலும் ஆலோசனை கூற முடியாது.. ஒவ்வொரு நபரையும் நீங்கள் கொடுத்த விவரங்களை வைத்து மாறு படுத்தி தான் காட்ட முடியும்.. 15 வயது அனுபவ அறிவு உங்களுக்கு கை கொடுக்கும்.. தங்கள் வேலை செய்யும் இடத்தில தாங்கள் மதிக்க கூடிய எவராவது இருந்தால் ( எல்லா இடங்களிலும்,, திருமதி கௌசல்யா மற்றும் திரு மீனவன், திரு சத்திய சாய் பாபு போன்ற அன்பர்கள் நிச்சயம் இருப்பார்கள்.. அவர்கள் வழி காடுதளையும் கோரி பெறலாம்.. இறுதியாக.. 1) ஓடி போவது தீர்வல்ல.. பிரச்சனையின் துவக்கம் தான் 2) பல்லில் கரை என்பது குறை பாடு அல்ல.. சுலபமாக அகற்ற கூடியதே..3) படிப்பு மட்டும் அறிவை தருவதில்லை.. .. நல்ல முடிவு எடுக்க வாழ்த்துக்கள்.. அன்புடன் நாராயண்
Rate this:
Share this comment
Cancel
sathiya sai babu - chennai,இந்தியா
16-டிச-201223:15:32 IST Report Abuse
sathiya sai babu அன்பு தோழி உங்களின் மடலில் நிறைய குழப்பங்கள் உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஒரு முடிவெடுத்தபின் இதை எழுதி இருக்க வேண்டும். உங்களின் முதல் திருமணம் தோற்றதற்கு நீங்கள் காரணம் அல்ல. ஆனால் இப்போது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு கண்டிப்பாக தோற்கும். ஏனென்றால் உங்களை விட சிறு வயது ஆணை திருமணம் செய்வது தப்புஇல்லை ஆனால் அது உங்களின் முதல் திருமணமாக இருந்தால், இப்பொழுது காதல் காமம் இரண்டுமே இருவரின் கண்ணை மறைத்துவிடும் காலங்கள் ஓட ஓட அந்த நபருக்கு உங்கள் முதல் திருமணம் ஒரு குறையாக தோன்றும் பின்பு வாதங்கள் சண்டைகள் என்று வாழ்வில் நிம்மதி இழபீர் உங்கள் கடிதத்தில் இருந்து நீங்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவர் என்று நினைக்கிறேன் இது போன்ற குழப்பங்கள் வந்தால் மிகவும் துன்பபடுவீர் அப்போதும் ஆறுதல் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள் இப்போது நீங்கள் பட்டியல் இட்ட மத்த இரண்டு பெரும் எப்படி பட்டவர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும் உங்களுக்கும் இன்னும் நிறைய வயதும் உண்டு ஆகையால் அவசர படாமல் பொறுமையாக துணையை தேர்ந்தெடுங்கள் உலக அனுபவம் உள்ளவராக நடைமுறை சிந்தனை உள்ளவராக கைத்தொழில் தெரிந்தவராக தேடுங்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள் நீங்களும் உங்கள் தாழ்வு மனப்பான்மை நிலையை மாற்றி பழைய கசப்பான நினைவுகளை மறந்து புதிய ஒரு நல்ல வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் நலமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். நண்பர்கள் மீனவன் , ராமன் , நெல்லை சாமி மற்றும் அனைவருக்கும் என் வணக்கங்கள் .........
Rate this:
Share this comment
Cancel
Ma Kader - baku,ரஷ்யா
16-டிச-201220:23:27 IST Report Abuse
Ma Kader கேள்வி கொஞ்சம் புரியல ஆனால் பதில் தெளிவா இருக்குது
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201218:58:28 IST Report Abuse
Rajagiri.Siva உன் வாழ்க்கை உன் கையில்...கேள்வி கேட்போரிடமே அதற்கான பதில் இருக்கையில் எப்படி அலோசனை சொல்லமுடியும்...? மரம் வெட்டியும், கோடாலியும் என்ற கதையைப்போல் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.