ஏழு சிமியோன்கள்! (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
00:00

எவ்வளவு நேரம் பயணம் செய்தனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கடைசியில் அவர்கள் கண் முன் ஜொலித்தது பயான் தீவு.
அனைவரும் கடற்கரையில் இறங்கி, அரண்மனைக்குள் சென்றனர். கொண்டு சென்ற எல்லாப் பரிசுப் பொருட்களையும், அழகி எலீனாவின் காலடியில் பரப்பினர். மன்னர் ஜாரின் மனைவியாக வேண்டும் என்று வேண்டி நின்றனர்.
அற்புதமான அந்தப் பரிசுப் பொருட்கள் எலீனாவின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. வியப்பில் விரிந்த கண்களால் அவற்றைச் சுற்றி சுற்றி வந்தாள். அவளருகே வந்த கெட்ட பிரபு, அவளுடைய காதில் கிசுகிசுத்தான்.
""அழகி எலீனாவே, ஜார் மன்னரை மணக்கச் சம்மதிக்காதே... அவர் வயதானவர்; வலிமை குன்றியவர். அவருடைய ராஜ்ஜியத்தில் கரடிகள் இரைக்காக பதுங்குகின்றன; ஓநாய்கள் ஊளையிடுகின்றன,'' என்றார்.
இதைக் கேட்டவுடன் எலீனாவின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.
""வெளியே போங்கள் அனைவரும்!'' என்று கத்தினாள்.
ஏழு சகோதரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து என்ன செய்யலாம் என்று ஒருவரை ஒருவர் பார்வையாலேயே கேட்டுக் கொண்டனர். அப்போது...
""அண்ணன்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கப்பலுக்குச் செல்லுங்கள். பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தயார் செய்யுங்கள். நங்கூரத்தைத் தூக்குங்கள். பாய்களை விரியுங்கள். அழகி எலீனாவை அங்கு கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு!'' என்றான் கடைசி சிமியோன்.
உடனே வேலையைத் தொடங்கினான் விவசாயி சிமியோன். கடற்கரையிலேயே உழுது விதைத்தான். அறுவடை செய்தான். போதும் போதும் என்கிற அளவு ரொட்டிகள் தயாராயின. இப்போது புறப்படத் தயார் நிலையில் கப்பல். எல்லாம் ஒரு மணி நேரத்திற்குள்.
இளைய சிமியோன் மட்டும் மீண்டும் அரண்மனைக்குள் சென்றான். எலீனா ஒரு ஜன்னல் அருகே அமர்ந்து புத்தாடை பின்னிக் கொண்டிருந்தாள். அந்த ஜன்னலின் கீழ் பகுதியில் கிடந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான் சிமியோன். எலீனாவைப் பார்த்து நிதானமாகப் பேசினான்.
""சமுத்திரத்தின் நடுவே சூரிய ஒளியில் தகதகக்கிறது தங்களுடைய இந்த நாடு. மிகவும் ரம்மியமான சூழல்! ஆனால், என்னுடைய தாய் நாடான ரஷ்யா, இதைவிட நூறு மடங்கு உயர்வானது! அங்கே நீண்ட நீல நிற நதிகள்! எங்கும் வெள்ளை நிற வலுவான பிர்ச் மரங்கள்; பரந்த வயல்கள்! வண்ண வண்ணப் பூக்களுடன், பசுமையான புல் வெளிகள்! சூரிய உதயமும், அஸ்தமனமும் சந்தித்துக் கொள்ளும் எங்களுடைய ரஷ்யாவில், பிறை நிலா நட்சத்திரங்களை மேற்பார்க்கும். எங்களுடைய ஊரில் பனித்துளி தேனாய் இனிக்கும். நீரோடைகள் வெள்ளியாய் மின்னும். எங்களுடைய ஆட்டு இடையர்கள் காலையில் புல்வெளிகளுக்குச் சென்று, உதடுகளில் குழல்களை வைத்து இசைத்தபடி நடந்து சென்றால், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, அவர்கள் செல்லுமிடத்திற்கு எல்லாம் நீங்களும் பின் தொடர்வீர்கள்!''
இவ்வாறு சொல்லிக் கொண்டே தன்னுடைய குழலை ஊதி இன்னிசை எழுப்பத் தொடங்கினான் இளைய சிமியோன். அடுத்த நொடியே, தன்னுடைய அரண்மனையின் தங்க கதவுகளைத் தாண்டி, வெளியே வந்தாள் அழகி எலீனா.
தோட்டத்தின் ஊடே நடந்தான் அவன். அவளும் அப்படியே நடந்தாள். இசையை நிறுத்தாமல் புல்வெளிக்கு வந்தான். எதுவும் பேசாமல் எலீனாவும் உடன் சென்றாள்.
கடற்கரையில் மணலில் நடை போட்டான். அவனுடைய அடி ஒற்றி அடி வைத்தாள் அவளும். இசையை நிறுத்தாமல் கடைசியாகக் கப்பலுக்குள் நுழைந்தான் சிமியோன். தன்னை மறந்த அழகி எலீனாவும் உள்ளே சென்றாள்.
மறு நிமிடமே திசை திருப்பப்பட்ட கப்பல், கடலைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்தது.
