E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நெல்லுக்கு இறைத்த நீர்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

""சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,'' என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தார். சபாபதி தங்கையின் கணவர் தான், சதாசிவம். சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்க்கிறார்.
சதாசிவத்தின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சபாபதியின் அடிமனதில், சற்று குழப்பமாக@வ இருந்தது. ""சதாசிவம் மாப்பிள்ளை எடுத்து வைத்த காரியம் எதுவும் தோற்றதில்லை. நம்ம பிள்ளைங்க, மாப்பிள்ளைங்க வேலை விஷயத்தில் எல்லாம், அவர் மூலமாக, நல்லது தான் நடந்திருக்கிறது. ஆனால், ஏனோ, சக்தி விஷயத்தில் மட்டும் நேரில் வந்து பேசுறேன் என்று சொல்கிறார். அதுதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது,'' தன் மனைவி மீனாட்சியிடம் புலம்பி கொண்டு இருந்தார் சபாபதி.
""ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் மாப்பிள்ளை நல்லபடியாக முடிச்சிடுவார்,'' நம்பிக்கை ஊட்டினாள் மீனாட்சி.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் சபாபதி.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என, மொத்தம் ஐந்து பிள்ளைகள் அவருக்கு. நான்கு பிள்ளைகளுக்கு, அரசு உத்தியோகம் வாங்கிக் கொடுத்து, கல்யாணம், காட்சி எல்லாம், நல்லபடியாக முடித்து வைத்து விட்டார்.
எஞ்சியிருப்பது, இளைய மகன் சக்தி மட்டும் தான். அவனுக்கும், ஒரு அரசு வேலை, கல்யாணம் என்று, கடமையை செய்துவிட்டால், அப்புறம் கண் மூடினாலும், கவலை இல்லை என்று நினைக்கிற, சராசரி அப்பா தான் சபாபதியும்.
ஆனால், இப்போதெல்லாம், தோளுக்கு மேல் வளர்ந்த - பிள்ளை அப்பா உறவு, அவ்வளவாக இனிப்பாக இருப்பதில்லை. பெரும்பாலான வீடுகளில், அது கசப்பாகவே இருக்கிறது. ஒரு சில வீடுகளில், ஓரளவுக்கு உவர்ப்பாகவும் இருக்கிறது என்று சொல்லலாம். இங்கே, சபாபதிக்கும், சக்திக்கும் உள்ள, அப்பா - பிள்ளை <உறவும் அப்படித்தான். இருவரும், முகம் நேரிட்டு பேசி, சரியாக மூன்று ஆண்டு ஆகிறது என்றால், இவர்களின் உறவு பாலத்தில், எந்த அளவுக்கு விரிசல் வீழ்ந்து இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த உறவுப் புரிதல்களின் சிக்கலுக்கு காரணம் தான் என்ன? வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பமும், நாகரிகத் தாக்கமும் ஒருபுறம் என்றாலும், பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக, திணிக்கப்படுகிற பெற்றோரின் அபிலாஷைகளும் மறுபுறம் <உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சக்தியின் நடவடிக்கைகளில் சபாபதிக்கு உடன்பாடில்லை.
"அவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறான்... அவன் இஷ்டத்திற்கு போறதும், வருவதுமா இருந்தா, நான் ஒருத்தன் எதுக்கு இந்த வீட்டில்?' என்று கேட்பார்.
"டிகிரி முடித்து, ரெண்டு வருஷமாச்சு. உருப்படியா ஒரு வேலையை தேடிக்காம, உருப்படாதவங்க கூட சேர்ந்து, ஊர சுத்துறான்...' எனப் புலம்புவார்.
"கருத்தா, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்கு படிச்சு இருந்தா, இந்நேரம் ஒரு வேலைக்காவது போயிருக்கலாம்... அதை விட்டுட்டு, ஊருல தண்ணீர் வரல; ஊராட்சி அலுவலகத்தில் கேட்க போறேன், ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப் போறேன்னு, வெட்டி வேலைப் பார்த்துட்டு திரிகிறான்...' என ஆதங்கப்படுவார்.
