Advertisement
மன்னன் வரைந்த ஓவியம்!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2012
00:00

விதேக நாட்டை வினுசக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன் முடிவு செய்து விட்டால், அதைச் செய்தே தீருவான்.
ஒருநாள் வேடிக்கையாகத் தூரிகையை எடுத்து வண்ணங்களில் முக்கி ஓவியம் வரைவதுபோல ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த உதவி சேனாதிபதி, மன்னனைப் புகழ்ந்து, ""ஆகா! எப்படிப்பட்ட ஓவியம் வரைந்திருக் கிறீர்! இந்த மாதிரி ஓவியங்களை வாங்க கோடீஸ்வரர் களால்தான் முடியும். அதனால் இதைக் கண்டு ரசிப்பவர்கள் ஒரு சிலரே!
அரசே! தாங்கள் தங்கள் ஓவியக் கலையை ஏழை எளியவர்கள் கூட ரசிக்கும் படிச் செய்ய வேண்டும். தங்களது இந்த ஓவியத்தை பல சித்திரக்கலைஞர் களைக் கொண்டு இப்படியே வரையச் செய்து, சட்டம் போட்டுக் குறைந்த விலைக்கு விற்றால், ஏழைகள் அவற்றை வாங்கி தம் வீட்டுச் சுவரில் மாட்டி அழகு படுத்துவர். தங்களது ஓவியம் வரையும் திறனையும் யாவரும் அறிந்து கொள்வர்,'' என்றான்.
மன்னனுக்கு உச்சி குளிர்ந்து போயிற்று. அவன் தன் மந்திரியை அழைத்து அதனைக் கூறவே மந்திரியும், ""அரசே! இதனால் ஏகப்பட்ட பணம் செலவாகும். அப்படிச் செலவு செய்து விட்டால், மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டு வரும் பல வேலைகள் தடைப்பட்டு நின்று விடும்,'' என்றார்.
ஆனால், மன்னன் மந்திரியின் கருத்தை ஏற்கவில்லை. ""ஆயிரம் சித்திரக் கலைஞர்களைக் கூப்பிட்டுத் தான் வரைந்துள்ள ஓவியம் போல ஒவ்வொரு வரும் பல பிரதிகளை வரைய வேண்டும்,'' எனக் கூறினான். அவ்வாறு தயாரான படங்களுக்கு அழகிய சட்டம் போட்டுப் பல கடைகளில் விற்க ஏற்பாடு செய்தான்.
சில நாட்களுக்குப் பின் மன்னன் தன் மந்திரியிடம், ""என் ஓவியங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என நாம் அறிய வேண்டும். நாம் இருவரும் அயல்நாட்டு வியாபாரிகளைப் போல மாறுவேடத்தில் ஓவியக் கடை களுக்குப் போய்ப் பார்க்கலாம்,'' என்றான்.
மந்திரியும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், ""உடனேயே கிளம்பலாம்,'' என்றான்.
மன்னனும், மந்திரியும் மாறுவேடம் அணிந்து ஒரு ஓவியக் கடைக்குள் நுழைந்தனர்.
அங்கு பல ஓவியர்களின் படங்கள் அழகாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. வினு சக்ரவர்த்தியின் படங்கள் கடையின் ஒரு மூலையில் குவியலாகப் போடப் பட்டிருந்தன.
அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் கடைக் காரனிடம், ""நான் புதிதாக வீடு கட்டி இருக்கிறேன். அதற்கு திருஷ்டி கழிக்க ஒரு படத்தை மாட்ட வேண்டும். மிகக் குறைவான விலையில் நீங்கள் வினுசக்ரவர்த்தி படங்களை விற்கிறீர்களாமே, எனக்கு ஒரு படம் கொடுங்கள். அதை வீட்டின் முன் மாட்டுகிறேன்,'' எனக் கூறி குவியலிலிருந்து ஒரு படத்தை வாங்கிக் கொண்டு போனான்.
இதைக் கேட்ட மன்னன் அவமானத்தால், தலைகுனிந்து கொண்டான்.
அப்போது ஒரு ஓவியன் வந்து கடைக்காரனிடம், ""வினுசக்ரவர்த்தி படங்கள் இருக்கின்றனவா? அவற்றில் இரண்டு கொடுங்கள்,'' என்றான்.
அதைக் கேட்டு மாறு வேடத்தில் இருந்த மந்திரி அவனிடம் போய், ""உங்களைப் பார்த்தால் ஒரு ஓவியர் என்று தெரிகிறது. உங்களைப் போன்ற ஓவியர்கள் இந்நாட்டு மன்னரது ஓவியங்களைப் பாராட்டி ஆதரிப்பது போற்றப்படத் தக்க விஷயமே,'' என்றான்.
