இதுவரை: அனைத்து சோதனையிலும் வெற்றி பெற்ற ஹெர்குலிஸிடம், அடுத்த சோதனையாக அமேசான் அரசியின் வைர ஒட்டியாணத்தை கேட்டான் யுதிஸ்தியசு. இனி-
கேகசிய மலை அடிவாரத்தில் உள்ள நாடுகளை அமேசான் அரசிகள் ஆண்டு வந்தனர். எதற்கும் அஞ்சாத வீராங்கனைகள் அவர்கள். எதிரிகள் யாரும் அந்த நாடுகளுக்குள் நுழைந்தது இல்லை. நுழைந்தவர்கள் உயிருடன் திரும்பியதும் இல்லை. அங்கே பெண்கள் ஆட்சிதான். போர் செய்வதும், காவல் காப்பதும், வேலைக்குச் செல்வதும் பெண்கள்தான். குழந்தைகளை வளர்ப்பது, சமையல் செய்வது எல்லாமே, அங்கே ஆண்களின் வேலை.
ஆண் குழந்தை பிறந்தால், அதன் கால்களிலும், கைகளிலும் இரும்புக் கவசங்களை மாட்டி விடுவர். இதனால் அந்தக் குழந்தையின் கால்களும், கைகளும் போதிய வளர்ச்சி பெறாது. நோஞ்சானாகவே இருக்கும். பெண் குழந்தை பிறந்தால், அதை வீரப் பெண்ணாக வளர்ப்பர். இதனால், அந்தப் பெண்கள் வீரமும், துணிவும் கொண்டவர்களாக விளங்கினர்.
பித்தளையாலான வில்லையும், அம்பு களையும் அவர்கள் பயன்படுத்தினர். குறி பார்த்து அம்பு எய்வதில் வல்லவர்களாக இருந்தனர். குதிரை ஏற்றத்தில் வல்லவர்களான அவர்கள் பெரிய குதிரைப் படையை வைத்திருந்தனர்.
அவர்களின் தலைநகரமாக தெமிஸ்திரா என்ற நகரம் இருந்தது. ஹிப்போலிதை என்ற அரசி அதை ஆண்டு வந்தாள். அவளின் இரண்டு தங்கைகளும் வேறு நகரங்களை ஆண்டு வந்தனர். அவர்கள் மூவரும் மிகுந்த வலிமை உடையவர்கள். எதற்கும் அஞ்சாத வீரமும், துணிவும் கொண்டவர்கள்.
அரசி ஹிப்போலிதை இடுப்பில் வைர ஒட்டியாணம் அணிந்து இருந்தாள். அதில், உள்ள வைரங்கள் பகலிலும் மின்னும். அந்த ஒட்டியாணத்தின் மதிப்புக்கு எந்த நாடும் இணையாகாது. இவற்றை நினைத்துப் பார்த்த ஹெர்குலிஸ், என்ன செய்வது என்று சிந்தித்தான். "வீரமும், துணிவும் உடையவர்களுக்கு இயலாத செயலும் உண்டோ?' எதற்கும் வீரர்களைத் துணைக்கு அழைத்துச் செல்வோம்' என்ற முடிவுக்கு வந்தான்.
ஹெர்குலிசுடன் செல்லப் பல இளைஞர்கள்முன் வந்தனர். எண்ணற்ற வீரர்களுடன் ஹெர்குலிசின் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. பல நாட்கள் பயணத்திற்குப் பின் தெர்மோடைன் ஆற்றை அடைந்தது. அதன் கரையில்தான் தலைநகரமான தெமிஸ்திரா இருந்தது.
கப்பலை அங்கு நிறுத்தினான் ஹெர்குலிஸ். வீரன் ஒருவனைத் தன் தூதனாக அனுப்பி வைத்தான்.
அரசவைக்குச் சென்ற அவன் அரசி ஹிப்போலிதையைப் பணிவாக வணங்கினான். இரு தங்கைகளும் அவள் அருகில் அமர்ந்து இருந்தனர்.
""அரசியாரே! மாவீரர் ஹெர்குலிஸ் தங்களை நட்பு முறையில் சந்திக்க வந்திருக்கிறார்'' என்றான்.
""மாவீரர் ஹெர்குலிஸ் இங்கு வந்திருக்கிறாரா? அவரைச் சந்திப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம்,'' என்றாள் அரசி.
அரண்மனைக்கு வந்த ஹெர்குலிசை அரசிகள் மூவரும் சிறப்பாக வரவேற்றனர்.
உயர்ந்த இருக்கை ஒன்றில் அவனை அமர வைத்தனர்.
பேச்சாற்றலிலும் வல்லவனான ஹெர்குலிஸ் அவர்களுடன் இனிமையாகப் பேசினான். யாழிசைத்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தினான். அரசிகள் மூவரும் அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டனர்.
""மாவீரனே! நீங்கள் சந்தித்த வீர தீர அனுபவங்களைச் சொல்லுங்கள்,'' என்றாள் ஹிப்போலிதை.
தன் வாழ்க்கையில் நிகழ்ந்த வீர தீர சாகச அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினான் அவன். சுவையுடனும் விறுவிறுப்புடனும் நடித்துக் காட்டுவது போல உணர்ச்சி பொங்கச் சொன்னான். தங்கள் கண் முன்னால் அந்த நிகழ்ச்சிகள் நடப்பது போல் அவர்கள் உணர்ந்தனர். அப்படியே அவன் பேச்சில் தங்களை மறந்து ஒன்றிப் போயினர்.
இப்படியே அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு பல நாட்களை செலவழித்தான்.