"நல்லாப்படிச்சு, முதல் மார்க் எடுத்த பிள்ளைங்களெல்லாம், நான் டாக்டராக போறேன், இன்ஜினியராக போறேன், கலெக்டராகப் போறேன்னுதான் சொல்வாங்க@ள ஒழிய, யாரும், நான் அரசியல்வாதியாக போறேன்னு சொல்றதில்லை; இவன் மட்டும் என்ன, ஊருக்கு பெரிய மனுஷனா?' என்பார்.
இப்படி அவ்வப்போது புலம்புவதும், அதட்டுவதும், மிரட்டுவதும், கண்டிப்பதுமாக இருந்தார் சபாபதி. ஆனாலும், சக்தி மாறவில்லை.
ஒருநாள், சொல்லி வைத்தார் போல், பிரச்னை வீடுதேடி வந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நிவாரண தொகை வழங்கப்பட்டதில், முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, ஒரு கூட்டத்தோடு சக்தி முற்றுகையிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும், வீடு தேடி வந்துவிட்டனர். வந்தவர்கள், சக்தியை அடக்கி வைக்குமாறு, சற்று மிரட்டலாகவே, சபாபதியிடம் சொல்லி விட்டுச் சென்றனர்.
விஷயம் வெளியூரில் உள்ள மகன், மகள், மருமகன்கள் காதுக்கு எட்டியது. பதறிப்போய், எல்லாரும் வீட்டிற்கு வந்து விட்டனர்.
"இதப்பாரு சக்தி... அப்பா சொல்றபடி கேளு. ஒரு வேலையை தேடிக்கோ... நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... ஊரில் ஆயிரம் நடக்கும். ஊர் பொல்லாப்பு நமக்கு எதுக்குடா?' இது பெரிய அக்கா.
"நாங்களெல்லாம், அப்பா சொல்படி கேட்டதுனால தான், இன்னைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கோம். ஆனால், நீ மட்டும் ஏன்டா இப்படி?' இது பெரிய அண்ணன்.
"நாங்களெல்லாம், இருந்த இடம் தெரியாம இருந்தோம். ஆனால், இன்னிக்கு... ஊர்ல இருக்கிற யார் யாரோ, நம்ம வீடுவரை வந்து மிரட்டிட்டு போறாங்க. இது எல்லாம் நமக்கு தேவையா?' இது சின்ன அண்ணன்.
"சதாசிவம் மாமாவிடம் சொல்லி, முதல்ல இவனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுங்க அப்பா. அப்படியே ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சிட்டா, எல்லாம் சரியாயிடும்...' இது சின்ன அக்கா.
சக்தியை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, ஆளாளுக்கு பேசினர். "அட்வைஸ்' மழை பொழிந்தனர்.
ஆனால், பதில் ஏதும் பேசாமல், மவுனமாகவே இருந்தான் சக்தி.
சக்தியின் சின்ன அக்கா சொன்னது போலவே, சதாசிவம் வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு கவரைக் கொடுத்தார் சபாபதி.
"இந்தாங்க மாப்பிள்ளே... இதில், ஐந்து லட்சம் பணமும், சக்தியோட சர்வீஸ் கமிஷன் பரீட்சை ஹால் டிக்கெட் ஜெராக்சும் இருக்கு. இப்போதைக்கு இதை வச்சுக்குங்க. மீதித் தொகையை, வேலை முடிந்ததும், செட்டில் பண்ணிடலாம்...'
கவரை வாங்கிக் கொண்ட சதாசிவம், யோசனையாக இருந்தார்.
"என்ன யோசிக்கறிங்க?'
"ஒண்ணுமில்ல மாமா. வேலை விஷயம் முன்னமாதிரி இல்ல. இப்ப பைசா கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க போல...'