உடனே அந்த ஓவியன் பலமாகச் சிரித்து, ""அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒரு ஓவியப் பள்ளி நடத்தி வருகிறேன். புனிதமான ஓவியக் கலையை எப்படி ஒருவன் கொலை செய்து பாழாக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவே, இவற்றை வாங்கிப் போகிறேன். இதுவா ஓவியம்! ஏதோ ஒரு பைத்தியம் கிறுக்கின கோடுகள்,'' எனக்கூறியவாறே இருபடங்களை வாங்கி எடுத்துக் கொண்டு சென்றான்.
மன்னன் முகத்தில் ஈயாடவில்லை பாவம்! அவமானத்திற்கு மேல் அவமானம்! இனியும் அங்கே இருக்கலாமா அல்லது வேண்டாமா? என நினைத்தபோது வயதான பெண்மணி ஒருத்தி வந்தாள்.
அவள் கடைக்காரனிடம், ""வினு சக்ரவர்த்தி படங்கள் எட்டு கட்டிக் கொடுங்கள்,'' என்றாள்.
அப்போது மந்திரி அவளருகே போய், ""அம்மா! தாங்கள் நல்ல கலை ரசிகர் போலத் தெரிகிறது. ஒரேயடியாக எட்டுப் படங்களை வாங்குகிறீர்களே. வீட்டை அலங்கரிக்கத் தானே இவை?'' என்று கேட்டான்.
அந்த பெண், அப்படி எல்லாம் இல்லை, என் வீட்டு ஜன்னல்களில் இரண்டு பழுதடைந்து விட்டது. புதிய மரக் கட்டைகள் வாங்கலாம் என்றால் ஏகப்பட்ட விலை ஆகும். இந்த வினுசக்ரவர்த்தியின் படங்கள் சட்டத்தோடு மலிவாக கிடைக்கின்றன. இந்தப் படங்களைக் கிழித்து எறிந்து விட்டு, இந்த மரச்சட்டங்களை ஜன்னல்களில் பொருத்தப் போகிறேன். என்போன்ற ஏழைகள் எல்லாம் ஒருவேளை சாப்பாட்டிற்கே தவிக்கும் போது, இந்த மாதிரி ஓவியங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்க முடியுமா என்ன? அதெல்லாம் ராஜாக்கள், மகா ராஜாக்கள், பிரபுக்கள் வாங்கு வார்கள். ஏழைகளால் முடியாது,'' என்றாள்.
மந்திரியும், மன்னனும் கடையை விட்டு வெளியே வந்தனர். அப்போது மன்னனுக்குத் தன் ஓவியக் கலையின் மதிப்பு என்ன என்பது தெரிந்தது.
மந்திரியிடம், ""அமைச்சரே! நான் ஏழை எளியவர்கள் கூடக் கலையை ரசிக்க வேண்டும் என நினைத்து மாபெரும் தவறைச் செய்து விட்டேன். நான் வரைந்த ஓவியம் போல ஓவியம் வரைய அமர்த்திய சித்திரக் காரர்களை இப்போதே வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன்,'' என்றான்.
அப்போது மந்திரி, ""அரசே! ஏழை எளியவர்களும் கலையை ரசிக்க வேண்டியவர்களே... அவர்கள் புகழ் பெற்ற கலைஞர் களின் படைப்புகளைத் தான் பாராட்டுவார்கள். இப்படிப்பட்ட கலைஞர்களை நீங்கள் ஆதரிப்பதே நீங்கள் கலைக்குச் செய்யும் பெரிய தொண்டு. இந்த ஓவியர் களை நீங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமே,'' என்றான்.
மன்னனும், ""நீங்கள் கூறுவது சரியே... இப்போது நம்மிடம் உள்ள சித்திரக்காரர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, நாட்டில் பல இடங்களில் ஓவியப் பள்ளி களை நடத்தச் சொல்கிறேன். கலை ஆர்வம் கொண்ட மாணவர்கள் அவற்றில் சேர்ந்து சித்திரக்கலையைக் கற்கட்டும். அவர் களையும் ஊக்குவிக்கிறேன். இதுதான் கலையை எல்லா ரிடையேயும் பரப்பச் சிறந்த வழி,'' என்றான்.
மன்னன் தான் கூறியபடியே பல ஓவியக் கலைஞர்கள் தோன்ற வழி செய்தான்.
***

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.