தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர்., புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது. அவருக்கு, வரும் டிசம்பர் மாதம் 24ம்தேதி, 25வது நினைவு நாள். "மனிதருள் மாணிக்கம்' பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும். இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர்., என்ற ஈகை பெருந்தகை யாளரை, ஜாதி - மத மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துவோர் என்றும் உண்டு. அவரது பெயரை முன் நிறுத்தாமல், உச்சரிக்காமல், இன்றைக்கும் யாரும் அரசியலில் அடையாளம் பெற்றுவிட முடியாது.
தன் தாயின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு, சைக்கிள் கூட ஓட்ட கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையே வசீகரிக்கும் கலையை எப்படி கற்றுக்கொண்டார் என்பது, அவரோடு பயணித்தவர்களால் கூட கற்றுக் கொள்ள முடியாத ரகசியம்.
உண்மையில் அது ரகசியமல்ல, எந்த நேரமும், ஈரம் கசியும் அவரது பொன் மனமும், கொடைத்தன்மையும் தான் என்பது ஊரே அறிந்த ரகசியம். ஆனால், அவர் ஒருவர் மட்டுமே, உயிருள்ள மட்டும் அதை பின்பற்றியது அதிசயம்.
பொருளாதாரமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே, சினிமாவில் இரட்டை வேடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் காட்டிய புதுமை, இன்றைக்கும் வியக்க வைக்கும் உத்திகளாகும். நடிப்பு, ஒளிப்பதிவு, டைரக்ஷன், தயாரிப்பு என்று, சினிமாவில் பன்முகக் கலைஞராக ஒளிர்ந்தாலும், புகைப்பட கேமரா மீது, அவருக்கு தனி கவனமும், கரிசனமும் இருந்தது.
இன்றைக்கு வரும் சினிமாவில் கூட, ரகசியமாய் படம் எடுக்கும் போது, "பிளாஷ்' அடிப்பது போல, தப்பாக காட்சி வைக்கும் சூழலில், பல வருடங்களுக்கு முன் வந்த, "ரகசிய போலீஸ் 115' என்ற படத்தில், அவர் பிளாஷ் உபயோகிக்காமல் ஒரு சின்ன கேமராவில் படம் எடுத்து, உண்மையிலேயே ரகசிய போலீசாக வாழ்ந்து இருப்பார். கேமராவை முதலில் படித்து விடுவார்; அதன்பின், அது தொடர்பாக நடித்து விடுவார் என்பர்.
கேமராவின் பரிணாம வளர்ச்சியை அடுத்தடுத்து வந்த அவரது படங்களின் மூலமே அறிந்து கொள்ளலாம். அனைத்து கேமராக்களையும் மிக லாவகமாக அவர் கையாளும் அழகே தனி. இப்படி கேமராவும் கையுமாக அவர் சினிமாவில் தோன்றிய காட்சிகளை தொகுத்து, அதை ஒரு புகைப்படக் கண்காட்சியாக, சென்னையில் கேமரா காதலரும், ஓவியருமான ஸ்ரீதர் வைத்திருந்தார். அந்த படங்களை, தங்கள் பகுதியில் கண்காட்சியாக வைக்க விரும்பும் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9884035121.
***
எல். முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.