உள்ளமெனும் பெருங்கோவில்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில். இந்த மாதிரி வெயிலுக்கு பின், மழை இருக்குமென அப்பா சொல்வார். ஆற்றில் கைகால் கழுவி, முகம் துடைத்து, சூரியனை நோக்கி கைகூப்பி விட்டு கரையேறும் போது, மனம் பார்க்காதே என தடுத்தாலும், கண் வலப்பக்கம் தன்னிச்சையாக திரும்பியது, ரணமாக வலித்தது.
ஆற்றங்கரையில்... சதுரமாக நான்கு குட்டைச் சுவர்களும், மேற்கூரையை இணைக்கும் கம்பி வலையுமாக, தட்டைக் கூரையுடன் சிறுமண்டபம். சுற்றிலும் இரண்டடிக்கு இருந்த குப்பை கூளங்கள், ஆட்டாம் புளுக்கைகள், காய்ந்த மாட்டுச் சாணம், கதவில் தொங்கிய துருபிடித்த பூட்டு.
வீரமுத்துவுக்கு கண்கள் பனித்தன. "இரண்டு வருடம் ஓடிவிட்டதே. இன்னுமா விடிவு வரவில்லை?'
அந்த கிராமத்தில்... அப்படி ஒரு வழக்கம். பொங்கல் அன்று அவரவர் வீட்டில் கொண்டாட்டங்கள் முடிந்த பின், மாலை ஆற்றங்கரை, அரசமர மேடை முன் கூடுவர். மேடையில் வீரமுத்துவோடு, ஊர் பெரிய மனிதர்கள் சிலரும் இருப்பர். அந்த வருடத்துக்கான, ஊர்த்தேவைகள் என்ன என்பதை பொதுவாக விவாதித்து, முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தொகையை நிர்ணயிப்பர்.
ஊர் மக்கள், அவரவர் பங்குக்கு, எவ்வளவு தர வேண்டும் என்பதும் முடிவாகும். இது போல, அரசையே முழுக்க நம்பியிராமல், தங்கள் கிராமத்துக்கான தேவையை, தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்வர்.
அந்த வருடம் கூட்டம் கூடியபோது, எழுந்து நின்றாள் ஒரு மூதாட்டி.
"ஆத்தா... என்ன தேவைன்னு சொல்லு. யார் வேணாலும் சொல்லலாம்...' என்றார் வீரமுத்து.
"ஐயா... நம்ம கிராமத்துக்கு, நல்ல சாலை போடறதிலேயிருந்து, தண்ணீர் தொட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், பால் பண்ணைன்னு, எல்லாமே பொது காசுலே செஞ்சு கொடுத்திருக்கீங்க. ஆனா, கும்பிடறதுக்கு, அரசமரத்தடி பிள்ளையாரை விட்டா, வேற கோவில் சாமின்னு எதுவும் இல்லீங்களே...
"ஐந்து கி.மீ., தள்ளி, பக்கத்து ஊர் மாரியம்மன் கோவிலுக்கு போய் தானே மாவிளக்கு, முடி காணிக்கை, பொங்கல் படையல்ன்னு, நேர்த்திக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கே நமக்குன்னு, ஒரு அம்மன் கோவில் இருந்தா, எல்லா படையலும் இங்கேயே போட்டுக்க வசதியா இருக்குமில்லையா?'
வீரமுத்துவின் அருகிலிருந்த முதியவர் ஆமோதித்தார். "ஆமாம்பா வீரமுத்து.... எனக்கு தெரிஞ்சு, எண்பது வருஷமா... இந்த கிராமத்தில கோவிலே கிடையாது. எப்பவோ... ஒரு மாரியம்மன் கோவில் இருந்ததுன்னு சொன்னாங்க...
"கோஷ்டி சண்டையிலே, அந்த கோவிலையும் இடிச்சு போட்டுட்டாங்களாம். அதுக்குப் பிறகு, கோவில் கட்ட யாரும் முன்வரலை. இன்னி வரை, அதைப் பத்தி நினைக்கவும் இல்லை. ஆக, கிராமத்துக்கு ஒரு கோவில் வர்றது நல்லது தான்...'
மவுனமாக கூட்டத்தைப் பார்த்தார் வீரமுத்து.
கசமுசவென பேசிக் கொண்டிருந்தவர்களில், அங்கும் இங்குமாக சிலர் எழுந்தனர்.
"ஆத்தா சொல்றது சரிதாங்க... நம்ம கிராமத்துக்குன்னு கோவில் இருந்தா, நம்ம இஷ்டப்படி திருவிழா எடுத்து கொண்டாடலாம். எப்ப வேணா போய், சாமி கும்பிடலாம். ஒண்ணு ஒண்ணுக்கும் பக்கத்து ஊருக்கு போக வேணாம். நம்ம ஊரு, நம்ம சாமின்னு இருக்கும்...'
பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுத்ததால், கோவில் கட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலில் சின்னதாக ஒரு மண்டபம். மேலே கோபுரம் சுற்றி வர இரண்டடிக்கு பிரகாரம். சுற்றி கம்பி வேலி என, திட்டம் போட்டு உத்தேசமாக ஒரு தொகை குறித்தனர். இப்போதைக்கு அம்மனை பிரதிஷ்டை செய்துவிட்டு, பிறகு பணம் சேரச்சேர மற்ற சன்னிதிகள் கட்டி, விரிவுபடுத்தலாம் என, முடிவு செய்தனர்.
செழிப்பான கிராமம் என்பதால், நினைத்ததற்கு மேலேயே வாரி வழங்கினர். கோவில் கட்டுவதற்கான இடத்துக்காக, வீரமுத்துவே ஆற்றங்கரையிலிருந்த பரம்பரை நிலத்திலிருந்து, அரை ஏக்கரை தானமாக வழங்கினார்.
நல்ல நாளில் வேலை துவங்கியது. கணிசமாக கையில் பணம் சேர்ந்ததால், மண்டபம் மளமளவென எழும்பியது. சதுர மண்டபத்தை சுற்றி, சுவர் எழுப்பி, கம்பி கிரில் பதித்து, மேற்கூரை போட்டாயிற்று. சுற்றி வராந்தாவும், சிமென்ட் பூசி ரெடியாகி விட்டது.
பக்கத்து ஊர் குருக்களுடன் சுவாமிமலை சென்று, அம்மன் சிலை வாங்கி வந்துவிட்டார் வீரமுத்து.
கிரமப்படி மண்ணிலும், கிணற்று நீரிலும் மூன்று மூன்று மாதம் தவமிருந்த அம்மன், இப்போது வீரமுத்து வீட்டு, நெல் குதிரில் அமிழ்ந்திருக்கிறாள்.
மண்டபம் ஏறக்குறைய தயாராகி விட்டது. கோபுரம் கட்டி, கலர் பூச வேண்டியது தான் பாக்கி. அந்த நேரம் பார்த்து, எங்கிருந்தோ வந்து குதித்தான் வீரமுத்துவின் பங்காளி.
"கோவில் கட்டற இடம் என்னுது. எப்படி நீங்க, உங்க இஷ்டப்படி தானம் கொடுக்கலாம்?' என்று எகிறினான்.
வீரமுத்துவும், மற்றவர்களும் எத்தனையோ சமாதானம் சொல்லியும், கேட்காமல் பேயாட்டம் ஆடினான்.
வீரமுத்து தன் சொந்த பங்கிலிருந்து, அரை ஏக்கர் எழுதித் தருவதாக கூறியும் அவன் கேட்கவில்லை. நேராக கோர்ட்டுக்கு போய், "ஸ்டே' ஆர்டர் வாங்கி விட்டான்.
கோவில் வேலை அப்படியே நின்று விட்டது. இடிந்து போனார் வீரமுத்து. நெல் குதிருக்கு பக்கத்தில் நின்று கண்ணீர் விட்டார். "இது என்னம்மா சோதனை... கோவிலுக்கு வர, உனக்கு இஷ்டம் இல்லையா அம்மா...' என்று மனதுக்குள் மறுகினார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடமாகி விட்டது. அந்தப் பக்கம் செல்பவர்கள், வேதனையுடன் மண்டபத்தை பார்த்துவிட்டு, நகர்வதோடு சரி. நாளடைவில் கோவில் பற்றி பேச்சே மங்கி மறைந்து விட்டது.
பெருமூச்சுவிட்டபடி கரையேறி நடந்தார் வீரமுத்து. சரசரவென கரிய மேகங்கள் சூழ்ந்து, பெருந்தூரலாக பொழியத் துவங்க, ஓட்டமும் நடையுமாக, வீட்டை நோக்கி விரைந்தார்.
தூரல், பெரு மழையாக கொட்டத் துவங்கி, இரவு உச்சக்கட்டத்துடன் ஆக்ரோஷமாக அடித்தது. கூடவே பெருங்காற்றும் சேர்ந்து கொள்ள, எங்கோ, எதுவோ சரசரவென சரியும் சப்தம், இருட்டைக் கிழித்துக் கொண்டு காதில் மோதியது.
நெல் குதிர் இருக்கும் அறையிலேயே, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த வீரமுத்து, தன்னை அறியாமல் உறங்கினார்.
ஜன்னல் வழியே, பளீரென முகத்தில் அடித்த சூரிய ஒளியால் எழும்பிய வீரமுத்து, வாசலுக்கு வந்தார். மழை ஓய்ந்து, மேகம் கலைந்து, அலம்பி விட்டது போல, கதிரவன் எழும்பிக் கொண்டிருந்தான்.