"பரவாயில்ல மாப்பிள்ளே... என்ன எதிர்பார்த்தாலும் கொடுத்திடுவோம். ஒரு அப்பனா, என் கடமை முடியட்டும்...' சபாபதி உறுதியாக சொன்னார்.
எல்லாம் பேசி முடித்து, முதல் தவணை பணமும் வாங்கிக் கொண்டு, "நல்ல சேதியோடு வருகிறேன்...' என்று சொல்லி சென்ற சதாசிவம், மூன்று மாதங்களுக்குப்பின், இப்போது சென்னையிலிருந்து வந்து கொண்டிருக் கிறார்.
காலையிலேயே வந்துவிட்டார் சதாசிவம். பயணக் களைப்பு தீர குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டப் பின், மெல்ல பேச்சை எடுத்தார்.
""மாமா... நான் சொல்ற விஷயத்தைக் கேட்டு, நீங்க ஆத்திரப்படக் கூடாது.''
சதாசிவம் போட்ட பீடிகையே, சபாபதியை பதற வைத்தது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிந்திருந்த சக்தி, எதுவும் காதில் விழாதது போல நின்றிருந்தான்.
""மாமா... நம்ம சக்தி, அன்னிக்கு நடந்த சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்கே போகலை... வேலைக்காக, நான் மேல்மட்டத்துல, "மூவ்' பண்ணினப்ப தான், இவன் பரீட்சையே எழுதலைங்கிற விவரம் தெரிஞ்சது.''
சதாசிவம் சொல்ல, அதிர்ந்து போனார் சபாபதி.
""பரீட்சை எழுதி வேலைக்குப் போய் உருப்படுறத விட்டுட்டு, என்னத்த கிழிக்கப் போனான் இவன்... என் நிலமையும் மீறி, பணம் புரட்டி, வேலைக்கு ஏற்பாடு செய்தா, பரீட்சையே எழுதலையாமே இவன்...'' கோபத்தில் கத்தினார்.
""ஏன்டா இப்படி செஞ்ச?'' ஆதங்கப்பட்டாள் அம்மா.
""வேலை, எனக்குத் தேவையில்லை.'' உறுதியாய் சொன்னான் சக்தி.
""நான் இவனுக்காக இத்தனை மெனக்கடறேன், இவன் எவ்வளவு அலட்சியமாய் பேசறான் பார்,'' கொதித்தார் சபாபதி.
""போகட்டும்... இவன் எக்கேடாவது கேட்டுப் போகட்டும். எனக்கு பிறந்த பிள்ளைகளில், ஒருத்தன் செத்துப் போயிட்டதா நினைச்சு, தல முழுகிடுறேன்.''
சக்தியின் பக்கத்தில் அமர்ந்து, தோள்பட்டை மீது, கை வைத்து, ஆறுதலாக பேசினாள் அம்மா.
""சக்தி... அப்பா அப்படி பேசினத நினைச்சு, ரொம்ப கவலைப்படுறாயாப்பா... அவர், உன் மேல இருக்கிற ஆதங்கத்தில் தான், வாய் தவறி பேசிட்டார். அவர், இதுக்கு முன், அப்படி பேசி, நானே பார்த்ததில்லே... எல்லாம் சரியாயிடும். நீ எதையும் மனசுல வச்சுக்காத.''
பதில் சொல்லாமல், அப்படியே உறைந்து அமர்ந்திருந்தான் சக்தி.
சதாசிவமும் அவனருகில் வந்தார்.
""ஆமாம் சக்தி... உங்கப்பா, உன் மேல ரொம்ப கோபத்திலே இருக்கிறார். அவர் கோபத்திலேயும் நியாயம் இருக்குதானே? நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு தானே, அந்த மனுஷன் இந்த பாடுபடுகிறார்.
