ஏழு சிமியோன்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2012
00:00

ஒரு ஊரில் ஏழு சிமியோன்கள் இருந்தனர். அவர்கள் ஏழு பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்; சிறந்த தொழிலாளர்கள். எல்லாருடைய பெயரும் சிமியோன்தான்.
ஒருநாள் அதிகாலை நேரம்.
ஏழு பேரும் வயலுக்குச் சென்று உழுது கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தற்செயலாக, அந்தப்பக்கம் வந்த ஜார் மன்னன் அவர்களைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார்.
""என்ன இது? ஏழு இளைஞர்கள் ஒரே வயலை உழுது கொண்டிருக்கின்றனர். ஒரே உயரத்தில், ஒரே மாதிரி இருக்கின்றனர். இவர்களை யாரென்று விசாரியுங்கள்,'' என்றார்.
பணியாளர்கள் உடனே ஓடினர். ஏழு சிமியோன்களையும் கொண்டு வந்து, அரசர் முன் நிறுத்தினர்.
அரசர் அதட்டலாகக் கேட்டார்.
""சொல்லுங்கள், யார் நீங்கள்? பிழைப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?''
""நாங்கள் ஏழு பேரும் அண்ணன் தம்பிகள். ஏழு பேரும் துணிச்சல் மிக்க தொழிலாளர்கள். எங்கள் அனைவரையும், "சிமியோன்' என்றே அழைப்பர். இது எங்களுடைய அப்பா, பாட்டன், முப்பாட்டன் நிலம். இது தவிர நாங்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு ஒரு தொழில் கற்றுள்ளோம்,'' என்றான் ஒரு சிமியோன்.
""யார் என்ன தொழில் கற்றுள்ளீர்கள்?'' என்று கேட்டார் ஜார் மன்னர்.
""நான் தச்சு மற்றும் கொல்லு வேலை கற்றவன். வானத்தை எட்டும் ஒரு இரும்புத் தூணை என்னால் அமைக்க முடியும்!'' என்றான் மூத்தவன்.
""நான் மரம் ஏறுபவன். அந்தத் தூணின் உச்சிக்கு ஏறி, நான்கு திசைகளிலும் என்னென்ன நடக்கிறது, எங்கே நடக்கிறது என்று என்னால் கவனிக்க முடியும்!'' என்றான் இரண்டாவது சிமியோன்.
""நான் ஒரு மாலுமி. கண் இமைக்கும் நேரத்தில் கப்பல் கட்டுவேன். கடலின் மேற்பரப்பில் மட்டுமல்ல... நீருக்கு அடியிலும் கப்பலைச் செலுத்துவேன்!'' என்றான் மூன்றாமவன்.
""நான் ஒரு வில்லாளி; பறக்கும் ஈயின் மேல் அம்பெய்ய என்னால் முடியும்!'' என்றான் நான்காவது சகோதரன்.
""நான் ஒரு வானவியல் நிபுணன். ஒன்று விடாமல் நட்சத்திரங்களைக் கணிக்க முடியும் என்னால்!'' என்றான் ஐந்தாவது ஆள்.
""நான் ஓர் உழவன்!'' என்ற ஆறாவது உடன் பிறப்பு... ஒரே நாளில் வயலை உழுது, விதைத்து, அறுவடையும் செய்ய முடியும்!'' என்றான்.
""உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று இளையவனை பார்த்துக் கேட்டார் மன்னர்.
""நான் பாடுவேன்; ஆடுவேன்; குழல் இசைப்பேன் மன்னவரே! என்றான்.
""மாண்புமிகு மன்னவா, தொழிலாளர்கள் நமக்குப் பயன்படுவர். ஆனால், ஆட்டம், பாட்டம் தவிர வேறு எதுவும் தெரியாதவன் நமக்கு எதற்கு? இவனை விரட்டி விடலாம். இத்தகையோர் அவர்கள் தின்னும் ரொட்டி மற்றும் குடிக்கும் பானத்தின் விலை கூடப் பெற மாட்டார்கள்!'' என்று வெறுப்பை உமிழ்ந்தான் ஒரு பிரபு.