""ஆத்தங்கரைக்கு போயிட்டு வர்றேன்...'' உட்புறம் திரும்பி, மனைவிக்கு குரல் கொடுத்துவிட்டு நடந்தார். வழியெங்கும் முறிந்து விழுந்த கிளைகள், சாய்ந்து கிடந்தச் செடிகள். வயல்வெளிகளில் தளும்பி நிற்கும் நீர். ஆற்றங்கரையை அடைந்ததும், கண்கள் வழக்கம் போல் மண்டபத்தை நோக்க, அப்படியே திகைத்து நின்றார்.
மண்டபத்தை சுற்றிலும், வராந்தா சுத்தமாக பெருக்கிவிடப்பட்டு கதவு, திறந்திருக்க, உள்ளேயிருந்து காச்மூச்சென்று சப்தம்.
வீரமுத்து வேகமாக மண்டபத்தை நெருங்க, உள்ளேயிருந்து ஓடிவந்தார் ஆசிரியர் ராமசாமி.
""மன்னிச்சுடுங்க ஐயா... நேத்து ராத்திரி, காத்து மழையிலே... பள்ளிக் கூட கூரை சரிஞ்சு விழுந்துடுச்சு. காலையிலே வழக்கம் போல, பள்ளிக்கூடம் வந்தப்போ, பார்த்து அதிர்ச்சியாயிட்டேன்...
""பசங்க வேறே, புத்தகப் பையோட வரத் துவங்கிட்டாங்க. திருப்பி வீட்டுக்கு அனுப்ப மனசில்லே. இப்போதைக்கு மண்டபம் சும்மாதானே இருக்குன்னு, வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சாவி வாங்கிட்டு வந்து, மண்டபத்தை சுத்தம் செய்து, பசங்களை உட்கார வெச்சு, பாடம் நடத்திகிட்டிருந்தேன். தப்புன்னா மன்னிச்சுடுங்க.''
உள்ளே பார்த்தார் வீரமுத்து. அம்மன் அமர வேண்டிய பீடத்தில், கரும் பலகை சாத்தியிருந்தது. எதிரே மாணவர்கள் வரிசை வரிசையாக அமர்ந்து, எழுதிக் கொண்டிருந் தனர். பார்க்கும் போதே, சிலிர்த்தது வீரமுத்துவுக்கு.
உணர்ச்சிவசப்பட்டு, சட்டென ஆசிரியரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
""புரிஞ்சிபோச்சு வாத்தியாரே... அம்மா சொல்லாம சொல்லிட்டா, "புள்ளைங்க படிக்க பள்ளிக் கூடம் கட்டறது தாண்டா, இப்ப முக்கியம். என் கோவிலுக்கு, இப்ப அவசரமில்லே...'ன்னு, உங்களை சாட்சியா வெச்சு சொல்லிட்டா...
""இப்பவே போய், ஊர் பெரிய மனுஷங்களோட கலந்து பேசி, முதல்ல பள்ளிக் கூடத்தை நல்ல முறையிலே கட்ட ஏற்பாடு செய்றேன். முதல் வேலையே அதுதான்.''
வேகமாக ஊரை நோக்கி விரையும் வீரமுத்துவை, பிரமிப்புடன் பார்த்தார் ஆசிரியர் ராமசாமி. உள்ளே மாணவர்கள், குரல் கோரசாக ஒலித்தது.
"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்...' நெற்குதிருக்குள் அம்மன் புன்னகைத்தாள்.
***

பானுமதி ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh kumar - chennai,இந்தியா
24-டிச-201212:35:36 IST Report Abuse
Suresh kumar கோவில் வந்த பிறகு அந்த ஊர் மேலும் செழிக்கும்,நிச்சயம் அந்த ஊருக்கு கோவில் வரும், அருமையான கருத்து, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
24-டிச-201204:25:54 IST Report Abuse
GOWSALYA உண்மைதான் சகோதரி ஜானகி.....நம்ம நாட்டில் பள்ளிகளைவிட கோவில்களே அதிகம்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.அதனால்,தேவையான ஓரிரு கோவில்களை விட்டு மிகுதியைப் பள்ளிக்கூடமாகி,எத்தனையோ சிறார்களை அப்துல்கலாம் ஐயாவகவோ,அன்னை திறேசாவகவோ,ஐயா காமராஜாகவோ மாற்றலாம் தானே....ஆனால், பூனைக்கு மணிகட்டுவது யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?
Rate this:
Share this comment
Cancel
JANAKI ILANGOVAN - Coimbatore,இந்தியா
23-டிச-201209:29:32 IST Report Abuse
JANAKI ILANGOVAN இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம் அருமையான ஆழ்ந்த சிந்தனை உடைய கதை. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.