இசை ஊஞ்சலாட வைத்த ரஞ்சனி, காயத்ரி இன்னிசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
00:00

ஸ்ரீதியாக பிரம்ம கான சபையின், 33வது இயல், இசை, நாடக விழா மற்றும் 24வது பரத நாட்டியவிழா, மிக கோலாகலமாக தொடங்கியது. ஓபுல் ரெட்டி ஞானாம்பாள் நினைவாக, இசை நிகழ்ச்சிகளை வாணிமகாலில், திருப்பதி 44வது ஜீயர் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் துவக்கி வைத்தார்.
வாணிகலா சுதாகரா விருதுகள் பாம்பே ஜெயஸ்ரீ, டி.என்.கிருஷ்ணன், டி.கே. மூர்த்தி, தீபிகா ரெட்டி, ஏ.ஆர்.எஸ்., ஆகியோருக்கு வழங்கப்பட்டன. பிரதான நேர இசை கச்சேரிகளில் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளின் குரலிசை கச்சேரி நடைபெற்றது. நல்ல அரங்கு நிறைந்த கூட்டம்.
முத்துஸ்வாமி தீட்சிதரின், ஸ்ரீகுரு குஹ தாரயாசுமா சுத்தஸாவேரி பாடலும், அதற்கு கொடுத்த கற்பனை ஸ்வரங்களும், கச்சேரியின் ஆரம்பமே களை கட்ட வைத்தது. அடுத்து, ஹிந்தோள ராகத்திற்கு மிக அழகாக ராகம் பாடினர். சுசுவஸ்வரங்களை தொட்டு விரித்து, அனைத்து ஸ்தாயிகளிலும், அதன் அழகு கொஞ்சும் சஞ்சாரத்தை, அவர்களுக்கே உரித்தான பொடி பிருகாக்களைக் கொடுத்து, இவர்கள் பாடலைக் கேட்ட ரசிகர்களின் மனது, இசை ஊஞ்சலாடியது.
அதைத் தொடர்ந்து, தியாகராஜரின் மனசு லோனி பாடலை, மிக அழகாக பாடி, கனிகரும்பு இடத்திற்கு நிரவலும், கற்பனை ஸ்வரத்தை இவர்கள், மடைதிறந்த வெள்ளம் போல பாடி கொட்டிதீர்த்தனர். இந்த இடத்தில், இப்படி பாடியிருக்கலாம் என்று ரசிகர்களுக்கு எந்த எண்ணமும் தோன்றாமல், ஒரு படி மேல் சென்று கொடுத்தனர்.
அடுத்து, கோடீஸ்வர ஐயரின் மிக அருமையான தமிழ்ப்பாடல், சலநாட்டை ராகத்தில் அமைந்த, ஏதய்யாகதி பக்தி ரசத்துடன் பாடி, ரசிகர்களின் மனதை நெகிழச் செய்தனர். பாடலுக்கு சுகமான, எச்.என். பாஸ்கர் வயலினிலும், மனோஜ்சிவாவின் மிருதங்கமும், மனதை வருடிக்கொடுத்தன. ராக ஆலாபனையைத் தொடர்ந்து, பாபநாசம் சிவனின் சுவாமிகள் சரி எவ்வரே பாடலை, நல்ல தெள்ளத் தெளிவாக பாடி, பல்லவியின் வரிகளுக்கு கற்பனை ஸ்வரம், இரண்டு காலத்தில் இருவரும் பாட பாட கேதார ரசிகர்களை, பிரம்மாஸ்திரமாய் கட்டிப் போட்டது.
தியாகராஜரின் கட்டிவிடுவ துரிதகால பாடலை பாடி, மிக விறுவிறுப்பாக பாடிக் கொடுத்து, பிரதான ராகமான மோகன கல்யாணி ராகத்தை எடுத்து, ஆலாபனைக்குள் நுழைந்தனர். ராகத்தின் எடுப்பே, மிக கம்பீரமாய் மறைந்த மாமேதை மகாராஜபுரம் சந்தானம் அவர்களை நினைவுபடுத்தி விட்டது. அவர், மோகனகல்யாணியை அணுகும் விதமே அலாதி. அதுவும், அதிகம் பாடாத ராகம் மிக விரிவான ராக ஆலாபனை மோகனமும், கல்யாணியும் எப்படி இணைந்து, இந்த ராகம் பிறந்தது என்பதற்கான விடையை அணு அணுவாகப் பிடித்து, ராக சஞ்சாரங்களை விரிவுபடுத்தி பாடிய முறை, வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ஒரு நல்ல இசை என்று சொன்னால், அது கேட்ட உடனேயே, நம் மனதை கொள்ளை கொண்டு, உடலை உணர்ச்சி பொங்க வைக்க வேண்டும். அந்த பரவசநிலை, ரஞ்சனி, காயத்ரி பாடிய மோகன கல்யாணியில் கிடைத்தது. தொடர்ந்து, அதற்கு தானம்படி ராமனை, ரகுவீரனை நிதமும் நீ நினை மோகனகல்யாண சீதா என்ற, மிக அழகான பல்லவியை களமிறக்கி, பலமுறை பாடி நிலைநிறுத்தி, சங்கதிகளை விவரமாக பாடி அனுலோமம், பிரதி லோமம், விலோமம், செய்து திசிரம் செய்து, நிரவல் பாடி கற்பனை ஸ்வரங்கள் கொடுத்து, அதுவும் ராகமாலிகையில், ஒரு சுற்று வலம் வந்து, தனி ஆவர்த்தனத்திற்கு விட்டு சிறப்பித்தனர்.
மனோஜ் சிவாவும், பி.எஸ். புருஷோத்தமனும் லயத்தில் அசத்தினர்.
- ரசிகப்பிரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.