இளைய சிமியோன் வாயிலிருந்து குழலை எடுத்தான். இசை ஓய்ந்தது. திடுக்கிட்டாள் எலீனா. சுற்றிலும் பார்த்தாள். எங்கும் நீலக் கடல். வெகு தூரத்தில் அவளுடைய எழில் மிகு பயான் தீவு. திகைத்து நின்றாள்; தளத்தில் விழுந்தாள். திடீரென ஒரு நீல நிற நட்சத்திர மாக மாறினாள். மின்னலைப் போல் ஒளி வீசி விண்ணை அடைந்து நட்சத்திரக் கூட்டத்தில் தானும் ஒரு நட்சத்திரமாகக் கலந்தாள்.
வானவியலில் நிபுணனான சிமியோன் அங்கே ஓடி வந்தான். தன்னுடைய திறமையை உடனே பயன்படுத்தி, விண்ணில் மின்னிய அனைத்து வெள்ளிகளையும் எண்ணினான். பகுத்து ஆய்வு செய்தான். புதிதாக சேர்ந்த வெள்ளியைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டினான்.
தயாராய் இருந்த வில்லாளி சிமியோன் அவனுடைய தங்க அம்பை எடுத்து, நட்சத்திரத்தைக் குறி பார்த்து எய்தான். மறுநிமிடம் கப்பல் தளத்தில் விழுந்து உருண்ட நட்சத்திரம், மீண்டும் அழகி எலீனாவாக மாறியது.
""அழகி எலீனாவே! இங்கிருந்து ஓட முயல வேண்டாம். எங்கள் பார்வையில் படாமல் எங்கும் உன்னால் ஒளிய முடியாது. எங்களை உனக்கு பிடிக்கவில்லை என்றால், உன்னை மீண்டும் உன்னுடைய அரண்மனையில் விட்டு விடுகிறோம். ஆனால், ஒன்று! நீ இல்லாமல் நாங்கள் நாடு திரும்பினால், எங்களுடைய தலைகளை வெட்டி விடுவார் ஜார் மன்னர்!'' என்றான் இளைய சிமியோன்.
இதைக் கேட்ட எலீனா அதிர்ச்சி அடைந்தாள். இசைக் கலைஞனை எண்ணி மனம் கலங்கினாள்.
""கூடாது... உங்களுடைய தலைகள் சீவப்பட நான் காரணமாகக் கூடாது. என்னை உடனே மன்னரிடம் அழைத்துச் செல்லுங்கள்!'' என்றாள்.
ஒருநாள் பயணம் முடிந்து மறுநாளும் பயணம் தொடர்ந்தது. இளைய சிமியோன் எலீனாவின் அருகிலேயே இருந்தான். அவளுடைய கண்கள் அவனை விட்டு விலகவே இல்லை.
இதைக் கவனித்துக் கொண்டே வந்த வஞ்சகப் பிரபுவின் நெஞ்சில் ஒரு சதித் திட்டம் உருவானது.
ரஷ்ய நாட்டுக் கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது கப்பல். அதோ தெரிகிறது மணற்பரப்பு. சிமியோன்களை மேல் தளத்திற்கு அழைத்தான் பிரபு. சகோதரர்கள் மேல் அன்பு கொண்டவன் போல் பாசாங்கு செய்தான். குடிக்க ஆளுக்கு ஒரு கோப்பை இனிய பழரசம் தந்தான்.
இருவர் தவிர மற்றவர்கள் பழரசத்தை பருகினர். சற்று நேரத்திலேயே நீட்டி நிமிர்ந்து பலகை மேல் படுத்தனர். சில நிமிடங் களிலேயே மிக ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினர். பழரசத்தில் தூக்க மருந்தைக் கலந்திருந்தான் பிரபு! இடியோ, புயலோ... ஏன், அவர்களுடைய அம்மாவின் வெதுவெதுப்பான கண்ணீரோ கூட அவர்களை எழுப்ப முடியாது!
பழரச கோப்பையைத் தொடாத இருவர் இளைய சிமியோனும், எலீனாவும்தான்.
கப்பல் கடற்கரையை அடைந்தது. ஆறு சிமியோன்களும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். எலீனாவும், இளைய சிமியோனும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேம்பித் தேம்பி அழுதனர். வேறு என்ன செய்ய முடியும்? நல்லவர்கள் வாக்குத் தவறக் கூடாது.
இதற்குள் வஞ்சகப் பிரபு அரண்மனைக்குள் ஓடினான். ஜார் மன்னர் காலடியில் விழுந்தான்.
""ஓ! எங்களின் அன்புத் தந்தையே! மன்னவா! இளைய சிமியோன் தங்களுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியுள்ளான். தங்களைக் கொலை செய்து விட்டு, அழகி எலீனாவைத் தானே அடைய நினைக்கிறான். அவனுக்கு மரண தண்டனை விதியுங்கள்!'' என்றான்.
இதை அறியாத இளைய சிமியோனும், எலீனாவும் அரண்மனைக்குள் நுழைந்தனர். ஜார் மன்னர் முன் நின்றனர். எலீனாவின் அழகில் மன்னர் சொக்கிப் போனார். அவளை மட்டும் ராணிகள் அறைக்குள் அனுமதித்த அரசர், சிமியோனைச் சிறையில் அடைக்க ஆணையிட்டார்.
சிமியோனுக்கு காரணம் தெரியவில்லை . ஆனால், இது அந்தப் பிரபுவின் வேலையாகத்தான் இருக்கும் என்று புரிந்துக் கொண்டான். எப்படித் தப்பிப்பது!
""என்னுடைய சகோதரர்களே, விரைந்து வாருங்கள்; எனக்கு உதவுங்கள். உங்களுடைய தம்பியைக் காப்பாற்ற ஓடி வாருங்கள்!'' என்று உரக்கக் கத்தினான்.
-2 தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.