""நீங்கள் சொல்வது சரிதான்!'' என்றார் மன்னர்.
அப்போது இளையவன் குனிந்து வணங்கியபடி அரசனிடம்,""மன்னவா! என்னை இசைக்க அனுமதியுங்கள். என்னால் என்ன முடியும் என்று காட்டுகிறேன்,'' என்றார்.
""மிகவும் நல்லது; எனக்காக ஒரு தடவை வாசி!'' என்றார் மன்னர்.
உரிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்த தன்னுடைய குழலை வெளியே எடுத்தான் சிறியவன். ஒரு ரஷிய நடன ராகத்தை இசைக்கத் தொடங்கினான். அவ்வளவுதான்! அங்கிருந்த ஒவ்வொருவருடைய கால்களும், நிலை மறந்தன. துள்ளித் தாவி நடனம் ஆடினர். மாமன்னர், பிரபுக்கள், காவலர்கள் ஆடினர். லாயங்களில் குதிரைகள் குதித்துக் கும்மாளமிட்டன. கொட்டிலில் நின்ற பசுக்களின் குளம்புகள் இசைக்கேற்பத் தாளம் போட்டன. கோழிகளும், சேவல்களும் தத்தித் தாவிக் குதித்தன.
மற்றவர்களை விட கேலி பேசிய பிரபுதான் மிகவும் வேகமாக ஆடினான். அவனுடைய முகம் முழுக்க வியர்வை வழிந்தது. கண்ணீரும் கொட்டியது. தாடி நடுங்கியது.
மன்னரால் முடியவில்லை. ""நிறுத்து இனியும் என்னால் ஆட முடியாது. விழுந்து விடுவேன் போல் தெரிகிறது!'' என்று சத்தம் போட்டார்.
அவன் இசையை நிறுத்தினான். அனைவரும் நடனம் ஆடுவதை நிறுத்தினர். ஆனால், பிரபு மட்டும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்.
""பிரபுவே, உம்முடைய கொடியநாக்கு மற்றும் கெட்ட கண்ணுக்காக, உம்மை இன்னும் சிறிது நேரம் ஆட விடுவேன்!'' என்றான் இளையவன்.
அவன் ஒருவனால் மட்டும் நடனத்தை நிறுத்த முடியவில்லை. ஆடிக் கொண்டேயிருந்தான். கால்கள் பின்னிக் கொண்டன. கடைசியில் பொத்தென்று தரையில் விழுந்தான். கரையில் ஒதுங்கிய மீன் போல் வாயைத் திறந்து மூடி மூச்சுத் திணறினான்.
தனது குழலை அருகில் போட்டுவிட்டு, இளைய சிமியோன் சொன்னான்.
""இதுதான், என்னுடைய கலை மன்னா!'' என்றான்.
ஓவென்று சிரித்தார் ஜார். அதே சமயம் அந்தப் பிரபுவின் மனதில் வன்மம் குடி கொண்டது.
""சரி! மூத்த சிமியோனே! உன்னால் என்ன முடியும் என்பதை இப்போது காட்டு!'' என்றார் மன்னன்.
பெரிய சுத்தி மற்றும் கருவிகளை உடனே எடுத்து வேலையைத் தொடங்கினான் மூத்தவன். நீல வானத்தைத் தொடும் உயரமுள்ள இரும்புத் தூண் சற்று நேரத்தில் உருவானது.
அதன் மீது விறுவிறுவென்று ஏறினான் இரண்டாவது சிமியோன். <உச்சியை அடைந்தான். சுற்றிலும் பார்த்தான்.
""என்ன தெரிகிறது சொல்!'' என்று கேட்டார் மன்னர்.