""ஹால்டிக்கெட் இருந்தும், நீ பரீட்சைக்கு போகாத விஷயம், எனக்கு அங்கப்போய் பார்த்த பின்தான் தெரியும். இதை நான், அங்கிருந்து போனிலே சொல்லியிருந்தா, உங்கப்பா ரொம்ப டென்ஷனாயிடுவார். அதனால தான், இது சம்பந்தமாக, நான் பக்குவமாக பேசி முடிக்கலாம் என்று நேரில் வந்தேன்.
""நீ பரீட்சைக்கு போகவில்லையென்றாலும், பிரச்னை இல்லை. எல்லாத்தையும் நான் பேசி முடிச்சிட்டேன். நீ வந்த மாதிரி, அவங்க எல்லா ரெக்கார்டும் ரெடி பண்ணிடுவாங்க. என்ன, அதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகும்...
""மாமாவிடமும் இதுப்பற்றி பேசிவிட்டேன். "செலவாவது பற்றி பரவாயில்லை. வேலை முடிஞ்ச பின், இந்த வீம்புக்காரன் போகமாட்டேன்னு சொன்னா, பணம் தான் நஷ்டமாகும். அதனால், அவன் என்ன முடிவில் இருக்கிறான் என்று கேட்டுட்டு செய்யுங்க...'ன்னு சொல்லிவிட்டார்.
""இதுக்கப்பறம் இந்த வேலைக்கு ஆளு எடுக்கணும்ன்னா, இன்னும் நாலு, ஐந்து ஆண்டு ஆகும். இதுதான் கடைசி வாய்ப்பு. நல்லா வருமானமும் வரும். நீ தான் நல்ல முடிவா சொல்லணும்,'' விவரமாக பேசி முடித்தார் சதாசிவம்.
""ஆமாம் சக்தி... நீ, அப்பாவும், மாமாவும் சொல்றபடி நடந்துக்கோ. எல்லாம் உன் நன்மைக்காகத்தான் செய்றோம். இல்லேனா, வீட்டில் இன்னும் பிரச்னை தான் இருக்கும்,'' குடும்ப சூழ்நிலையை கருதி, மகனை சமாதானப்படுத்த முயற்சித்தாள் மீனாட்சி.
ஆனால், தன் முடிவில் உறுதியாக இருந்தான் சக்தி.
""நீங்க வாங்கித்தரப் போறதா சொல்ற வேலை, இதே மாதிரி, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளோட இருக்கிற, ஒரு குடும்பத்து இளைஞன், முறையா பரீட்சை எழுதி பாஸ் பண்ணி வாங்கப் போற வேலை. அவனோட முயற்சிகளை குழித்தோண்டி புதைச்சிட்டு, பணத்தால அவனோட வேலையை, நாம பார்க்கிறது சரிதானாம்மா?'' அம்மாவிடம் கேட்டான் சக்தி.
""என்ன மன்னிச்சுடுங்கம்மா... நேர்மையான முறையில், யாருக்கோ கிடைக்க வேண்டிய இந்த வேலை, குறுக்கு வழியில கிடைக்கிறது, கொஞ்சம் கூட நியாயம் இல்லேம்மா. அப்பாவும், மாமாவும் சொல்ற மாதிரி, பணம் கொடுத்து, ஊழல் பண்ணி, வேலை வாங்குறதுல எனக்கு இஷ்டம் இல்ல. நியாயமா ஒருத்தருக்கு கிடைக்க வேண்டிய வேலை அது. நம்ம ஊர்ல இல்லாத வேலையா? நம்ம வயல்ல விவசாயம் பார்த்தாலே, நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாமே,'' என்றான் சக்தி. சிறு இடைவெளிக்குப் பின் அவனே தொடர்ந்தான்...
""நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழி ஓடி, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். இது நான் படித்த, நாலடியார் பாடல். இது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால், இதிலிருந்து, நான் புரிஞ்சுகிட்டது, நீராக இருக்கிற அரசாங்கத்தின் திட்டங்கள், வாய்க்காலாக இருக்கிற அதிகாரிகள் மூலமாகத்தான், நாடுங்கிற வயல்ல, நெல்லாக இருக்கிற மக்களுக்கு, போய் சேரணும்.
