Advertisement
ஹெர்குலிஸ்! (12)
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
00:00

இதுவரை: ஜிரியன் என்ற அரக்கனின் மந்தையை ஓட்டிவர கதிரவன் உதவியோடு எரிதியா தீவில் உள்ள மந்தையை நெருங்கினான் ஹெர்குலிஸ். இனி-

தன் கையிலிருந்த கதையால் அதன் தலையில் ஓங்கி அடித்தான். குருதி வெள்ளம் பீறிட அலறியபடியே சாய்ந்தது அது.
நாயின் குரைப்பொலி கேட்டு விழித்தான் அரக்கன். எவனோ ஒருவன் நாயை அடித்துக் கொல்வதைப் பார்த்தான். அவனைத் தாக்க ஓடி வந்தான். நாயைக் கொன்ற கதையால், அவனையும் அடித்துக் கொன்றான் ஹெர்குலிஸ்.
அதன்பிறகு ஹெர்குலிஸ் தன் தோழர்களை எல்லாம் கரை இறங்கச் சொன்னான்.
""மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகளை எல்லாம் பொன் கிண்ணத்தில் ஏற்றுங்கள்,'' என்றான்.
அவர்களும் ஆடு, மாடுகளை எல்லாம் கடற்கரைக்கு ஓட்டி வந்தனர்.
தன் நாயும், அரக்கனும் கொல்லப்பட்டதை அறிந்தான் அரக்கன் ஜிரியன். கோபம் கொண்ட அவன் அந்தத் தீவே அலறும்படி கத்தினான்.
ஆறு கைகளிலும் ஆறு கதைகளைத் தூக்கிக் கொண்டான். கண்கள் சிவக்க, நிலம் அதிரும்படி வேகமாக நடந்து வந்தான். அவனின் மூன்று வாய்களிலிலும் நெருப்பு வீசியது.
கோபத்துடன் வரும் அவனைப் பார்த்துத் திகைத்தான் ஹெர்குலிஸ். "தன் கையிலுள்ள ஒரு கதையால் அரக்கனின் ஆறு கதைகளையும் சமாளிக்க முடியாதே... என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.
அங்கு வந்த அரக்கன், ""என் அரக்கனையும், நாயையும் கொன்றுவிட்டாய்... நீ எங்கு ஓடினாலும் விட மாட்டேன். என்னுடன் போர் செய்,'' என்று கத்தினான்.
ஹைட்ரா பாம்பின் நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பை எடுத்தான் ஹெர்குலிஸ். அதை வில்லில் பூட்டினான். அரக்கனின் பக்கவாட்டில் நின்று கொண்டு, அவன் மூன்று தலைகளுக்கும் குறி வைத்து அம்பு எய்தான். அந்த அம்பு அரக்கனின் மூன்று தலைகளையும் துளைத்துச் சென்றது.
கொடிய நஞ்சு ஏறியதால் அங்கேயே, துடிதுடித்து இறந்தான் அரக்கன்.
மைசின் நகரத்தில் சிவப்பு நிற ஆடு, மாடுகள் மந்தை மந்தையாக வந்து இறங்கின. இதைப் பார்த்த மக்கள் ஹெர்குலிஸைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மகிழ்ச்சியுடன் அரசவைக்குள் நுழைந்தான் ஹெர்குலிஸ்.
""நீ சொன்ன பத்துச் சோதனைகளையும் வெற்றியாக முடித்து விட்டேன்,'' என்று பெருமையுடன் சொன்னான்.
""ஹெர்குலிஸ், நீ வெற்றிப் பெற்ற பத்துச் சோதனைகளில் எட்டு தான் கணக்கில் சேரும். "ஜீயசு தேவன் என்ன கட்டளையிட்டார்?' நான் இடும் பத்து சோதனைகளில் நீயே வெற்றி பெற வேண்டும் என்றார். அதற்கு என்ன பொருள்? பிறர் உதவியை நீ பெறக் கூடாது என்பதே.
""வெர்னா மடுவிலிருந்த நாகத்தைக் கொல்ல, நீ அயோலசின் உதவி பெற்றாய். ஏஜியசின் தொழுவங்களை நீ தூய்மை செய்யவில்லை. ஆறு தான் தூய்மை செய்தது. ஆகவே, அந்த இரண்டு சோதனைகளும் உன் கணக்கில் சேராது. அதனால் நீ மேலும் இரண்டு சோதனைகளில் வெற்ற பெற வேண்டும்,'' என்றான் யுரிஸ்தியசு.
""அடுத்து எனக்கு என்ன சோதனை வைக்க இருக்கிறாய்? அதைச் சொல்,'' என்று கோபத்துடன் கேட்டான் ஹெர்குலிஸ்.
""ஹெர்குலிஸ்! அட்லசு மலைச் சாரலில் ஹீரா தோட்டம் உள்ளது. அங்கே தங்க ஆப்பிள் மரம் ஒன்று உள்ளது. அங்கிருந்து மூன்று தங்க ஆப்பிள் பழங்களைக் கொண்டு வர வேண்டும். இதுதான் ஒன்பதாவது சோதனை,'' என்றான் யுரிஸ்தியசு.
""அட்லசு மலைச் சாரலா? ஹீரா தோட்டமா? தங்க ஆப்பிள் பழங்களா? நான் கேள்விப் பட்டதே இல்லையே... எங்கே உள்ளது?'' என்று திகைப்புடன் கேட்டான் ஹெர்குலிஸ்.
