எஸ். பரமசிவம், திருமங்கலம்: சமீபத்தில் எனது 28 வயது மகனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த வயதில் இது சாத்தியம்தானா?
பக்கவாதம் என்பது உடலின் ஒரு பாதி செயலிழப்பது. சிறுவயதில் இப்பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக ரத்தத்தில் கோளாறு, இருதயத்தில் ஓட்டை, இருதய பம்பிங் திறனில் கோளாறு, வால்வுகளில் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள். இதுதவிர சிறுவயதில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மூளை, நரம்பில் கோளாறுகளாலும் ஏற்படலாம். இதற்கு நீங்கள் உடனடியாக மூளை, நரம்பியல் நிபுணர் மற்றும் இருதய நோய் நிபுணரை அணுகி, ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
வி.கணேசன், சுப்ரமணியபுரம்: எனது வயது 65. எனக்கு சாப்பிட்ட பின், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது; நடக்கவும் முடியவில்லை. இது எதனால்?
சாப்பிட்ட உடனே நடக்க முடியவில்லை என்றால், அது இருதயத்தின் பாதிப்பாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இருதயத்தில் ரத்த ஓட்டம் பாதிப்பு உள்ள பலருக்கு, வெறும் வயிற்றில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் சாப்பிட்டபின், சிறிதுதூரம் நடந்தாலே மூச்சுத் திணறல், நெஞ்சு அடைப்பு ஏற்படும்.
எனவே உடனடியாக நீங்கள் இருதய டாக்டரை சந்தித்து, எக்கோ, டிரெட் மில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் தேவைப்படும். இவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப, உங்களுக்கு சிகிச்சை தேவைப்படும்.
எஸ். ராமநாதன், திண்டுக்கல்: "நட்ஸ்' வகைகள் சாப்பிடுவது இருதயத்திற்கு நல்லதா?
"நட்ஸ்' வகைகளில் பாதாம், வால்நட் போன்றவை இருதயத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நட்ஸ்களை தினமும் சிறிதளவு எடுத்தால், Unsaturated Fat, Omega3 சத்துக்களும், நார்ச்சத்தும் இருப்பதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது.
இதுதவிர நல்ல கொழுப்பின் அளவும் சிறிது அதிகரிக்கப்படுகிறது. இதனால் ரத்தக்குழாயில் ரத்தக்கட்டிகள் ஏற்படும் தன்மை குறைந்து, ரத்தக் குழாயின் உட்புறச் சுவர்கள் பலம் பெறுகின்றன. வேர்க்கடலையை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
தேங்காயை பொறுத்தவரை, நம் உணவில் அதன்அளவை நன்கு குறைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை அறவே தவிர்ப்பது சிறந்தது.
குமார், காரைக்குடி: எனது வயது 60. எனக்கு 15 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. முதலில் Aten என்ற மாத்திரையை எடுத்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக Telmisartan 40மி.கி., என்ற மாத்திரையை தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு ரத்தஅழுத்தம் 130/80 என்ற அளவில் உள்ளது. நான் இந்த மாத்திரைகளை நிறுத்தி விடலாமா?
ரத்தஅழுத்தம் 15 ஆண்டுகளாக உள்ளது எனில், நீங்கள் தொடர்ந்து மாத்திரை எடுப்பதே சிறந்தது. சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைப்பயிற்சி உங்களுக்கு அவசியம் தேவை. "டெல்மிசார்டான்' மாத்திரை ரத்தக்கொதிப்பை நன்கு குறைப்பதுடன், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் மிகவும் குறைவே.
நீங்கள் இம்மாத்திரைகளை நிறுத்தி, அதனால் உங்கள் ரத்தஅழுத்தம் அதிகமானால், சிறுநீரகம், மூளை, இருதயம், ரத்தநாளங்கள், கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் மாத்திரையை தொடர்ந்து எடுப்பதே நல்லது.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.