""நெல்லுக்கு இறைத்த நீர், நெல்லுக்குத் தான் போய் சேரணும்; புல்லுக்கு அல்ல. அதற்கு, வாய்க்கால் சுத்தமாக இருக்கணும். காலையில், அப்பா, வேலையாள் மாடசாமி கிட்ட, "வாய்க்கால் சுத்தமாக இல்லாததுனால தான், சரியாக நெல்லுக்கு, நீர் போய் சேரல. முதல்ல வாய்க்காலை சுத்தம் பண்ணுடா...'ன்னு சொல்லி அனுப்பினார்.
""விவசாயத்தில், வாய்க்கால் சுத்தம் செய்ய வேண்டியத புரிஞ்சுக்கிட்ட அப்பா, வாழ்க்கையில், சுத்தமாக வைத்திருக்க வேண்டிய வாய்க்காலை, ஏனோ அசுத்தமாக்கி விட்டார். அதனாலே, முதல்ல, நான் வாய்க்கால் சுத்தம் பண்ண போறேம்மா...'' பேசி முடித்து, பின்புறமிருந்த மண்வெட்டியை கையில் எடுத்து வெளியே புறப்பட்டான் சக்தி.
அவன், "வாய்க்கால்...' என்று சொன்னது, தன்னைத்தான் என்பதை, புரிந்துகொண்ட சதாசிவத்திற்கு, சற்று உறுத்தலாகவே இருந்தது.
மண்வெட்டியை தோளில் சுமந்து, வீரமிக்க ஒரு இளைஞனாக, புதிய விடியலை நோக்கி, வீதியில், சக்தி போய் கொண்டிருப்பதை, விழி கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் சதாசிவம். ஏற்பாடு செய்யப்பட்ட வேலையை, ஏற்க மறுக்கும் தன் மகன், அதற்காகச் சொன்ன காரணத்தில் இருந்த நியாயத்தை, உணர்ந்து மகிழ்ந்தாள் மீனாட்சி.
***

அ. ஹரிகிருஷ்ணன்

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Coimbatore,இந்தியா
25-டிச-201215:22:51 IST Report Abuse
Bala இந்தமாதிரி எங்காவது ஒரு சக்தி தான் இருப்பான் .... ஆனால் ஆயிரம் ஆயிரம் சதாசிவம் மாமாவும் , சபாபதி மாதிரி அப்பாவும் இருக்கிறார்கள் ., என்ன செய்வது ???
Rate this:
0 members
0 members
8 members
Cancel
Sami - Tirupur,இந்தியா
23-டிச-201213:28:30 IST Report Abuse
Sami யதார்த்த உண்மைகள் கதைகளாகும் போது கொஞ்சம் மனம் உறுத்தத்தான் செய்யும். அப்படி இல்லையெனில் வெறும் கற்பனைக்கதைகள் என எதிர்காலம் சொல்லும் நிலை ஆகிவிடும். ஒரு சிலர் கதையின் நாயகன் சக்தி போல தவிர்த்து இன்றைய நவீன உலகம் புரிந்துகொள்ளுமா?.
Rate this:
1 members
0 members
7 members
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
24-டிச-201204:31:06 IST Report Abuse
GOWSALYAஅது ரொம்பக் கஷ்டம் சாமி [திருப்பூர் ] சகோதரரே.......தனது தந்தை தொழிலாளி என்றே சொல்லத் தயங்கும் நவீன உலக மாக்கள்.......?...
Rate this:
2 members
0 members
3 members
Sami - Tirupur,இந்தியா
24-டிச-201222:29:36 IST Report Abuse
Samiநன்றி சகோதரி கௌசல்யா...எல்லாம் நன்மைக்கே. இந்நிலை மாறும் நாள் விரைவில் மலரும்....
Rate this:
1 members
0 members
2 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.