""கடலில் பயணிக்கும் கப்பல்களைப் பார்க்கிறேன். வயல்களில் விளையும் கோதுமை தெரிகிறது!'' என்றான் சிமியோன்.
""வேறு எதுவும் தெரிகிறதா?'' என்று வினவினார் ஜார்.
""சமுத்திர நடுவில் ஒரு தீவு தெரிகிறது. சூரிய ஒளியில் தகதகக்கும் அதுதான் பயான் தீவு. அதில், உள்ள ஒரு தங்க மாளிகையின் ஜன்னலில் அமர்ந்து பட்டு நெய்து கொண்டிருக்கிறாள் அழகிய எலீனா,'' என்றான்.
""அவள் எப்படி இருக்கிறாள்? மக்கள் பேசிக் கொள்வது போல உண்மையிலேயே அவ்வளவு அழகா?'' ஆவலுடன் கேட்டார் அவர்.
""ஆம்! அப்படித்தான் இருக்கிறாள். வரையவோ, வர்ணிக்கவோ முடியாத அவ்வளவு அழகு! கண்களால் மட்டும் கண்டு களிக்கக் கூடிய ஓர் அற்புதம். பிறை நிலவைக் கிரீடமாகச் சூடியுள்ளாள். கூந்தலின் முடிகள் முத்துக்களாய் ஜொலிக்கின்றன,'' என்றான்.
இதைக் கேட்ட மன்னர் மனதில் எலீனாவை மனைவியாக்கும் ஆசை மூண்டது. திருமணம் பேசி முடிக்க உரிய ஆட்களை அனுப்புமாறு உத்தரவிட்டார். அப்பொழுதே அவமானப்பட்ட பிரபுவின் மனதில் ஒரு சதித் திட்டம் உருவானது. மன்னரைப் பார்த்துப் பணிவுடன் சொன்னான்.
""ஜார் மன்னரே! அழகி எலீனாவைப் பேசி முடிக்க இந்த ஏழு சிமியோன்களையே தாங்கள் அனுப்பலாமே? இவர்கள் திறமை சாலிகள்; புத்திசாலிகள். எனவே, இந்த அரிய செயலை நிச்சயம் செய்து முடிப்பர். முடிக்கவில்லை என்றால் இவர்களுடைய தலையை வெட்டிவிடலாம்,'' என்றான்.
""சரி! நல்ல யோசனை!'' என்ற ஜார் சிமியோன்களைப் பார்த்து உத்தரவிட்டார்.
""நீங்கள் ஏழுபேரும் சேர்ந்து, அழகி எலீனாவைக் கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேண்டும். தவறினால், என்னுடைய வாளின் மீதும் ராஜ்யத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய தலைகள் தரையில் உருளும்!'' என்றார்.
வேறு வழி இல்லை. ஆகையால் கோடாரியைக் கையில் எடுத்தான் மாலுமிச் சிமியோன், டப், டுப் சத்தம்! கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் தயார்! பாய் மரங்கள் பொருத்தப்பட்டன. கடலில் மிதந்தது கப்பல்! எல்லாம் சில நொடிகளில் ஏராளமான பரிசுப் பொருட்கள் ஏற்றப்பட்டன! விதவிதமானவை; விலை உயர்ந்தவை.
கொடிய பிரபுவைப் பார்த்த மன்னர், ""நீங்களும் சிமியோன்களுடன் செல்லுங்கள். எமது கட்டளையை நிறைவேற்ற முயலு கிறார்களா என்று கவனியுங்கள்,'' என்றார்.
இதைக் கேட்ட அந்தப் பிரபுவின் முகம் வெளுத்தது. அரசரின் ஆணை; பணிந்தே ஆக வேண்டும். அனைவரும் கப்பலில் ஏறினர். பக்கங்களில் அலைகள் புரண்டன; பாய்கள் படபடத்தன! சூரிய ஒளியில் பளபளக்கும் பயான் தீவை நோக்கித் தொடங்கியது பயணம்.
-1 தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.