""அரசிகளே! என் நாடு செல்ல அனுமதி தாருங்கள்.'' என்றான் அவன்.
அவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த அரசிகள் மூவரும், ""மாவீரரே! உங்கள் வருகையால் எங்கள் நாடு பெருமை பெற்றது. காரணம் இல்லாமல் இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டீர்களே... எங்களால் ஏதேனும் உதவியாக வேண்டுமா?'' என்று கேட்டனர்.
யுரிஸ்தியசு மன்னன் தனக்கு வைத்த சோதனையைப் பற்றித் தயக்கத்துடன் சொன்னான்.
""இவ்வளவுதானா? இதற்கு ஏன் தயக்கம்?'' என்ற அரசி ஹிப்போலிதை வைர ஒட்டி யாணத்தைக் கழற்றினாள்.
""மாவீரரே! எங்கள் அன்புப் பரிசாக இதை வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றாள்.
அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போனான் ஹெர்குலிஸ்.
தழுதழுத்த குரலில், ""நன்றி' என்றான்.
உணர்ச்சிப் பெருக்கால் அவன் கண்களில் கண்ணீர் திரண்டது.
தன் வீரர்களுடன் நாடு திரும்பினான்.
அங்கே யுரிஸ்தியசு, "வைர ஒட்டி யாணத்தைக் கைப்பற்ற ஹெர்குலிஸ் முயற்சி செய்வான். அமேசான் நாட்டு வீராங்கனைகள் அவனைக் கொல்வார்கள். என் எதிரி ஒழிந்தான்' என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான். பளபளக்கும் வைர ஒட்டியாணத்துடன் வந்த ஹெர்குலிஸைப் பார்த்தான். இந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை.
"என்ன சோதனை வைத்தாலும் வெற்றி பெற்று விடுகிறானே. அடுத்ததாக என்ன சோதனை வைப்பது? மிகக் கடுமையாக அது இருக்க வேண்டும்' என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
"ஹெர்குலிஸ்! எரிதியா தீவில் ஜிரியன் என்ற அரக்கன் உள்ளான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய மந்தை உள்ளது. அதில், ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளன. நீ அவற்றை இங்கே ஓட்டி வர வேண்டும்,'' என்றான். இதைக் கேட்ட ஹெர்குலிஸ் திகைத்தான்.
"அரக்கன் ஜிரியனைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் அவன் நினைவுக்கு வந்தன. இவன் மேலும், மேலும் கடினமான சோதனைகள் வைக்கிறானே... எப்படியும் வெற்றி பெறுவோம்' என்று நினைத்தான். "அரக்கன் ஜிரியன் விந்தையான வடிவம் உடையவன். அவன் இடுப்பிற்குக் கீழே மனிதர்களைப் போல் இரண்டு கால்கள் இருந்தன. இடுப்பிற்கு மேல் மூன்று உடல்கள் இருந்தன.
இரண்டு கால்கள், மூன்று தலைகள், ஆறு கைகளுடன் அவன் நடந்து வருவான், அதைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.
அவனது கோரமான வடிவத்தைப் பார்த்தே பலர் இறந்து இறந்திருக்கின்றனர். அவனிடம் உள்ள ஆடு, மாடுகளை யாராலும் எண்ண முடியாது. அவை அனைத்தும் சிவப்பு நிறத்துடன் விளங்கின. மந்தை மந்தையாக அவை மேய்ந்து கொண்டிருந்தன. இதனால் அந்தத் தீவே சிவப்பு நிறமாகக் காட்சி அளித்தது.
அவனுக்கு உதவியாக இன்னொரு அரக்கன் இருந்தான். இரண்டு தலை நாய் ஒன்றும் அங்கே காவல் உள்ளது என்பதை அறிந்தான். அரக்கனை வென்றாலும் அங்குள்ள ஆடு மாடுகளைக் கொண்டு வர முடியாதே. எண்ணற்ற ஆடு மாடுகளை ஏற்றிச் செல்லக் கூடிய பெரிய கப்பல் எங்கும் இல்லையே. என்ன செய்வது? வழி ஏதும் தெரியவில்லையே என்று குழம்பினான் அவன்.
கதிரவன் அவனுக்கு உதவி செய்ய நினைத்தார். அவன் முன் தோன்றினார். பொன் கிண்ணம் ஒன்றைத் தந்தார். ""ஹெர்குலிஸ்! இந்தக் கிண்ணம் மந்திரக் கிண்ணம். இதைக் கடலில் மிதக்க விடு... இதில் எத்தனை பேர் ஏறுகிறார்களோ அந்த அளவு பெரிதாகும்,'' என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
மகிழ்ச்சி அடைந்தான் ஹெர்குலிஸ்.
இதற்கு முன் தன்னுடன் வந்த தோழர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தான். அவர்களும் வந்தனர். எல்லாரும் அந்தப் பொன் கிண்ணத்தில் அமர்ந்தனர். அது கப்பலைப் போலப் புறப்பட்டது. பல நாட்கள் பயணத்திற்குப் பின், எரிதியா தீவை அடைந்தது அது.
ஹெர்குலிஸ் மட்டும் கீழே இறங்கினான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை சிவப்பு வண்ணம் தெரிந்தது. "ஒரே நிறத்தில் இவ்வளவு ஆடு மாடுகளா?' என்று வியப்படைந்தான் ஹெர்குலிஸ். மெல்ல நடந்த அவன் மந்தையை நெருங்கினான்.
அங்கே காவலுக்கு இருந்த இரண்டு தலை நாய் அவனைப் பார்த்து விட்டது. பயங்கரமாகக் குரைத்தப்படி அவனைக் கடிக்க ஓடி வந்தது.
- தொடரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.