ஸ்ரீ கிருஷ்ண கான சபையின் இந்த ஆண்டு இசை - நாட்டிய விழா நிகழ்ச்சிகளில் நிறைய திறமையுள்ள இளம் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தருகின்றனர். இந்த வரிகளில், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் காமகோடி கான மந்திர் கலையரங்கத்தில் இளம் நாட்டியமணி சிவஸ்ரீயின் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
சிவஸ்ரீ, இசைப் பாரம்பரியத்தில் சீர்காழி சகோதரர்களில் ஒருவராக பிரபலமான சீர்காழி ஜெயராமனுடைய பேத்தி - தந்தை ஸ்கந்த சுப்பரமண்யம் ஒரு சிறந்த லய வித்வான். பாட்டி சாந்தி ஜெயராமன் அருமையான குரலுடன் நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பாடி வருகிறார். சிவஸ்ரீயும் மிக மதுரமாகப் பாடுவதிலும் வல்லவர்.
ஆச்சார்ய சூடாமணி ரோஜா கண்ணன் சிஷ்யை இவர் என்பதால் படு நேர்த்தி - பட்டு கத்தரித்த நயத்துடன் நாட்டிய வடிவமைப்பை வெகுவாக ரசிக்க முடிந்தது. ஒரு அத்துமீறலும் இல்லாத நிகழ்ச்சி. ஆனந்த நர்த்தன கணபதியாக விநாயகப் பெருமானின் அழகிய அசைவுகள் - முத்திரைகளுடன் ஊத்துக்காடு வேங்கடகவியின் நாட்டை - ராகம் - ஆதிதாள கீர்த்தனை ஆனந்த நர்த்தன கணபதியின் சிறப்புக்களை பட்டியலிட்டு ஆடிய இனியதொரு துவக்கம் சிறப்பாகும்.
இளம் சிவஸ்ரீக்கு சரியான பருவம் இந்த நிகழ்ச்சியில் அவர் ஆட எடுத்துக் கொண்ட சாமியை அழைத்தோடி வா சகியே என்று தோடி ராகத்தில் துவங்கும் ஆதிதாளத்தில் அமைந்த பதவர்ணம்; இதில் ராகமாலிகையாக மோகனம், வசந்தா, தேவமநோகரி, சங்கராபரணம், எத்துக்கடை சாகித்யமாக சாரங்கா - கானடா - ஆரபி - பைரவி பின்பு சிட்டைஸ்வர சாகித்யம் என்று அருமையாக இருக்கும். இதில் சிவபெருமான் மீது காதல் கொண்டு தன் தோழியை தூது அனுப்பி தன் அளவற்ற காதலை வெளிப்படுத்தும் தலைவியின் மனநிலையை அப்படியே படம் பிடித்தார்.
அத்தனை ரசங்களையம் அருமையாக இந்த வர்ணத்தின் ஒவ்வொரு விதிகளின் மூலமாக சிவஸ்ரீ உணர்த்தி ஆடினார். இதை தொடர்ந்த விருத்தம் (காபி) முருகப் பெருமானின் அருளை வேண்டியும் பொருள் அமைந்தது. பெரியசாமி தூரனின் புகழ் வாய்ந்தப் பாடலான முருகா, முருகா என்றால் உருகாதா (சாவேரி) (மிச்ரசாபு) என்ற பதத்திற்கு உருக்கமான பக்திரசத்தைப் பிழிந்த முகபாவம், முத்திரைகள், அருதி எழில் நிலைகள் இப்படி எல்லா அம்சங்களையும் காட்டிய அபிநயம் சிறப்பாகும்.
சிவஸ்ரீ ஆடிய டாக்டர் பாலமுரளியின் கதன குதூகல ராகம், ஆதி தாளம் தில்லானாவின் ஒவ்வொரு அசைவுகளையும், பாத வேலைகளையும் சிவஸ்ரீ ஆடியதை அவசியம் பாராட்ட வேண்டும். கலைமாமணி நெல்லைக் கண்ணனின் லயம் படுநேர்த்தி. அனுசரனை ததும்ப இருந்தது. கலைமாமணி டி.கே.பத்மநாபனின் மதுரமான வயலின் வாசிப்பு படு மெருகுடன் ஜோர். மனதில் தடம் பதித்த நடன நிகழ்ச்சி இது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.