கலகலவென்று சிரித்த யுரிஸ்தியசு, ""எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் உன் வேலை; தங்க ஆப்பிள் பழங்களை கொண்டு வருவதும் உன் வேலை. என்னை எதற்காகக் கேட்கிறாய்?'' என்றான்.
அங்கிருந்து புறப்பட்ட ஹெர்குலிஸ் பல நாடுகளில் அலைந்தான். ஹீரா தோட்டத்தைப் பற்றியும், தங்க ஆப்பிள் பழங்களைப் பற்றியும் விசாரித்தான்.
""நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை,'' என்ற பதில்தான் கிடைத்தது.
காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான் அவன். அங்கிருந்த ஆற்றில் தேவதைகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர்.
""தேவதைகளே! தங்க ஆப்பிள் பழங்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?'' என்று கேட்டான்.
""எங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் ஒருவரை எங்களுக்குத் தெரியும். இந்த ஆற்றங்கரை வழியாகச் சென்றால் கடல் வரும். கடற்கரையில் உள்ள ஒரு மலையில் புரோமதியசு என்பவர் கட்டப்பட்டுக் கிடப்பார்.
கழுகு ஒன்று அவரைக் கொத்திக் கொண்டிருக்கும். ஜீயசு தேவன் தான் இந்த தண்டனையை அவருக்குத் தந்தார். அவரிடம் கேட்டால் தங்க ஆப்பிள் பழம் பற்றிச் சொல்வார்,'' என்று சொல்லி தேவதைகள் அங்கிருந்து மறைந்தன.
ஆற்றங்கரை ஓரமாகவே நடந்தான் அவன். பல நாட்களுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான்.
அங்கிருந்த பாறை ஒன்றில் முதியவர் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடந்தார். நரைத்த தாடி, மீசையுடன், எலும்பும் தோலுமாக இருந்தார் அவர்.
கழுகு ஒன்று அவர் உடலைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது. சாவு இல்லாதவரான அவர் இந்த வேதனையைத் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த ஹெர்குலிஸ் கடுங்கோபம் கொண்டான். என்ன நடந்தாலும் நடக்கட்டும். அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
தன் கையிலிருந்த கதையை ஓங்கினான். கழுகின் தலையில் ஓங்கி அடித்தான். துடிதுடித்த அந்தக் கழுகு அங்கேயே இறந்து விழுந்தது.
கழுகு கொத்தாததை அறிந்த அவர் கண் விழித்துப் பார்த்தார். எதிரே இளைஞன் ஒருவன் நிற்பது அவருக்குத் தெரிந்தது.
""ஹெர்குலிஸே! உனக்காகவே காத்திருந்தேன். தங்க ஆப்பிள் பழங்களைத் தேடித்தானே இங்கே வந்தாய். தேவதைகள் தானே உனக்கு வழி காட்டினர்,'' என்று கேட்டார்.
வியப்பில் மூழ்கிய ஹெர்குலிஸ் அவரை வணங்கினான்.
""ஐயா! உங்களுக்குத் தெரியாத செய்திகளே இல்லையா?'' என்று கேட்டான்.
""முக்காலமும் உணர்ந்தவன் நான். இப்படித் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தேதான் மனிதர்களுக்கு உதவி செய்தேன். நீ வந்து கழுகைக் கொல்வாய். என் வேதனை குறையும் என்பதும் எனக்குத் தெரியும்,'' என்றார் அவர்.
""ஐயா! எனக்குத் தங்க ஆப்பிள் பழங்கள் மூன்று வேண்டும். அதை எப்படிப் பெறுவது? நீங்கள்தான் வழிமுறைகளைச் சொல்ல வேண்டும்,'' என்றான்.
""ஹெர்குலிஸ்! வெகு காலத்திற்கு முன், ஜீயசு தேவனுக்கும், ஹீரா தேவதைக்கும் திருமணம் நடந்தது. திருமணப் பரிசாக நிலமகள் அவர்களுக்குத் தங்க ஆப்பிள் மரம் ஒன்றைத் தந்தாள். அந்த மரம் கண்ணைக் கவரும் அழகுடன் பளபளவென்று மின்னியது.
""அதன் அழகில் மயங்கினாள் ஹீரா தேவதை. அதை அட்லசு மலைச் சாரலில் இருந்த தன் தோட்டத்தில் நட்டாள். அந்தத் தோட்டத்தை அட்லசின் மூன்று மகள்களும் கவனித்து வருகின்றனர். பயங்கரமான பாம்பு ஒன்றும் காவல் காக்கிறது.
""நீயாகச் சென்று அந்தப் பழங்களைப் பறிக்காதே... அப்படிச் செய்தால் ஹீரா தேவதையின் கடுமையான கோபத்திற்கு ஆளாவாய்.
நீ வான மண்டலத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அட்லசு தேவனைச் சந்தித்து, எப்படியாவது அவர் உதவியைப் பெறு. அவர் என்ன செய்ய சொன்னாலும் செய். அவர் வழியாகவே தங்க ஆப்பிள் பழங்களைப் பெற்றுக் கொள்,'' என்றார் அவர்.
அவன் செல்ல வேண்டிய வழியையும் சொன்னார்.
அவருக்கு நன்றி கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
பல மாதங்கள் பயணம் செய்த ஹெர்குலிஸ் அட்லசு மலையை அடைந்தான். அங்கே அட்லசு தேவன் தன் இரண்டு கைகளாலும், வானுலகத்தைத் தாங்கியபடி நின்றிருந்தார். அவரைப் பணிவாக வணங்கினான் ஹெர்குலிஸ்.
- தொடரும்.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.